Published:Updated:

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!
பிரீமியம் ஸ்டோரி
30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

`கும்’முனு தயாரிக்கலாம்... குழந்தைகளைக் கவரலாம்...

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

`கும்’முனு தயாரிக்கலாம்... குழந்தைகளைக் கவரலாம்...

Published:Updated:
30 வகை குட்டீஸ் ரெசிப்பி!
பிரீமியம் ஸ்டோரி
30 வகை குட்டீஸ் ரெசிப்பி!
30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

`எதை, எப்படி கொடுத்தால் பசங்க முகம் சுளிக்காமல், சட்டென்று சாப்பிடுவார்கள்?’

- இந்தக் கேள்விக்கு பதில் தேடுபவர்கள் நிறைய பேர். ``வித்தியாசமான சுவை கொண்ட உணவுகள் என்பதுதான் பதில்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் அ.சாரதா, ``கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் அக்கறை இருந்தால் போதும்... வெரைட்டியாக சமைத்துப் பரிமாறி, குட்டீஸ்களை சொக்கவைக்கலாம்’’ என உற்சாகப்படுத்துகிறார். சாக்லேட் சாண்ட்விச், ஜால்மூரி, வெஜ் க்ரிஸ்பீஸ், கச்சி டபேலி, மிசல் பாவ் என 30 வகை அசத்தல் டிஷ்களை இந்த இணைப்பிதழில் செய்துகாட்டுகிறார் சாரதா.

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் டைனிங் அறையில் உற்சாக கூச்சல் ஒலிக்க வாழ்த்துகள்!

சாட் மசாலா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: மல்லி (தனியா) - கால் கப், சீரகம் - 2 டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (சிறியது) - 2 அல்லது 3, பிளாக் சால்ட் (கறுப்பு உப்பு) - 3 டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - அரை டீஸ்பூன், ஆம்சூர் பவுடர்  (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மல்லி (தனியா), சீரகம், ஓமம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்து எடுத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

பல்வேறு உணவு வகைகளிலும் பயன்படுத்தப் படும் சாட் மசாலாவை, அப்பளம், சிப்ஸ் என பலவற்றுடன் இப்போது விரும்பி சேர்த்து சாப்பிடுகிறார்கள். வீட்டிலேயே செய்து வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது கைகொடுக்கும்.

பனீர் - புதினா சட்னி பஜ்ஜி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை:  பனீர் - 200 கிராம்,  கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஓமம் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

சட்னி செய்ய: புதினா இலைகள் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - கால் கட்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப), வேர்க்கடலை - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). பனீரை பெரிய, சதுர துண்டுகளாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தேவையான நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும். 2 பனீர் துண்டுகளுக்கு நடுவில் கெட்டியான சட்னி தடவி, பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சீஸ் சேவ் உருண்டை

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: ஆலூ பூஜியா அல்லது பூஜியா சேவ் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், சீஸ் க்யூப்ஸ் - 2 (சிறிய துண்டுகளாக்கவும்), எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பூஜியாவை தட்டில் பரப்பி தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வைக்கவும். கையால் லேசாக நொறுக்கி, பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக்கி நடுவில் குழி செய்து, சீஸ் துண்டை வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

பொட்டேட்டோ  லட்கீஸ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: உருளைக்கிழங்கு (பெரியது) - 2, வெங்காயம் (மீடியம் சைஸ்) - 2, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்), சாட் மசாலா - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி, துருவி, நீரை வடித்துவிடவும். இதனுடன் துருவிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளவும்.

நான் ஸ்டிக் தவாவை சூடுசெய்து, கலந்து வைத்ததை சிறிய அடைகளாக தட்டி, இரு புறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும். சாட் மசாலா தூவவும். மேலே வெண்ணெய் சேர்த்தும் சாப்பிடக்கொடுக்கலாம்.

மெக் அண்ட் சீஸ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பாஸ்தா – 200 கிராம், வெண்ணெய் – 50 கிராம், மைதா, பால் - தலா கால் கப், சீஸ் - ஒரு க்யூப், ஒரிகானோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)  - ஒரு டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து வடித்துக்கொள்ளவும். தவாவில் வெண்ணெயை உருக்கி, மைதா சேர்த்து கைவிடாமல் வறுக்கவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். முதல் கொதி வரும்போது மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, ஒரிகானோ சேர்த்துக் கலக்கவும். பிறகு, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். துருவிய சீஸை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சாக்லேட் சாண்ட்விச்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, டார்க் சாக்லேட் - 100 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் (உப்பில்லாதது), கண்டன்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன், வெண்ணெய் (பிரெட்டில் தடவ) - சிறிதளவு.

