Published:Updated:

ஹோட்டல் ஸ்பெஷல்

ஹோட்டல் ஸ்பெஷல்

• இட்லி ஃபிங்கர் சிப்ஸ்  

• பீட்டல் லீவ்ஸ் (வெற்றிலை) பஜ்ஜி

• கறிவேப்பிலை இறால் தொக்கு 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• பீ நட் மஞ்சூரியன்

• பேரீச்சை பொரிச்சது  

• கருப்பட்டிப் பணியாரம்  

• வாழைப்பூ - 65

• மணி பேக் நூடூல் சமோசா  

• மூங்கில் பிரியாணி  

• ஹனி பெப்பர் சிக்கன்

ஹோட்டல் ஸ்பெஷல்

திருநெல்வேலியில் உள்ள 'ஆப்பிள் ட்ரீ’ ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் ராஜ்குமார், நமக்காக தங்கள் ஹோட்டலின் ஸ்பெஷல் டிஷ்களை வழங்கியிருக்கிறார்.

இட்லி ஃபிங்கர் சிப்ஸ்

தேவையானவை:

இட்லி - 6

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மிளகுத்தூள் -   தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

இட்லிகளை ஃபிங்கர் சிப்ஸ் வடிவத்துக்கு நீளமாக ஒவ்வொரு இட்லியிலும் 6 பீஸ்கள் வரும்படியாக வெட்டிக் கொள்ளவும். உங்கள் வீட்டு இட்லியைப் பொறுத்து பீஸ்கள் மாறுபடலாம். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து இட்லித் துண்டுகளைப் போட்டு அவற்றின் அனைத்துப் பகுதிகளும் பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கி எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும். அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவல் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு இட்லி ஃபிங்கர் பீஸ்களை எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து மேலே உப்பு, மிளகுத்தூள் தூவிப் புரட்டி பரிமாறவும். நீங்கள் எண்ணெயில் மிகச்சரியாக இட்லிகளைப் பொரித்தெடுத்திருந்தால் பேப்பர் டவலில் துளி எண்ணெய் கூட ஒட்டாது.

* இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர், ‘ஆப்பிள் ட்ரீ’ செஃப் ராஜேஷ்குமார்

பீட்டல் லீவ்ஸ் (வெற்றிலை) பஜ்ஜி

தேவையானவை:

பீட்டல் லீவ்ஸ் (காம்புடன் கூடிய வெற்றிலை) - 12

கடலை மாவு - கால் கிலோ

பேக்கிங் சோடா - 10 கிராம்

எண்ணெய் - 1 லிட்டர்

மிளகாய்த்தூள் - 20 கிராம்

உப்பு - தேவையான அளவு

ஓமம் - 10 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, ஓமம், தேவையான அளவு தண்ணீர் விட்டு, வழக்கமான பஜ்ஜி மாவை விட குறைவான அளவு தண்ணீர் இருக்குமாறு கரைத்து வைக்கவும். வெற்றிலைகளைக் கழுவி ஈரம் போகத் துடைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெற்றிலையை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பஜ்ஜியை ஒரு பேப்பர் டவலில் வைத்து, அதிகப்படியான எண்ணெய் போன பின்பு பரிமாறவும்.

கறிவேப்பிலை இறால் தொக்கு

தேவையானவை:

இறால் (பிரான்) - 250 கிராம்

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 4

மீடியம் சைஸ் தக்காளி - 4

இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 10 முதல் 12 இலைகள்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

பேஸ்ட் தயாரிக்க:

மல்லி (தனியா) - 20 கிராம்

கறிவேப்பிலை - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பேஸ்ட் தயாரிக்க கொடுத்தவற்றை விட்டு பொன்னிறமாக வதக்கி, சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து  நன்றாக அரைக்கவும். இறாலைக்  கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி-பூண்டு விழுது, அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), இறால் (தண்ணீர் இறுத்து விடவும்) சேர்த்து பதினைந்து முதல் இருபது நிமிடம் மிதமான தீயில் உப்பு சேர்த்து வேக விடவும். நன்றாகக் கொதித்ததும், கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி  பரிமாறவும்.

பீ நட் மஞ்சூரியன்

தேவையானவை:

சோளமாவு (கார்ன் ஃப்ளார்) - கால் கப்

மைதா மாவு - இரண்டரை டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - கால் கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பச்சை வேர்க்கடலை - 150 கிராம்

ஸ்டிக்கி சாஸ் செய்ய:

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 150 கிராம்

இரண்டாக உடைத்த பச்சை மிளகாய் - 1 அல்லது 2  

குடமிளகாய் - ஒன்றில் பாதி (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

ஸ்பிரிங் ஆனியன் - கால் கப் (பொடியாக நறுக்கவும்)

 சோயா சாஸ் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

ரெட் சில்லி (அ) க்ரீன் சில்லி சாஸ் - ஒன்றரை டீஸ்பூன்

டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

கார்ன் ஃப்ளார் (சோளமாவு) - 1 டீஸ்பூன் (இதை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்து வைக்கவும்)

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சோளமாவு (கார்ன் ஃப்ளார்), இஞ்சி-பூண்டு விழுது, சோயா சாஸ், மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கிக் கொள்ளவும். கரைத்த மாவில் முக்கியெடுத்த வேர்க்கடலைகளை மெதுவாக எண்ணெயில் இட்டுப் பொரித்தெடுக்கவும். ஒரு சமயத்தில் ஐந்து வேர்க்கடலைகளை மட்டும் போட்டுப் பொரிக்கவும். அதை எடுத்ததும் மற்ற செட்டுகளை போடவும். பொரித்தெடுத்தவற்றை பேப்பர் டவலில் போட்டு எண்ணெய் இல்லாமல் எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதிக தீயில் வைத்து, ஸ்டிக்கி சாஸ் செய்ய கொடுத்துள்ள  இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் குடமிளகாய் சேர்த்து சில நிமிடம் வதக்கி, ஸ்பிரிங் ஆனியன், ரெட் அல்லது க்ரீன் சில்லி சாஸ், சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் மிதமான தீயில் வேக விடவும். கரைத்து வைத்த கார்ன்ஃப்ளார் மாவைச் இதில் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி சில நிமிடம் வேக விடவும். பிறகு, பொரித்து வைத்துள்ள வேர்க்கடலையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

பேரீச்சை பொரிச்சது

தேவையானவை:

பேரீச்சை - 12 பழம் (விதை நீக்கியது)

மைதா மாவு - 100 கிராம்

சர்க்கரை - 50 கிராம்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் (சோளமாவு) - 1 டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

தண்ணீர் - அரை கப்

எண்ணெய் - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

மைதா மாவில் அரை கப் தண்ணீர் கலந்து கட்டியில்லாமல் கரைக்கவும். இதில் சர்க்கரை, உப்பு, கார்ன்ஃப்ளார், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், விதை நீக்கிய பேரீச்சையை மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்து சட்னி அல்லது சாஸோடு பரிமாறவும்.

கருப்பட்டிப் பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம்

கருப்பட்டி - 400 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

கருப்பட்டியில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். பச்சரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் இறுத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் இட்டு கருப்பட்டி தண்ணீரைச் சேர்த்து திக்கான மாவாகப் பிசைந்து வைக்கவும். இதனை மூடி இரண்டு மணி நேரம் புளிக்க விடுங்கள். இதில் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கி, மாவை ஊற்றி இருபக்கமும் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

வாழைப்பூ-65

தேவையானவை:

வாழைப்பூ - 1 (அதில் உள்ள தனித்தனிப் பூக்களாக 30 ஐ எடுக்கவும்)

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

அரிசி மாவு - 1 டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

கெட்டித் தயிர் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

வாழைப்பூவில் உள்ள தனித்தனிப் பூக்களின் நடு நரம்பை எடுத்துவிட்டுக் கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வாழைப்பூ நீங்கலாக தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் ஒன்றாக்கி தண்ணீர் சிறிது தெளித்து சேர்த்துக் கிளறவும். இந்த மாவுக்கலவையை இருபது நிமிடம் ஊற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைப்பூவை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

மணி பேக் நூடூல் சமோசா

தேவையானவை:

மைதா மாவு - 150 கிராம்

பெருங்காயம் - ஒரு பிஞ்ச்

உப்பு - தேவையான அளவு

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

ஸ்டபிஃங் செய்ய:

வேக வைத்த நூடூல்ஸ் - 100 கிராம்

உப்பு - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

முட்டைக்கோஸ், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன், கேரட் -  தலா 50 கிராம்

சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

ஸ்டபிஃங் செய்ய கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். மைதாமாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து வைக்கவும். இதை நான்கு பாகமாகப் பிரித்து உருட்டி வைக்கவும். இனி உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தடவிக்கொண்டு மாவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து மெதுவாகத் தட்டி தட்டி சுருக்குப் பை மாதிரி வடிவத்துக்குக் குழியாக்கவும். இதன் உள்ளே ஸ்டஃபிங் கலவையை சிறிதாக எடுத்து வைக்கவும். அதிகம் போட்டு நிரப்ப வேண்டாம். இப்போது மாவில் உள்ள பக்க ஓரத்தை எல்லாம் தண்ணீர் கொண்டு தடவி அவற்றை சுருக்குப் பை போல ஒட்டி ஒரு நாரால் கட்டவும். அடுப்பில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் காயும் போதே தீயை முற்றிலும் குறைத்து, ஒரு நேரத்தில் ரெண்டு அல்லது மூன்று சமோசாக்களாக  பொன்னிறமாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

மூங்கில் பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 200 கிராம்

மூங்கில் குழல் - அரை அங்குல நீளம் கொண்டது (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

சீரகம் - கால் டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

பட்டை - 1 பீஸ்

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

பிரியாணி இலை - 1

இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டுக் கலவை - ஒன்றரை டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

வெங்காயம் - 150 கிராம் (நீளமாக நறுக்கவும்)

முந்திரி, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - - அரை டேபிள்ஸ்பூன்

மீடியம் சைஸ் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - 200 கிராம்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா - அரை டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும். இதில் முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) பழம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளியை இதில் சேர்த்து, நன்கு மசியும் வரை வதக்கவும். காய்கறி மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை புதினா இலைகளைச் சேர்த்து நன்குக் கிளறவும். பிறகு கழுவிய அரிசியைச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக விடவும். பிரியாணி அரைவேக்காடு வெந்ததும் அதை அப்படியே எடுத்து, மூங்கில் கட்டையின் உள்ளே எவ்வளவு நிரப்ப முடியுமோ அவ்வளவு நிரப்பவும். வாய்ப்பகுதியை ஒரு சிறிய சுட்ட சப்பாத்தியை வைத்து மூடவும். சப்பாத்தியை மூடும்படியான ஒரு வாழை இலையை எடுத்து மூடி அப்படியே மூங்கில் கம்போடு வாழை இலையைச் சேர்த்து இறுக்கக் கயிற்றால் கட்டவும். அப்போதுதான் உள்ளே இருக்கும் பிரியாணி வெளியே வராது. இந்த மூங்கில் கட்டையை நேரடியாக தீயில் இருபது நிமிடம் காட்டி எடுத்தால் அற்புதமான மூங்கில் பிரியாணி ரெடி.

ஹனி பெப்பர் சிக்கன்

தேவையானவை:

போன்லெஸ் கோழிக்கறி - 200 கிராம் (நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

கார்ன்ஃப்ளார் (சோளமாவு) - 50 கிராம்

மைதா - 50 கிராம்

முட்டை - 1

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - ஒரு சிறிதளவு

நசுக்கிய மிளகு - 25 கிராம்

தேன் - 50 மில்லி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

பொடியாக நறுக்கிய இஞ்சி - 15 கிராம்

பொடியாக நறுக்கிய பூண்டு - 15 கிராம்

குடமிளகாய் - 50 கிராம் (நீளமாக நறுக்கவும்)

வெங்காயம் - 150 கிராம் (நீளமாக நறுக்கவும்)

வெங்காயத்தாள் -  சிறிதளவு

ஹோட்டல் ஸ்பெஷல்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள், முட்டை எல்லாம் சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். இதில் கோழிக்கறியைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோழிக்கறியைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் பெரிய வெங்காயம், குடமிளகாய், பொரித்த சிக்கன் சேர்த்து நன்கு கலந்து தேன், நசுக்கிய மிளகு, உப்பு சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள்களை சிறு துண்டுகளாக்கிப் போட்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

- அதிதி, படங்கள்: ஏ.சிதம்பரம்