

தெய்விகமும், கலைநயமும் கைகோத்து, உள்ளத்தை உற்சாக ஊஞ்சலில் ஆடவைக்கும் மாதம் என்றால், அது மார்கழிதான். இந்த சமயத்தில் வரும் பண்டிகைகளின்போது, நைவேத்தியங்களைத் தயாரித்து, கடவுளுக்குப் படைத்து, குடும்பம், உறவு, நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களின் பாராட்டுகளைப் பெறுவதற்கு உதவிக்கரம் நீட்டும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், சுவையான பல்வேறு நைவேத்திய வகைகளை இங்கே வாரி வழங்கி அசத்துகிறார். கூடவே, மார்கழி மாதத்தில் உங்கள் வீட்டு வாசலில் வித்தியாசமான கோலங்களைப் போட்டு மகிழ உதவும் விதத்தில், வாசகிகள் கைவண்ணத்தில் உருவான அசத்தலான, அற்புதமான கோலங்களை தேர்ந்தெடுத்து வழங்குகிறார் ராணி பிரபாகர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் இல்லத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள்!
மிளகுப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி 200 கிராம், பயத்தம்பருப்பு 50 கிராம், மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, நெய் 2 டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசி, பயத்தம்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து, தண்ணீரில் களைந்து உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும். நெய்யில் மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, அரிசி பருப்புக் கலவையில் சேர்த்துக் கலக்கினால்... சுவையான மிளகுப் பொங்கல் தயார்.
தினை கேசரி
தேவையானவை: தினை அரிசி ஒரு கப், பனைவெல்லம் (பொடிக்கவும்) ஒரு கப், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், நெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: தினை அரிசியை ஊறவைத்து, ஒரு கப் தினைக்கு 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். பொடித்த பனைவெல்லத்தை கொஞ்சம் நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு கசகசா, முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவவும். வெந்த தினை, பனைவெல்ல கரைசல் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.
வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை: பச்சை வேர்க்கடலை ஒரு கப், காய்ந்த மிளகாய் 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன், கறிவேப்பிலை 10 இலைகள், எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: வேர்க்கடலையை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் காலை குக்கரில் சிறிதளவு நீர் விட்டு, வேர்க்கடலை, உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய்ந்த மிளகாய், மல்லியை (தனியா) வெறும் வாணலியில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேகவைத்த வேர்க்கடலையைப் போட்டு, மிளகாய் தனியா பொடி தூவி கிளறி இறக்கவும்.
ராஜ்மா சுண்டல்
தேவையானவை: ராஜ்மா ஒரு கப், கேரட் துருவல் 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: ராஜ்மாவை உப்பு போட்டு வேகவைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சீரகத்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த ராஜ்மாவை சேர்த்துக் கிளறினால்... சுவையான, கலர்ஃபுல்லான ராஜ்மா சுண்டல் தயார்.
கோதுமை மாவு லட்டு
தேவையானவை: கோதுமை மாவு ஒரு கப், பொடித்த வெல்லம் ஒரு கப், நெய் 50 கிராம், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை தலா 5.

செய்முறை: கோதுமை மாவை நெய்யில் சிவக்க வறுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்துப் பிசைந்து, லட்டு பிடிக்கவும்.
முப்பருப்பு பாயசம்
தேவையானவை: கடலைப் பருப்பு, பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு தலா 50 கிராம், வெல்லம் 100 கிராம், ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன், காய்ச்சிய பால் அரை கப், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பை வறுத்து, குழை வாக வேகவிடவும். வெல்லத்தை நீரில் கரைத்து, கொதித்ததும் வடிகட்டி, வெந்தபருப்புடன் சேர்த்து, கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள் தூவவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். காய்ச்சிய பாலை வெந்த பருப்பில் ஊற்றிக் கிளறி இறக்கினால்... அசத்தலான சுவையில் முப்பருப்பு பாயசம் ரெடி!
அரிசி மாவு ஆவி உருண்டை
தேவையானவை: பச்சரிசி மாவு ஒரு கப், தேங்காய்த் துருவல் அரை கப், பச்சை மிளகாய் 2 (நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, வறுத்த வேர்க்கடலையை உடைத்து சேர்த்து, உப்பு போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை இட்லித்தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
அரிசி பருப்பு உருண்டை
தேவையானவை: பச்சரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, காய்ந்த மிளகாய் 4, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ரவை போல் உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, தேவையான தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதித்தவுடன் உடைத்த அரிசி பருப்பு ரவையைத் தூவி கிளறவும். வெந்தவுடன் தேங்காய்த் துருவல் தூவி கிளறி, உருண்டைகளாக உருட்டினால்... ருசிமிக்க அரிசி பருப்பு உருண்டை ரெடி.
எலுமிச்சை குடமிளகாய் சாதம்
தேவையானவை: பச்சரிசி சாதம் ஒரு கப், எலுமிச்சைச் சாறு கால் கப், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, மல்லி (தனியா) 2 டீஸ்பூன், கேரட் துருவல் கால் கப், குடமிளகாய் ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்,

செய்முறை: குடமிளகாயைப் பொடியாக நறுக்கி வதக்கவும். காய்ந்த மிளகாய், மல்லியை (தனியா) வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் சாதத்தைப் போட்டுக் கிளறவும். இதனுடன் மிளகாய் தனியா பொடி, உப்பு, கேரட் துருவல், வதக்கிய குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறினால்... சுவையான, வண்ணமிகு எலுமிச்சை குடமிளகாய் சாதம் தயார்.
அவல் பாயசம்
தேவையானவை: பால் 4 கப், அவல் அரை கப், சர்க்கரை ஒன்றரை கப், முந்திரி 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், நெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: பாலை நன்கு காய்ச்சி, அவலைக் கழுவி அதனுடன் சேர்த்து, வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும். நன்கு கொதித்ததும், முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
கடலைப் பருப்பு கேசரி
தேவையானவை: கடலைப் பருப்பு ஒரு கப், பொடித்த வெல்லம் அரை கப், தேங்காய்த் துருவல் கால் கப், முந்திரிப் பருப்பு 10, ஏலக்காய் 2 (பொடிக்கவும்), நெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு... அரைத்த கடலைப் பருப்பு விழுது, பொடித்த வெல்லம், தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவும்.
சிறுதானிய இனிப்பு பணியாரம்
தேவையானவை: கேழ்வரகு மாவு, கம்பு மாவு தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் ஒரு கப், பொடித்த வெல்லம் ஒரு கப், சுக்குப்பொடி கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் அரை கப், வறுத்த வேர்க்கடலை கால் கப்.

செய்முறை: கேழ்வரகு மாவு, கம்பு மாவு, தேங்காய்த் துருவல், சுக்குப்பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து, வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்கவும். பணியாரக்கல்லை சூடாக்கி, சிறிதளவு நெய் விட்டு, மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சிறுதானிய காரப் பணியாரம்
தேவையானவை: கேழ்வரகு மாவு, கம்பு மாவு தலா ஒரு கப், கடலை மாவு கால் கப், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். கேழ்வரகு மாவு, கம்பு மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வதக்கிய பொருட்கள், கொத்த மல்லித் தழை, உப்பு ஆகியவற்றைக் கலந்து நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். பணியாரக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
கடலைமாவு இனிப்பு
தேவையானவை: கடலை மாவு ஒரு கப், தேங்காய்த் துருவல் ஒரு கப், முந்திரிப் பொடி அரை கப், நெய் அரை கப், பால் ஒரு கப், சர்க்கரை 3 கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.

செய்முறை: முந்திரிப் பொடி, தேங்காய்த் துருவல், கடலை மாவு ஆகியவற்றை பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
புளியோதரை
தேவையானவை: பச்சரிசி ஒரு கப், புளி எலுமிச்சை பழ அளவு, காய்ந்த மிளகாய் 6, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், முந்திரி 10 (வறுக்கவும்), வெந்தயப்பொடி அரை டீஸ்பூன், கறிவேப்பிலை 10 இலைகள், வறுத்த வேர்க்கடலை 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை வேக வைத்து, உதிர்த்து ஆறவிடவும். புளியைக் கெட்டியாக கரைத்து, அதனுடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... கரைத்த புளி, உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். வறுத்த முந்திரி, வறுத்த வேர்க்கடலையை கொதித்த புளிக்காய்ச்சலில் சேர்த்து, வெந்தயப் பொடி, மிளகு சீரகப் பொடியை சேர்த்துக் கிளறவும். ஆறிய பச்சரிசி சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி











ஆச்சி கிச்சன் ராணி
பீட்ரூட் பூசணி அல்வா
தேவையானவை: கேரட், பீட்ரூட், வெள்ளைப்பூசணித் துருவல் தலா ஒரு கப், ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒன்றரை கப், நெய் 3 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை தலா 10, பால் 2 கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
செய்முறை: கொஞ்சம் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக்கொண்டு, அதே கடாயில் நெய்விட்டு கேரட், பீட்ரூட், வெள்ளைப்பூசணி துருவல்களைத் தனித்தனியாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

நான்ஸ்டிக் கடாயில் பாலை ஊற்றி, கொதித்த பின் வதக்கிய துருவல்கள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சற்று தளர இருக்கும்போதே ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் ஒட்டாமல் வெந்து சுருண்டு வரும்போது இறக்கி பரிமாறவும். சுவைமிக்க, சத்துமிக்க இந்த அல்வாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இன்பவல்லி, கிருஷ்ணகிரி
படம்: ஆ.முத்துக்குமார்