செய்முறை: துருவிய டார்க் சாக்லேட், வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை தவாவில் சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். ஒரு பிரட் ஸ்லைஸில் சாக்லேட் கலவையைத் தடவவும். இன்னொரு ஸ்லைஸில் வெண்ணெய் தடவி அதை மேலே வைத்து டோஸ்ட் செய்யவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சாக் லேட் சாஸ் மீது துருவிய சீஸ் சேர்த்தும் டோஸ்ட் செய்யலாம்.

ஸ்ப்ரிங் ஆனியன் ரொட்டி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: மைதா - ஒரு கப், ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத்தாள்) - அரை கட்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தாளை பொடியாக நறுக்கவும். மைதாவுடன் பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள்,  உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீர் விட்டு பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு, மேலே வெங்காயத்தாளை பரப்பி நீளவாக்கில் சுருட்டி, பிறகு பரோட்டாவுக்கு செய்வது போல் (புடவை கொசுவம் போல) சுருட்டவும். பிறகு, சிறிய ரொட்டியாக இட்டு, நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

தக்காளி - சேவ் போண்டா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: கெட்டியான பெங்களூர் தக்காளி (சிறியது) -  4, பூஜியா சேவ் (ரெடிமேடாக பாக்கெட்டுகளில் கிடைக்கும்) - அரை கப், உருளைக்கிழங்கு - ஒன்று,  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கெட்டியான பஜ்ஜி மாவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்க்கவும். தக்காளியின் மேல் பாகத்தை நறுக்கி நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்து தனியே வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உதிர்த்த உருளைக்கிழங்கு, தக்காளி யின் உள்ளிருந்து எடுத்த விழுது, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு கலந்ததும், இதனுடன் `பூஜியா சேவ்’வை சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைக்கவும். விதை நீக்கிய தக்காளியினுள் இந்தக் கலவையை நிரப்பி, பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஜால்மூரி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: முட்டைப்பொரி (அரிசிப்பொரி) - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெள்ளரிக்காய் (சேர்த்து) - அரை கப் பல்லு பல்லாக கீறிய தேங்காய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன், புளி விழுது – அரை டீஸ்பூன், கடுகு எண்ணெய் - அரை டீஸ்பூன், மெல்லிய ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்.

மசாலா பொடிக்கு: வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் -  ஒரு சிட்டிகை, பிளாக் சால்ட் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை (ஓமப்பொடி தவிர) ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, அதன் மேலே மசாலா பொடியைத் தூவி, நன்கு குலுக்கி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு: புளி விழுதுக்குப் பதிலாக, மாங்காயைப் பொடியாக நறுக்கியும் கலக்கலாம். அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

மூங்தால் பூரி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பூரணத்துக்கு: பாசிப்பருப்பு - ஒரு கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்) அல்லது பச்சைப் பயறு - ஒரு கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்), பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

பூரிக்கு: கோதுமை மாவு - ஒன்றரை கப், ஓமம் - அரை டீஸ்பூன், ரவை - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (தேவைப் பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளிக்கலாம்). பூரிக்கு கொடுத்துள்ளவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக மாவு பிசையவும். கொஞ்சம் மாவை எடுத்து, சொப்பு போல செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மூடி, கொஞ்சம் தடிமனான பூரியாக திரட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சத்தான, சுவையான, சைட் டிஷ் தேவையில்லாத பூரி தயார்.

சாக்கோ சிப் பான்கேக்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையாவை: மைதா - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்,  சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன், பட்டைப்பொடி - முக்கால் டீஸ்பூன், பால் - ஒன்றரை கப், ஓட்ஸ் பொடி - கால் கப், எண்ணெய் - 5 டீஸ்பூன், சாக்லேட் சிப்ஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் கப் , வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு (விரும்பினால்), வெண்ணெய் - சிறிதளவு, எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் கட்டியில்லாமல் நன்கு கலந்து 15 நிமிடம் வைக்கவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து கலந்துவைத்ததை சிறிய தோசைகள் போல் வார்த்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

பரிமாறும்போது மேலே தேன்/பொடித்த சர்க்கரை/தேங்காய்த் துருவல்/ஃப்ரூட் சிரப்/டிரை ஃப்ரூட்... இதில் ஏதேனும் ஒன்றை சேர்த்துப் பரிமாறலாம்.

