வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எங்கெங்கு திரும்பினாலும் மாம்பழங்களில்தான் இடித்துக் கொள்ள வேண்டும் போல.. பார்வதி பாட்டி தலையில் சும்மாடு வைத்து கூடையில்.. கண்ணன் தம்பி ட்ரை சைக்கிளில்...(காலையில்) வாசு தம்பி ட்ரைசைக்கிளில் மோட்டார் வைத்து) (மாலையில்.) ... அது மட்டுமா வீட்டிற்கு வரும் உறவினர்கள் கைகளில் கை கொள்ளா மாம்பழங்களுடன் தான் வருகிறார்கள். எதைச்சொல்ல எதை விட.... மாம்பழம்... சந்தோஷத்தைக் கொடுத்ததையா? தன்னம்பிக்கையைக் கொடுத்ததையா? இப்ப கொஞ்சம் வருடமா வருத்தத்தைக் கொடுப்பதையா? என்ன சொல்லி/எதை சொல்லி நான் எழுத????
குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பு யாருக்கு தான்பிடிக்காது? அதுபோல தாங்க மாம்பழத்தை பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது.
என் சிறுவயதில் அப்பாவின் முகமதிய நண்பர்கள் இருவர் (அபிபுஃல்லா,அசாருஃல்லா) (நாங்கள் மாமா என்றே அவர்களை அழைப்போம்.) ஏப்ரல்-மே வந்தால் போதும் கூடை கூடையாக.. மஞ்சள் நிறத்தில் இருக்கும் மாம்பழங்களின் ராஜாவான"அல்போன்சா"வை அனுப்பிவிடுவார்கள்.

காலையில் எழுந்திருக்க வேண்டியது, பல் துலக்கிய உடன் மாம்பழத்தை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று விடுவது. இதுதான் விடுமுறையில் தினமும் நடக்கும். (அம்மாவின் கண்ணில் படாமல் ) காலங்காத்தால பல் துலக்கியவுடன் துண்டுகள் எல்லாம் போடாம மாம்பழத்தை அப்படியே கடிச்சி சாப்பிடறப்ப.. அதனுடைய சாறு புறங்கையில் வழியும் பாருங்க!அட..அட..அட.. பூலோக சொர்க்கம். (மாமாவிற்கு மனதார நன்றி சொன்ன காலம் அது)
வளரிளம் பருவத்தில் தருமபுரியில் இருந்ததால், பெரிய அத்தான் கேம்ப் சென்று வரும்போது கூடை நிறைய பச்சை மற்றும் மஞ்சள் நிறமான "மல்கோவா"வை.வாங்கிவருவார்.
அதை அழகாகத் துண்டுகள் போட்டு ஒருகிண்ணத்தில் வைத்து நாங்கள் படிக்கும் போது எங்கள் மேஜைகளில் வைத்துசெல்வார் அத்தான்.
அதுவரை மனப்பாடமாகாத செய்யுள்கள் கூட மல்கோவா துண்டு ஒன்றைச் சாப்பிட்டவுடன் தூக்கத்திலிருந்து எழுந்த கேட்டாலும் சொல்லுமளவிற்கு மனப்பாடம் ஆகிவிடும். பழுக்கப் பழுக்க வாசனை, ஊரெல்லாம் பரவும் மல்கோவாவிற்கு அப்படி ஒரு மந்திரசக்தி உண்டு . சென்னை வந்தபிறகு "இமாம் பசந்த்" "பங்கனபள்ளியுடனான நட்பு ஏற்பட்டது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மாம்பழ மில்க் ஷேக் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவேன். அவர்கள் சமத்தாக ஒரு பக்கம் ஆங்கிலம் , ஒரு பக்கம் தமிழ் எழுத , அவர்களது கையெழுத்து அழகானது. பிள்ளைகளின் கையெழுத்தை அழகாக்கியபெருமை பங்கனப்பள்ளிக்கே! அதுமட்டுமல்லாமல் அவர்களை நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைத்திருக்கவும் உதவியது (மாம்பழம் தொட்டுக்கொண்டு பால் சாதம் சாப்பிடுவது எனது மகனுக்கு பிடித்தமான ஒன்று)
எனது அத்தை ஏதாவது கோபமாக இருக்கும் நேரத்தில் , நீலம், செந்தூரா , ருமானி என எந்த மாம்பழம் வீட்டில் இருக்கிறதோ அதை துண்டுகள்செய்து ஒரு தட்டில் போட்டுக் கொடுக்க கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..(கோபமா ...எனக்கா...என்றுஅம்னீசியா வந்ததுபோல் அத்தை கேட்ட நாட்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.)
பிரபல பத்திரிகையின் ஆசிரியை ஒருவரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் போது.. "மாம்பழ கீர் "ஒன்று செய்து எடுத்துப் போயிருந்தேன்.
நான் எப்பொழுது யாரைச் சந்திக்க சென்றாலும் நான் என் கைகளால் செய்த இனிப்பு வகைகளை எடுத்துப் போவது என் ப(வ)ழக்கம்) சுவையில் அசந்துபோய் செய்முறையைக் கேட்டது இன்னும் நினைவில் உள்ளது. இருபது வருடங்களைக் கடந்தும் அவர்களுடனான நட்பு இன்னமும் "ஔவையார் ,அதியமான் "போல் தொடர்கிறது.
உறவு மற்றும் நட்புகளிடம் ஏதேனும் வருத்தமா ?கோபமா?சண்டையா? கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்த மாம்பழங்களை வாங்கிச் சென்று அவர்களை சந்திக்க...கோபமாவது...வருத்தமாவது!

எல்லாவற்றையும் மறந்து உங்களை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிவது நிச்சயம்.(நான் இதை நிறையப் பேருக்கு சொல்ல ,,, செய்து பலனை பார்த்த அவர்கள் "ஆமாம்" நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்று என்னிடம் தொலைபேசியில் நன்றி சொல்லியிருக்கிறார்கள்) இவ்வளவு சொல்லிவிட்டு நான் செய்த "மாம்பழ கீர்"ரெசிபியை சொல்லாமல் விடுவதா!(அதுபெரிய பாவம் அன்றோ!?)
பாஸ்மதி அரிசி அரை ஆழாக்குஎடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதளவு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
உங்களிடமுள்ள இரண்டு இனிப்பான மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கி இரண்டு கப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசி நன்றாக வெந்து குழைந்ததும் ,சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கடைந்து வைத்துக்கொண்டு அதில் மாம்பழ சாற்றை ஊற்றி சிறு தீயில் நன்கு கிளறவும் .எல்லாம் நன்கு கலந்ததும் தேவையான சர்க்கரை, நிறைய அன்பு/காதல் எல்லாம் சேர்த்து நன்கு கலக்கி முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ,(சீவியது)சாரைப் பருப்பு தேவையான அளவு எடுத்து நெய்யில் வறுத்துப் போட்டு இறக்கி. சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறலாம். சுவையில் அசத்தும் இந்த "மாம்பழகீர்"

என்னப்பா.. யாராவது உங்க மேல கோபமா இருக்காங்களா? இப்பவே போய் " மாம்பழ கீர்"செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள்.(சூடாகவோ அல்லது ஜில்லென்றோ..) அவர்கள் கோபம் மறந்து புன்னகைப்பது நிச்சயம்!அதுமட்டுமா..!
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா ..
இங்கே ஓடி வாருங்கள்.. பங்கு போட்டு தின்னலாம். குழந்தை போல் ஆடிப்பாடுவது நிச்சயம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.