Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்

வரகரசி கூழ் தோசை

வாசகிகள் கைமணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை: வரகரிசி மாவு (ஊறவைத்து, நீரை வடிகட்டி, மிக்ஸியில் பொடித்தது)

- ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். ஒரு கப் வரகரிசி மாவில் தண்ணீர் விட்டு கலந்து, கட்டி இல்லாமல் கரைத்து, பச்சை மிளகாய் கலவை சேர்த்துக் கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தவாவில் மாவை மெல்லியதாக தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

- எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி

அரைக்கீரை - மாங்காய் பச்சடி

வாசகிகள் கைமணம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் - அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டுப் பற்கள் - 4, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பூண்டுப் பற்கள், பச்சை மிளகாய், தோல் சீவி, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறவைத்த கீரைக் கலவையுடன் மாங்காய்த் துண்டுகள், வறுத்த எள், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை எண்ணெயில் தாளித்து, அரைத்து வைத்த பச்சடியில் கலந்து, சூடான சாதத்தில் சேர்த்து ருசிக்கவும்.

- காயத்ரி வெங்கடேஸ்வரன், திருநின்றவூர்

உருளைக்கிழங்கு காராசேவு

வாசகிகள் கைமணம்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - ஒரு டம்ளர், அரிசி மாவு - கால் டம்ளர், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவில் நெய் சேர்த்து... கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காராசேவு கரண்டியில் மாவைப் போட்டு நன்றாகத் தேய்த்து, பொரிந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு: காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகாய்த்தூளும் பயன்படுத்தலாம்.

- பி.லதா, சேலம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்