Published:Updated:

லட்சங்களில் வருமானம்..! - ‘குக்’ கிராமம் டு 'குக்கிங்’ வீடியோ சேனல் #MyVikatan

இவர் பதிவு செய்யும் மண்மணம் மாறாத ஒவ்வொரு சமையல் வீடியோ பதிவும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை லைக்ஸ் போடவைக்கிறது.

தொடங்கப்பட்ட ஒன்றரை வருடத்திலேயே 16 லட்சம் சப்ஸ்கிரைபர்கள். தினசரி லட்சக் கணக்கிலான பார்வையாளர்கள்; மாதம் தோறும் ரூபாய் நான்கு லட்சம் வருமானம். இவை எல்லாம் ஏதோ ஒரு மெட்ரோ சிட்டியின் ஏ.சி அறைக்குள் நடக்கும் பிசினஸ் அல்ல. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கும் 25 வீடுகளே கொண்ட சின்னவீரமங்கலம் என்ற குக்கிராமத்தின் வயல்வெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ எனும் யூ டியூப் சேனலின் வெற்றிக் கதை இது.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

திறமையும் தனித்துவமும், புதுமையும் இருந்தால் ஒருவர் எங்கிருந்தாலும் வெற்றிபெற முடியும். இதற்கு எடுத்துக்காட்டு இந்த சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் உள்ளிட்ட ஐந்து இளைஞர்களின் புதுமுயற்சி. இக்கிராமத்தின் 32 வயதான சுப்பிரமணியன், எம்.காம், எம்.பில் படித்திருக்கிறார். படிக்கும்போதே கம்ப்யூட்டர் துறையில் தீராக் காதல். இதற்காக அவராகவே ஆன்லைனில் தேடித் தேடி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் சிறிது சிறிதாய் சுயமாகவே கற்றுத் தேர்ந்திருக்கிறார். இதற்காக தனிப்பட்ட படிப்பெல்லாம் சுப்பிரமணியன் படிக்கவில்லையாம். அவருடைய தேடல் மட்டுமே அவருக்கான கம்ப்யூட்டர் ஞானத்தை பெற்றுத்தந்திருக்கிறது. இப்படி இவருக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து, அவர் சொந்தமாக ப்ளாக்கர் டெவலப்மென்ட்டுக்கான கோடிங் எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அதற்காக பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட தன்னுடைய வெப்சைட்டையும் இன்னொரு நிறுவனத்திடம் நல்ல விலைக்கு விற்பனை செய்திருக்கிறார்.

இதையடுத்து, தான் சேகரித்துவைத்திருக்கும் கம்ப்யூட்டர் அறிவைவைத்து என்ன செய்யலாம் என சுப்பிரமணியன் யோசித்திருக்கிறார். அப்போது அவர் மனதில் பட்டதுதான் இந்த யூ டியூப் சேனல்.

தமிழ்நாட்டு கிராமத்து பாரம்பரிய சமையலுக்கு என்றே பிரத்யேகமாக ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற யூ டியூப் சேனலை 2018-ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கிறார். இவர் போஸ்டிங் செய்யும் மண்மணம் மாறாத ஒவ்வொரு சமையல் வீடியோ பதிவும், லட்சக்கணக்கான பார்வையாளர்களை லைக்ஸ் போடவைக்கிறது. நாளுக்கு நாள் இந்த சேனலுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

கண்மாய் மீன் குழம்பு, கண்மாய் நத்தைக் குழம்பு, வயல் நண்டு குழம்பு, தூண்டில் மீன் குழம்பு, ராட்சத திருக்கை மீன் குழம்பு, செட்டி நாடு மட்டன் குழம்பு, அரேபியன் ஸ்டைல் முழு ஆட்டுப் பிரியாணி, கிராமத்து திருமண சமையல், கிராமத்து நாட்டுக் கோழி குழம்பு, கிராமத்து சைவ சமையல் இப்படி இதுவரை 98 வகையான விதவிதமான சமையல் வீடியோக்களைப் பதிவு செய்து அசத்தி இருக்கின்றனர். இந்த சேனல் ஆரம்பித்து இன்னும் இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே இப்போதுவரை 16 லட்சத்து 22 ஆயிரம் பேர் சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி ‘வில்லேஜ் குக்கிங் சேனலில்’ அசத்தலான எண்ணிக்கையில் சப்ஸ்கிரைப்களை அள்ளிக்கொண்டிருக்கும் அச்சேனலின் நிறுவனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியன், இதுதொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

“இது டிஜிட்டல் உலகம். எல்லா இடத்துலேயும் தகவல் தொழிநுட்பம் படுவேகமா வளர்ந்துக்கிட்டு இருக்கு. இந்த ஐ.டி புரட்சியை நாமளும் ஆக்கபூர்வமா பயன்படுத்தணும்னு முடிவு பண்ணினேன். அதுக்காக, எனக்குத் தெரிஞ்ச ஆன்லைன் துறைதான் இந்த யூடியூப் சேனல். இன்னைக்கு ஏராளமான பேர் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சு நடத்துறாங்க. ஆனா, எல்லோரும் ஜெயிக்கிறது இல்லை. அதுலே தனித்துவம் உள்ளவர்களாலும், புதுமையான விஷயங்களை சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும், அழகாகவும் சொல்றவங்களாலே மட்டும்தான் வெற்றிபெற முடியுது. அதுலே நான் ரொம்ப தெளிவாகவே இருக்கேன். ஏன்னா சமையலுக்காக யூ டியூபிலே எக்கச்சக்க சேனல் இருக்கு. அதுலே நாம தனிச்சு நிக்கணும். அதுக்காகவே நம்முடைய பாரம்பர்ய கிராமத்துச் சமையலை கையில் எடுத்தோம்.

இதை வெறும் நாலு சுவத்துக்குள்ளே உள்ள ஒரு கிச்சனுக்குள்ளே வைச்சு ‘முதலில் அடுப்பில் வாணலி எடுத்து வைக்கவும். அடுத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்’ இப்படி வழக்கமான சமையல் குறிப்பா இல்லாம, ஏதாவது புதுமையா செய்யணும்னு முடிவு பண்ணினோம். அதுக்காகத்தான், நம் மண் மணம் வீசக்கூடிய பசுமையான வயல்வெளிகளைத் தேடிப் போய், சமைச்சுப் படமாக்குறோம்.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

அதுலே வெறும் சமையல் மட்டுமில்லாம, அந்த ஊரின் அழகான வயல்வெளிகள், விவசாயம், வாய்க்கால், நீரோடை , பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம், மரம், செடி கொடிகள் என இப்படி பசுமை போர்த்திய இயற்கை சார்ந்த நம் வாழ்க்கையையும் சமையலுடன் சேர்த்தே பதிவுசெஞ்சு பரிமாறிக்கிட்டு வர்றோம். இந்த டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் 6 பேர் இருக்கோம். இதுலே முக்கியமான நபர் பெரியதம்பி ஐயா. அவருக்கு வயது 67. அருமையான சமையல் கலைஞர். இதுக்கு முன்னாடி ஏராளமான விஷேசங்களுக்கு சமையல் செய்தவர். அவருடைய கை வண்ணத்துலேதான் எங்க சேனலின் சமையல் மணக்குது. இந்தச் சேனல் பணியில் ஈடுபட்ட பிறகு, அவர் வேற எங்கேயும் சமைக்கப் போறதில்லே. அடுத்தவர், முத்துமாணிக்கம்.

இவர், சமையல் கலையில் பட்டப்படிப்பு முடிச்சவர். அப்புறம் ஐயனார். இவர்தான் மஞ்சள், மல்லி, மிளகாய், சோம்பு, சீரகம் இப்படி எல்லாத்தையும் அம்மியிலே சந்தனமாய் அரைச்சு எடுக்கிறவர். அப்புறம் முருகேசன். காய்கறி எல்லாம் அருமையாய் வெட்டி எடுக்கிறவர். எங்க டீமிலே உள்ள இன்னொருத்தர், தமிழ்ச்செல்வன். இவரு காரைக்குடியில் உள்ள அழகப்பா யுனிவர்சிட்டியிலே நானோ டெக்னாலாஜியில் எம்.பில் முடிச்சிட்டு, அதுலே யுனிவர்சிட்டியிலே பர்ஸ்ட் ரேங்க் வாங்கி சமீபத்துல கோல்டு மெடலும் வாங்கியிருக்கிறார். இந்த டீமில உள்ள நாங்க எல்லோருமே நெருங்கிய ரத்த சொந்த பந்தங்கள். எல்லா வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வோம். எல்லாத்தையும் நானே கேமராவில் ஷூட் பண்ணி, எடிட்டிங்கும் செஞ்சிடுவேன். இதுக்கான தொழிநுட்ப ரீதியா நாங்க வேற யார்க்கிட்டேயும் போய் நிக்கிறதில்லே. எந்தத் தொழில் செஞ்சாலும் மத்தவங்களை முழுதுமா சார்ந்து நிக்கக்கூடாது. ஒரு தொழில் ஆரம்பிக்கும் முன்னே அதுபற்றிய விஷயங்களை ஓரளவாவது கத்து வைச்சுக்கணும். அப்போதான் நாம ஜெயிக்க முடியும்.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

வெறும் சமையலை மட்டுமே செஞ்சு காட்டினால் பார்வையாளர்கள் கடுப்பாகிடுவாங்க. அதனால்தான், நாங்க இதன் பின்னணியில் செய்ற எங்களோட ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிக்கும்படியா இருக்கும். பனை ஓலை பட்டையிலே சாப்பிடுறதுகூட பல பேரும் ஏங்குற ஒண்ணு. அதேமாதிரி, கிராமங்களில் உள்ள குளத்துலே மீன் பிடிக்கிறது. அது ஒரு பெரிய பாரம்பரிய முறை. பத்தக்கட்டையினு ஒரு முறை இருக்கு. துவாரம் போட்ட ஒரு குழாய் வழியே தண்ணீரை திறந்துவிட்டு, தண்ணீர் செல்லும் வழியிலே ஏறி வர்ற மீன்களை லாகவமா பிடிக்கிறது. இந்த முறை ரொம்பப் பேருக்குத் தெரியாது. கிராமத்தைவிட்டு நகரங்களுக்குப் போனவங்களுக்கு இது எல்லாம் ஏக்கமும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயம். இதை அப்படியே ஷூட் பண்ணி மீன் குழம்பு சமையலுடன் பதிவு செஞ்சிருக்கோம். அதேமாதிரி, வயல்வெளியில் பொந்துகளுக்குள் பதுங்கி இருக்கும் நாட்டு நண்டுகள் பிடிக்கிறது. நீர்நிலைகளில் ஊர்ந்து செல்லும் நத்தைகளைச் சேகரிச்சு சமைக்கிறது.

அப்புறம், தைப் பொங்கலுக்கு நேரடியா வயலுக்கே போய் புது நெல் எடுத்து வந்து அதை உரலில் வைச்சு கைக்குத்தலா குத்தி எடுத்து, மண் பானையிலே பொங்கல் வைக்கிறது, ஈசல் பிடிச்சு அதைப் பொரி அரிசியோட சேர்த்து தயார் பண்றது... மசாலா அயிட்டங்களை மணக்க மணக்க அம்மியிலே அரைக்கிறது... இப்படிப் பல புதுமையான சமையலின் பின்னணி சார்ந்த விஷயங்களையும் சேர்த்தே பதிவு பண்ணிக்கிட்டு வர்றோம். இதனால்தான், நாங்க மக்கள்கிட்டே இவ்வளவு சீக்கிரத்துலே நெருக்கமா ரீச் ஆக முடியுது. தொடர்ச்சியா நல்ல வரவேற்பும் கிடைக்குது.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

நாங்க சமையல் ஷூட்டிங்கிற்காக அறந்தாங்கியைச் சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவு சுற்றளவில் உள்ள அழகான கிராமங்களைத் தேர்வு பண்றோம். அங்கே ஷூட்டிங் நடக்கும்போது, அந்தக் கிராமத்து மக்களை அழைச்சு நாங்க தயார் செய்யும் சாப்பாட்டை போடுறோம். இதுக்காக அந்த ஊர் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எங்க சமையலின் அளவு இருக்கும். அதேமாதிரி, அறந்தாங்கி பக்கம் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கும் நாங்க தயார்செய்யும் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்புறோம். எப்படியும் மூன்று முதல் நான்கு நாள்களுக்குள் ஒரு வீடியோவாவது போஸ்ட் பண்ணிடுவோம். திறந்த வெளியில் சமைச்சு ஷூட் பண்றதாலே, சில சமயம் மழை வந்து கெடுத்திடும்.

