Published:Updated:

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

Published:Updated:
30 வகை குட்டீஸ் ரெசிப்பி
30 வகை குட்டீஸ் ரெசிப்பி

குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பதே ஒரு கலைதான். பலருக்கும் அந்தக் கலையை வசப்படுத்துவது சிரமமாகத்தான் இருக்கிறது. ``இது ஒன்றும் பிரம்மவித்தை இல்லை. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் அக்கறை என்று கலந்துகட்டி முயற்சி செய்தால், சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட, `ரெடி ஆகிடுச்சா?’ என்று பரபரப்பாக கேட்பார்கள்’’ என முன்னுரை கொடுக்கும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்... மிகவும் எளிதாக செய்யக்கூடிய, அசத்தலான சுவை கொண்ட, சுட்டிகளைக் கவரும் விதத்திலான பல ரெசிப்பிகளுடன், அவர்களின் உடல்நலத்துக்கு உறுதுணையாக இருக்கும் சில உணவு வகைகளையும் இங்கே வழங்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஃபஸ்ட் கிளாஸ்... சூப்பர்’ என்பது போன்ற பாராட்டுகள் உங்கள் காதில் ஒலிக்க வாழ்த்துகள்!

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கோன் ரோஸ்ட்

தேவையானவை: இட்லி அரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புகள், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து நைஸான மாவாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும். புளித்த மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக தேய்த்து, நெய் விட்டு வேகவிடவும். பிறகு, தோசையின் நடுவில் இருந்து ஒரு நேர்கோடு போல கீறவும். கீறிய இடத்தில் இருந்து சுருட்டி கோன் போல மடித்து பரிமாறவும்.

க்ரீன் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

ஹெல்தி டிரிங்க் மிக்ஸ்

தேவையானவை: பனங்கற்கண்டு - கால் கிலோ, முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 50 கிராம், சுக்குத்தூள் - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தாவை தனித்தனியே வறுத்து எடுக்கவும். பனங்கற்கண்டை தூளாக்கவும். வறுத்த பருப்புகள், சுக்குத்தூள், மிளகு, பனங்கற்கண்டுதூள் சேர்த்து அரைத்து சலிக்கவும். இதை ஈரம் இல்லாத, காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். தேவையானபோது, ஒரு டம்ளர் காய்ச்சிய பா லுடன் இரண்டு ஸ்பூன் பொடியை சேர்த்துப் பருகலாம் (குளிரவைத்தும் பருகலாம்).

வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத் துக்கு இது மிகவும் நல்லது.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

ஹோம்மேட் ஐஸ்க்ரீம்

தேவையானவை: பால் - அரை லிட்டர், பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்), மாம்பழத் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள் (சேர்த்து) - ஒரு கப், சர்க்கரை - 10 டீஸ்பூன், முந்திரி - 5, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, கால் லிட்டராக குறுகிய பின்னர் இறக்கி, ஆறவிடவும். இதனுடன் சர்க்கரை, பேரீச்சை, முந்திரி, பழத்துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கார்ன் ஃப்ளாருடன் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.  ஆறியபின் இதனை அரைத்த பழக் கலவையுடன் சேர்த்துக் கலந்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து, ஆறு மணி நேரத்துக்குப் பிறகு எடுத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கேரட் - லெமன் சாலட்

தேவையானவை: கேரட் - 2, சிறிய எலுமிச்சைப் பழம் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். ஒரு பாத்திரத்தில் கேரட் துருவலைப் போட்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, கேரட் கலவையுடன் சேர்க்கவும். பரிமாறும்போது பச்சை மிளகாயை எடுத்துவிடவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

சாக்லேட் பாயசம்

தேவையானவை: பச்சரிசி - 100 கிராம், காய்ச்சி, ஆறவைத்த  பால் - அரை லிட்டர், சாக்லேட் துருவல் அல்லது சாக்லேட் பவுடர் - 4 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி, இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். மாவை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து (அடுப்பை `சிம்’மில் வைக்கவும்) கிளறி, அடிபிடிக்காமல் வேகவிடவும். பிறகு பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், சாக்லேட் பவுடர் சேர்த்துக் கலந்து, ஒரு கொதிவிட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

ஸ்வீட் சிவ்டா

தேவையானவை: அவல், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க் கடலை, சர்க்கரை - தலா 100 கிராம், முந்திரி - 50 கிராம், கறிவேப்பிலை - 10 இலை, எண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்,  உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெறும் வாணலி யில் அவல், பொட்டுக் கடலையை வறுக்கவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் அல் லது நெய் விட்டு... முந்திரி, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, அவல் கலவையுடன் சேர்க்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

