அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதில்லை. சைவ உணவுக்காரர்களுக்குத்தான் அந்தப் பிரச்னையே... புரதம் நிறைந்த பருப்பு வகைகளைப் பயன்படுத்தி வடை, பாயசம் முதல் கோலா கறி வரை விருந்தே சாப்பிடலாம் என்பதை அறிவீர்களா? இந்த வார வீக் எண்டை புரோட்டின் ரிச்சாக கொண்டாடுங்கள்...
பலாப்பழ பருப்பு பாயசம்
தேவையானவை:
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
பழுத்த பலாப்பழம் (கொட்டை நீக்கியது) - கால் கிலோ
வெல்லம் - ஒரு கப் உடைத்துக் கொள்ளவும்)
ஏலக்காய் - 2
தேங்காய்ப் பால் - ஒரு கப்
முந்திரி - 10
பல்லாக நறுக்கிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும். முந்திரி, தேங்காயை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி சுத்தம்செய்து வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பலாப்பழத்தை பொடியாக நறுக்கி 10 நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு தண்ணீர், வெல்லம் மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும். இத்துடன் வேகவைத்த பாசிப்பருப்பு, பலாப்பழத்தை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கலவை செட் ஆனதும், தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கிளறி கொதிக்கவிடவும். பாயசம் நுரைத்து வரும்போது முந்திரி, நறுக்கிய தேங்காய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ஆந்திரா மாங்காய் பருப்பு
தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய மாங்காய் - ஒரு கப்
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள்- சிறிதளவு
தண்ணீர் - இரண்டரை கப்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
துவரம்பருப்பைக் கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். குக்கரில் தண்ணீர், துவரம்பருப்பு, மாங்காய், கீறிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேகவைத்த பருப்புக்கலவையுடன் சேர்த்துக் கிளறவும். சாதம், சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் தயார்.
கப்ப வடை / மரவள்ளிக்கிழங்கு வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கப்
மரவள்ளிக்கிழங்கு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி நன்கு கழுவி துருவிக்கொள்ளவும். மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இத்துடன் ஊறவைத்த கடலைப்பருப்பு, துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதனுடன் அரிசி மாவு, பெருங்காயத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து, வடைகளாகத் தட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, தட்டிய வடைகளை சேர்த்து பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
பருப்பு உருண்டை குழம்பு / கோலா கறி
தேவையானவை:
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8 பல்
தக்காளி - ஒன்று
புளித்தண்ணீர் - ஒரு கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
உருண்டை செய்ய:
துவரம்பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - அரை கப்
சின்ன வெங்காயம் - ஒன்று

செய்முறை:
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டை தட்டிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அத்துடன், உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், உருண்டைகளை அதில் பொரித்து எடுக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, புளித்தண்ணீர், சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவைத்து, பிறகு உருண்டைகளைச் சேர்க்கவும். உருண்டை வெந்து மேலே மிதந்து வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.