
பாதாம் பிசின், ஆப்பிள் துருவல், திராட்சைச் சாறு, ஐஸ் கலவையில் போடப்பட்ட ஸ்பெஷல் சர்பத்துடன் நின்றுவிடாமல், புதுமையான வகையில் சர்பத் போட முடியுமா என யோசித்தேன்.
வருகிற கோடை விடுமுறைக்கு இப்பவே எல்லோரும் பழநிக்கு ஒரு ட்ரிப் போய் டேரா போட திட்டம் போட்டு வைப்போம்.
பழநி என்றதும் ஆன்மிகச் சுற்றுப்பயணம் என நினைத்துவிடாதீர்கள். இது வேற!
கோடை சீசன் வந்தாலே, வெப்பத்தைத் தணிக்க சந்துபொந்துகளிலெல்லாம் சர்பத் கடை முளைத்துவிடும். சர்பத் தயாரிப்பு மிக எளிமையானது என்பதால் இன்ஸ்டன்ட் பிசினஸ் இது. இளநீர் சர்பத், நுங்கு சர்பத், தர்ப்பூசணி சர்பத் எனப் பல காம்பினேஷன்களில் சர்பத் எல்லோரையும் குளிர்வித்துக் கொண்டிருப்பதை அறிவீர்கள். ஆனால் பால் சர்பத் காம்பினேஷனைக் கேள்விப்பட்டதுண்டா?
பழநி மலை அடிவாரத்தில் கிடைக்கிற விசேஷ பால் சர்பத்தான் பேர் சொல்லும் இந்த ஜில் அயிட்டம்!
சுற்றுவட்டார மக்களுக்கு மட்டுமன்றி பல ஊர்களிலிருந்து வந்துபோகும் பக்தர்களுக்கும் அவ்வளவு பரிச்சயம் இந்தப் பால் சர்பத். பெங்களூரு, சென்னை என்று பல ஊர்களிலிருந்து இந்தப் பால் சர்பத்தைக் குடிப்பதற்காகவே கிளம்பி வரும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

பழநியில் எங்கே கிடைக்கிறது பால் சர்பத்?
கடைக்குப் பெயர்ப்பலகை என்று எதுவும் இல்லை... கேட்டால், ‘துணிவு’ படத்துக்கு அஜித் சொன்னதைப் போல, ‘‘நல்ல பொருளுக்கு எதுக்கு விளம்பரம்னுதான் பெயர் வைக்கவில்லை... பால் சர்பத் கடைன்னு சொன்னாலே பழநி முழுக்க தெரியும், எங்க கடைக்கு வழி காட்டுவாங்க...’’ என்கிறார்கள். பழநி பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அருகே காந்தி ரோடு சென்றால் வருகிறது இந்தப் பெயரில்லா சர்பத் கடை!
முதலில் ஒரு பால் சர்பத்தை ஆர்டர் கொடுத்து ருசித்துக்கொண்டே, சர்பத் போட்டுக் கொடுத்தவரிடம் ‘‘கடையின் உரிமையாளர் பெயர் என்ன, அவரைச் சந்திக்க வேண்டும்’’ என்றேன். அவர் கூலாக (ஆமாம், பேச்சும் கூலாகத்தான் இருந்தது!), ‘‘கடையின் உரிமையாளர் பெயர் செந்தில்குமார்... அது நான்தான்!" என்றார். நான் விகடன் நிருபர் என்றதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘பழநி அருகே கோதைமங்கலம்தான் எங்கள் சொந்த ஊர். என் பெற்றோர் பாக்கு வியாபாரம் செய்துவந்தனர். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கப் பிரியமில்லை. ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போது பழநிக்குத் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாது ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இதனால் பழநி அடிவாரப் பகுதிகளில் சர்பத் கடைகள் அதிகமாக இருந்தன.

இதனால் சர்பத் கடை போடலாம் என நான் முடிவெடுத்தேன். என் அண்ணன் வெங்காடசலமும், தம்பி மாறனும் எனக்குத் துணையாக இருந்தனர். வெறும் 70 ரூபாய் முதலீட்டில் ஒரு மண் பானை, 5 கிலோ சர்க்கரை, 6 டம்ளர்களைக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினோம். அப்போது ஒரு டம்ளர் சர்பத் 60 பைசாவுக்குக் கொடுத்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்.
அந்தச் சமயம், ஒரு வேலையாக தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்கே சாலையோரக் கடையில் சர்பத் வாங்கிக் குடித்தபோது அதில் பாதாம் பிசின் போட்டுக் கொடுத்தார்கள். அது சர்பத்துடன் சேர்ந்து நல்ல சுவையைக் கொடுத்தது.
பழநி வந்த பிறகு இதை நாமும் செய்யலாமே என்று, பாதாம் பிசின் சேர்த்து, அதனோடு ஆப்பிள் துருவல், திராட்சைச் சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றையும் கலந்து சர்பத் தயாரித்துக் கொடுத்தேன். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடை ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே இப்படித் தனித்துவமான சர்பத் தயாரித்துக் கொடுத்ததால், மக்கள் எங்கள் கடையைத் தேடி வர ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் பல கடைகள் நடத்தமுடியாமல் தொழிலை விட்டுப் போயினர். ஆனால் நான் வித்தியாசமாக யோசித்ததால் தப்பித்துக் கொண்டேன். 42 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.
பாதாம் பிசின், ஆப்பிள் துருவல், திராட்சைச் சாறு, ஐஸ் கலவையில் போடப்பட்ட ஸ்பெஷல் சர்பத்துடன் நின்றுவிடாமல், புதுமையான வகையில் சர்பத் போட முடியுமா என யோசித்தேன். பரிசோதனை முயற்சியாக சர்பத்துடன், காய்ச்சிய பால், போன்விட்டா, ஐஸ் சேர்த்து மேலாக ஆப்பிள் துருவல் போட்டுக் கொடுத்தேன். எலுமிச்சைச் சாறு கலந்தால் பால் திரண்டு கெட்டுவிடும் என்பதால் அதை மட்டும் தவிர்த்தேன். அப்போது உருவாகிய பால் சர்பத் எனது கடைக்கு வந்த வாடிக்கை யாளர்களை இரட்டிப்பாக்கியது.

கோடைக்காலத்தில் நடக்கும் முக்கிய விழாக்களின்போது ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு மேல் பால் சர்பத் போட்டுக் கொடுத்திருக்கிறேன். சராசரியாக ஒரு நாளுக்கு ஆயிரம் பேராவது பால் சர்பத் குடிக்கிறார்கள். கார்த்திகை, மார்கழியில் மட்டுமே வியாபாரம் சரியாக இருக்காது. பிற மாதங்களில் நன்றாக இருக்கும். அப்போது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வருவதால், பிரச்னையின்றி சப்ளை செய்வதற்காக 50 டோக்கன்களைக் கொடுத்துவிடுவோம்.
மேசையில் சர்பத் செய்யத் தேவையானவற்றை அழகாக அடுக்கி வைத்து, மேசை மீது 50 டம்ளர்களை வரிசையாக வைத்துவிடுவேன். சர்பத்துக்குத் தேவையான பொருள்களை ஒவ்வொன்றாக டம்ளர்களில் ஊற்றி கடைசியாக ஆப்பிள் துருவல்களைப் போட்டுக்கொடுப்பேன். இவ்வாறு நான் பால் சர்பத் போடுவதைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடி நிற்கும்.
தற்போது ஸ்பெஷல் சர்பத் 25 ரூபாய், பால் சர்பத் 30 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். என்னுடைய ஐடியாவைப் பின்பற்றி பலரும் கடை தொடங்கினர். ஆனால் தகுந்த மிக்ஸிங், கைப்பக்குவம் இல்லாத காரணத்தால் தொடர்ச்சியாக நடத்த முடியாமல் பின்வாங்கிவிடுகின்றனர். ஆனால் எங்களுக்கான மவுசு என்றும் குறைந்ததே இல்லை. காலை 9 முதல் இரவு 9 மணி வரை கடை நடத்தினாலும் போதவில்லை.
ஒரு முறை சென்னையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடையின் உரிமையாளர் என்னைப் பார்த்ததும், ‘‘நீங்கள் பழநியில் பால் சர்பத் போடுபவர்தானே?’’ எனக் கேட்டு என்னைப் பாராட்டினார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... மகிழ்வா இருந்துச்சு. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பெரிய பட்டம், பதக்கம், விருது வாங்கியதைப்போல பெருமையா இருந்தது’’ என்றார்.