
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
மோர் ஆப்பம்... ஃப்ரூட் சப்பாத்தி!
ஃப்ரூட் - வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், துருவிய கேரட் - அரை கப், துருவிய பீட்ரூட், துருவிய ஆப்பிள் - தலா கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், ஆப்பிள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
- பி.சந்திரகலா, பெரம்பூர்
அவல் ரசமலாய்

தேவையானவை: முந்திரி, ஜவ்வரிசி, கோதுமை ரவை, பாசிப்பருப்பு - தலா அரை கப், அவல் - ஒரு கப், சர்க்கரை - 200 கிராம், பால் - ஒரு லிட்டர், பேக்கிங் பவுடர், எசன்ஸ் - சிறிதளவு, மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.
செய்முறை: அவல், கோதுமை. ரவை, பாசிப்பருப்பு, ஜவ்வரிசியை தனித்தனியே பொன்நிறமாக எண்ணெய் விடாமல் வறுத்து, மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சிறிதளவு பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். சலித்த அவல் கலவை மாவில் பேக்கிங் பவுடர் கலந்துகொள்ளவும். இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.
பாலில் மில்க்மெய்ட் கலந்து காய்ச்சவும். பால் சற்று சுண்டிய பின் முந்திரி விழுதை சேர்த்துக் கலக்கி மேலும் சுண்டக் காய்ச்சி இறக்கவும். சர்க்கரையை, ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, செய்து வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி எசன்ஸ் சேர்க்கவும். சுண்டிய பாலுடன் கலக்கவும் (உருண்டைகள் ஆறிய பிறகுதான் கலக்க வேண்டும்). ஊறியதும் சுவைத்து மகிழலாம்.
- டி.ஜெயலட்சுமி, ஆதம்பாக்கம்
மோர் ஆப்பம்

தேவையானவை: பச்சரிசி - 4 ஆழாக்கு, சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நன்கு புளித்த மோர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 4 - 5 மணி நேரம் ஊறவைத்து மோர் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் தாளித்து... மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசை போல வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு மூடி வைத்து, வெந்ததும் எடுக்கவும் (திருப்பிப் போட தேவை இல்லை). மாவை அரைத்த உடனேயே வார்க்கலாம். தக்காளி சட்னி இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்