திரையரங்குகளின் இடைவெளி நேரங்களில், அமைதியாகக் கழிவறைக்குச் சென்று விட்டு மீண்டும் படம் போடுகையில், பாப்கார்னும் ஃபப்ஸும் சாப்பிட்ட எஃபக்ட்டோடு வந்து சிலர் அமருவதுண்டு. அதே சமயம் ஒரு பெரும் கூட்டம், பாப்கார்ன் வரிசையில் அலைமோதிக்கொண்டிருக்கும்.

`ப்ரோ வி ஆர் நாட் சேம்’ என்பது போல ஒரு லுக் விட்டு வந்துவிடுவோம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 863 டன் பாப்கார்ன், 20 லட்சம் சமோசாக்கள் இந்த ஆண்டு விற்பனையாகியுள்ளது என ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
என்னதான் ஐநாக்ஸுக்கு சொந்தமாக 74 நகரங்களில்,167 திரையரங்குகள் இருந்தாலும், பொதுவாகவே படத்தின் இடைவெளியில் திரையரங்க உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

Also Read
திரையரங்கில் விற்கப்படும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது நல்லதா, இது உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துமா என இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர், கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.
அவர் கூறும்போது, ``திரையரங்கில் விற்கப்படும் சமோசா, பாப்கார்ன், கோக் போன்றவற்றைச் சாப்பிடுவது கெடுதலே. இந்த உணவுகளை எந்தவொரு சத்தும் இல்லாத வெற்று கலோரி களிலும் (Empty Calories), மைதாவிலும், சுத்திகரிக்கப்பட்ட தானியங்களிலும் (refined cereal) செய்கிறார்கள். இதில் நார்ச்சத்து கிடையாது. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. கோக் குளிர்பானங்களில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே உண்டு.
சமோசாக்கள் செய்ய மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை உபயோகிக்கலாம். நீண்ட நேரத்துக்குக் கொதிக்க வைக்கும்போது, தேவையான கொழுப்பு அமிலங்கள் இன்றி, நஞ்சு விளைவுகள் வெளிவரும். இதனால் உடலுக்குக் கேடு.

சமோசாவில் கலோரிகள் அதிகம். எந்த ஓர் உணவையும் சமைத்தவுடன் விரைவில் சாப்பிட வேண்டும். 4 மணி நேரத்துக்கு மேல் சாதாரண வெப்பநிலையில் வைத்திருந்து சாப்பிடக் கூடாது. திரையரங்கில் எப்போது அந்த உணவுகளைத் தயாரிக்கிறார்கள், எவ்வளவு நேரம் அதை வெளியில் வைத்திருக்கிறார்கள், தூசிகள் படிந்ததா, ஈக்கள் மொய்த்ததா போன்ற பிரச்னைகள் இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஃபுட் பாய்சன் ஆகவும் வாய்ப்புண்டு. வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்.
இரண்டாவதாக, இவை மலச்சிக்கல் பிரச்னையை அதிகரிக்கும். முடிந்தளவு திரையரங்க உணவுகளைத் தவிர்க்கலாம். முன்பெல்லாம் அந்தி சாயும் நேரங்களில் மக்கள் சுண்டல், கடலை வகைகள், காராமணி, மொச்சை, பயறு வகைகளைச் சாப்பிடுவார்கள். பயறு வகைகளைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. புரதம், நார்ச்சத்து கிடைக்கும். திரையரங்க உணவுகளில் இவற்றை சேர்க்கலாம். இன்னும் சத்தான பொருள்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்க்கலாம்.

அதேசமயம் திரையரங்குகளில் வெளி உணவுகளுக்கு அனுமதியில்லை என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என நாமும் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம், ஆசை வரலாம். தியேட்டர்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் விற்பனை செய்யும் உணவுகள் ஆரோக்கியமானவையல்ல, அதற்கு மாற்றாக ஆரோக்கிய உணவுகளை விநியோகம் செய்யலாம். இந்த நிலையை தியேட்டர்காரர்கள்தான் மாற்ற வேண்டும். உணவு நிறுவனங்கள் ஆரோக்கிய உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்தால் நல்லது.
திரையரங்கிலும் நன்றாகச் சாப்பிடும் மக்கள், வீட்டிலும் சென்று அதிகமாகச் சாப்பிட்டுத் தூங்குவதால், வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுகிறது’’ என்று கூறினார்.
ஒரு நாள் ஆசைக்காக, கிடைப்பதைத் தின்று உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது!