சூப் ரெசிப்பி
விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்! மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ என்று அறிவித்தால் போதும்... வீட்டில் இருப்பவர்கள் டி.வி-யையும், கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் ஒரு கணம் மறந்துவிட்டு, ‘சீக்கிரம் கொண்டு வா! என்று சாப்பிடும் இடத்தில் ஆஜராகிவிடுவார்கள். வித்தியாசமான பல்வேறு சூப் வகைகளை இங்கே செய்துகாட்டி, உங்களுக்கு உற்ற தோழியாய் உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல்கலையில் திறமைமிக்கவரான ர.கிருஷ்ணவேணி.
சுடச்சுட சூப் எடுங்க... மழை, குளிர்காலத்தைக் கொண்டாடுங்க!
மாதுளை சூப்

தேவையானவை: மாதுளை முத்துக்கள் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாதுளைத் தோல் - கால் கப், துருவிய பீட்ரூட் - கால் கப், தக்காளி - 2, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மாதுளை முத்துக்கள், மாதுளைத் தோல், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்க்கவும். கிராம்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து லேசாக வறுக்கவும். அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
மாதுளையும், மாதுளைத் தோலும் வயிற்றுக்கு இதம் சேர்ப்பவை.
பிரேக்ஃபாஸ்ட் சூப்

தேவையானவை: தக்காளி, வெங்காயம் - தலா 2, துண்டுகளாக நறுக்கிய பீன்ஸ், கேரட், வெள்ளை, மஞ்சள் பூசணி (சேர்த்து) - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, ஓட்ஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெண்ணெய், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: நறுக்கிய தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், வெள்ளை, மஞ்சள் பூசணித் துண்டுகளுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறியதும், நீரை வடிக்கவும் (வடித்த நீரை மீண்டும் சூப்பில் சேர்க்கலாம்). இந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து... மிகப்பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் ஓட்ஸ், காய்கறி வடித்த நீர் சேர்க்கவும். ஓட்ஸ் வெந்ததும் அரைத்த காய்கறி விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பிய சூப் இது. ஓட்ஸும் சேர்வதால், ஒருவேளை உணவுக்கு இணையாகும்.
பேபிகார்ன் - பாதாம் சூப்

தேவையானவை: பேபிகார்ன் - 5, பாதாம் - 10, துருவிய மஞ்சள்பூசணி - கால் கப், பால் - 2 கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: பாதாமை வெந்நீரில் ஊறவைத்து, தோலுரிக்கவும். இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பேபிகார்ன், துருவிய மஞ்சள் பூசணி சேர்த்து வதக்கவும். இதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த பாதாம் விழுது, பேபிகார்ன் கலவை, மீதமுள்ள பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாகி வருபவர்களுக்கு, இந்த சூப் கொடுத்தால், குணமடைவதை துரிதப்படுத்தும்.
சீரகம் - தனியா சூப்

தேவையானவை: சீரகம், மல்லி (தனியா) - தலா கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - 2, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
இந்த `க்ளியர் சூப்’, பசியைத் தூண்டும்; உணவு நன்கு செரிமானம் ஆக உதவும். இது கெட்டியாக இருக்காது. கெட்டியாக தேவைப்பட்டால், கார்ன்ஃப்ளார் சேர்த்துத் தயாரிக்கலாம்.
பார்லி சூப்

தேவையானவை: பார்லி - அரை கப், பாலக்கீரை (நறுக்கியது) - ஒரு கப், பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 4, கிராம்பு - 2, பட்டை - சிறு துண்டு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பார்லியை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும். வடித்த பார்லியில் ஒரு ஸ்பூன் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். கீரையை நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் நீரை வடித்து, கீரையை அரைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை ஒன்றிரண்டாக சிதைக்கவும் (அல்லது மிகப் பொடியாக நறுக்கலாம்).
வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சின்ன வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும். அரைத்த கீரை விழுது, கொத்தமல்லித்தழை, பார்லி தண்ணீர் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்), உப்பு, மிளகுத்தூள், அரைத்த பார்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, ஃப்ரெஷ் க்ரீம் கலந்து பரிமாறவும்.
இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்த சூப்.
முருங்கை சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை - ஒரு கப், முருங்கைப்பூ - கால் கப், முருங்கைக்காய் - 4, உளுத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும். முருங்கைக்காயை பெரிதாக நறுக்கி, வேகவைக்கவும். ஆறியதும் ஸ்பூனால் உள்ளிருக்கும் சதையை எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரஷர் பேன் (Pan) அல்லது சின்ன குக்கரில் வெண்ணெய் சேர்த்து, சீரகத்தூளையும் சேர்க்கவும். முருங்கைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கைக்காய் விழுது, பொடித்த உளுந்து, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து மூடவும். ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.
முருங்கைப்பூ சேர்ப்பது, வித்தியாசமான சுவை தரும்.
நெல்லிக்காய் சூப்

தேவையானவை: நெல்லிக்காய் - 5, பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேகவிடவும். பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் துருவிய நெல்லிக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, அரைத்த பச்சை மிளகாய் கலவை, வெந்த பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
விட்டமின் `சி’ நிறைந்த சத்தான சூப் இது.
சிவப்பு அரிசி சூப்

தேவையானவை: சிவப்பு அரிசி - அரை கப், உளுந்து - கால் கப், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி (பொடியாக நறுக்கியது) - தலா ஒரு கப், புதினா இலைகள் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, ரவை போல உடைக்கவும். இந்த ரவை, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஆறியதும் நன்கு கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.
படங்கள்:எம்.உசேன்