Published:Updated:

30 வகை கோயில் பிரசாதம்

30 வகை கோயில் பிரசாதம்

30 வகை கோயில் பிரசாதம்

30 வகை கோயில் பிரசாதம்

Published:Updated:
30 வகை கோயில் பிரசாதம்
30 வகை கோயில் பிரசாதம்

``திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம், அழகர் கோயில் தோசை என அந்தந்த கோயில் களுக்கே உரிய பிரசாதங்களை நினைக்கும்போதே நாவூறும்; உள்ளம் பரவசத்தில் திளைக்கும். ஆண்டவனின் அருட்பார்வையுடன் தயாராகும் அந்தப் பிரசாதங்களின் மணமும், சுவையும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை! அவற்றை, அதே அளவு சுவை இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த சுவையுடன் நம் வீட்டிலும் தயாரிக்கலாம்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி, மிகுந்த அக்கறையுடன் பல நாட்கள் தகவல்களைச் சேகரித்து, தன் கைப்பக்குவத்தை களத்தில் இறக்கி, `30 வகை கோயில் பிரசாதங்கள்’ செய்யும் முறையை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவற்றை அழகுற செய்து பரிமாறி,  குடும்பத்தினரை உவகையில் ஆழ்த்துங்கள். இறைவனின் அருளால் உங்கள் இல்லங்கள் சிறக்க... உள்ளங்கள் மலர வாழ்த்துகள்!

30 வகை கோயில் பிரசாதம்

லட்டு 

தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ, சர்க்கரை - அரை கிலோ, வெல்லம் - 100 கிராம், நெய் - 400 கிராம், பாதாம், பேரீச்சை, திராட்சை, முந்திரி - தலா 25 கிராம், டைமண்ட் கற்கண்டு - 5 கிராம், பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - 10 கிராம், கிராம்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பூந்திக்கரண்டியில் ஊற்றி தேய்க்கவும். பூந்திகள் எண்ணெயில் விழுந்தவுடனே மெதுவாக திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்கள் கழித்ததும் மீண்டும் திருப்பிப் போட்டு எடுத்து எண்ணெய் வடிசட்டியில் கொட்டி, எண்ணெயை முழுவதுமாக வடித்துவிடவும்.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, வெல்லம் இரண்டையும் சேர்த்து நீர் விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும் (சர்க்கரை, வெல்லம் சேர்ந்த பாகு கொதிக்கும்போதே முக்கால்வாசி நெய்யை இடை இடையே விடவும்). அதற்குள் ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை விட்டு பாதாம், முந்திரி, திராட்சை, கிராம்பு, பேரீச்சை ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கவும். இதில், நசுக்கிய ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். எண்ணெய் வடித்த பூந்தி, கல்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கைகளில் நெய்யை தடவிக்கொண்டு கைபொறுக்கும் சூட்டுடனேயே லட்டுகளாகப் பிடிக்கவும். இது பல நாட்கள் கெடாது.

குறிப்பு: இது திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

அழகர் கோயில் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியைத் தனியாகவும், கறுப்பு உளுந்தைத் தனியாகவும் 20 நிமிடம் ஊறவிடவும். ஊறிய உளுந்தைக் கழுவி பாதியளவு தோலை நீக்கிவிட்டு, மீதி தோலுடனேயே தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரிசியைக் களைந்து வடிகட்டி கொரகொரப்பாக அரைத்து, உளுந்து மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, சுக்குப்பொடி, மிளகுப்பொடி,  கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் நெய்யை விட்டு மாவை கனமாக தோசையாக ஊற்றி, ஓரங்களில் நெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மதுரையை அடுத்த அழகர் கோயிலில் மலை உச்சியில் நூபுரகங்கை பாய்கிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தி தோசை பிரசாதம் தயார் செய்யப்பட்டு அழகருக்குப் படைக்கப்பட்டு பிரசாத மாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

கத்திரிக்காய் கொத்சு

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தனியா - 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும் பொடித்து வைத்ததை தூவி மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

30 வகை கோயில் பிரசாதம்

சம்பா சாதம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், மிளகு, சீரகம் - தலா 2 டேபிள்ஸ்பூன்,  நெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியை 4 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, சாதத்துடன் சேர்க்கவும். பிறகு, நெய்யை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஒரு டபராவில் போட்டு அழுத்தி கவிழ்த்து டபராவை எடுத்துவிடவும். சம்பா சாதம் தயார்.

குறிப்பு: தில்லை என்கிற சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜப் பெருமானுக்கு சம்பா சாதம் - கொத்சு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

ரசகுல்லா

தேவையானவை: பால் - 4 கப், எலுமிச்சைச் சாறு, தயிர் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: அடிகனமான பாத்திரம் ஒன்றில் பாலைக் காய்ச்சவும். பால் பாதி கொதிக்கும்போதே எலுமிச்சைச் சாறு, தயிர் சேர்த்துக் கலக்கவும்.  பால் திரிய ஆரம்பித்துவிடும். முழுவதும் திரிந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, மெல்லிய துணியால் வடிகட்டவும். அடியில் தண்ணீரும் மேலே பனீரும் தங்கிவிடும். அந்தப் பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அடிகனமான பெரிய பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை, 2 கப் நீர் விட்டு பாகு காய்ச்சவும். பனீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்து பெரிதானதும் ஏலக் காய்த்தூள் தூவி இறக்கி விடவும்.

குறிப்பு: கொல்கத்தா காளிதேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படு கிறது. அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒன்றரை கப், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், ஒன்றிரண்டாக உடைத்த சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், தயிர் - அரை கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து... கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்து... 10 மணி நேரம் புளிக்கவிடவும். ஒன்றிரண்டாக உடைத்த மிளகு - சீரகம், உப்பு, சுக்குப்பொடி, தயிர், பெருங்காயத்தூள், நெய், முந்திரித் துண்டுகள் ஆகியவற்றை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். டம்ளர் அல்லது கப்பில் நெய் தடவி பாதி அளவுக்கு மாவை நிரப்பி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் (மாவு வெந்து மேல் எழும்பி வரும்).

குறிப்பு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காஞ்சிபுரம் இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

அப்பம்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - கால் கப், அரிசி மாவு - அரை கப், துருவிய வெல்லம் - 2 கப், எண்ணெய் - பொரிப் பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை நீர் விட்டு (கால் கப்) அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். வெல்லக் கரைசலில் மைதா, கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, குழிக்கரண்டியால் ஒரு கரண்டி மாவினை  எடுத்து ஊற்றி, அடுப்பை `சிம்’மில் வைத்து ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்து, எண்ணெயை வடியவிடவும்.

குறிப்பு: ஶ்ரீரங்கப் பெருமாளுக்கும், திருச்சி அருகே உள்ள கோயிலடி பெருமாளுக்கும் அப்பம் நைவேத்தியமாகச் செய்யப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

பாலடை பிரதமன்

தேவையானவை:  பச்சரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீவிய வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நைஸாக, கெட்டியாக அரைத்து வாழை இலையில் வைத்து சுருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் (இட்லிப் பானையில் வேகவிடலாம்). வெந்ததும் துண்டுகளாக வெட்டவும். வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நெய்யை ஊற்றி, துண்டுகளாக்கிய அடையைப் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை - தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இது குருவாயூர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

அதிரசம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், பொடித்த வெல்லம் - ஒரு கப்,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, வடிகட்டி நிழலில் உலரவிடவும். முக்கால் பதம் உலர்ந்ததும் மிக்ஸியில் மாவாக அரைத்து சல்லடையில் சலித்துக்கொள்ளவும். வெல்லத்தை கால் கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து இறக்கி, மாவைத் தூவி நன்றாகக் கிளறிவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்கவும். இதுதான் அதிரச மாவு.மறுநாள் அடிகனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவிட்டு, அதிரச மாவை உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் வைத்துத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து...  பொரித்த அதிரசங்களை ஒரு டபரா வின் அடிபகுதியால் அழுத்தி அதிகப் படியான எண்ணெயை நீக்கி (அதிரசம் உடையாமல் செய்யவும்) எடுத்து, தட்டில் பரப்பி வைக்கவும். ஆறிய பின் எடுத்து சேமித்து வைக்கவும்.

குறிப்பு: காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டணத்தில் குடிகொண்டிருக்கிறார் ஆயிரங்காளி அன்னை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்கள் அம்மனை பெட்டியில் இருந்து எழுந்தருளச் செய்து, ஆயிரம் அதிரசம்  செய்து படையல் வைத்து, வணங்கி அருள் பெறுகின்றனர்.

30 வகை கோயில் பிரசாதம்

கோதுமைப் பொங்கல்

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பாதாம் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு -  8, குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், நெய் - 8 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பாதாம், பிஸ்தாவை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கோதுமை ரவையை வறுத்து 2 கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறி, வறுத்த பருப்புகள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.

குறிப்பு: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ‘நாத்வாரா’ என்னும் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனுக்கு கோதுமைப் பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

எள்ளு சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு எள் - கால் கப், வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு. நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வெறும் வாணலி யில் கறுப்பு மற்றும் வெள்ளை எள்ளை சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயில் காய்ந்த மிளகாய், பெருங் காயத்தை வறுத்து எள்ளுடன் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து அடுப்பை அணைத்து விடவும். சாதம், எள்ளுப்பொடி இவற்றை தாளித்த பொருட்களுடன் சேர்த்து கலந்துகொள்ளவும்.

குறிப்பு: இது சனிக்கிழமை களில் சனிபகவானுக்குப் படைத்து பிரசாதமாகத் தரப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

பானகம்

தேவையானவை: பொடித்த வெல்லம் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள், சுக்குத்தூள் - தலா அரை டீஸ்பூன், தண்ணீர் - 3 அல்லது 4 கப்.

செய்முறை: தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: கடலூர் மாவட்டம், சிங்கிரி குடியில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் பானகம் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

பால் பாயசம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் அரிசியை லேசாக வறுத்து ரவை பதத்துக்கு உடைத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சி, பாதி பாலைத் தனியாக வைக்கவும். மீதி பாலில் உடைத்த அரிசி ரவையைச் சேர்த்து வேகவிடவும். இடையிடையே எடுத்து வைத்த பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும் (அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). முழு பாலையும் ஊற்றி ரவை நன்றாக குழைய வெந்ததும், நன்கு மசிக்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கரைந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யுடன் இதில் சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும்.

குறிப்பு: இது திருப்புல்லாணி கோயில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

பஞ்சாமிர்தம்

தேவையானவை: மலை வாழைப்பழம் - 4, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, நெய் - 3 டேபிள்ஸ்பூன், டைமண்ட் கல்கண்டு - ஒரு  டேபிள்ஸ்பூன், தேன் - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்.

செய்முறை: ஒரு பேஸினில் மலை வாழைப்பழம், பேரீச்சம்பழத்தை நறுக்கிப் போட்டு... நெய், தேன், கல்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பிசையவும். இதுதான் பஞ்சாமிர்தம்.

குறிப்பு: இது பழநி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

அரவணை பிரசாதம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - சிறிதளவு, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பாகு வைத்துக்கொள்ளவும். பாகு கொதிக்கும்போதே வெந்த சாதத்தை பாகில் சேர்த்துக் கிளறவும். கிளறும்போதே, நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும் (அடுப்பை `சிம்’மில் வைத்து செய்யவும்). சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துண்டுகளை வறுத்துச் சேர்த்து... ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் தூவி இறக்கி... எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும்.
 
குறிப்பு: இது, சபரி மலை ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டு பின்பு பிரசாதமாக வழங்கப் படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

தயிர் சாதம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், கெட்டித் தயிர், பால் - தலா ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியைக் கழுவி 2 கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்து குழைய வேகவிடவும். வெந்தததும் வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து ஆறவிடவும். ஆறிய பிறகு தயிரைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, பரிமாறவும்.

குறிப்பு: இது தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்குப் படைத்து, பிரசாதமாக வழங்கப் படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

தேன்குழல்

தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ, பொட்டுக்கடலை, முழு உளுந்து (வெள்ளை) - தலா 6 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, வடிகட்டி நிழலில் உலரவிடவும். பாதியளவு உலர்ந்ததும் பொட்டுக்கடலை, உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக்கொள்ளவும். அந்த மாவை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, ஆறியதும் சலித்து வைக்கவும். பிறகு, மாவுடன் எள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
 
குறிப்பு: ஶ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

மிளகு புளியோதரை

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.வறுத்துப் பொடிக்க: மிளகு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம், கறுப்பு எள் - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து... புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வறுத்துப் பொடித்தவற்றையும், வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி (இடையிடையே நல்லெண்ணெய் விடவும்), கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதில் சாதத்தை சேர்த்துக் கிளறினால்... மிளகு புளியோதரை தயார்.

குறிப்பு: இது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

மிளகு வடை

தேவையானவை: உளுந்து - 2 கப், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: உளுந்தை 20 நிமிடம் ஊற விடவும். பிறகு வடிகட்டி கிரைண்டரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து  மாவை கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, பொடித்த மிளகு - சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கெட்டியான வடை மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து, ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வடைகளை பொரித்து எடுக்கவும். இது பல நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு: அனுமார் கோயில்களில் இந்த வடைகள் மாலையாகக் கோத்து அணிவிக்கப் பட்டு, பின்பு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

30 வகை கோயில் பிரசாதம்

அக்கார அடிசில்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 3 கப், பொடித்த வெல்லம் - அரை கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன், நெய் - 5 டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசியைக் கழுவி, நீரை வடிகட்டவும். அடிகனமான பாத்திரத் தில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி அரிசியை வறுத்து... 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும். வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்த்து கம்பிப் பதத்தில் பாகு வைத்து வெந்த சாதத்
தில் சேர்த்து, இடையிடையே மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி... ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து, குங்குமப்பூவையும் சேர்த்து இறக்கவும்.அக்கார அடிசில் பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - கால் கப், துருவிய வெல்லம் - ஒரு கப், பால் - கால் கப், நெய் - 5 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலாஒரசிட்டிகை, உடைத்தமுந்திரிததுண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி, பயத்தம்பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி கால் கப் பால், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும். வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து, இரண்டும் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் (வேகும்போதே இடையிடையே நெய் சேர்க்கவும்), சிறிதளவு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும்.

குறிப்பு: பெருமாள் கோயில் களில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக தரப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

மாலாடு

தேவையானவை: பயத்தம்பருப்பு - அரை கிலோ, சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 100 கிராம்.

செய்முறை: வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை வறுத்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை நைஸாக பொடிக்கவும். வாயகன்ற பேஸினில் மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து, சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து, மீதி நெய்யை சூடாக்கி மாவில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு, கைபொறுக்கும் சூட்டுடனேயே உருண்டைகளாகப் பிடிக்கவும். ஒரு தட்டில் பிடித்த உருண்டைகளை ஆறவிட்டு பிறகு எடுத்து வைக்கவும்.

குறிப்பு: இது திருச்சானூர் பத்மாவதி தாயாருக்குப் படைத்து பிறகு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

காப்பரிசி

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசியைக் கழுவிக் களைந்து வடிகட்டி, பாதி உலரவிட்டு வெறும் வாணலியில் வறுத்தால் பொரிந்துவிடும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு பாகு காய்ச்சி, பொரித்த அரிசியை அதில் சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
 
குறிப்பு: சிவன் கோயில்களில் பிரதோஷ தினத்தன்று இதனைச் செய்து படைப்பர்.

30 வகை கோயில் பிரசாதம்

மோதகம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - கால் கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

 செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து சன்னமான ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான வாணலியில் 2 கப் நீர்விட்டு வெல்லம், தேங்காய் துருவல் சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் உடைத்த அரிசி ரவையைக் கொட்டிக் கிளறி, அரை வேக்காடு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்  தூவி இறக்கவும். கைகளில் நெய் தொட்டுக்கொண்டு, அரிசி ரவை கலவையை மோதமாக உருட்டி... இட்லி பானையில் 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பிள்ளையார்பட்டியில் இந்த மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

வெண் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - கால் கப்,  மிளகு, சீரகம் - தலா 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: மிளகு, சீரகத்தை பொடிக்கவும். வெறும் வாணலியில் அரிசி, பருப்பை  லேசாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். அரிசி - பருப்புடன் 4 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய் விட்டு, பொடித்த மிளகு, சீரகத்தைப் போட்டு, நறுக்கிய இஞ்சி, முந்திரித் துண்டுகள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அனைத்தையும் வெந்த சாதத்தில் சேர்த்துக் கலந்தால்... வெண் பொங்கல் தயார்.

குறிப்பு: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை வேளையில் பெருமாள்  கோயில்களில் இதனைப் பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.

30 வகை கோயில் பிரசாதம்

கொண்டைக் கடலை சுண்டல்

தேவையானவை: கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, தனியா - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு, நீரை வடிக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்தவற்றை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கி, பொடித்து வைத்த பொடியைத் தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
 
குறிப்பு: இது நவராத்திரி சமயத்தில் அம்மன் கோயில்களில் (கொலு வைத்திருக்கும்போது) படைத்துப் பிரசாதமாகத் தரப்படு கிறது. இது குருபகவானுக்கும் உகந்தது.

30 வகை கோயில் பிரசாதம்

புட்டு

தேவையானவை: பச்சரிசி - ஒன்றரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசியை நன்றாகக் கழுவி, களைந்து, வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு மாவாக்கவும். வெந்நீரில் உப்பு கலந்து அந்த மாவில் தெளித்துப் பிசறி வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி பாத்திரத்தில் வைத்து, இட்லிப் பானையில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, ஒரு துணியில் கொட்டி, கட்டி இல்லாமல் தேய்த்துவிடவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்து நீர்விட்டு ஒரு கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். இந்தப் பாகினை மாவில் சேர்த்துக் கிளறி, நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து, எல்லாவற்றையும் நன்கு கலந்து மூடி வைத்து... அரை மணி நேரத்துக்குப் பிறகு பயன்படுத்தவும்.

குறிப்பு: காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியைக் கழுவி, களைந்து, நிழலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் உளுந்துடன் சேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவை சலித்து ஒரு வாயகன்ற பேஸினில் போட்டு... உப்பு, சீரகம் சேர்த்து நீர் விட்டு பிசைந்து, கைகளால் முறுக்கு சுற்றி, துணியில் போட்டு அரை மணி நேரம் உலரவிடவும். வாயகன்ற வாணலியில் நெய்யை ஊற்றி, சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, சுற்றி வைத்த முறுக்கைப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
 
குறிப்பு: இந்த நெய் முறுக்கு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

உப்பில்லா வடை

தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், ஒன்றிரண்டாக உடைத்த மிளகுப்பொடி, சீரகப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: கறுப்பு உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து, தோலுடனேயே அரைத்து  மிளகுப்
பொடி, சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண் ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
 
குறிப்பு: உப்பிலியப்பர் கோயிலில் இந்த உப்பில்லாத வடை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பின்பு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

சுக்கு கஷாயம்

தேவையானவை: சுக்கு - 100 கிராம், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், தனியா - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சுக்கை நன்றாக நசுக்கவும். வெறும் வாணலியில் நசுக்கிய சுக்கு, மிளகு, தனியாவை சேர்த்து வறுத்து 4 டம்ளர் நீர் விடவும். இது இரண்டு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும்.

குறிப்பு: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

30 வகை கோயில் பிரசாதம்

கேரட் - பாதாம் அல்வா

தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி - தலா 10, ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் - 4 டீஸ்பூன், பேரீச்சம்பழம் - கால் கப், ரஸ்க் - அரை கப், கசகசா - 10 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், கேரட் (வேகவைத்து மசித்தது) - அரை கப், பால் - 2 கப், தேங்காய்த் துருவல் - கால் கப்.

செய்முறை: பாதாம், முந்திரி, கசகசா மூன்றையும் சுடுநீரில் 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழம், தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு பால் விட்டு அரைத்துக்கொள்ளவும். ரஸ்கை மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். கடாயில் தேவையான அளவு நெய் விட்டு ரஸ்க் தூளை வறுக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள பாதாம் - முந்திரி - கசகசா விழுது, வேகவைத்து மசித்த கேரட், பேரீச்சம்பழம் - தேங்காய் விழுது, பால் சேர்த்துக் கிளறி... அதனுடன் சர்க்கரை, வெல்லம். ஆச்சி பாதாம் டிரிங்க் மிக்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக சுருள வரும் வரை மேலும் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

மகுடம் சூட வா!

கிச்சன் கில்லாடிகளே... உங்களுக்கு சமையல் ராணி பட்டம் சூட்ட ஒரு போட்டி

30 வகை கோயில் பிரசாதம்

ச்சி மசாலா தயாரிப்புகளை வைத்து நீங்கள் ஏதேனும் ஒரு ரெசிபியை செய்து பார்த்து, அதற்கான சமையல் குறிப்பினை எங்களுக்கு அனுப்புங்கள். சிறந்த, புதுமையான, ருசியோ ருசியான ரெசிபி அனுப்புபவர்களுக்கு ‘ஆச்சி கிச்சன் ராணி’ என்ற பட்டத்துடன் ஆச்சி மசாலாவின் தயாரிப்புகள் அடங்கிய ‘தாய்வீட்டு சீதனம்’ மசாலா பேக்கேஜ் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: செய்முறையை அனுப்பும்போது நீங்கள் ஆச்சி மசாலாவின் எந்த வகை தயாரிப்பைப் பயன்படுத்தி உங்கள் ரெசிபியைத் தயாரித்தீர்களோ... அந்தக் கவரின் ஒரு பகுதியை வெட்டி ரெசிபியுடன் சேர்த்து அனுப்பி வையுங்கள்.

உங்களின் முகவரி, இமெயில் முகவரி ஆகியவற்றோடு, உங்கள் தொடர்பு எண்ணும் அவசியம். போட்டோவையும் அனுப்பத் தவறாதீர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: ஆச்சி கிச்சன் ராணி, தபால் பெட்டி எண் - 4815, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002.

ஆச்சி மசாலா தயாரிப்புகளைப் பயன்படுத்தி புதுப்புது ரெசிபிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள் வாசகிகள். அவர்களில் `சமையல் ராணி’ பட்டம் பெறுபவர்களை தேர்ந்தெடுக்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். அடுத்தடுத்த இதழ்களிலும் ‘சமையல் ராணிகள்’ தொடர்ந்து அணிவகுப்பார்கள்.

- ஏ.அபிநயா, காஞ்சிபுரம்
படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism