அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

ஸ்பெஷல் ரெசிப்பி

``அவங்க வீட்டுல ஒரு நாள் சாப்பிட்டேன்; என்னா டேஸ்ட்டு... சான்ஸே இல்லை!’’ என்று எல்லோருமே

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

யாரையாவது குறிப்பிட்டு, ஒருமுறையேனும் ஃப்ளாஷ்பேக் சொல்லியிருப்பார்கள். நீங்கள் சாப்பிட அழைக்கும் உறவினர், நண்பர்களிடமிருந்து இதுபோன்ற பாராட்டை உங்களுக்குப் பெற்றுத்தரும் விதத்தில்... ஃப்ரூட் கிரானிட்டா, ஸ்வீட் கார்ன் சிலிண்டர், சோலே புலாவ், ரங்கோலி ராய்த்தா என வித்தியாசமான பல விருந்து ரெசிப்பிகளை இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

1. சீஸ் மினி அடை

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, சீஸ் துருவல் - ஒரு கப், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும், பருப்பு வகைகளையும்  ஒன்றுசேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு... காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயம், உப்பு சேர்த்து சற்றே கொரகொரவென அரைத்து எடுக்கவும். தோசைக்கல்லை காயவிட்டு மாவை சிறிய அடைகளாக ஊற்றி, அதன் மீது சிறிதளவு கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்!

2. கோகனட் லாலிபாப்

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: தேங்காய்த் துருவல் - கால் கப், கேழ்வரகு மாவு - ஒரு கப், பாதாம், முந்திரி, பேரீச்சை - தலா 10, நெய் - தேவையான அளவு, சர்க்கரை - ஒரு கப், டூத்பிக் - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக்கவும். பாதாம், முந்திரியை சிறுசிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையின் விதைகளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு... பாதாம், முந்திரி, பேரீச்சை துண்டுகளை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். தேங்காய்த் துருவலையும் சிறிது நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவு, வறுத்த பாதாம், முந்திரி, பேரீச்சை, தேங்காய்த் துருவல் மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு நெய்யை காயவிட்டு மாவுடன் கலந்து, சூடாக இருக்கும்போதே சிறிய உருண்டைகளாகப் பிடித்து, டூத் பிக்கில் செருகி பரிமாறவும்.

ஹெல்தியான டெசர்ட் இது!

3. ரங்கோலி ராய்த்தா

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: புளிப்பில் லாத தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - 4 டீஸ்பூன், காராபூந்தி - 4 டீஸ்பூன், புதினா இலைகள் - 10, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளிப்பில்லாத தயிரை கெட்டியாகக் கடையவும். பிறகு, அதனுடன் மாதுளை முத்துக்கள், காராபூந்தி, கேரட் துருவல், சுத்தம் செய்த புதினா இலைகள், உப்பு சேர்த்துக் கலக்கி, சீரகத்தூளை தூவினால்... கலர்ஃபுல்லான ரங்கோலி ராய்த்தா ரெடி!

இது... பிரியாணி, புலாவ் வகைகளுடன் சாப்பிட ஏற்றது.

4. ஃப்ரூட் க்ரானிட்டா

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: பப்பாளி, ஆப்பிள், மாம்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள் சேர்ந்த கலவை - ஒரு கப், சர்க்கரை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

செய்முறை: சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி ஆறடவும். இதுதான் சர்க்கரை சிரப். பழக்கலவையுடன் இஞ்சி, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரை சிரப்புடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். இந்த கலவையை ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைக்கவும். இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து நன்கு கிளறி மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். இதை ஐஸ்க்ரீமுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: பரிமாறும்போது கப்பில் முதலில் க்ரானிட்டாவை போட்டு, மேலே ஐஸ்க்ரீம் சேர்த்து, மீண்டும் அதன் மீது சிறிதளவு க்ரானிட்டா போட்டு பரிமாறவும்.

5. டிரை ஃப்ரூட்ஸ் ரைஸ்

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், சீரகம், ஏலக்காய், லவங்கம் - தாளிக்கத் தேவையான அளவு, பேரீச்சை, பாதாம், முந்திரி - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, நெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு ஏலக்காய், லவங்கம், சீரகம் தாளித்து... பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பேரீச்சை சேர்த்துக் கிளறவும். பிறகு கீறிய பச்சை மிளகாய், வடித்த சாதம், உப்பு சேர்த்து ஒருசேர கிளறி இறக்கவும். 

6. சோலே புலாவ்

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: அரிசி - ஒரு கப், வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப), புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,  நெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லித்தழையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து தனியே வைக்கவும். குக்கரில் நெய்யை காயவிட்டு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி, ஊறவைத்த கொண்டைக்கடலை, அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி, மூன்று விசில் விட்டு எடுத்தால் சோலே புலாவ் ரெடி!

இதற்கு ராய்த்தா சரியான காம்பினேஷன்.

7. ஸ்வீட் கார்ன் சிலிண்டர்ஸ்

வித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்!

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 5, ஸ்வீட் கார்ன் - ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து நன்கு பிழியவும். ஸ்வீட் கார்னை வேகவிட்டு முத்துக்களை உதிர்க்கவும். பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட், ஸ்வீட் கார்ன் முத்துக்கள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை, புதினா, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். இதை சிலிண்டர் வடிவில் உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.