Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்-15: `3-ல் தொடங்கி 350 வகைப் பொருட்கள்'- `கிருஷ்ணபவன் ஃபுட்ஸ்' ராதேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் ( DIXITH )

கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராதேஷ், அவ்வளவு எளிமையாக இருக்கிறார். தன்னால் ஆனது எதுவுமில்லை என்ற தன்னடக்கமும் பணிவும் அவரது வார்த்தைகளில் எதிரொலிக்கிறது.

விண்ணளந்து நிற்கும் ஆலமரம், கண்ணுக்குத் தெரியாத ஒரு துளி விதையிலிருந்துதான் மீண்டெழுகிறது. இன்று கோலோச்சிக்கொண்டிருக்கிற பெருந்தொழில்கள் பலவும் சின்னஞ்சிறிதாகத் தொடங்கி மேலெழுந்தவை. தனித்துவமான சிந்தனையும் பொருளின் தரமுமே அடுத்தடுத்த கட்டத்துக்கு அந்தத் தொழிலை நகர்த்திச்செல்லும். திருச்சி கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட வெற்றிதான்.

கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராதேஷ், அவ்வளவு எளிமையாக இருக்கிறார். தன்னால் ஆனது எதுவுமில்லை என்ற தன்னடக்கமும் பணிவும் அவரது வார்த்தைகளில் எதிரொலிக்கிறது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, திருச்சி பெரியகடை வீதியில் கிருஷ்ணபவன் என்று ஒரு உணவகம். குடும்பச் சொத்தை பங்கு பிரித்ததில் ராதேஷ் கைக்கு வந்து சேர்ந்தது அந்த உணவகம். எப்படியாவது அதை வளர்த்தெடுத்துவிட வேண்டும் என்று போராடினார் மாதேஷ். எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. கரண்ட் பில்லுக்குக்கூட காசு தேறவில்லை.

கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
DIXITH

தாத்தா, தான் கைப்படத் தயாரிக்கும் இட்லிப்பொடி, பூண்டுப்பொடி, மிளகாய்ப்பொடியை ஹோட்டலின் கேஷ் டேபிளில் வைத்து விற்பார். அதையே ராதேஷும் செய்தார். உணவக வியாபாரத்தைவிட மக்கள் அந்தப் பொடிகளை விரும்பி வாங்கினார்கள். அந்தத் தருணத்தில் பெரிய நிறுவனங்கள் எதுவும் இன்ஸ்டண்ட் உணவு வணிகத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு பெரு வணிகமாகும் என்ற எண்ணம்கூட எவருக்கும் இருந்திருக்காது.

"ஆமாம்... அது உண்மைதான். மசாலாப் பொடி வியாபாரமெல்லாம் பெரிய பிசினஸா என்ற சிந்தனைதான் அப்போது இருந்தது. ஆனால், தாத்தா எடுத்து வைத்திருந்த பெயருக்கு அது ஓரளவுக்கு போகும் என்று நம்பினேன். ஒரு கட்டத்தில் உணவகத்தை மூடிவிடலாமா என்ற யோசனை வந்தது. போடும் முதலீட்டுக்கும் உழைப்புக்கும் ஏற்ற வருமானம் அதில் எடுக்கமுடியவில்லை. அதனால் தயக்கமில்லாமல் உணவகத்தை மூடினேன். அடுத்து...? அந்தக் கேள்வியில்தான் வாழ்க்கையே தொக்கி நின்றது... தைரியமாக முடிவெடுத்தேன்... மசாலா பொருள்களை தயாரித்து விற்கலாம் என்று. உறவுக்காரர்களே அப்போது, 'இதெல்லாம் சரியா வருமா' என்று சந்தேகப்பட்டார்கள்.

கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
DIXITH

நான் அதைத்தான் பயன்படுத்துகிறேன். எனக்குப் பிடித்திருக்கிறது. தரம், சுவையென்று தனித்துவமும் இருக்கிறது. நிச்சயம் மக்களைக் கவரும் என்று நம்பினேன். எங்கள் உணவகத்தில் ரவா தோசைக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. முதலில் ரவா தோசை மாவு, இட்லிப்பொடி, பூண்டுப் பொடி, பருப்புப் பொடியை 'கிருஷ்ணபவன்' என்ற பெயரிலேயே தயாரித்து கடைகளுக்குத் தந்தேன். பெயர் தந்த நம்பிக்கையும் பொருளின் தரமும் மக்கள் மத்தியில் எங்களைக் கொண்டுபோய் நிறுத்திருச்சு..." - பெருமிதமாகப் பேசுகிறார் ராதேஷ்.

இன்று 1500 டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிருஷ்ணபவன் இன்ஸ்டண்ட் உணவுகள் விற்கப்படுகின்றன. மூன்று பொடிகளோடு தொடங்கிய தயாரிப்பு, இன்று 350 பொருள்களைத் தாண்டி நீள்கிறது. இந்தப் பெரும் சாதனையை நிகழ்த்திவிட்டு எதுவுமே செய்யாதது போலப் பேசுகிறார் ராதேஷ். ராதேஷின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர், அவரது மனைவி பாலசரஸ்வதி. இப்போது கிருஷ்ணபவனில் தயாராகும் பல பாரம்பர்ய தயாரிப்புகள், பாலசரஸ்வதியின் கைவண்ணத்தில் உருவானவை.

பாலசரஸ்வதி
பாலசரஸ்வதி
DIXITH

"என் பாட்டி ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க. அதுமட்டுமில்லாம அவங்க அரைக்கிற மசாலாவும் மாவுகளும் ஊருக்கே மணக்கும். எல்லாரும் வீட்டுல இருக்கிற நேரமாப் பாத்து, புட்டு, முறுக்குன்னு விதவிதமா திண்பண்டங்கள் செய்வாங்க. அதற்கான மாவுகளையெல்லாம் தயாரா அரைச்சு வச்சிருப்பாங்க. எவ்வளவு நாள் இருந்தாலும் சின்ன பூச்சிகூட உள்ளே வராது. அந்த அளவுக்கு மாவு அரைக்கும்போதே தரம் பார்த்து பதமா அரைப்பாங்க, சின்ன வயசுலயே அவங்க கைப்பக்குவத்தைக் கத்துக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. வீட்டுல எப்பவும் கறிவேப்பிலைப் பொடி, பருப்புப்பொடி, இட்லிப்பொடின்னு விதவிதமா அரைச்சு வச்சிருப்பாங்க. அதையெல்லாம் வணிகத்துக்குக் கொண்டுவந்தோம். இடியாப்ப மாவு, புட்டு மாவுக்கெல்லாம் பெரிய வரவேற்பு இருந்துச்சு. கடைகாரங்கள்லாம், 'உங்க பொருளுக்கு வரவேற்பு நிறைய இருக்கு. இன்னும் பொருள்களை அதிகப்படுத்துங்க...'ன்னு சொன்னாங்க... படிப்படியா, அதிகமாக்குனோம்..." என்கிறார் பாலசரஸ்வதி.

கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
கிருஷ்ணபவன் ஃபுட்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
DIXITH

தோசைமாவு மிக்ஸ் மட்டும் 12 வகைகள் வைத்திருக்கிறார்கள். ராகி, சோளம், கம்பு, நவதானியம், கொள்ளு தோசை வகைகளுக்கு மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு இருக்கிறது. கீரை தோசை மிக்ஸ் மக்களைக் கவர்ந்திருக்கிறது.

இட்லியில் ரவா இட்லி, ராகி இட்லி, காஞ்சிபுரம் கோதுமை ரவா இட்லி, ஓட்ஸ் இட்லி மிக்ஸ் என்று விதவிதமாக வைத்திருக்கிறார்கள்.

திருச்சிக்கு வெளியே பிரமாண்டமாக விரிந்து கிடக்கிறது கிருஷ்ணபவனின் உற்பத்தி மையம்... எல்லா இடங்களிலும் பெண்கள்... வீட்டில் பொருள்களை சுத்தம் செய்து மசாலாவும் மாவும் அரைப்பதுபோல அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் ராதேஷிடம் இ்ன்னும் நிறைய பேசுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு