தேநீருக்கு எந்தளவுக்கு பிரியர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு காபிக்கும் உண்டு. காபி குடிக்காமல் நாளே ஓடாது என இருப்பவர்களும் உள்ளனர். குவளையில் பாலை ஊற்றி, காபி தூளைச் சேர்த்து உப்பைப் போட்டால் எப்படி இருக்கும்… நிறுத்துங்க, ஏதோ தப்பாக இருக்கிறதே எனக் கேட்கலாம்.
சர்க்கரை தானே போட்டுக் குடிப்போம், அதென்ன உப்பு என்கிறீர்களா... சமீப காலத்தில் காபியில் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிப்பது டிரெண்டாகி வருகிறது. இது கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல வகையான உணவுகளின் கசப்புத் தன்மையை நடுநிலையாக்குவதில் உப்புக்கு முக்கியப் பங்குண்டு. இதில் காபியும் அடங்கும். காபி கொட்டையை ரோஸ்ட் செய்யும்போது கசப்புத் தன்மை உருவாகும்.
1995-ல் ஆராய்ச்சியாளர்கள் இனிப்பு மற்றும் கசப்பு மூலக்கூறுகளை உப்பில் சேர்த்தனர். இந்தக் கலவை இனிப்புடன் சேர்ந்து கசப்பின் தன்மையைக் குறைத்ததைக் கண்டறிந்தனர்.
சர்க்கரை சேர்க்கப்படும்போது சுவையை மாற்ற முடியும். ஆனால், உப்பு அதை நடுநிலையாக்குகிறது. உப்பை நாம் எல்லா கப் காபியிலும் சேர்ப்பதில்லை, மாறாக காபி கசப்பாக இருக்கும்பட்சத்தில் சேர்க்கும்போது அதன் ஒட்டுமொத்த சுவையை மென்மையாக்க உதவும்.
இப்படி காபியில் உப்பை சேர்த்துக் குடிப்பது புதிதல்ல. பல காலகட்டங்களில், பல நாடுகளிலும் இதைப் பின்பற்றியுள்ளனர். காபியின் சுவையை மேம்படுத்த அடிக்கடி உப்பு சேர்க்கும் பழக்கத்தை வியட்நாம் பின்பற்றி வந்துள்ளது.
ஸ்வீடன் மக்கள் காபியில் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் அல்லது பன்றி இறைச்சியைச் சேர்த்துப் பருகி வந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது உப்புநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகள் முழுமையாகப் பலனளிக்காததால், அமெரிக்க கடற்படைப் பணியாளர்கள் உப்பு கலந்த காபியைக் குடித்தனர்.
இதுபோல ஹங்கேரி, ஸ்காண்டிநேவிய நாடுகள், சைபீரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் நீண்ட காலமாகவே காபியில் உப்பைச் சேர்த்து குடிக்கும் வழக்கம் இருந்துள்ளது.
2009-ல் உணவு ஆராய்ச்சியாளரும் சமையல்கலை வல்லுநருமான அல்டன் பிரௌன் என்பவர், காபியில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்த எபிசோட், அனைவரின் கவனத்தையும் பெற்றது. அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ``உப்பு, காபியின் கசப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், தண்ணீரின் பழைய சுவையையும் மென்மையாக்குகிறது.
ஒவ்வொரு 6 டேபிள்ஸ்பூன் காபியிலும், கால் டீஸ்பூன் கோஷர் உப்பை நான் எடுத்துக்கொண்டேன். சுவைக்கு இது போதாது, ஆனால், அது தந்திரத்தைச் செய்யும். மேலும், சர்க்கரையைவிட உப்பு உண்மையில் கசப்பை நடுநிலையாக்குவதில் சிறந்தது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.
காபியில் உப்பைச் சேர்த்துக் குடிக்கும் பழக்கம் தற்போது டிரெண்டாகி வருகிறது. உங்க காபியில் உப்பு சேர்ப்பீர்களா?!