Published:Updated:

`படம் பார்த்துக்கொண்டே பால் கொடுக்கும் பசுக்கள்!'- உற்பத்தியை அதிகரிக்க புது யுக்தி

மெய்நிகர் நுட்பம் என்று தமிழில் அழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பசுக்களுக்கு காட்சிகளை திரையிடுவதன் மூலம் பசுக்களின் பாலின் தரமும் உற்பத்தி அளவும் அதிகரிப்பதாக ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

பசு
பசு

ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு அருகில் உள்ள ரஸ்மொலோகோ என்ற இடத்தின் பால் பண்ணையில்தான் இந்த வியப்பூட்டும் ஆராய்ச்சி அரங்கேறியுள்ளது. பண்ணையின் உள்ளே பசுக்கள் அனைத்துமே விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்களுடனே வலம் வருகின்றன. அவைகள் அங்கே மெய்நிகர் தொழிற்நுட்பத்தின் வாயிலாக பசுமைக் காட்சிகளை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கு அந்த பசுக்களுக்கு சினிமா காட்சிகள் ஏதும் திரையிடப்படுவதில்லை. மாறாக முற்றிலும் பசுமை புல் வெளிகள், இளங்கதிர் ஒளிகள் படரும் காட்டுப் பகுதிகளில் என இயற்கையின் எழில் கொஞ்சும் திரை தொடர்களே.

பசு
பசு

அப்படிச் செய்வதால் பசுக்கள் மன அமைதியடைந்து அதன் உடல் நலம் மேம்படுவதுடன் பசுக்களின் பாலின் தரமும் அளவும் அதிகரிக்கப்படுகிறது. அவை பசுவின் பதற்ற நிலையை குளிர்வித்து மன நிறைவு அடைய வழிவகுப்பதாக ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயற்கை காட்சிகளை திரையிடுவதன் மூலமாக பசுக்களின் பால் உற்பத்தி அளவு துரிதமாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல தொழில்கள் தங்கள் வேலை நிலையை மேம்படுத்துவதற்காக கணினி மயமாக்குதலைக் கையாண்டு வரும் நிலையில் மாடுகள் வளர்ப்பிலும் பால் உற்பத்தித் துறையிலும் இத்தகைய யுக்தியைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்- செட்கள் மாடுகளுக்காகவே பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. ``பால் இன்றி விடியாது உலகு" எனக் கூறும்அளவுக்கு இந்த காலகட்டத்தில் பாலின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே, பால் உற்பத்தி மீது கடுமையான அழுத்தம் உலகளவில் நிலவி வருகிறது. இந்த அழுத்தத்தை குறைக்க ஐ.டி உலகின் வல்லுநர்களும் பால் உற்பத்தித் துறை தொழில் வல்லுநர்களும் இணைந்து செயல்பட்டு இந்த முறையை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர்.

பசு
பசு

பசு மாடுகளின் உடல் தேவைகளைத் தவிர்த்து ஆராய்ச்சியாளர்கள் பசுக்களின் உணர்ச்சி நிலையையும் கருத்தில் கொண்டு கவனித்து வந்தனர். ஏற்கெனவே பல நாடுகளில் பசுக்களின் பால் உற்பத்தியை அதிகரிக்க அவற்றின் மனஅமைதி மற்றும் சௌகரியம் போன்றவற்றை கருத்தில்கொண்டு பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகின்றனர். ரஷ்ய நாட்டில் உள்ள பசு பண்ணைகளில் கிளாசிக்கல் மியூசிக்களை ஸ்பீக்கர்கள் மூலம் ஒலிக்க செய்கின்றனர். அதேபோல் அமெரிக்காவில் பசுக்கள் தங்களுக்கு தாங்களே மசாஜ் செய்துகொள்ளும் வகையில் பண்ணைகளில் சுழலும் பிரஷ்கள் பொருத்தப்பட்டுள்ளன. பசுக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது மசாஜ் செய்துகொள்கின்றன. இதுபோன்ற முயற்சிகளின் பலனாக பசுக்கள் ரிலாக்ஸ் அடைவதும் மேலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதும் நிரூபிக்கப் பட்டுள்ளது.