அவலுக்குப் பதில் சிவப்பு அவல், ராகி அவல் பயன்படுத்தியும் செய்யலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

தேங்காய் லாலிபாப்

தேவையானவை: முற்றிய தேங்காயின் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், நெய், டூத் பிக் - தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய்த் துருவலை வெறும் வாணலியில் ஈரம் போக வறுக்கவும். ஆறிய பின் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுக்கவும். தேங்காய் கலவையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இதனுடன் எள், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து, ஒரு தட்டில் கொட்டி, நெய்யை சூடாக்கி விட்டுக் கலந்து, சிறிய பந்துகளாக உருட்டி, டூத்பிக்கை நடுவே செருகி சாப்பிடக் கொடுக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

குயிக் ஃப்ரைடு  ரைஸ்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று,  கோஸ் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,  சீரகத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 2 கப்.

செய்முறை: குக்கரில் அரிசியைக் களைந்து போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய், துருவிய கோஸ் சேர்த்து நன்கு வதக்கி... மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு உப்பு போட்டுக் கிளறி,  குக்கரில் இருக்கும் வெந்த சாதத்துடன் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

சாக்லேட் பரோட்டா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் அல்லது தண்ணீர் - சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி - 4 டீஸ்பூன், சாக்லேட் துருவல் - தேவைக்கேற்ப, நெய் - சுட்டு எடுக்க தேவையான அளவு, உப்பு -  ஒரு சிட்டிகை.

செய்முறை: வேர்கடலைப் பொடியுடன் சாக்லேட் துருவல் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து சிறிதளவு பால் (அ) தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி போல இட்டு நடுவே சாக்லேட் கலவையை வைத்து ஓரத்தில் இருந்து சுற்றி, உருண்டையாக்கி, மீண்டும் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கோகோ - வேர்க்கடலை பட்டர்

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், சர்க்கரை - கால் கப்,  கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வேர்க்கடலையின் தோலை நீக்கி மிக்ஸியில் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நைஸாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, கோகோ பவுடர், உப்பு சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை பிரெட் மீது தடவி சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

சுகர் பாத்

தேவையானவை: சாதம் - ஒரு கப், பால் - அரை கப், சர்க்கரை - 10 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 5.

செய்முறை: முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். மேலே முந்திரியால் அலங்கரித்து, இறக்கிப் பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

ஸ்வீட் கோன் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துப் பிசைந்து. சிறிய பூரிகளாக இட்டு கோன் போல மடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பூரிகள் சூடாக இருக்கும் போதே சர்க்கரை - ஏலக்காய்த்தூள் கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

ஃப்ரூட் பாரிட்ஜ்

தேவையானவை: சத்து மாவு (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது) - 2 டீஸ்பூன், விரும்பிய பழங்களின் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா, நெய் - சிறிதளவு. 

செய்முறை: சத்து மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கஞ்சி போல காய்ச்சவும். ஆறிய பின் சர்க்கரை, பழத்துண்டுகள் சேர்த்து... முந்திரி, பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

பாலக் பச்சடி

தேவையானவை: பாலக்கீரை - ஒரு கப், தயிர் - 2 கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2,  தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கீரையைக் கழுவி, பொடியாக நறுக்கவும். வாணலியில் கீரையைப் போட்டு, உப்பு, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். இதை ஆறவிட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து தயிருடன் கலக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

முருங்கை இலை இட்லி

தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், முருங்கைக்கீரை - ஒரு கப்.

செய்முறை: முருங்கைக்கீரையை ஆய்ந்து, அலசவும். இட்லி மாவுடன் கீரையை சேர்த்துக் கலந்து வழக்கம் போல இட்லிகளாக வார்க்கவும்.

குறிப்பு: இது... கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்தது. இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் மிகவும் ஏற்றது.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

மிக்ஸட் ஃபரூட் சாட்

தேவையானவை: பழக் கலவை (வாழை, மாதுளை, ஆப்பிள், திராட்சை, கொய்யா) - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - அரை மூடி, சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப. 

செய்முறை: ஒரு பாத்திரத் தில் பழக்கலவை, உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை குளிர வைத்தும் பரிமாறலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

பழ வறுவல்

தேவையானவை: சற்று கெட்டியான நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: நேந்திரன் பழத்தின் தோலை உரித்து சிப்ஸ் கட்டையில் சீவி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

நேந்திரன் பழம் இரும்புச்சத்து நிறைந்தது.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக் கீரை - ஒரு கட்டு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, புளி - கொட்டைப்பாக்கு அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து... பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்துக் கிளறி... பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சுத்தம் செய்த வல்லாரைக் கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும். ஆறிய பின் அதனுடன் புளி சேர்த்து அரைத்து எடுத்தால், வல்லாரை துவையல் ரெடி!

இது... உடல் ஆரோக்கியமாக இருக்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவும். இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

தோசை பீட்ஸா

தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, நறுக்கிய குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) கலவை - ஒரு கப், கேரட் துண்டுகள் - ஒரு கப், `பீட்ஸா சீஸ்’ துருவல் - அரை கப், தக்காளி சாஸ் - சிறிதளவு, பீட்ஸா சீஸனிங் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். குடமிளகாய், கேரட்டை ஒரே அளவில் சிறிய சதுர துண்டுகளாக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மூன்று கரண்டி தோசை மாவை  ஊத்தப்பம் போல சற்று கனமாக ஊற்றவும். அதன் மீது பீட்ஸா சீஸ் துருவல் சிறிதளவு தூவவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துண்டுகளை தூவி, மேலே மீண்டும் சிறிதளவு பீட்ஸா சீஸ் துருவல் தூவி... அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடி போட்டு, மூன்று அல்லது நான்கு நிமிடம் வேகவிட்டு இறக்கவும் (திருப்பிப் போடக்கூடாது). பிறகு, மூடியை எடுத்துவிட்டு, பரவலாக தக்காளி சாஸ் விட்டு, பீட்ஸா சீஸனிங் தூவி, முக்கோண வடிவில் வெட்டி எடுத்து, பீட்ஸா போல பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

துளசி கஷாயம்

தேவையானவை: துளசி இலைகள் - 10, ஓமம் - கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு - 4.

செய்முறை: சுத்தம் செய்த துளசி இலைகள், ஓமம், பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில்  சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அரை பங்காக சுண்டியவுடன் இறக்கி வடிகட்டி பருகலாம்.

குறிப்பு: இந்தக் கஷாயம்... இருமல், சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கிழங்கு மிக்ஸர்

தேவையானவை: உருளைக் கிழங்கு, வாழைக்காய், நேந்திரன் காய் - தலா ஒன்று, மரவள்ளிக்கிழங்கு - 100 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவைக் கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக் கிழங்கு, நேந்திரன் காய் ஆகிய வற்றை தோல் சீவி, சிப்ஸ் கட்டை யில் சீவவும். எண்ணெயைக் காயவைத்து சீவிய துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் குலுக்கி சாப்பிடக் கொடுக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கோதுமை மாவு புரட்டல்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்து, கோதுமை மாவுடன் சேர்த்துப் புரட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.

குறிப்பு: விருப்பப்பட்டால், பேரீச்சை துண்டுகளையும் சேர்க்கலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட்

தேவையானவை: காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப், கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், விரும்பிய பழங்களின் துண்டுகள்  - ஒரு கப்.

செய்முறை: ஒரு கப் பாலை கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கி, கால் கப் பாலாக சுண்ட காய்ச்சவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து ஆறவிடவும். மீதமுள்ள பாலை இத்துடன் கலந்து குளிர வைக்கவும். ஒரு பவுலில் சிறிதளவு கஸ்டர்ட் மில்க் ஊற்றி, மேலே பழக்கலவையை போட்டு, மீண்டும் அதன் மேல் கஸ்டர்ட் மில்க் விட்டு பரிமாறவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கருப்பட்டி - எள் புட்டு

தேவையானவை: கறுப்பு எள் - ஒரு கப், கருப்பட்டித்தூள் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப்.

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் பொரிக்கவும். தேங்காய்த் துருவலையும் வெறும் வாணலியில் ஈரம் போக வறுக்கவும். கருப்பட்டித்தூளுடன் வறுத்த எள், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை அப்படியே புட்டு போல சாப்பிடலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

கோதுமை கார சிப்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவுடன் மிளகுத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு மாவை சப்பாத்திகளாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். எண்ணெயை காயவைத்து வெட்டிய துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

புதினா சர்பத்

தேவையானவை: புதினா - ஒரு கட்டு, எலுமிச்சைப் பழம் - 10, சர்க்கரை - இரண்டரை கப், உப்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (தோல் சீவவும்).

செய்முறை: புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்யவும். எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து உப்பு சேர்த்து வைக்கவும். புதினா இலைகளுடன், இஞ்சி, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் இறக்கி ஆறவிட்டு, புதினா விழுதுடன் சேர்த்துக் கலக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவையானபோது கால் கப் சர்பத்துடன் முக்கால் கப் தண்ணீர் விட்டுப் பருகலாம்.

இந்த சர்பத் குழந்தைகளின் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

சிமிலி உருண்டை

தேவையானவை: அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள், பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், பச்சைப் பயறு - தலா ஒரு கைப்பிடி அளவு, வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள், பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், பச்சைப் பயறு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும்.

ஆறிய பின் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உருண்டகளாகப் பிடிக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

நட்ஸ் ஜாம்

தேவையானவை: பேரீச்சை, பாதாம், முந்திரி, திராட்சை - தலா 10, கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - 5 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாதாம், முந்திரி, கொப்பரைத் துருவலை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பேரீச்சையை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கி, அதனுடன் நெய் சேர்த்து, பாதாம், முந்திரி, கொப்பரைத் துருவல், திராட்சை ஆகியவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் அரைத்த பேரீச்சை கலவை, கற்கண்டு தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி மீது தடவி ரோல் செய்தும் சாப்பிடலாம்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

மசாலா பொரி

தேவையானவை: பொரி - ஒரு கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 2 பல் (தோலுரித்து, தட்டி வைக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பொட்டுக் கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). பிறகு பொரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து வறுத்து எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

வெஜ் பக்கோடா

தேவையானவை: கேரட் - ஒன்று, வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு - தலா 5 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய், கேரட்டை சுத்தம் செய்து விரும்பிய வடிவில் வெட்டவும். பிறகு, இதனுடன் மாவு வகைகள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பிசிறி வைத்திருக்கும் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதில் உள்ள காய்கறிகள்... ஞாபக சக்தியை அதிகரிக்கும்; பார்வைத் திறனை மேம்படுத்தும்.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

சோயா - கடலைப்பருப்பு கிரேவி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி

தேவையானவை: சோயா உருண்டைகள் (சிறியது) - 25, கடலைப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2, ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், ஆச்சி மஞ்சள்தூள் - சிறிதளவு, ஆச்சி கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு - தாளிக்கத் தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து, குளிர்ந்த நீரில் இருமுறை அலசவும். பின்னர் அதை ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொண்டு... சிறிது எண்ணெயைக் காயவைத்து, அதில் புரட்டி எடுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை வாணலியில் சேர்த்து... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு தாளித்து... நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி
கரைந்த பின் ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, கடலைப்பருப்பு, சோயா உருண்டைகளை சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இது சப்பாத்திக்கு சிறந்த சைட் டிஷ்.
- பிரபா, சேலம், படம்: ஆ.முத்துக்குமார்

மகுடம் சூட வா!

கிச்சன் கில்லாடிகளே... உங்களுக்கு சமையல் ராணி பட்டம் சூட்ட ஒரு போட்டி!

ச்சி மசாலா தயாரிப்புகளை வைத்து நீங்கள் ஏதேனும் ஒரு ரெசிபியை செய்து பார்த்து, அதற்கான சமையல் குறிப்பினை எங்களுக்கு அனுப்புங்கள். சிறந்த, புதுமையான, ருசியோ ருசியான ரெசிபி அனுப்புபவர்களுக்கு ‘ஆச்சி கிச்சன் ராணி’ என்ற பட்டத்துடன் ஆச்சி மசாலாவின் தயாரிப்புகள் அடங்கிய ‘தாய்வீட்டு சீதனம்’ மசாலா பேக்கேஜ் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: செய்முறையை அனுப்பும்போது நீங்கள் ஆச்சி மசாலாவின் எந்த வகை தயாரிப்பைப் பயன்படுத்தி உங்கள் ரெசிபியைத் தயாரித்தீர்களோ... அந்தக் கவரின் ஒரு பகுதியை வெட்டி ரெசிபியுடன் சேர்த்து அனுப்பி வையுங்கள்.

உங்களின் முகவரி, இமெயில் முகவரி ஆகியவற்றோடு, உங்கள் தொடர்பு எண்ணும் அவசியம். போட்டோவையும் அனுப்பத் தவறாதீர்கள்.
 
அனுப்ப வேண்டிய முகவரி: ஆச்சி கிச்சன் ராணி, தபால் பெட்டி எண் - 4815, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600002.

ஆச்சி மசாலா தயாரிப்புகளைப் பயன்படுத்தி புதுப்புது ரெசிபிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள் வாசகிகள். அவர்களில் `சமையல் ராணி’ பட்டம் பெறுபவர்களை தேர்ந்தெடுக்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். அடுத்தடுத்த இதழ்களிலும் ‘சமையல் ராணிகள்’ தொடர்ந்து அணிவகுப்பார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism