தன்னம்பிக்கை
Published:Updated:

30 வகை மில்க் ரெசிப்பி

30 வகை மில்க் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை மில்க் ரெசிப்பி

சத்துக்கள் பொங்கும்... ஆரோக்கியம் தங்கும்...

30 வகை மில்க் ரெசிப்பி

ல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே மனிதனின் உணவில் முக்கிய அங்கமாக விளங்குவது

30 வகை மில்க் ரெசிப்பி

பால். கால்சியம், விட்டமின்-டி, புரொட்டீன் என பல்வேறு சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் பாலில் இருந்து, தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் என நமக்குக் கிடைப்பவை ஏராளம். பால் மற்றும் பால் பொருட்களைக்கொண்டு அல்வா, லஸ்ஸி, மில்க் ஷேக், பிர்னி, ஜாமூன், பிரெட் ரோல், மோர்க்களி, மோர்க்கூட்டு, கஞ்சி என புதுமையும், பாரம்பர்யமும் கலந்துகட்டி சுவையான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

பால் பொங்குவது போல, உங்கள் இல்லங்களில் குதூகலம் பொங்கி வழிய வாழ்த்துகள்!

கேரட் - பீட்ரூட் மில்க் அல்வா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: துருவிய கேரட், பீட்ரூட் (சேர்த்து) - ஒரு கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 6, பால்கோவா - 2 டேபிள்ஸ்பூன் (உதிர்த்துக் கொள்ளவும்).

செய்முறை: அடி கனமான வாணலி யில் தேவையான அளவு பால், சிறிதளவு நெய் விட்டு துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு வேகவிடவும், வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறி... ஏலக்காய்த்தூள், உதிர்த்த பால்கோவா சேர்த்து மேலும் கிளறி இறக்கவும் (விருப்பப்பட்டால், கி்ளறும்போது நடுவே கொஞ்சம் நெய் சேர்த்துக்கொள்ளலாம்). நெய்யில் முந்திரியை வறுத்து அல்வா மீது தூவவும்.

சீஸ் பிரெட் ரோல்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், துருவிய பனீர் - அரை கப், துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பால் - 4 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு, தக்காளி சாஸ் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் - நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, துருவிய பனீர், துருவிய சீஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். ஃபில்லிங் ரெடி.

பிரெட் துண்டுகளின் ஓரங்களை கட் செய்துவிடவும். பிரெட் துண்டு மீது சில துளிகள் பால் தெளிக்கவும். சப்பாத்திக்கு தேய்ப்பது போல் நீளவாக்கில் பிரெட் துண்டை தேய்க்கவும். சிறிது ஃபில்லிங்கை எடுத்து அதனுள் வைத்து இன்னொரு பிரெட் துண்டை அதன் மேல் வைத்து, ஓரங்களை நீரால் ஒட்டவும். எல்லா பிரெட் துண்டுகளையும் அப்படி செய்யவும். தவாவில் எண்ணெய் - நெய் விட்டு இந்த பிரெட் ரோலை அதில் வாட்டி எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பாரிமாறவும்.

பனீர் புர்ஜி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: சிறியதாக நறுக்கிய பனீர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி, குடமிளகாய் - தலா 2 டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு பிழியவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகம், உப்பு சேர்த்துப் புரட்டி... வெங்காயம், தக்காளி, குடமிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), பெருங்காயத்தூள், சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் நறுக்கிய பனீரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கம்பு மோர்க்களி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், சின்ன வெங்காயம் - அரை கப், வரகரிசி - கால் கப், மோர், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு நீர் விட்டு, வரகரிசியை அலசிப் போட்டு, உப்பு சேர்த்து, கட்டிதட்டாமல் வேகவைக்கவும். கம்பு மாவில் நீர் விட்டுக் கரைத்து வெந்த வரகரிசியில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுதான் கம்பங்களி.

இந்த களியில் தேவையான அளவு எடுத்து மோர் விட்டுக் கரைத்து, உப்பு சேர்த்து,  சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பருகவும். வெயில் காலத்தில் அமிர்தமாக ருசிக்கும் உணவு இது.
கேழ்வரகு மாவிலும் இதே முறையில் களி செய்யலாம்.

பாம்பே லஸ்ஸி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பால், தயிர் - தலா ஒரு லிட்டர், துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 25 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, ஐஸ்கட்டிகள் -
ஒரு கப்.

செய்முறை:
பாலை நன்கு சுண்ட ஏடுபடியக் காய்ச்சி, ஏடை எடுத்து தனியாக வைக்கவும். பாலை ஆறவிடவும். பாத்திரத்தில் பால் ஏடு, தயிர், காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ்கட்டி, சர்க்கரை, உப்பு சேர்த்து நுரை பொங்கி வரும் வரை மத்தால் வேகமாக கடையவும். இதை மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பனீர் துருவலை சேர்த்துப் பருகவும்.

ஓட்ஸ் - பனீர் பாயசம்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், பால் - 3 கப், துருவிய பனீர் - கால் கப், பாதாம், முந்திரி - தலா 10, கசகசா - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பாதாமை வெந்நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவும். முந்திரி, கசகசாவை 15 நிமிடம் ஊறவைக்கவும். இந்த மூன்றையும் மையாக அரைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, குறைந்த தணலில் அடுப்பை வைத்து, ஓட்ஸை சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து, சர்க்கரை சேர்த்துக் கலக்கி, இறக்கும் போது கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து இறக்கவும். துருவிய பனீரை நெய்யில் வறுத்து தூவி பரிமாறவும்.

அவியல்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: நீளமாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப், (கேரட், சௌசௌ, புடலங்காய், பூசணி, கொத்தவரங்காய், வாழைக் காய்), தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். காய்கறி களுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, வெந்த காய்
கறிகளையும் சேர்த்து... ஒரு கொதி வந்ததும், தேங்காய் எண்ணெய் சேர்த்து, தயிர் விட்டுக் கிளறி இறக்கவும்.

பனீர் பட்டர் மசாலா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பனீர் - ஒரு கப் (சதுர துண்டுகளாக வெட்டியது), பச்சைப் பட்டாணி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகம் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு ,சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி... உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பனீர், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். இறக்கும்போது வெண்ணெய், முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பட்ரூரா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: மைதா மாவு - ஒன்றரை கப், கோதுமை மாவு - அரை கப், தயிர் - அரை கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதில் உருக்கிய நெய், தயிர் சேர்த்து, சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து, பூரி மாவு பதத்தில் பிசைந்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை பெரிய வட்டங்களாக திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தஹி பூரி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: மைதா - ஒரு கப், ரவை - கால் கப், தயிர் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும். மைதாவுடன் ரவை, ஆம்சூர் பவுடர், சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறுசிறு பூரிகளாக திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தயிரில் மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்துக் கலந்து வைக்கவும். மசித்த உருளைக்கிழங்குடன் மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு, கேரட் துருவல் சேர்த்து வாணலில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். பூரிகளின் நடுவே ஓட்டை போட்டு அதனுள் உருளைக்கிழங்கு  மசாலாவை வைத்து, மேலாக மசாலா கலந்த தயிர் ஊற்றி, கொத்தமல்லித்தழை, புதினா தூவி, ஓமப்பொடியும் தூவி பரிமாறவும்.

மில்க் ஜாமூன்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: சர்க்கரை - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், மைதா - 50 கிராம், வெனிலா எசன்ஸ் - ஒரு துளி, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் விட்டு சூடாக்கி, ஒரு கம்பி பதத்தில் பாகு வந்ததும் அடுப்பை நிறுத்தவும். பாகை ஆறவிட்டு வெனிலா எசன்ஸ் ஒரு துளி சேர்த்து தனியாக வைக்கவும். அடி கனமான வாணலியில் பால் ஊற்றி சுண்டக் காய்ச்சி, மைதா மாவு சேர்த்து கோவா ரெடி செய்துகொள்ளவும். இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஜாமூன் தயார். ஜாமூன்களை சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து ஆறிய பாகில் (ஜீராவில்) சேர்க்கவும். ஊறவிட்டு சாப்பிடவும்.

குறிப்பு:
கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் சர்க்கரை சேர்க்காத கோவாவை வாங்கி உருண்டை பிடித்தும் ஜாமூன் செய்யலாம்.

ஃப்ரூட் ஃபிர்னி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம், மாம்பழம் (சேர்த்து) - முக்கால் கப், சீரக சம்பா அரிசி - ஒரு கப், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், நறுக்கிய முந்திரி, பிஸ்தா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சாரைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பாதி அளவு பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். மீதி பாலை, ஊறிய அரிசியுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை கொதிக்கும் பாலில் சேர்த்து கட்டிதட்டாமல் கிளறவும். நறுக்கிய பழங்களை சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, நன்கு வேகவிட்டு, சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும்... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். சாரைப்பருப்பு, முந்திரி, பிஸ்தா சேர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

கேபேஜ் - பனீர் பால்ஸ்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கோதுமை பிரெட் ஸ்லைஸ் - 6, துருவிய முட்டைகோஸ் - ஒரு கப், உதிர்த்த பனீர் - அரை கப், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை பிரெட்டின் ஓரங்களை வெட்டி, மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக்கொள்ளவும். முட்டைகோஸ், மல்லித்தூள் (தனியாத்தூள்), உதிர்த்த பனீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறி, உருண்டைகளாக உருட்டவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம்). கடலை மாவில் மஞ்சள்தூள் சேர்த்து நீர் விட்டு கரைக்கவும். முட்டைகோஸ் உருண்டைகளை அதில் தோய்த்து, பிரெட்தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

அவல் கேக்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பனீர் - அரை கப், பால் - 2 கப், நாட்டுச்சர்க்கரை - அரை கப், நெய் - சிறிதளவு, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உலர் பூசணி விதை (நாட்டு மருந்துக் கடைகள், டிபார்ட்மென்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அவலை அலசி நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு  நெய் ஊற்றி, சூடானதும்... ஊறிய அவலை, நீரை ஒட்ட வடித்துப் போட்டு, துருவிய பனீர் சேர்த்து வதக்கி, பால் சேர்த்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, ஜாதிக்காய்தூள், பூசணி விதையை சேர்க்கவும். உருண்டு, திரண்டு சுருள வரும்போது மில்க்மெய்ட் ஊற்றிக் கிளறவும் (தேவைப்பட்டால் கிளறும்போது நடுநடுவே சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்ளலாம்). நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையை சேர்த்து பரவலாக்கி, கேக் போல வெட்டி பரிமாறவும்.

புலடங்காய் ராய்த்தா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: இளசான புடலங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் புடலங்காய், உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். பரிமாறும்போது கெட்டித் தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

மிளகு பால் பொங்கல்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பால் - மூன்றரை கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பைக் கழுவி, நீரில் ஒன்றாக 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் கொஞ்சம் நெய் விட்டு... இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து, முந்திரி பால் சேர்க்கவும் (தேவை யெனில் சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்). ஒரு கொதி வந்ததும் கிளறி... உப்பு, ஊறிய அரிசி - பருப்பு சேர்த்து மேலும் கிளறி, குக்கரை மூடி, 5 விசில் வந்ததும் இறக்கவும் (நன்கு குழைய வேகவேண்டும்). சூட்டோடு இருக்கும்போதே சிறிதளவு நெய் விட்டு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:
தண்ணீருக்குப் பதில் பால் சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும். அவரவர் வீட்டு அரிசிக்குத் தகுந்த அளவில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

சிவப்பரிசி மோர்க்கஞ்சி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: சிவப்பரிசி - அரை கப் (உடைத்தது அல்லது குருணை), தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மோர் - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
சிவப்பரிசி, பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும் பிறகு, சீரகம், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிட்டு இறக்கவும். இதில் மோர் ஊற்றிக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஸ்பெஷல் பகாளாபாத்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: சாமை அரிசி - ஒரு கப், பால், கெட்டித் தயிர் - தலா அரை கப், மாதுளை முத்துக்கள் - ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சைப் பழம் - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, குக்கரில் குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். சூடாக இருக்கும்போதே சாதத்தை மசித்துக்கொள்ளவும். அதனுடன் பால், கெட்டித் தயிர், வெண்ணெய் சேர்த்துக் கலந்து, உப்பு போட்டுப் பிசையவும் (தளர்த்தியாக இருக்க வேண்டும். தேவையெனில் காய்ச்சிய பால், தயிர் சேர்த்துக்கொள்ளலாம்). எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து சேர்த்து, முந்திரிப்பருப்பு, மாதுளை முத்துக்கள், திராட்சைப் பழம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஃபலூடா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பால் - அரை லிட்டர், சப்ஜா விதை - 2 டேபிள்ஸ்பூன் (நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்), குல்ஃபி ஐஸ்க்ரீம் - 2 குழிக்கரண்டி, வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சப்ஜா விதையை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பாலில் கொஞ்சம் நீர்  ஊற்றிக் காய்ச்சி, சர்க்கரை கலந்து ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். (குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்). வேகவைத்த சேமியாவை குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடித்துக்கொள்ளவும் (அப்போதுதான் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்). பாலை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து குல்ஃபி ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதில் ரோஸ் எசென்ஸ் ஒரு துளி சேர்க்கவும். கண்ணாடி டம்ளரில் ஊறிய சப்ஜா விதையை சிறிதளவு போடவும். பிறகு அதன் மேல் வெந்த நூடுல்ஸ் தேவையான அளவு சேர்க்கவும். அதன் மீது பால் கலவையை ஊற்றி ஸ்பூனால் லேசாக கலக்கி ஜில்லென்று பரிமாறவும்.

ஸ்பிரிங் ஆனியன் - பனீர் பொடிமாஸ்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: வெங்காயத்தாள் - ஒரு சிறிய கட்டு, துருவிய பனீர் - அரை கப்,  கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிதளவு, எள்ளுப் பொடி - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயத்தாளை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, துருவிய பனீர் சேர்த்துக் கிளறவும். பிறகு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கும் முன் எள்ளுப் பொடி தூவிக் கிளறி இறக்கவும்.

மிக்ஸ்டு ஃப்ரூட் மில்க்‌ஷேக்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: காய்ச்சி, ஆறவைத்த  பால் - ஒரு கப், பேரீச்சை - 4 (கொட்டை நீக்கியது), வாழைப்பழம் - 2, சர்க்கரை - 3 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு, கறுப்பு திராட்சை, மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு, தேன் - 3 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.

செய்முறை: வாழைப்பழம், பேரீச்சையை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் பால், வெனிலா எசன்ஸ், 2 ஐஸ்கட்டிகள் சேர்த்து நுரைக்க அடிக்கவும். இதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே தேன் விட்டு, மாதுளை முத்துக்கள், கறுப்பு திராட்சை சேர்த்து சாப்பிடக் கொடுக்கவும்.

கீரைத்தண்டு மோர்க்கூட்டு

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: நறுக்கிய கீரைத்தண்டு - ஒரு கப்,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - கால் கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு தலா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளிக்கவும். இதில் தண்ணீர் விட்டு... ஒரு கொதி வந்ததும் உப்பு, நறுக்கிய கீரைத்தண்டு, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்தபின் அரைத்த விழுதை சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கும் முன் தயிர் விட்டு கலக்கி இறக்கி பரிமாறவும்.

இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்... சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

தூத்பேடா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், எசன்ஸ் - சில துளிகள் (விருப்பமான ஃபிளேவர்), ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும் (மிதமான தீயில் அடுப்பை வைத்து அடிபிடிக்காமல் நடுநடுவே கிளறிவிடவும். நன்றாக சுண்டி மூன்றில் ஒரு பங்காக வரவேண்டும்). சோள மாவை சிறிதளவு பாலில் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும். கட்டி தட்டாமல் கிளறவும். மாவு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், எசன்ஸ் கலந்து சர்க்கரை பூத்து வந்ததும் இறக்கிவிடவும். இக்கலவை சிறிது நேரத்திலேயே இறுகத் தொடங்கும். அப்போது உருண்டையாக பிடித்து, நடுவில் அழுத்தி தூத்பேடா வடிவம் தரவும்.

குறிப்பு:
தூத்பேடா தட்ட அச்சும் கிடைக்கிறது. வேண்டுமெனில் அதையும் பயன்படுத்தலாம்.

பனீர் - சீஸ் சப்பாத்தி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், சீஸ் - ஒரு டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக் கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயம், ஓமம் சேர்த்து வதக்கி... துருவிய பனீர், கரம்மசாலாத்தூள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவில் சேர்த்து, சீஸ் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் பால் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சப்பாத்தியாக திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, நெய் விட்டு, சப்பாத்தியைப் போட்டு இரு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

பூந்தி – தக்காளி ராய்த்தா

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, தயிர் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கரைத்த மாவை ஜல்லிக் கரண்டியில் ஊற்றி, எண்ணெயில் நேரடியாக தேய்த்துவிட்டால் முத்து முத்தாக பூந்தி விழும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பூந்தியைப் பொரித்து எடுக்கவும். தயிருடன், மிளகாய்த்தூள் கலந்து, அதில் பூந்தியைப் சேர்க்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மோர் ரசம்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: தயிர் - ஒரு கப், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
எண்ணெய் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று.

வறுத்துப் பொடிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டுப் பல் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள வறை பொடித்துக்கொள்ளவும். தயிரில் 2 கப் தண்ணீர் ஊற்றி கடைந்துகொள்ளவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து, வறுத்து பொடித்ததை சேர்த்துக் கிளறி, மோரை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

தஹி பிந்தி

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப்,  அரிசி மாவு அல்லது சோள மாவு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், ஓமம், சீரகம், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இந்த விழுது மற்றும் அரிசி மாவு (அ) சோள மாவை தயிரில் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். வெண்டைக்காயை காம்பு நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு, தயிர்க் கலவையை அதனுடன் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மசாலா கலந்த வெண்டைக்காயை சேர்த்து வதக்கி, இறக்கவும்.

சாக்கோ பால்ஸ்

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: கோகா பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரை தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், மில்க் பிஸ்கட் - 8, கண்டன்ஸ்டு மில்க் - அரை டின், மைதா - ஒரு டீஸ்பூன், துருவிய பனீர்  - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மில்க் பிஸ்கெட்டை நைஸாக பொடித்துக்கொள்ளவும். கைகளில் மைதாவை தடவிக் கொள்ளவும். கோகோ பவுடர், பிஸ்கட் பொடி, பனீர் துருவல் சேர்த்து அதில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றிப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும். கொப்பரை தேங்காய்த் துருவலில் இந்த உருண்டைகளைப் புரட்டி, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து சாப்பிடக் கொடுக்கவும்.

இன்ஸ்டன்ட் தயிர் வடை

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வேகவைத்து, தோலுரித்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தயிரில் உப்பு, பச்சை மிளகாய் விழுது, சாட் மசாலாத்தூள் சேர்க்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை கட் செய்து, தண்ணீரில் நனைத்து, பிழிந்து வைத்துக்கொள்ளவும். மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கை பிரெட் உடன் சேர்த்துப் பிசைந்து வடைகள் போல கையால் தட்டி பவுலில் போட்டு, மேலே தயிர்க் கலவையை ஊற்றவும். கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவி பாரிமாறவும்.

வெந்தய மோர்க்குழம்பு

30 வகை மில்க் ரெசிப்பி

தேவையானவை: தயிர் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் - 2 டீஸ்பூன், வெங்காய வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தயிரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி, உப்பு போட்டு கடைந்து மோராக்கிக்கொள்ளவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மணத்தக்காளி வற்றல் உதிர்த்த வெங்காய வடகம் சேர்த்துக் கிளறி, மோர் கலவையை ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்