Published:Updated:

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

Published:Updated:

உணவு:  ம.பிரியதர்ஷினி

படங்கள்: எம்.உசேன், ஆ.முத்துக்குமார்

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெஜ்ஜோ, நான் வெஜ்ஜோ தீபாவளி அன்று வீட்டில் என்ன செய்திருந்தாலும் அதை ஒரு பிடி பிடிப்பதுதானே நம்முடைய முதற்கடமை! இங்கே நமக்காக தங்களுடைய 'சிக்னேச்சர் தீபாவளி ரெசிப்பி’க்களைத் தருகிறார்கள் டாக்டர் செஃப் தாமு மற்றும் கீயாஸ் கிச்சன் உரிமையாளர் செஃப் மால்குடி கவிதா.

அப்பம்

தேவையானவை: மைதா மாவு - 1 டம்ளர், வெல்லம் - 300 கிராம், ஏலக்காய் - 6,  முந்திரிப் பருப்பு -  50 கிராம், ஆப்ப சோடா - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்)

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

செய்முறை: வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். அதை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி, பாகு திக்காக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். இதற்கென்று எந்தப்‌ பதமும் தேவையில்லை. பாகில் மைதா மாவு, இரண்டாக உடைக்கப்பட்ட முந்திரிப் பருப்புகள், பொடித்த ஏலக்காயை நன்கு கலந்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவு எடுத்து எண்ணெய்யில் விட்டுப் பொரித்தும் எடுக்கலாம்; அல்லது, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, அதில் மாவை ஊற்றி சின்னச் சின்ன அப்பங்களாகவும் சுட்டு எடுக்கலாம்.

அதிரசம்

 தேவையானவை: பச்சரிசி - 1 டம்ளர், வெல்லம் - 300 கிராம், நல்லெண்ணெய் - பொரிக்க‌த் தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். பின்பு, தண்ணீரை வடிகட்டி, ஃபேனின் அடியில் நன்கு காய விட வேண்டும். லேசாக ஈரம் இருக்கும்போதே பச்சரிசியை மிக்ஸியில் (மாவு அதிகமாக இருந்தால், மெஷினில் கொடுத்து) அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, அதை ஒரு பாத்திரத்தில் விட்டு, பந்து போல் பாகு வரும் வரை காய்ச்ச வேண்டும் (பந்து பாகு என்பது வெல்லப்பாகை எடுத்து தண்ணீரில் விட்டால் பந்து போல உருண்டு மேலே எழும்பி வரும்). அடுப்பை அணைத்துவிட்டு, காய்ச்சிய பாகில் மெதுமெதுவாக பச்சரிசி மாவை விட்டுக் கிளறிக்கொண்டே வர வேண்டும். கலக்கிய மாவு, பூரி பதத்துக்கு வரவேண்டும்.  

அடுத்து, வாணலியில் எண்ணெய்யைக் காயவைக்கவும். மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, வாழை இலையில் எண்ணெய் தடவி, உருட்டிய மாவை அதில் வைத்து பட்டையாகத் தட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுத்தால், அதிரசம் தயார்! அதிரசத்தை இரண்டு ஜல்லிக் கரண்டிகளின் நடுவில் வைத்து அழுத்தினால், அதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் கீழே வழிந்துவிடும். கரண்டியில் இருந்து அதிரசத்தை ஒரு வாரம்கூட வைத்திருந்து சாப்பிடலாம்.

மட்டன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி- அரை கிலோ, மட்டன்- முக்கால் கிலோ, புதினா, கொத்தமல்லி- தலா ஒரு கட்டு, தயிர்- 200 எம்.எல்,  லவங்கம், பிரிஞ்சி- தலா 2, எண்ணெய் 2 குழிக்கரண்டி, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 3 டீஸ்பூன், பச்சை மிளகாய்- 6, மிளகுத்தூள் 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 டீஸ்பூன், தக்காளி- 200 கிராம், சாம்பார் வெங்காயம்- 200 கிராம், மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்.

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

செய்முறை: அரிசியை 20 நிமிடம் ஊறவைத்துவிடுங்கள். மட்டனை நன்கு கழுவிச் சுத்தம் செய்து, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி போட்டுத் தாளித்ததும், நறுக்கி வைத்த புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக, தோல் உரித்த முழு வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்ததாக நறுக்கிய‌ தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இவை எல்லாம் நன்கு வதங்கியதும், தயிரில் ஊறவைத்த மட்டனை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, மட்டனை மூடி போட்டு வேகவிட வேண்டும். மட்டன் வெந்த பிறகு, ஊற வைத்துத் தண்ணீர் வடிகட்டிய அரிசியை இதோடு சேர்த்து, ஒரு கிளாஸுக்கு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் என்ற விகிதத்தில் இரண்டு கிளாஸ் அரிசிக்கு மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். தண்ணீர் கொதித்துக் குமிழ் குமிழாக வரும்போது, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடியை வைத்து மூடி, அதன் மேல் கனமான ஒரு பாத்திரத்தை வைத்துவிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் மிளகுத் தூளை பிரியாணி மேல் தூவி லேசாகக் கலந்துவிட்டால், அற்புதமான மட்டன் பிரியாணி தயார்!

கோழிக்குழம்பு

தேவையானவை: கோழி - அரை கிலோ (அது நாட்டுக் கோழியோ அல்லது பிராய்லரோ) சின்ன வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ, பச்சை மிளகாய் - 6, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, உப்பு - தேவையான அளவு.

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

அரைக்க: தேங்காய் - அரை மூடி, தனியா - ஒரு கை, காய்ந்த மிளகாய் - 8, மிளகு - 1 டீஸ்பூன், முந்திரி - 20.

செய்முறை: அரைக்கக் கொடுத்தவற்றை எண்ணெய் இல்லாமல் கடாயில் லேசாக வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்க‌ள்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிச் சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, தோல் உரித்த முழு சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அடுத்ததாக இஞ்சி, பூண்டு பேஸ்ட்டைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிக்கன் போட்டு ஒரு வதக்கு வதக்குங்கள். இத்துடன் நான்கு கிளாஸ் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, சிக்கனை வேகவிடுங்கள். சிக்கன் நன்கு வெந்ததும், அரைத்து வைத்த கலவையை சிக்கனுடன் சேர்த்துக் கலக்கி, ஐந்து நிமிடங்கள் கழித்து, அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். கோழிக்குழம்பு அதிக திக்காகவோ அல்லது அதிக தண்ணீராகவோ இருக்கக்கூடாது.

மீன் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்: வஞ்சிர மீன் ஸ்லைஸ் - 1/2 கிலோ, மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி, தனியாத்தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - கால் தேக்கரண்டி, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1, எலுமிச்சம்பழம் - 1 தேக்கரண்டி, மிளகு - 3 தேக்கரண்டி, எண்ணெய் - 1 1/2 குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

செய்முறை: மீனை சுத்தம் செய்து, கழுவி வைத்துக்கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து பேஸ்ட்போல செய்துகொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். ஊற வைத்துள்ள மீனை மசாலாவில் இரண்டு புறமும் புரட்டி எடுத்து, அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டுப் பொரித்தெடுக்கவும். அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறுமொறு மீன் மிளகு வறுவல் கிடைக்கும். இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். தனியாகச் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

குக்கும்பர் கீர்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் துருவியது - 2 கப், சொஜ்ஜி ரவை - 1/4 கப், கண்டென்ஸ்டு மில்க் - 1/4 கப், தண்ணீர் - தேவையான அளவு, இனிப்பின்றி சுண்டவைத்த, பால்கோவா -   1 கப், சர்க்கரை - 1/2  கப், ஏலக்காய் பொடி -   1 டீஸ்பூன், நெய் - 23 டேபிள் ஸ்பூன், முந்திரி மற்றும் பாதாம் - 23 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

செய்முறை: பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டுக் காய்ந்ததும், முதலில் ரவையை மணம் வரும்வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், வெள்ளரிக்காயைத் துருவிக்கொள்ள வேண்டும். பிறகு, ஊறவைத்துள்ள ரவையை ஒரு வாணலியில் போட்டு, தேவையான அளவு கொதிநீரை ஊற்றி அடுப்பில் வேகவைக்க வேண்டும். ரவை பாதி வெந்ததும், அதில் வெள்ளரிக்காயைப் போட்டு, அது நன்கு மென்மையாகும் வரை வேகவைக்க வேண்டும். பின்பு அதில் சர்க்கரைச் சேர்த்துக் கிளறி, அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால்கோவா சேர்த்துக் கிளறி, தீயை குறைவாக வைத்து, ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட வேண்டும். இறுதியில், அதில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து, தூவவும். சுவையான குக்கும்பர் கீர் ரெடி!

ஸ்டஃப்டு பீர்க்கங்காய்

தேவையான பொருட்கள்: பிஞ்சு பீர்க்கங்காய் -   1/2 கிலோ, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது,

அரைக்க: சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி, வெள்ளை எள்ளு - 1 மேசைக்கரண்டி, பொரித்த நிலக்கடலை - 1 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, தனியாத்தூள் - 1 தேக்கரண்டி, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், சோம்பு - 1 தேக்கரண்டி, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1

ருசிக்க சில ரெசிப்பிக்கள்!

செய்முறை: பீர்க்கங்காயை லேசாகத் தோல் சீவி, இரண்டு இஞ்ச் உயரத்துக்கு நறுக்கி (முழுவதுமாக வெட்டக் கூடாது), உள்ளிருக்கும் விதைப் பகுதியை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வறுத்து தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை பீர்க்கங்காயினுள் சிறிது சிறிதாக அடைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் பீர்க்கங்காயை சேர்க்கவும். அரைத்த மசாலா மீதமிருந்தால், அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில் மூடி வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு, வேகவைக்கவும். பீர்க்கங்காய் வெந்ததும், கறிவேப்பிலை தூவி, கிளறி இறக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism