பண்டிகை நாளாக இருந்தாலும் பலகாரங்களை ஆரோக்கியமான முறையில் தயாரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக பலருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வரவிருக்கும் பொங்கல் திருநாளுக்கு ஆரோக்கியமான நைவேத்தியங்களைச் செய்து, உங்கள் வீக் எண்டை விசேஷமாக்குங்கள்...
மில்லெட் ஸ்வீட் பொங்கல்
தேவையானவை:
குதிரைவாலி அரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
முந்திரி - 6

செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும்.
அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாகத் தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.
நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
சாமை பொங்கல்
தேவையானவை:
சாமை அரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது
(தட்டி வைக்கவும்)
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
தாளிக்க:
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - முக்கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்துக் கிளறவும்.
இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
ஏழு கறி கூட்டு
தேவையானவை:
பாசிப்பருப்பு - கால் கப்
வாழைக்காய் - ஒன்றில் பாதி
மஞ்சள் பூசணிக்காய் - ஒரு சிறு துண்டு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - ஒன்றில் பாதி
ஃப்ரெஷ்ஷான மொச்சை - கால் கப்
அவரைக்காய் - 15
கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
சேப்பங்கிழங்கு - 2
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - அரை கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
அரிசி மாவு - கால் டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு வேகவிடவும். கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி விடவும். பிறகு, கழுவி சின்னச் சின்ன சதுரங்களாக நறுக்கி வைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் மொச்சை, மஞ்சள்தூள், உப்பு, தோல் நீக்கி நறுக்கிய வாழைக்காய் மற்றும் மஞ்சள் பூசணியைச் சேர்த்து காய்களை வேகவிடவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்தெடுக்கவும். காய்கள் வெந்ததும், வெந்த பருப்பு மற்றும் தேங்காய் கலவையைச் சேர்த்து வேகவிடவும். பிறகு தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்து காய்களில் கொட்டிக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்
தேவையானவை:
கோதுமை ரவை - அரை கப்
வெல்லம் - அரை கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
தண்ணீர் - ஒன்றரை கப் + கால் கப்
நெய் - 2 டீஸ்பூன் + சிறிது
முந்திரி - சிறிதளவு

செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்துக் கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும். வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டுக் கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.