மிக்ஸ்டு வெஜ் க்ரிஸ்பீஸ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், அவரைக்காய், உருளைக்கிழங்கு, கோஸ், நூக்கல் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - 3 கப், நறுக்கிய பொன்னாங்கண்ணி அல்லது பாலக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா கால் கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாகவும். மற்ற பொருட்களை தண்ணீர் தெளித்து பிசைந்து, பக்கோடா போல கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து  எடுக்கவும்.

ருசியுடன் சத்தும் நிறைந்த சூப்பர் ஸ்நாக்ஸ் இது. 

பாப்டி சாட்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: மைதா - ஒரு கப், ஓமம் - ஒரு சிட்டிகை,  ரவை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை, மெல்லிய சேவ் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: உருளைக்கிழங்கு (பெரியது) - ஒன்று, கறுப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த  சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன், பிளாக் சால்ட் (கறுப்பு உப்பு) - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன்

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைக்கவும். கறுப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை வேகவைத்து மசிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடி யாக நறுக்கவும். மைதாவுடன் ஓமம், உப்பு, ரவை, ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறிய சிறிய பூரிகளாக திரட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும் (லேசாக குத்திவிட்டு பொரித் தால் உப்பாமல், தட்டையாக வரும்). இதுதான் பாப்டி.

வெந்த உருளைக்கிழங்கை சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மசித்த கொண்டைக்கடலை மற்றும் மசாலா செய்யக்கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்துக் கலக்கவும். பொரித்த பாப்டிகளை தட்டில் வைத்து, மேலே உருளைக்கிழங்கு மசாலா பரப்பி... சேவ், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதே மசாலாவுடன் தயிர் விட்டுப் பரிமாறினால், அது ‘தஹி பாப்டி சாட்’.

ஆலூ டூக்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையாவை: சிறிய உருளைக்கிழங்கு - கால் கிலோ பாக்கெட், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா அரை

டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன், பிளாக் சால்ட் (கறுப்பு உப்பு), எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, கறுப்பு உப்பு சேர்த்த வெந்நீரில் அரை வேக்காடு பதத்தில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கரண்டியால் உருளைக்கிழங்கை தட்டையாக்கவும். சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொரித்த

உருளைக்கிழங்கோடு மசாலாக்கள் சேர்த்து குலுக்கிக் கலந்து பரிமாறவும்.

மிசல் பாவ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பாவ் பன் (பேக்கரிகளில் கிடைக்கும்) - 4, மிக்ஸர் (ஸ்வீட் ஸ்டால்களில் வாங்கலாம்) - அரை கப், எலுமிச்சைத் துண்டுகள் - சிறிதளவு, பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (சிறியது) - 4 (வெந்நீரில் ஊறவைக்கவும்), புளி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பச்சைப் பயறை வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் வேகவைத்த பயறு, மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5-6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் பயறு கலவையை சேர்த்து, மேலே வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, மிக்ஸர் தூவவும். இதை பாவ் பன் மற்றும்எலுமிச்சை துண்டுகளோடு பரிமாறவும்.

பாலக் பான்கேக்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பசலைக்கீரை - 3 கப், ஆளி விதை பொடி (டிபார்ட் மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 3 டீஸ்பூன், அரிசி மாவு - முக்கால் கப், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது வெண்ணெய்  - தேவைக்கேற்ப.

செய்முறை: ஆளி விதை பொடி யோடு 2 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஜெல் போல ஆனதும் எடுத்து, பசலைக் கீரையோடு சேர்த்து... அரிசி மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், தேவையான நீர் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்தில் அடித்துக்கொள்ளவும். பிறகு, தோசைக்கல்லை சூடாக்கி மாவை சற்றே தடிமனான தோசை போல ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு, இருபக்கமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

பனீர் சீலா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பாசிப்பருப்பு - 250 கிராம், கடைந்த தயிர் - அரை கப், துருவிய பனீர் - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், சீரகம் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து... தயிர், தேவையான தண்ணீர் கலந்து அரைக்கவும். இதனுடன் (எண்ணெய் நீங்கலாக) மற்ற பொருட்களைச் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, தவாவை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பனானா ஃபிரெஞ்சு டோஸ்ட்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பால் - ஒன்றேகால் கப், பட்டைப்பொடி - கால் டீஸ்பூன், கோதுமை பிரட் - 5 ஸ்லைஸ், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், வால்நட் (அக்ரூட்) - சிறிதளவு, துருவிய தேங்காய் - 2 அல்லது 3 டீஸ்பூன்.

செய்முறை: வாழைப்பழத்தைப் பிசைந்து...  பால், பட்டைப்பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கி,  5 நிமிடம் ஊறவிடவும். பிரெட்டை இந்தக் கலவையில் இரு புறமும் தோய்த்து  தவாவில் டோஸ்ட் செய்யவும். பரி மாறும் முன் ஒன்றி ரண்டாக பொடித்த வால்நட், தேங்காய்த் துருவலை தூவி கொடுக்கவும்.

ஸ்பைசி பாஸ்தா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பாஸ்தா - 200 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 4 அல்லது 5 பற்கள், குடமிளகாய் - பாதியளவு, வெங்காயத்தாள் - கால் கட்டு, வினிகர் - 2 டீஸ்பூன் (அல்லது எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: நாட்டுத் தக்காளி - 2, காய்ந்த மிளகாய் (சிறியது) - 7 (அல்லது காரத்துக்கேற்ப), சீரகம் - முக்கால் டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கொதிக்கும் நீரில் சிறிதளவு எண்ணெய் விட்டு பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து, நீரை வடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், நறுக்கிய வெங்காயத்தாளின் வெங்காயப் பகுதியை சேர்த்து வதக்கவும். ஒரு கொதி வந்த உடன், வேகவைத்த பாஸ்தாவை சேர்த்துக் கிளறவும். வினிகர் (அல்லது எலுமிச்சைச் சாறு) மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தாளின் தாள் பகுதியை பரவலாக தூவி, சூடாகப் பரிமாறவும்.

பாலக் - சன்னா - நூடுல்ஸ் சூப்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒன்றரை கப், பச்சை மிளகாய் விழுது - முக்கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டுப் பல் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், வேகவைத்த நூடுல்ஸ் - ஒரு கப், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் வைத்து, தேவையான நீர் சேர்த்து  3 விசில் வரும் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பச்சை மிளகாய் விழுது, உப்பு, இஞ்சி, பூண்டு, பாலக்கீரை சேர்த்து ஒரு விசில் விட்டு அணைக்கவும். பின்னர் திறந்து பாலில் கார்ன் ஃப்ளார் கரைத்து சேர்த்து, லேசாக கொதிக்கவிட்டு இறக்கவும்.  பரிமாறும்போது, வேகவைத்த நூடுல்ஸ், உருக்கிய வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும். தேவையானால் சிறிதளவு மிளகுத்தூள் தூவலாம்.

கேரட் -  கோகனட் ரவுண்டல்ஸ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: கேரட் துருவல் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், மைதா - ஒன்றரை கப், மோர் - ஒரு கப், சர்க்கரை - அரை டீஸ்பூன்,  பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, வால்நட் பருப்பு - சிறிதளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வால்நட் பருப்பை ஒன்றிரண்டாக பொடிக்கவும். மைதாவுடன் கேரட் துருவல், தேங்காய்த் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, மோர் சேர்த்துக் கலந்துவிடவும். இதனுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலந்து, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு வால்நட் சேர்த்து... இந்தக் கலவையை, சூடான தவாவில் சின்ன தோசைகளாக வார்த்து, வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

கோகனட் சாஃப்ட் டெசர்ட்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: இளநீர் (வழுக்கை) - அரை கப், இளநீர் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், எலுமிச்சைச் சாறு (விரும்பினால்) - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்ட அனைத்தையும் மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து மிக்ஸியில் அடித்து மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல் 5 முறை செய்தால், மென்மையான, அருமையான கோகனட் சாஃப்ட் டெசர்ட் ரெடி.

ஸ்டஃப்டு  பாக்கெட் பூரி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பூரணம் செய்ய : உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன்.

மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப், ஓமம் ஒரு சிட்டிகை, பால் - 5 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

பொரிக்க: எண்ணெய் -  தேவையான அளவு.

தாளிக்க: சீரகம் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு

பரிமாற: மிகப்பொடியாக நறுக்கிய வெள்ளரி அல்லது தக்காளி - 3 டீஸ்பூன், சாட் மசாலா, சீரகப்பொடி, மிளகாய்த்தூள், பிளாக் சால்ட் (கறுப்பு உப்பு) - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம்  தாளித்து... வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பூரணம் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்துக் கிளறி  ஆறவிடவும். இதை நீளவாக்கில் உருண்டைகளாக்கவும். உருண்டைகளை கொஞ்சமான எண்ணெயில் பொன்வறுவலாக வறுத்து எடுக்கவும் (shallow fry). மேல் மாவுக்கு கொடுத்துள்ள வற்றை சேர்த்து கனமான பூரிகள் போல் இடவும். பூரிகளை பொரித்து நடுவில் வெட்டிக்கொள்ளவும் (கனமாக இட்டால்தான் நடுவில் பாதியாக வெட்டும்போது பாக்கெட் போல் பிரியும்).பாதியாக பாக்கெட் போல் வெட்டிய பகுதியில் உள்ளே  நீளவாக்கில் உருட்டிய பூரண உருண்டை வைத்து, மேலே பொடிகள், கறுப்பு உப்பு, தக்காளி அல்லது வெள்ளரிக்காய் தூவி பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சாஸும் சேர்த்துக் கொடுக்கலாம்.

பனீர் சமோசா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - சிறிதளவு, பனீர் துருவல் - அரை கப், பட்டைப்பொடி - கால் டீஸ்பூன், உலர் திராட்சை - 10, எண்ணெய் - தேவையான அளவு, ஓமம், உப்பு - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: பனீர் துருவல், பட்டைப்பொடி, உலர் திராட்சை ஆகியவற்றை ஒன்றாக கலந்துவைக்கவும். இதுதான் பூரணம். மைதா, ஓமம், உப்பு, நெய் ஆகியவற்றுடன் தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். மாவை சிறிய வட்டங்களாக திரட்டி, நடுவில் கொஞ்சம் பூரணம் வைத்து, சமோசா வடிவத்தில் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

கச்சி டபேலி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை - மசாலா பொடி (தபேலி) செய்ய: காய்ந்த மிளகாய் - 2, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - 2, சீரகம் - கால் டீஸ்பூன்.

டபேலி ஆலு செய்ய: மசித்த உருளைக்கிழங்கு  - ஒரு கப், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தபேலி மசாலா பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, புளிப்பு - இனிப்பு சட்னி (விரும்பினால்) - சிறிதளவு.

பரிமாற: பர்கர் பன் 4, வெண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) வேர்க்கடலை - கால் கப், பொட்டுக்கடலை, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), மாதுளை முத்துக்கள், பூண்டு சட்னி -  சிறிதளவு.

செய்முறை: மசாலா பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, டபேலி ஆலு செய்யக்கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து கிளறி இறக்கவும். இதை சிறிய உருண்டைகளாக்கி லேசாக தட்டி வைக்கவும்.பர்கர் பன்னை இரண்டாக வெட்டி வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும். ஒரு துண்டின் நடுவில், தட்டி வைத்த ஆலு மசாலா உருண்டையை வைத்து, மேலே சிறிதளவு வெங்காயம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, ஓமப்பொடி, மாதுளை முத்துக்கள் சேர்க்கவும். மற்றொரு துண்டில் பூண்டு சட்னி தடவி முதல் துண்டின் மேலே வைத்து மூடி பரிமாறவும்.

குறிப்பு: குஜராத்தில் `கச்சி டபேலி’ மிகவும் பிரபலம்; தெருவோர உணவுகளில் முதலிடம் இதற்கே! பூண்டு சட்னி செய்யும் முறை: 10 பூண்டு பற்கள், ஒரு டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), தேவையான உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.புளிப்பு - இனிப்பு சட்னி செய்யும் முறை: 10 பேரீச்சம்பழம், 2 டீஸ்பூன் புளி விழுது, 4 டீஸ்பூன் பொடித்த வெல்லம், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். இதை கடாயில் சேர்த்து ஒரு கொதிவிட்டு ஆறவைத்து உபயோகப்படுத்தவும்.

தோசை உசிலி ரோல்ஸ்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: தோசை மாவு,  நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (தக்காளி, கோஸ், வெள்ளரிக்காய்) - தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, மெல்லிய ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - சிறிதளவு.

உசிலிக்கு: கடலைப்பருப்பு - அரை கப் (ஒரு மணி ஊறவைக்கவும்), காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஊறிய கடலைப்பருப்போடு உசிலி செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும். இதுதான் உசிலி.தோசை மாவை சிறிய மெத்தென்ற தோசையாக வார்த்து உசிலி தூவி, காய்கறிகளை மேலே பரப்பி, மெல்லிய ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவி மடித்து பரிமாறவும்.

குறிப்பு: சீஸ் துருவி, தூவியும் தயாரிக்கலாம்.

சிலான்ட்ரோ பாஸ்தா

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: சிலான்ட்ரோ (கொத்தமல்லித்தழை) - ஒரு கட்டு, பாதாம் பருப்பு - 8, பூண்டு பற்கள் - 8, பென்னே பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 3 கப் (வேகவைக்கவும்), மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீஸ் க்யூப் - ஒன்று, எண்ணெய் (அரைக்க) - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் (வதக்க) - சிறிதளவு.

செய்முறை: கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து நறுக்கவும். இதனுடன்  பாதாம், பூண்டு, கால் கப் எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, நிறம் மாறாமல் வதக்கவும் (அதிகமாக வதக்க வேண்டாம்). இதனுடன் வேகவைத்த பாஸ்தா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும். சீஸை துருவிக் கலந்து இறக்கி பரிமாறவும்.

மஷ்ரூம் - ஸ்பெகட்டி ட்ரீட்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: ஸ்பெகட்டி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு பாக்கெட் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தக்காளி ப்யூரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை கப், மஷ்ரூம் - 7 அல்லது 8, கத்திரிக்காய் - 3 (வில்லைகளாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், பால் - சிறிதளவு, எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஸ்பெகட் டியை  வேகவைத்து நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, மஷ்ரூம், கத்திரிக்காய் சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய், மஷ்ரூம் வெந்ததும், தக்காளி ப்யூரி, நறுக்கிய தக்காளி சேர்த்து, கொதி வந்ததும் சோள மாவை பாலில் கரைத்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது வேகவைத்த ஸ்பெ கட்டியை சேர்த்து, மென்மையாக கிளறி இறக்கவும்.

பனீர் - கார்ன் கட்லெட்

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: பனீர் துருவல் - ஒரு கப், மசித்த உருளைகிழங்கு - அரை கப், வேகவைத்த கார்ன் முத்துக்கள் - அரை கப், பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், துவிய சீஸ் - 2 டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், பிரெட் க்ரம்ப்ஸ் - கால் கப், லவங்கப் பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது  நெய் - தேவையான அளவு, உப்பு  - தேவைக்கேற்ப.

செய்முறை: சோள மாவை நீர்க்க கரைத்து வைக்கவும். கொடுக்கப்பட்ட மற்ற எல்லா பொருட்களையும் (எண்ணெய் (அ) நெய் நீங்கலாக)  ஒன்றுசேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக பிசைந்து, உருட்டி, கட்லெட் போல் தட்டையாக்கவும். சோள மாவு கரைசலில் கட்லெட்டை தோய்த்து பிரெட் க்ரம்ப்ஸில் புரட்டவும். தவாவில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, கட்லெட்டை சுட்டு எடுக்கவும்.

பெட்மி பூரி

30 வகை குட்டீஸ் ரெசிப்பி!

தேவையானவை: கறுப்பு உளுந்து - கால் கப், சோம்பு பொடி - அரை டீஸ்பூன்,   ரவை - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 4, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், சீரகம் - முக்கால் டீஸ்பூன்.

செய்முறை: கறுப்பு உளுந்தை 5 மணி நேரம் ஊறவைக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடித்துக்கொள்ளவும். ஊறிய உளுந்தோடு உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, சோம்பு பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் பூரணம். கோதுமை மாவு, ரவையுடன் தேவையான நீர் சேர்த்து இறுக்கமான மாவாக பிசையவும். மாவை கொஞ்சம் எடுத்து சொப்பு போல் செய்து, நடுவில் சிறிதளவு பூரணம் வைத்து மூடி, திக்கான பூரிகளாக திரட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு சைட்டி டிஷ் தேவையில்லை. விருப்பப்பட்டால் ஊறுகாய் சேர்த்துப் பரிமாறலாம்.

தொகுப்பு: பத்மினி படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism