தன்னம்பிக்கை
Published:Updated:

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

``அம்மா... இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?’’ என்று கேட்டுக்கொண்டே, வீட்டுக்குள் நுழையும் பள்ளி, கல்லூரி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளின் உற்சாகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்றால், வழக்கமான சமையலுடன் கூடவே வித்தியாசமான, பல்வேறு இடங்களில் பிரபலமாக இருக்கும் ரெசிப்பிகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை எளிதாக செய்துமுடிக்க உதவும் விதத்தில், சுவைமிக்க வடநாட்டு - அயல்நாட்டு உணவு வகைகளை இங்கே தயாரித்து வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

இவற்றை செய்து பரிமாறினால், `மம்மீ... வாட் எவர் யூ மேக் இஸ் யம்மி!’ என்று கொண்டாடுவார்கள். ஆல் த பெஸ்ட்!

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஸ்பினாச் க்ரீமி சூப்

தேவையானவை: நறுக்கிய ஸ்பினாச் (பாலக்கீரை) - 2 கப், பூண்டு - 4 பல், பெரிய வெங்காயம் - ஒன்று, பால் - அரை கப், மைதா - 4 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை: பூண்டு, வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். ஸ்பினாச் கீரையை 2, 3 முறை கழுவி நீரை வடிக்கவும். பிறகு, வாணலியில் தண்ணீர் விட்டு கீரையை சேர்த்து, மூடி போடாமல் 6 நிமிடம் வேகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் கூழாக மசிக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின்னர் மைதாவையும் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். வாசனை வந்ததும், அடுப்பை `சிம்’மில் வைத்து, ஸ்பினாச் கூழ், பால், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்து இறக்கி, ஃப்ரெஷ் க்ரீமை மேலே சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

கோகோ - பனானா ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த வாழைப்பழம் - ஒன்று, கொழுப்பு நீக்கிய பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைக்கவும்), பொடித்த சர்க்கரை - தேவையான அளவு, கோகோ  பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) சிறிய பார் சாக்லெட் - ஒன்று (துருவிக்கொள்ளவும்).

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, கிளாஸில் ஊற்றி, மேலே 2 ஐஸ் க்யூப்களை போட்டு `ஜில்’லென்று பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

பைனாப்பிள் சல்ஸா

தேவையானவை: நறுக்கிய அன்னாசிப்பழம் - ஒரு கப், வெங்காயத்தாள் - 2, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,  சர்க்கரை - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைத் தோலின் துருவல் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். இவற்றை அகலமான பவுலில் சேர்த்து, கொடுக்கப் பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலந்து, 10 நிமிடம் ஊறவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: எலுமிச்சைத் தோலின் வெள்ளைப் பகுதி வராமல் துருவ வேண்டும். இல்லையெனில், கொஞ்சம் கசப்பு வந்துவிடும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

சிங்கப்பூர் கோஸ் ஃப்ரைஸி

தேவையானவை: சின்ன முட்டை கோஸ் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 3 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முட்டைகோஸை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய முட்டை கோஸை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி... தேங்காய்ப்பால், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வைக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நன்கு புரட்டிவிட்டு, வெந்தவுடன் சுடச்சுட பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

பிரெட் - பொட்டேட்டோ கட்லெட்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, பச்சைப் பட்டாணி - ஒரு கப்,  பெரிய வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மைதாவுடன் அரை கப் நீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்கு, மசித்த பச்சைப் பட்டாணியை ஒன்றுசேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், தனி மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் கட்லெட் செய்யவும். மைதா கரைசலில் கட்லெட்டுகளை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஹாங்காங் சில்லி சாஸ் நூடுல்ஸ்

தேவையானவை: சைனீஸ் நூடுல்ஸ் - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் (சேர்த்து) - ஒரு கப்  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறுகட்டு, சில்லி சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கவும். நூடுல்ஸை 2 நிமிடம் வேகவைத்து, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். தவாவை காயவைத்து அதில் நூடுல்ஸைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிப் புரட்டி எடுக்கவும்.

மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு... பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, சில்லி சாஸ், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, நூடுல்ஸையும், வெங்காயத் தாளையும் சேர்த்துக் கிளறி எடுத்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

வெஜ் ஸோத்தி

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, கேரட் - ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், கசகசா - 2 டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 3,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட்டை சதுரமாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பீன்ஸ், தக்காளி  வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், கசகசா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம் தக்காளி, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், தனி மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது, 3 கப் நீர், தேவையான உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டாஸ் சாலட்

தேவையானவை: குடமிளகாய், வெள்ளரிக் காய், பெரிய வெங்காயம், கேரட், தக்காளி - தலா ஒன்று (எல்லாவற்றையும் சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் அகலமான பவுலில் ஒன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஸ்ப்ரிங் ஆனியன் - பனீர்  கிரேவி

தேவையானவை: பனீர் - அரை பாக்கெட், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு,  எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனீரை வெந்நீரில் நன்கு கழுவி சின்னச் சின்ன சதுர துண்டுகளாக்கவும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கொத்தமல்லித்தழை, புதினாவை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கசகசா சேர்த்து வதக்கவும். அத்துடன் தயிர், உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வாணலியில் வெண்ணெய் விட்டு அரைத்ததை ஊற்றிக் கொதிக்கவிட்டு, பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டேட்ஸ் ஸ்மூத்தி

தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, கொழுப்பு நீக்கிய பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைக்கவும்), ஊட்டச்சத்து பானம் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - 2 கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

பீநட் - கார்ன் ரெனடி

தேவையானவை: சோள முத்துக்கள் - முக்கால் கப், உருளைக்கிழங்கு - 2, புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு சிறு கட்டு, பூண்டு - 2 பல், இஞ்சி - சிறு துண்டு , வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய்,  உப்பு, பிரெட் தூள் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசிக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சியை சுத்தம் செய்து... பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். சோளமுத்துக்கள், வறுத்த வேர்க்கடலை இரண்டையும் மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்து வைத்த விழுது, தனி மிளகாய்த்தூள், சோயா சாஸ், உப்பு, மைதா சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையை சிலிண்டர் வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஹாட் ஸ்பைஸி பாவ்

தேவையானவை: பாவ் பன் - 2 , உருளைக்கிழங்கு - 4, கோஸ் - 50 கிராம், கேரட் - ஒன்று, பீன்ஸ் - 10, பசலைக்கீரை - அரை கட்டு, வெங்காயம் - 3, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - அரை கட்டு (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு சேர்த்த வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நன்கு மசிக்கவும். மற்ற காய்கறிகள், கீரையைப் பொடியாக நறுக்கவும்.  நறுக்கிய வெங்காயத்தை கொஞ்சம் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி, நறுக்கிய காய்கறி, கீரை, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், பாவ் பாஜி மசாலா, தேவையான உப்பு, சேர்த்து வதக்கவும். அதனுடன் மசித்த உருளை சேர்த்து நன்கு கிளறி ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் இறக்கி, கரண்டியால் நன்கு மசிக்கவும்.

தவாவை காயவிட்டு, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, பாவ் பன்களை குறுக்குவாட்டில் இரண்டாக கட் செய்து, வெட்டிய வெள்ளை பாகம் வெண்ணெயில் படுமாறு வைத்து சூடாக்கவும். பிறகு அதன் மீது மசாலா கலவையை வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

பப்பாயா - பனானா மிக்ஸர்

தேவையானவை: பப்பாளி - ஒரு துண்டு, வாழைப்பழம் - ஒன்று (தோலெடுத்து மிக்ஸியில் அடிக்கவும்), பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - 2 டேபிள்ஸ்பூன், தோல் சீவி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 3 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு.

செய்முறை: பப்பாளி, வாழைப் பழத்தை தோல் சீவி மிக்ஸியில் அடிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பைனாப்பிள், ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் எசன்ஸ், சர்க்கரை, (விருப்பப்பட்டால்) ஃபுட்கலர் சேர்க்கவும். மேலே ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஸ்பைஸி வெஜ் ஃப்ரை

தேவையானவை: கோஸ் - 100 கிராம், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்), மைதா - 2 டீஸ்பூன், தனி மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகிய வற்றை ஒரு இஞ்ச் நீளத்துக்கு, மெல்லியதாக நறுக்கவும். அவற்றுடன் எண்ணெய் மற்றும் மிளகுத்தூள் நீங்கலாக எல்லா வற்றையும் சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஸ்வீட் கார்ன்  ஸ்டஃப்டு ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு  - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங் செய்ய: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும்), வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அமெரிக்கன் ஸ்வீட் கார்னை ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். கோதுமை மாவில் நெய், உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மேலும் வதக்கவும். ஒன்றிரண்டாக மசித்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்கவும். ஸ்டஃப்பிங் தயார்.

பிசைந்து வைத்த மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, ஸ்வீட் கார்ன்ட் கலவையை கொஞ்சம் எடுத்து அதனுள் வைத்து மூடி சற்று கனமான சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

டேஸ்ட்டி வெஜிடபிள்  சாண்ட்விச்

தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - தேவையான அளவு, குடமிளகாய் - ஒன்று, கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,வெண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாய், வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் மூன்றையும் லேசாக வதக்கி... மிளகுத்தூள்,  உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்யவும். டோஸ்ட் செய்த ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை நன்கு தடவி, நடுவில் வதக்கிய காய்கறி கலவையை வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து அழுத்திப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

புரோக்கோலி - காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர், புரோக்கோலி - தலா ஒன்று, வெங்காயம் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பால் - 2 கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பிரெட் ஸ்டிக்குகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: காலிஃப்ளவர், புரோக்கோலியை நன்கு கழுவி துண்டுகளாக்கி வேகவைத்து, கொஞ்சம் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து, மீதி பாலையும் சேர்த்து மிகக் குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும். இதை மீண்டும் அரைத்து, வடிகட்டி, சூடாக்கி ஒரு கொதி விட்டு இறக்கி... உப்பு, மிளகுத்தூள், ஜாதிக்காய்த்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்தால்... சூப் ரெடி! (விருப்பப்பட்டால்) பிரெட் ஸ்டிக்குகளுடன் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

கார்ன் ஃப்ரிட்டாட்டா

தேவையானவை: மக்காச்சோளம் - 2,  துருவிய சீஸ் - அரை கப், பால், மைதா மாவு - தலா ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோளத்தை நன்கு வேகவிட்டு, முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். இதனுடன் வெண்ணெய், ஸ்ப்ரிங் ஆனியன் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து தோசை மாவு பதத்தில் நன்கு கரைத்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். தவாவை சூடாக்கி வெண்ணெய் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி, ஸ்ப்ரிங் ஆனியன் தூவி, வேகவிட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

தாய்லாந்து கோகனட் சூப்

தேவையானவை: தேங்காய்ப்பால், தண்ணீர் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2 , லெமன் கிராஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 துண்டு, இஞ்சித் துருவல் - கால் டீஸ்பூன், எலுமிச்சை இலைகள் - 4, பேபி கார்ன் - 7, கேரட் - ஒன்று, பட்டன் மஷ்ரூம் - 4, புரோக்கோலி - 3 பூக்கள், சர்க்கரை - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) டோஃபு பனீர் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்ன், கேரட், பட்டன் மஷ்ரூம் ஆகியவற்றை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர், லெமன் கிராஸ், எலுமிச்சை இலை, சர்க்கரை சேர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து 7 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு தேங்காய்ப்பால், கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதனுடன் பேபி கார்ன், கேரட், பட்டன் மஷ்ரூம், புரோக்கோலி, (விருப்பப்பட்டால்) டோஃபு பனீர் சேர்த்து 8 நிமிடம் வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஹாட் சீஸ் பன்

தேவையானவை: பன் - 4. சீஸ் துருவல் - அரை கப், வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், சீஸ் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்து விட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறியெடுத்து குழி செய்து அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து மேல் பக்க பன்னால் மூடவும் இதேபோல் எல்லா பன்னிலும் செய்யவும். தவாவை காயவிட்டு வெண்ணெய் தடவி அதன் மேல் பன்னை வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்த்து லேசாக பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பிப் போட்டு சூடானதும் எடுத்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

சாக்லேட் பான் கேக்

தேவையானவை: பால் - ஒரு கப் மைதா - முக்கால் கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சாக்லேட் பார் - ஒன்று (துருவிக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, துருவிய பனீர் - சிறிதளவு.

செய்முறை: பாலை நன்கு கொதிக்கவைத்து இறக்கி, துருவிய சாக்லேட், சர்க்கரை, மைதா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியான கரைசலாக்கவும். நான்ஸ்டிக் தவாவில் வெண்ணெய் தடவி, ஒரு கரண்டி கரைசலை ஊற்றி பரப்பவும். இரு பக்கமும் வெண்ணெய் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். அதன் மீது துருவிய பனீரைத் தூவி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

கோல்ஸ்லா சாலட்

தேவையானவை: முட்டை கோஸ் - 50 கிராம், கேரட் - ஒன்று (நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும்), பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை - 100 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், ஆலிவ் ஆயில் - தலா அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் அகலமான பவுலில் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

ஷாஹி பனீர் வித் கேப்ஸிகம்

தேவையானவை: பனீர் - 200 கிராம்,  குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - 2, தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பனீரை வெந்நீல் கழுவி சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிதளவு நீர் விட்டு தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும். தக்காளி வெந்ததும் பனீர் துண்டுகள், நறுக்கிய குடமிளகாய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

மேன்ச்சியோ சூப்

தேவையானவை: கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், பீன்ஸ் - 6, கொத்தமல்லித்தழை - ஒரு சிறுகட்டு, பச்சை மிளகாய் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,  (விருப்பப்பட்டால்) பிரெட் ஸ்டிக் - தேவையான அளவு.

செய்முறை: கேரட், கோஸ், பீன்ஸ், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். 4 டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து நறுக்கிய காய்கறிகள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும்  கார்ன்ஃப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து ஊற்றிக் கலந்து, மிளகுத்தூள் தூவி இறக்கவும். (விருப்பப்பட்டால்) பிரெட் ஸ்டிக்குகளுடன் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

பேரிக்காய் - வால்நட் சாலட்

தேவையானவை: பேரிக்காய் - 2, ஒன்றிரண்டாக உடைத்த வால்நட் (அக்ரூட்) - ஒரு கப், பிஸ்தா - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு, தேன் - தலா 2 டேபிள்ஸ்பூன், வொயிட்  வினிகர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 4 டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் - சிறிதளவு.

செய்முறை: பேரிக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். அகலமான பவுலில் தேன், வொயிட் வினிகர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தட்டில் மெல்லிய பேரிக்காய்களை வரிசையாக அடுக்கி, அதன் மீது வால்நட் துண்டுகள், பிஸ்தா வைக்கவும். செய்து வைத்துள்ள தேன் கலவையை மேலே பரவலாக ஊற்றி, சீஸ் துருவல் தூவிப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

கார்லிக் பிரெட்

தேவையானவை: பிரெஷ் பிரெட் ஸ்லைஸ்கள் (சாண்ட்விச் பிரெட்) - 8, சால்ட் பட்டர் - தேவை யான அளவு, துருவிய பூண்டு - கால் கப், சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ (டிபார்ட்மென்ட் கடை களில் கிடைக்கும்) - தேவையான அளவு, வெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: சால்ட் பட்டருடன் (உப்பு கலந்த வெண்ணெய்) துருவிய பூண்டை சேர்த்து நன்கு கலக்கவும். பிரெட் ஸ்லைஸை தவாவில் போட்டு அதன் மேல் சால்ட் பட்டர் - பூண்டு கலவையை நன்றாக பரப்பி, சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ தூவி, சுற்றிலும் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து பரிமாறவும்.

டோஸ்டை கட் செய்து சாண்ட் விச் போலவும் பரிமாறலாம்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

நாஸி கோரெங்

தேவையானவை: பாசுமதி ரைஸ் - 2 கப், கேரட் - ஒன்று, பீன்ஸ் - 10, குடமிளகாய்- ஒன்று, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, வெண்ணெய் - 50 கிராம், பச்சை மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, வறுத்த வேர்க்கடலை -  50 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... பச்சை மிளகாய், வெண்ணெய், வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், வினிகர், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தேவையான உப்பு, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரிசியைப் போட்டு சற்று நீர் குறைந்ததும் இந்தக் கலவையை குக்கரில் நேரடியாக போட்டு மூடவும் (அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). 15 நிமிடம் கழித்து இறக்கவும். ஸ்டீம் அடங்கியதும் வெந்த சாதக் கலவையை ஒரு பவுலில் போட்டு தட்டில் அழகாக கவிழ்த்து, வறுத்த வேர்க்கடலை தூவி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

லெமன் மொஜிட்டோ

தேவையானவை: புதினா இலைகள் - 20, எலுமிச்சைச் சாறு - கால் கப், சோடா - ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை, ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு.

செய்முறை: 2 கப் நீரை நன்கு கொதிக்கவிட்டு, புதினா இலைகளைப் போட்டு 5 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு, வடிகட்டவும். எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வடிகட்டிய புதினா நீருடன் எலுமிச்சைச் சாறு - சர்க்கரை சிரப் சேர்த்துக் கலந்து, அதனுடன் சோடா, ஐஸ்க்யூப் சேர்த்துப் பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

மஷ்ரூம் - கார்ன் மசாலா

தேவையானவை: மஷ்ரூம் - 6, ஃப்ரெஷ் கார்ன் (சோளம்) - கால் கப், ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு, வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10 (விழுதாக அரைக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும். முந்திரியை விழுதாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன்  மஷ்ரூம், சோளம், முந்திரி விழுது சேர்த்து நன்றாக  வேகவிட்டு இறக்கி... ஃப்ரெஷ் க்ரீம்,  கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

டீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி

வெஜிடபிள் - ஃப்ரூட் சாலட்

தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, உருளைக்கிழங்கு - 2, மாதுளை - பாதியளவு, சாத்துக்குடி, வெள்ளரிக்காய், குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, தயிர் - ஒரு கப், ப்ரெஷ் க்ரீம் - அரை கப், மிளகுத்தூள், சர்க்கரை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், வெள்ளரிக்காய், குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். மாதுளம்பழத்தை உதிர்த்துக்கொள்ளவும். சாத்துக்குடியை தோலுரித்து சுளை எடுத்து, கொட்டை நீக்கவும்.

உருளைக்கிழங்கு, குடமிளகாய் இரண்டையும் எண்ணெயில் பொரித்து (உடனடியாக எடுக்கவும்). எண்ணெயை டிஷ்யூ பேப்பர் கொண்டு நீக்கி, அகலமான பவுலில் சேர்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லா பொருட்களையும் இதனுடன் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

தொகுப்பு: பத்மினி  படங்கள்: எம்.உசேன்