Published:Updated:

மஷ்ரூம் ரெசிப்பி

மஷ்ரூம் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
மஷ்ரூம் ரெசிப்பி

மஷ்ரூம் ரெசிப்பி

மஷ்ரூம் ரெசிப்பி

மஷ்ரூம் ரெசிப்பி

Published:Updated:
மஷ்ரூம் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
மஷ்ரூம் ரெசிப்பி

* ஈஸி மஷ்ரூம் ஃப்ரை
* ஸ்டஃப்டு மஷ்ரூம்
* மஷ்ரூம் சுக்கா
* மஷ்ரூம் மல்லி ரைஸ்
* சிப்பிக் காளான் குழம்பு
* மஷ்ரூம் - ரவா பீரனி
* சிப்பிக் காளான் மஞ்சூரியன்
* மஷ்ரூம் மசாலா ஆம்லெட்
* ஹாட் - பாட் மஷ்ரூம்
* ஆலு - மஷ்ரூம் கறி

மஷ்ரூம் ரெசிப்பி

சைவம் உண்பவர்களையும், அசைவம் உண்பவர்களையும் கவரும் லிஸ்ட்டில் மஷ்ரூமுக்கு இடம் உண்டு. பல வெரைட்டி உணவுகளை மஷ்ரூமில் தந்திருக்கிறார் சிவசக்தி கார்த்திகேயன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

தேவையானவை:
 பட்டன் காளான் - ஒரு பாக்கெட்
 பெரிய வெங்காயம் - 3
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, காளான் வேகும்வரை மூடி போட்டு வைக்கவும் (காளானிலிருந்தே நீர் பிரியும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). காளான் வெந்து, சுண்டியதும் இறக்கவும்.

குறிப்பு:
பட்டன் காளானைச் சுத்தம் செய்யும்போது, மைதா மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் காளானை புரட்டிக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

ஸ்டஃப்டு மஷ்ரூம்

தேவையானவை:
 பட்டன் காளான் - 10 (பெரியது)
 பிரெட் தூள் - தேவைக்கேற்ப
 முட்டை - ஒன்று
 மைதா மாவு - 3 டீஸ்பூன்
 டூத்பிக் - சில

ஸ்டஃப் செய்ய:
 பெரிய வெங்காயம் - 2
 பூண்டு - 10 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிது
 பச்சை மிளகாய் - 2
 சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும். முட்டையை அடித்து மைதா மாவுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி தனியே வைக்கவும்.

காளானின் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு, காளானின் நடுவே வதக்கிய கலவையை ஸ்டஃப் செய்யவும். இறுதியாக சீஸ் துருவல் வைக்கவும். இனி, தண்டு நீக்கிய மற்றொரு காளானை ஸ்டப் செய்த காளானோடு ஒன்றாக இணைத்து டூத் பிக்கால் காளானின் நடுவே படத்தில் காட்டியுள்ளபடி செருகவும். இரண்டும் பிரிந்து வராமல் இருக்கவே டூத்பிக்கை செருகுகிறோம். பிறகு, முட்டை-மைதா கலவையில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை சிறு தீயில் வைத்து, ஸ்டஃப் செய்த காளான் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

மஷ்ரூம் சுக்கா

தேவையானவை:
 பட்டன் காளான் - 200 கிராம்
 சின்ன வெங்காயம் - 150 கிராம்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 சீரகத்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - சிறிது
 பொடியாக நறுக்கிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 பூண்டு - 15 பல்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை விருப்பமான வடிவில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், பூண்டை வட்டமாகவும் நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு காளான் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, மூடிபோட்டு காளானை 3 நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து தண்ணீர் சுண்ட (காளானில் இருந்து வெளிப்படும் தண்ணீர்) வதக்கி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:
 பத்து நிமிடங்களில் சமைத்துவிடலாம்.
 சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.
 இந்த ரெசிப்பிக்கு, வெங்காயம் அதிகம் தேவைப்படும். சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயமும் சேர்க்கலாம்.

மஷ்ரூம் மல்லி ரைஸ்

தேவையானவை:
 பட்டன் காளான் - 100 கிராம்
 பாஸ்மதி அரிசி - 200 கிராம்
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்
 குடமிளகாய் - ஒன்று
 நெய் - 3 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை தண்ணீரில் அலசி நன்கு சுத்தம் செய்து நீளமாக நறுக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் விழுதாக அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து வைக்கவும். ஒரு மடங்கு பாஸ்மதி அரிசிக்கு, இந்த சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து 2 மடங்கு இருக்க வேண்டும்.

அடுப்பில் குக்கர் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட், குடமிளகாய், காளான் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, எடுத்துவைத்துள்ள சாற்றை
(கொத்தமல்லித்தழை + தேங்காய் + பச்சை மிளகாய்சாறு) சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதித்ததும், பாஸ்மதி அரிசி சேர்க்கவும். குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இதை சிப்பிக் காளானில் செய்வதாக இருந்தால், காளான் சேர்த்தவுடன் 10 நிமிடங்கள் வதக்கவும்.

சிப்பிக் காளான் குழம்பு

தேவையானவை:
 சிப்பிக் காளான் - ஒரு பாக்கெட்
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 தக்காளி - 2
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 கசகசா - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 பட்டை, சோம்பு - சிறிதளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
சிப்பிக் காளானின் பெரிய இதழை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அப்படியே தண்ணீரில் நன்கு அலசி வைக்கவும். சின்ன வெங்காயம் 10-ஐ தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தனியே எடுத்துவைத்த முழுதான வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, இறுதியாக மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி, ஆறிய பிறகு, விழுதாக அரைத்து வைக்கவும். தேங்காயுடன் கசகசா சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் சின்ன குக்கர் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் நறுக்கிய காளானைச் சேர்க்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீரை குழம்பு பதத்துக்கு வருவது போல சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பாதியளவு கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி, இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து அரைத்த தேங்காய்க்கலவை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி, மீதமுள்ள கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
சாதம், டிபனுக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும். பட்டன் காளானை விட சிப்பிக் காளானில் சத்துகள் அதிகம். இது வேக சிறிது நேரம் பிடிக்கும்.

மஷ்ரூம் - ரவா பீரனி

தேவையானவை:
 பட்டன் காளான் - ஒரு கப்
 வெள்ளை ரவை - 100 கிராம்
 காய்ச்சிய பால் - முக்கால் லிட்டர்
 சர்க்கரை - ஒரு கப்
 பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 முந்திரி - 10
 சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மைதா மாவு - அரை டேபிள்ஸ்பூன்
 பிஸ்கட் - 4 (இனிப்பு பிஸ்கெட்)
 எண்ணெய் - பொரிக்க
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
சாரைப்பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். பட்டன் காளானை நன்கு அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பிறகு மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதில் நறுக்கிய காளானைச் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். பாதாம் மிக்ஸ் பவுடரை தண்ணீரில் கரைத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் முந்திரி, ஊறவைத்த சாரைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் ரவையைச் சேர்த்து 2 நிமிடம் புரட்டி, காய்ச்சிய பால், உப்பு சேர்த்து கெட்டிபடாமல் ரவையை நன்கு வேகவிடவும் அவ்வப்போது கரண்டியால் கலக்கிவிடவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கெட்டியாக இருந்தால் கொஞ்சம் சுடுநீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், பிசிறி வைத்துள்ள காளானைப் பொரித்தெடுத்து, அடுப்பில் இருக்கும் ரவை கலவையில் சேர்த்துக் கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும். பாதாம் மிக்ஸ் கரைசலை சேர்க்கவும். பிஸ்கட்டுகளை தண்ணீரில் நனைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்துக் கலக்கி, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
கார்ன்ஃப்ளார், மைதா மாவில் புரட்டிவைத்து பொரித்த காளான் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தால், அவற்றைப் பிரித்து, பிறகு ரவைக் கலவையில் சேர்க்கவும்.

சிப்பிக் காளான் மஞ்சூரியன்

தேவையானவை:
 சிப்பிக் காளான் - ஒரு பாக்கெட்
 பெரிய வெங்காயம் - 2
 குடமிளகாய் - ஒன்று
 பூண்டு - 15 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப
 டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன் +
2 டீஸ்பூன்
 மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
சிப்பிக் காளானை கழுவவும். 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு மற்றும் மைதா மாவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காளானை இதில் புரட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை சதுர வடிவில் நறுக்கவும். பூண்டை தோல் நீக்கி வட்டமாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு காளானைச் சேர்த்து பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு, டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு,
2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில் சேர்க்கவும். இத்துடன் பொரித்த மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையை 3 நிமிடம் புரட்டி விட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:
பொரித்த காளான் துண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தால், உதிராகப் பிய்த்துவிட்டு பிறகு கிரேவியில் சேர்க்கவும்.

மஷ்ரூம் மசாலா ஆம்லெட்

தேவையானவை:
 பட்டன் காளான் - ஒரு கப்
 பெரிய வெங்காயம் - 2
 பச்சை மிளகாய் - 2
 முட்டை - 3
 உருளைக்கிழங்கு,
தக்காளி - தலா ஒன்று
 பூண்டு - 4 பல்
 மிளகுத்தூள் -
தேவையான அளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை கழுவி பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுர வடிவில் பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து, நறுக்கிய காளானையும் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து காளானிலிருந்து தண்ணீர் பிரிந்து வரும்போது நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து, தண்ணீர் நன்கு சுண்டும்வரை வதக்கி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து, அதில் முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கலக்கவும். இறக்கி வைத்துள்ள காளான் மசாலா கலவையை அதில் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி எண்ணெய் விட்டு கலவையை ஆம்லெட்டாக வார்க்கவும். இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு, மிளகுத்தூள் தூவி எடுக்கவும்.

குறிப்பு:
ஒரு கப் காளான், வெங்காயம், முட்டை எல்லாம் சேர்ப்பதால் மேற்கூறிய அளவுக்கு 6 ஆம்லெட் ஊற்றலாம். முட்டையை உடைத்து ஊற்றுவதற்கு முன் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு உப்பு போட்டு பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் ஆம்லெட் மிருதுவாக வரும்.

ஹாட் - பாட் மஷ்ரூம்

ஊறவைக்க தேவையானவை:
 பட்டன் காளான் - 100 கிராம்
 தயிர் - 4 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 காய்ந்த வெந்தய இலை
(கஸூரி மேத்தி)  - 2 டீஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மைதா மாவு - அரை டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 வெண்ணெய் - ஒரு  டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய்,
காய்ந்த மிளகாய் - தலா 2
 காய்ந்த வெந்தய இலை
(கஸூரி மேத்தி) - 2 டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - 3
 செட்டிநாடு மசாலா - ஒரு டீஸ்பூன் (தயாரிப்பு முறை கீழே)
 எண்ணெய் - 2 டீஸ்பூன்

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
ஊறவைக்கக் கொடுத்துள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு செட்டிநாடு மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, உப்பு சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கும்போதே வேறொரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த காளானைப் பொரித்து எடுத்து,  வெங்காயக்கலவையுடன் சேர்க்கவும். 5 நிமிடம் அடுப்பைக் குறைத்து வைத்து இறுதியாக காய்ந்த வெந்தய இலை தூவி இறக்கவும்.

செட்டிநாடு மசாலா செய்முறை:

தேவையானவை:
 மல்லி (தனியா) - 100 கிராம்
 காய்ந்த மிளகாய் - 100 கிராம்
 சீரகம் - 25 கிராம்
 மிளகு - 15 கிராம்
 பட்டை - 25 கிராம்
 ஜாதிப்பத்ரி - 25 கிராம்
 மாராட்டி மொக்கு - 25 கிராம்
 அன்னாசிப்பூ - 25 கிராம்
 சோம்பு - 15 கிராம்
 கல்பாசி - 10 கிராம்
 கிராம்பு - 10 கிராம்
 ஏலக்காய் - 15
 பிரிஞ்சி இலை - 6
 ஜாதிக்காய் - 3

செய்முறை:
காய்ந்த மிளகாய், ஜாதிக்காய், பிரிஞ்சி இலை மூன்று தவிர மற்ற எல்லாவற்றையும் வாணலியில் சேர்த்து தீய்ந்து விடாமல் பிரவுன் நிறமாகும் வரை வறுக்கவும். இறுதியாக மீதமிருப்பவற்றைச் சேர்த்து வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்தெடுத்தால் செட்டிநாடு மசாலா ரெடி.

ஆலு - மஷ்ரூம் கறி

தேவையானவை:
 பட்டன் காளான் - 100 கிராம்
 உருளைக்கிழங்கு - 3
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - ஒன்று (பெரியது)
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 பட்டை - 2 சிறிய துண்டு
 பிரிஞ்சி இலை - சிறிது
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 கிராம்பு - 2
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -
ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 முந்திரி - 7
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் ரெசிப்பி

செய்முறை:
காளானை கழுவி நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கவும். தக்காளியை சுடுநீரில் சேர்த்து தோல் உரிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, காளான்,

இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்துப் புரட்டவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பை சிறு தீயில் வைக்கவும். இறுதியாக நெய் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:
 சப்பாத்தி, பரோட்டாவுக்கு இது நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
 முந்திரியை சிறிது நேரம் ஊறவைத்த பின் அரைக்கவும்.

- படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism