Published:Updated:

பிரமாதம்...ஃப்ரூட் பஞ்ச் ரோல்!

படங்கள்: பொன்.காசிராஜன், எம்.உசேன்

வாசகிகள் கைமணம்  

கிரீன் டோக்ளி

தேவையானவை: கோதுமை மாவு, சோயா மாவு, பச்சைப்பயறு - தலா அரை கப், ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பிரமாதம்...ஃப்ரூட் பஞ்ச் ரோல்!

செய்முறை: கோதுமை மாவு, சோயா மாவுடன் ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துத் திரட்டி சப்பாத்தி போல் தேய்த்து, சிறு துண்டுகளாக நறுக்க... டோக்ளி ரெடி! இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு நறுக்கிய டோக்ளி துண்டுகள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்துவிடவும்.

பச்சைப்பயறை வேக வைக்கவும். கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினா, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அதில் வெந்த பச்சைப் பயறு, டோக்ளி துண்டுகள், அரைத்த கொத்தமல்லி விழுது சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

- வே.சித்ரா வேடியப்பன், ஊதப்பூண்டி

ஃப்ரூட் பஞ்ச் ரோல்

தேவையானவை: சப்போட்டா - ஒன்று, வாழைப்பழம் - பாதி பழம் ஆப்பிள் - பாதி பழம், வறுத்த ரவை - அரை கப், பொடித்த சர்க்கரை - கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க: கொப்பரைத் துருவல், பொடித்த முந்திரி - தலா இரண்டு டேபிள்ஸ்பூன்

பிரமாதம்...ஃப்ரூட் பஞ்ச் ரோல்!

செய்முறை: சப்போட்டா, வாழை, ஆப்பிள் பழங்களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு, அரைத்த பழக் கலவையை அதில் போட்டு சுருளக் கிண்டவும். பிறகு வறுத்த ரவை சேர்த்துக் கிளறி, பொடித்த சர்க்கரை போட்டு மேலும் கிளறி இறக்கவும். இளம் சூடாக இருக்கும்போது 'ரோல்’களாக உருட்டி,  பொடித்த முந்திரியில் சிறிது தடவி, கொப்பரையைத் தூவி வைத்தால்... சுவையான ஃப்ரூட் பஞ்ச் ரோல் தயார்.

- கே.சீதாலட்சுமி, பாளையம்கோட்டை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.அவருடைய கமென்ட்ஸ்...

கிரீன் டோக்ளி: பச்சைப்பயறை குழைய வேக வைத்து மசித்து சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.

ஃப்ரூட் பஞ்ச் ரோல்: தேவைப் பட்டால் இன்னும் சில வகை பழங்களையும் சேர்க்கலாம். வித்தியாசமான ருசி கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு