
மார்க்கெட்டுக்கு யார் போய் வந்தாலும், அவர்களுடைய பையைத் திறந்து பார்த்தால் கட்டாயம் தக்காளி இடம்பிடித்திருக்கும். அந்த அளவு சமையலில் முக்கிய இடம்பெற்றுவிட்ட தக்காளியில் ரசம், சூப், சட்னி என்று மட்டும் இல்லாமல்... இடியாப்பம், பணியாரம், அல்வா, மில்க்ஷேக் என்று 'தக்காளி மேளா’வையே இங்கு நிகழ்த்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'’தக்காளியில் விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து உட்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இங்கே கொடுக்கப்பட்ட உணவுகளைத் தேவையான அளவு செய்து பரிமாறி, உங்கள் குடும்பத்தினரின் நாவுக்கு ருசியையும், உடலுக்கு உறுதியையும் வழங்குங்கள்' என்று அக்கறையுடன் கூறுகிறார் ராஜகுமாரி.
தக்காளி அல்வா
தேவையானவை: நன்கு கனிந்த நாட்டுத் தக்காளி - அரை கிலோ, சர்க்கரை- 100 கிராம், நெய்- 50 கிராம், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, உடைத்த முந்திரித் துண்டுகள்- 3 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுக்கவும்), ஆரஞ்சு நிற ஃபுட் கலர் ஒரு சிட்டிகை.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கி, வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும் (துளிகூட நீர் விடத் தேவையில்லை). இடையிடையே நெய்யை சேர்க்கவும். ஃபுட் கலரையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரியை சேர்க்கவும். பிறகு கீழே இறக்கி, ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இதை இரண்டு, மூன்று தினங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தக்காளி இனிப்பு பச்சடி
தேவையானவை: தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி கால் கிலோ, விதை நீக்கிய பேரீச்சை- 5, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள்- 4 டேபிள் ஸ்பூன், சர்க்கரை- 75 கிராம், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, விதையில்லா திராட்சைப் பழம்- 10, ஆரஞ்சு நிற ஃபுட் கலர் ஒரு சிட்டிகை.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பேரீச்சையை சிறிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை சேர்த்து, அரை டம்ளர் நீர் விட்டுக் கலந்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பைனாப்பிள் துண்டுகள், நறுக்கிய தக்காளி சேர்த்து... ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி, திராட்சைப் பழத்தைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
இந்தப் பச்சடி... பண்டிகை நாட்களிலும், பார்ட்டிகளிலும் செய்து அசத்த ஏற்றது.
தக்காளி பயத்தம்பருப்பு சாம்பார்
தேவையானவை:பெங்களூர் தக்காளி - 3, சின்ன வெங்காயம்- 6, பச்சை மிளகாய் - 2, வேகவைத்த பயத்தம்பருப்பு கால் கப், புளி நெல்லிக்காயளவு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: கடலைப் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, தனியா- 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: கடுகு ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் சிறிதளவு.
செய்முறை:வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். அதே வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து (2 டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வதக்கிய காய்களையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பிறகு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி அலங் கரிக்கவும்.
இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
தக்காளி காரப்பணியாரம்
தேவையானவை: இட்லி மாவு- 2 கப், பெங்களூர் தக்காளி- 3 (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல், ஊறவைத்த பச்சைப் பட்டாணி தலா- 3 டேபிள்ஸ்பூன், ரஸ்க்தூள்- 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய்- 6 டேபிள்ஸ்பூன், உப்பு சிறிதளவு.

செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... கேரட் துருவல், பட்டாணி சேர்த்து வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியில் ரஸ்க்தூளையும் சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை முக்கால் குழி வரை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தக்காளி சீஸ் ஊத்தப்பம்
தேவையானவை:இட்லி மாவு- 2 கப், துருவிய சீஸ்- 4 டேபிள்ஸ்பூன், பெங்களூர் தக்காளி - 2, நறுக்கிய குடமிளகாய்- 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பெங்களூர் தக்காளியைப் பொடியாக நறுக்கி ஒரு கப்பில் போட்டு, அத்துடன் நறுக்கிய குடமிளகாய், துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் போட்டு கலந்து வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெயை லேசாகத் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி கப்பில் உள்ள கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து அதன் மேலே தூவி, ஓரங்களில் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
தக்காளி பனீர் பிரெட்
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8, பெங்களூர் தக்காளி- 2, துருவிய பனீர்- 3 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ்- 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு, எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: பிரெட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி, சீஸ், பனீர், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்தக் கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து ஒரு பிரெட் வட்டத்தின் மேல் வைத்து, இன்னொரு வட்டத்தால் மூடவும். தவாவில் எண்ணெய்விட்டு, பிரெட்டை வட்டங்களை வைத்து, 3 நிமிடங்கள் (மிதமான தீயில்) வேகவிட்டு இறக் கவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
தக்காளி மசாலா பிரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் துண்டுகள்- 8, பெங்களூர் தக்காளி -2, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ஒன்று, பச்சை மிளகாய்- 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, சோம்பு ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அடிகனமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து மேலும் வதக்கி, மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு, வெந்த உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கி இறக்கி, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்... மசாலா தயார்.
தவாவில் பிரெட்டை வைத்து, கொஞ்சம் மசாலா எடுத்து வைத்து, மேலே பிரெட் வைத்து மூடி, ஓரங்களில் எண் ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
த்ரீ இன் ஒன் சட்னி
தேவையானவை:: நாட்டுத் தக்காளி- 200 கிராம், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை தலா- கால் கப், காய்ந்த மிளகாய்- 4, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

செய்முறை:வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். நறுக்கிய தக்காளியை மீதமுள்ள எண்ணெயில் வதக்கி... புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். மிக்ஸியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து... பின்னர் புதினா, கொத்தமல்லித்தழை, தக்காளி சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
இந்த சட்னியை இட்லி, தோசை, உப்புமா, பஜ்ஜி, போண்டா, வடை எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம்.
தக்காளி வற்றல்
தேவையானவை:நாட்டுத்தக்காளி ஒரு கிலோ, பெரிய ஜவ்வரிசி- 100 கிராம், பச்சை மிளகாய்- 5, சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன், கல் உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: ஜவ்வரிசியை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை ஒரு லிட்டர் தண்ணீரை சூடு செய்து அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை முழுதாகப் போட்டு கொதித்த நீரை ஊற்றி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, தக்காளி தோலை கைகளால் உரித்து எடுத்துவிடவும். தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் நீர்விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான, பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி... உப்பு, சீரகம் சேர்த்து முதல் நாள் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். பாதி வெந்ததும் அரைத்த தக்காளி கலவையையும் சேர்த்து, எல்லாமாக சேர்ந்து கண்ணாடி மாதிரி பளபளவென்று வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி விரும்பிய வடிவங்களில் இந்தக் கலவையை கரண்டியால் ஊற்றி, வெயிலில் காயவைக்கவும். அன்று மாலையே இந்த வற்றலை மறுபுறம் புரட்டிவிடவும். 4, 5 நாட்கள் இந்த வற்றலை காயவைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
அதிக அளவில் தக்காளி கிடைக்கும்போது இதனை தயாரித்து வைத்துக் கொண்டால், ஆண்டு முழு வதும் பயன்படுத்தலாம்.
தக்காளி இடியாப்பம்
தேவையானவை: தக்காளி - 200 கிராம், இடியாப்ப மாவு- 2 கப், ஊறவைத்த பச்சைப் பட்டாணி- 3 டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் -2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலாத்தூள் ஒரு சிட்டிகை, குடமிளகாய் பாதியளவு (நீளமாக, மெலிதாக நறுக்கவும்), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அடிகனமான பாத்திரத்தில்- 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கவைத்து இறக்கி, இடி யாப்ப மாவில் கொட்டிக் கிளறி, இடியாப்ப குழலில் மாவை வைத்து இடியாப்ப மாகப் பிழிந்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் உதிர்த்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய குடமிளகாயை வதக்கி, பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி, நன்கு சுருண்டு வந்ததும் கரம்மசாலா சேர்த்துக் கிளறி இறக்கவும். உதிர்த்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்துக் கலந்துவிடவும்.
தக்காளி மில்க்ஷேக்
தேவையானவை:நன்கு பழுத்த நாட்டுத்தக்காளி - 4, சர்க்கரை கால்- கப், காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு கப், ஃப்ரெஷ் க்ரீம்- 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, பாதியளவு அரை பட்டதும் சர்க்கரை சேர்த்து, முழுவதுமாக அரைபட்டதும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடிக்கவும். பிறகு, பாலையும் ஊற்றி ஒரு அடி அடித்து கலக்கிவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பருகவும். குளிர்ச்சி தேவை இல்லையெனில், ஃப்ரிட் ஜில் வைக்காமலே பருகலாம்.
தக்காளி சூப்
தேவையானவை: பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி- 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீஸ்பூன், சோள மாவு ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா- 2 டேபிள்ஸ்பூன், பால் அரை கப், கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு பச்சைப் பட்டாணி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கேரட், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பாதியளவு காய்கள் வெந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் சோள மாவைப் பாலில் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். பின்னர் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
தக்காளி சேமியா கிச்சடி
தேவையானவை: பெங்களூர் தக்காளி- 2, சேமியா- 2 கப், பச்சை மிளகாய்- 2, கடுகு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, கேரட் துருவல்- 3 டேபிள்ஸ்பூன், உடைந்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எண்ணெய்- 5 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:வெறும் வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்து மேலும் வதக்கி, சேமியாவை சேர்த்து லேசாக வறுத்து, 2 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு வெந்ததும் அரைத்த தக்காளி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து, நன்றாகக் கிளறிவிடவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த தக்காளி சேமியா கிச்சடி புளிப்பும், காரமும் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும்.
தக்காளி ராய்த்தா
தேவையானவை: பெங்களூர் தக்காளி- 2, கெட்டித் தயிர் ஒரு கப், பெரிய வெங்காயம் பாதியளவு, தேங்காய்த் துருவல் கால் கப், பச்சை மிளகாய் ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, சர்க்கரை ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அகலமான கிண்ணத்தில் தயிரை ஊற்றி... உப்பு, சர்க்கரை, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிடவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இந்த ராய்த்தா... பிரியாணி, புலாவ், சப்பாத்தி போன்றவற்றுக்கு சிறந்த சைட்டிஷ்.
தக்காளி கொத்சு
தேவையானவை: தக்காளி- 200 கிராம், பச்சை மிளகாய்- 3, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, புளி கொட்டைப்பாக்கு அளவு, அரிசி மாவு ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம்- 50 கிராம், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப,

செய்முறை: புளியை நீர் விட்டு கரைத்து (இரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். எல்லாமாக வெந்து சேர்ந்து வரும்போது, அரிசி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
தக்காளி பூரி
தேவையானவை: கோதுமை மாவு ஒரு கப், கெட்டியான நாட்டுத் தக்காளி- 3, பச்சை மிளகாய் - 2, ஓமம் ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: தக்காளியையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து உப்பு, ஓமம் சேர்க்கவும். கோதுமை மாவில் நீருக்குப் பதிலாக இதனை ஊற்றிப் பிசையவும். 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெயை இந்த மாவில் ஊற்றிப் பிசைந்து, மாவை பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கலர்ஃபுல்லான இந்த பூரி குழந்தைகளை மிகவும் கவரும்.
தக்காளி பாத்
தேவையானவை: தக்காளி - 200 கிராம், பெரிய வெங்காயம்- 2, பச்சை மிளகாய்- 3, பூண்டு- 3 பல், இஞ்சி சிறிய துண்டு (தோல் சீவவும்), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, நறுக்கிய கொத்தமல்லித்தழை தலா- 3 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப், எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கிச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து வெந்து வந்ததும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும். உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்துக் கிளறினால்... தக்காளி பாத் தயார்.
தக்காளி ஊறுகாய்
தேவையானவை: நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி ஒரு கிலோ, பூண்டு- 100 கிராம், காய்ந்த மிளகாய்- 15, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம்- 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 150 கிராம், கடுகு- 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன், கல் உப்பு தேவைக்கேற்ப,

செய்முறை:வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக வறுத்து, இறுதியில் உப்பையும் வறுக்கவும். மிக்ஸியில் இவற்றைப் பொடியாக்கவும். அடி கனமான வாணலியில் 100 கிராம் எண்ணெய் விட்டு, தோலுரித்த பூண்டை முழுதாக வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கி, மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
தக்காளி பூண்டு ரசம்
தேவையானவை: தக்காளி - 2, பூண்டு- 4 பல், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, ரசப்பொடி ஒரு டேபிள்ஸ்பூன், புளி சிறிய நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு -3 டேபிள்ஸ்பூன், கடுகு சிறிதளவு, காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: புளியைக் கரைத்து (ஒன்றரை டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறி, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, ரசப்பொடியை போட்டு ஒரு புரட்டு புரட்டி, கொதிக்கும் புளிக் கரைசலில் ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் வேகவைத்த துவரம்பருப்பை அரை டம்ளர் நீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து இரண்டு கொதி வந்ததும், மீதியுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
தக்காளி தோசை
தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி - 3, புழுங்கல் அரிசி ஒரு கப், பச்சரிசி கால் கப், உளுத்தம்பருப்பு- 3 டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீர் விட்டு அரைக்கவும். பாதியளவு அரைபட்டதும் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நைஸாக அரைத்து, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை தவாவில் தோசையாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
சிவந்த நிறத்தில் புளிப்பும், காரமுமாக வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி ஏற்றது.
தக்காளி வெங்காயசட்னி
தேவையானவை: நாட்டுத் தக்காளி- 200 கிராம், பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய்- 5, கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி, சிறிது நேரம் ஆறவிட்டு உப்பு சேர்ந்து நைஸாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.
இது... இட்லி, தோசை, சப்பாதிக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது.
தக்காளி காரக்குழம்பு
தேவையானவை: பெங்களூர் தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், மணத்தக்காளி வற்றல் - 2 டேபிள்ஸ்பூன், புளி நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, துருவிய வெல்லம் ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, காய்ந்த மிளகாய் ஒன்று, உதிர்த்த வெங்காய வடகம்- 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:புளியைக் கரைத்து (2 டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை வதக்கி, மணத்தக்காளி வற்றல் சேர்த்து வதக்கி, கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும். வெல்லமும் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து குழம்பு பதம் வந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்த மல்லித்தழை சேர்க்கலாம்.
தக்காளிக்காய் கூட்டு
தேவையானவை: தக்காளிக்காய் கால் கிலோ, பயத்தம்பருப்பு 6 -டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: தேங்காய்த் துருவல் கால் கப், சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 5 இதழ்கள், நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன்..
செய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தக்காளிக்காயை நறுக்கிப் போட்டு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பின்னர், வேகவைத்த பருப்புகளை இதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தக்காளி பச்சைப் பட்டாணி புலாவ்
தேவையானவை: பெங்களூர் தக்காளி - 3, ஊறவைத்த பச்சைப் பட்டாணி கால் கப், பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கரம்மசாலாத்தூள் ஒரு சிட்டிகை, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் அரை கப், புதினா, கொத்தமல்லித்தழை தலா- 3 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த முந்திரி- 4, பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம் ஒன்று, எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:வெறும் வாணலியில் பாசுமதி அரிசியை லேசாக வறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரி, புதினா, கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். குக்கரில் 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, அரைத்து வைத்த விழுதினை சேர்த்து வதக்கவும். இதில் 3 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து, பட்டாணி, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து, மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் குக்கரைத் திறந்து நன்றாகக் கலந்துவிடவும்.
இதற்குத் தக்காளி ராய்த்தா சரியான சைட்டிஷ்.
மினிட்ஸ் தக்காளி சட்னி
தேவையானவை: பெங்களூர் தக்காளி - 4, சாம்பார் பொடி-2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), நறுக்கிய கொத்த மல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிட்டிகை, கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கி... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, (நீர் விடாமல்) அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதை இட்லி, பொங்கல், உப்புமா போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.
தக்காளி காய் கனி சப்ஜி
தேவையானவை: தக்காளிக்காய்- 4, நாட்டுத் தக்காளிப் பழம்- 2, பெரிய வெங்காயம் ஒன்று, ஊற வைத்து, வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை கால் கப், பூண்டு- 3 பல், மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை சிறிதளவு, கரம்மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள: பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் அரை கப், இஞ்சி ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பொட்டுக்கடலை -2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரைக்க கொடுத்த வற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காய், தக்காளிப் பழம், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், கொண்டைக்கடலையை சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி கரம்மசாலா சேர்த்து கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி, நாண், பரோட்டா முதலியவற்றுக்கு சிறந்த சைட்டிஷ்.
தக்காளி ஜாம்
தேவையானவை:நன்கு பழுத்த பெங்களூர் தக்காளி- 6, சர்க்கரை- 100 கிராம்.

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் பழங்கள் மூழ்கும் அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, தக்காளிப் பழங்களை முழுதாக அதில் போடவும். தோல் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் கைகளால் தோலை உரித்து, சர்க்கரை சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பட ஆரம்பித்ததும் இறக்கவும். ஆறிய தும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 4, 5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தக்காளிக்காய் அரைத்து விட்ட சாம்பார்
தேவையானவை: தக்காளிக்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம்- 10, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம்பருப்பு கால் கப், புளி கொட்டைப்பாக்கு அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: கடலைப் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன், தனியா - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த் துருவல்- 4 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். புளியை நீர் விட்டு கரைத்து (ஒரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சின்ன வெங்காயத்தை வதக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் ஊற்றவும். வெங்காயம் பாதியளவு வெந்ததும், நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காயை வதக்கி சேர்க்கவும். தக்காளிக்காய் விரைவிலேயே வெந்துவிடும். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லித்தழை தூவவும்.
குறிப்பு: தக்காளிக்காயில் புளிப்பு உள்ளதால் புளியை கொஞ்சமாகச் சேர்த்தால் போதும்.
தக்காளி சாலட்
தேவையானவை: பெங்களூர் தக்காளிப்பழம் - 3, பெரிய வெங்காயம் - 2, சிறிய வெள்ளரிக்காய் ஒன்று, மிளகுப்பொடி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:வெள்ளரி, தக்காளிப்பழம், வெங்காயம் ஆகியவற்றை வில்லைகளாக நறுக்கி... உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்க்கவும்.
தக்காளி ஜூஸ்
தேவையானவை: நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி கால் கிலோ, சர்க்கரை - 50 கிராம், உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை:தக்காளியைப் பொடியாக நறுக்கி... சர்க்கரை, உப்பு சேர்த்து ஜூஸர் அல்லது மிக்ஸியில் போட்டு ஜூஸாக்கவும். தேவையான அளவு ஐஸ்கட்டிகள் சேர்க்கவும் (குளிர் சீஸனில் ஐஸ்கட்டிகள் சேர்க்காமல், காய்ச்சி, ஆறவைத்த வெந்நீர் தேவையான அளவு சேர்த்துப் பருகலாம்).
தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன் ஃபுட் டெகரேஷன்: ’செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
கைம்மா கடலை
தேவையானவை: கொண்டைக்கடலை - 100 கிராம், எலும்பில்லா ஆட்டிறைச்சி (நன்கு கொத்தி வாங்கவும்)- 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, கேரட் (பெரியது) ஒன்று, கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, ஆச்சி காஷ்மீர் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், ஆச்சி மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன், ஆச்சி மட்டன் மசாலா 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு குழிக்கரண்டி, கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 2 ஆர்க்கு. தூள் உப்பு தேவையான அளவு, கட்டித்தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்.
அரைக்க: சின்ன வெங்காயம்- 100 கிராம், தக்காளி- 3, இஞ்சி அரை இன்ச் துண்டு, பூண்டுப் பல்- 8, முந்திரிப் பருப்பு- 4.

செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே நன்கு ஊறவைக்கவும். அடுத்த நாள் கொத்துக்கறியில் தயிர் விட்டு ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மை போல் மிக்ஸியில் அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த மசாலாவை சேர்த்து , அதன்பின் ஆச்சி காஷ்மீர் மிளகாய் தூள், ஆச்சி மஞ்சள் தூள், ஆச்சி மட்டன் மசாலா சேர்த்து சுருள வதக்கி... ஊறிய கொண்டைக்கடலை, கொத்துக்கறி போட்டு வதக்கவும். தேவையான உப்பு, 3 டம்ளர் நீர் விட்டு... குக்கரை மூடி, வெயிட் போட்டு, 6 விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பின்னர் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவவும். இதை பூரி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
டெய்சி லதா, நெல்லை, படம்: ஆ.முத்துக்குமார்