
* தர்ப்பூசணிப் பொங்கல்
* வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல்
* மில்லெட் - மேப்பில்
* சிரப் பொங்கல்
* மஞ்சள் பூசணி - தேன் பொங்கல்
* ஓட்ஸ் - பனைவெல்லப் பொங்கல்
* பன்சி ரவை - கிஸ்மிஸ் (உலர்திராட்சை) பொங்கல்
* டிரை ஃப்ரூட்ஸ் பொங்கல்
பொங்கல்... உச்சரிக்கும் போதே சுவைக்க தூண்டும் பதார்த்தம். அதுவும் விசேஷ நாட்களில் கேட்கவே வேண்டாம். நெய்யும், வெல்ல வாசனையும் சேர்ந்து வீட்டை திணறடிக்கப்போகும் பொங்கல் பண்டிகை அன்று செய்து பார்க்க வித்தியாசமான வெரைட்டி இனிப்புப் பொங்கல் வகைகளைத் தந்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியா சதீஷ்.
தர்ப்பூசணிப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - கால் கப்
தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதி - கால் கப் (துருவியது)
டெமேரேரா சர்க்கரை - அரை கப் (பழுப்புச் சர்க்கரையை விட
தர்ப்பூசணிச் சாறு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 5
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 7
ஏலக்காய் (நசுக்கியது) - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:
கழுவிய பச்சரிசி மற்றும் துருவிய தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதியை பொங்கல் பானையில் சேர்க்கவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர், தர்ப்பூசணிச் சாறு விட்டு அரிசிக் கலவையை வேகவிடவும். பிறகு, டெமெரேரா சர்க்கரையைச் சேர்த்துக் கரைய விடவும். சர்க்கரை கரைந்து பொங்கலோடு சேர்ந்து வரும்வரை வேகவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), நசுக்கிய ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும், பொங்கலில் ஊற்றி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - கால் கப்
காய்ச்சிய பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
மில்க்மெய்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம் - 1
நெய் - 1 டேபிள்ஸ்பூன் + 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 6
முந்திரி - 6
ஏலக்காய் - 1 (நசுக்கியது)

செய்முறை:
அரிசியைக் கழுவி பொங்கல் பானையில் சேர்க்கவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து அரிசியை வேகவிடவும். அரிசி மிருதுவாக வெந்ததும், ஒரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் கிளறி, அத்துடன் வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்துக் கலக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். பிறகு, மில்க்மெய்டை ஊற்றி நன்கு கலந்துவிட்டு வேகவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), நசுக்கிய ஏலக்காய் சேர்த்துப் பொரியவிட்டு, பொங்கலில் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
மில்லெட் - மேப்பில் சிரப் பொங்கல்
தேவையானவை:
சாமை - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
மேப்பில் சிரப் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 10
முந்திரி - 5 (பொடியாக நறுக்கியது)
பாதாம் - 5 (நறுக்கியது)

செய்முறை:
அரிசி மற்றும் பருப்பைக் கழுவி ஒன்றாக அரை மணி நேரம் ஊறவிடவும். பொங்கல் பானையில் 3 கப் தண்ணீரை ஊற்றி, கொதித்ததும் ஊறிய அரிசி - பருப்புக் கலவையைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் மேப்பில் சிரப்பைச் சேர்த்து கலவை பொங்கல் பதத்துக்கு வரும் வரை வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பொரித்தெடுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
மஞ்சள் பூசணி - தேன் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - கால் கப்
துருவிய மஞ்சள் பூசணி - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
தேன் - அரை கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 5
முந்திரி - 5
பாதாம் - 5

செய்முறை:
பச்சரிசியைக் கழுவி பொங்கல் பானையில் சேர்க்கவும். இத்துடன் துருவிய மஞ்சள் பூசணி, 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசி மிருதுவாக வெந்துவரும் போது தேனைச் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் கிஸ்மிஸ் (உலர்திராட்சை), முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பொரித்தெடுத்து, பொங்கலில் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
ஓட்ஸ் - பனைவெல்லப் பொங்கல்
தேவையானவை:
ஓட்ஸ் - அரை கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் நறுமணமுள்ள பனை வெல்லம் - அரை கப் (உடைத்தது)
ஏலக்காய் - 1 (நசுக்கியது)
முந்திரி - 5
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 5
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பொங்கல் பானையை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். பிறகு, இதில் ஓட்ஸைச் சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் நன்கு வெந்ததும், பாசிப்பருப்பைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் பனைவெல்லத்தைச் சேர்த்து கலக்கிவிடவும். பனைவெல்லம் கரைந்து ஓட்ஸ் - பருப்புக் கலவையுடன் சேர்ந்து வரவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), நசுக்கிய ஏலக்காய் சேர்த்து வறுத்தெடுத்து, பொங்கலில் கலந்து சூடாகப் பரிமாறவும்.
பன்சி ரவை - கிஸ்மிஸ் (உலர்திராட்சை) பொங்கல்
தேவையானவை:
பன்சி ரவை - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - அரை கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
பொங்கல் செய்வதற்கு முன்பு கிஸ்மிஸை (உலர்திராட்சை) ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு சூடானதும், ரவையைச் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பொங்கல் பானையில் பாசிப்பருப்பு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி மிருதுவாகும் வரை வேகவிடவும். இத்துடன் மீதமிருக்கும் தண்ணீர், வறுத்த ரவையைச் சேர்த்து வேகவிடவும்.
ஊற வைத்த கிஸ்மிஸை (உலர்திராட்சையை) மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் மையாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் பேனை வைத்து அரைத்த கிஸ்மிஸ் (உலர்திராட்சை) கலவையைச் சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்ததும், அப்படியே எடுத்து வெந்துகொண்டிருக்கும் பொங்கலில் கலந்து வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்தெடுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
டிரை ஃப்ரூட்ஸ் பொங்கல்
தேவையானவை:
பிரவுன் ரைஸ் - கால் கப்
தண்ணீர் - 3 கப்
முந்திரி - 10 + சிறிது
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 10
பாதாம் - 10
பிஸ்தா - 10
பேரீச்சை சிரப் - முக்கால் கப்
முந்திரி - 5
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பேரீச்சை - 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
ஒரு பவுலில் முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவிட்டு பிறகு மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேகவிடவும். அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்டைச் சேர்த்து வேகவிடவும். அரிசி நன்கு வெந்ததும், டேட்ஸ் சிரப்பைச் சேர்த்துக் கலந்து வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிறிது முந்திரி, நறுக்கிய டேட்ஸ் சேர்த்து பொரித்தெடுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கி சூடாகப் பரிமாறவும்.