யுடியூப் சேனல்னு நம்மளை ரசிகர்கள் அங்கீகரிக்கணும்னா நமக்குனு ஒரு தனித்தன்மை இருக்கணும். புதுமைகள் இருக்கணும். நாம் சொல்றது இதுவரை சொல்லப்படாத விஷயங்களா இருக்கணும். மக்களை ஈர்க்கிறது நம்ம கையிலேதான் இருக்கு. இதை ஆரம்பத்துலே ஒரு பொழுதுபோக்காத்தான் ஆரம்பிச்சோம். அப்புறம் ஆயிரக்கணக்கிலே வருமானம் வரத் தொடங்கிச்சு. சேனல் ஆரம்பிச்சு இப்போ ஒன்றரை வருஷம்தான் ஆகுது. அதுக்குள்ளேயுமே எங்களுக்கு மாதம் நாலு லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானம் வருது. இந்த வருமானம் இன்னும் பல மடங்கு கூடும். அதுக்காக எங்களோட உழைப்பும் மெனக்கெடலும் இன்னும் அதிகமா இருக்கும்.

விலேஜ் குக்கிங் சேனல் குழு
விலேஜ் குக்கிங் சேனல் குழு

ஆடியன்ஸ் நம்ம சேனலைப் பார்க்கும்போது, அவங்களே ஸ்பாட்டிலிருந்து சமைச்சு சாப்பிடுற ஒருவித உணர்வைக் கொடுக்கணும். எங்க டீமிலே உள்ளவங்களை வந்து நிறைய பேர் சமைச்சு தரச் சொல்றாங்க; அதுக்காக எவ்வளவு சம்பளம் வேண்ணாலும் தர்றோம்னு சொல்றாங்க. ஆனா, நாங்க அதைச் செய்றதே இல்லை. அடுத்து, ஷூட்டிங்கிற்காக நன்கொடையோ, ஸ்பான்ஸரோ யார்கிட்டேயும் வாங்குறது இல்லை. ஒருத்தர் சாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா எப்படியும் சாதிக்கலாம். நாம கையில் எடுக்கிற விஷயத்தைப் பொறுத்தும், நம்முடைய உழைப்பைப் பொறுத்தும்தான் நம்முடைய வெற்றி அடங்கி இருக்கு.

நாங்க செய்ற சமையல் உண்மையிலே ருசியா இருக்குதா? அப்படிங்கிறதை எங்களோட நேயர்களும் தெரிஞ்சக்கணுங்கிறதுக்காக, எங்களோட தீவிர நேயர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவச்சு, அவங்களையும் ருசிபார்க்க வைக்கிறோம். இப்படி நிறைய நேயர்கள் நேரில் வந்து ரசிச்சு சாப்பிட்டு வாழ்த்திட்டு போயிருக்காங்க. நேயர்களின் உற்சாக ஆதரவும் பாராட்டும்தான் எங்களை இன்னும் தீவிரமா உழைக்க வைக்குது. இரண்டு முழு ஆடுகளை வச்சு நாங்க செஞ்ச மட்டன் பிரியாணி வீடியோ பதிவை மட்டும் இதுவரைக்கும் 1 கோடியே 70 லட்சம் பேர் பார்த்து ரசிச்சிருக்காங்க. பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, எங்களின் பொறுப்பும் அதிகரிக்குது...” என்கிறார், சுப்பிரமணியன்.

உண்மையிலேயே இந்த சேனலின் வீடியோக்களைப் பார்க்கப் பார்க்க... அதுவும் அவர்கள் செய்யும் செய்முறைகளைக் காணக் காண நமக்கும் நாக்கில் எச்சில் ஊறியபடியே பசியும் அதிகரிக்கிறது.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு