* முந்திரி பக்கோடா
* பாதாம் அல்வா
* கடலை உருண்டை
* பூசணி விதை மில்க்ஷேக்
* பிஸ்தா பர்ஃபி
* நட்ஸ் ஸ்பைஸி ஃப்ரை
* நட்ஸ் குல்ஃபி
* ஆளி விதை காரப்பொடி
* நட்ஸ் கேக்
* காஜ் கதலி

இந்த இதழில் நட்ஸ் ரெசிப்பிகளை வழங்கியிருக்கிறார் சுதா செல்வகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முந்திரி பக்கோடா
தேவையானவை:
உடைத்த முந்திரிப் பருப்பு - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - அரை கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
சோம்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மாவு வகைகளைச் சலித்து வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் சலித்த மாவு வகைகள், சமையல் சோடா, சோம்பு, நெய், இஞ்சி - மிளகாய் விழுது, மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசறவும். உடைத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து, மாவை
10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிச் சேர்த்து, பொன்னிறமாக மாறியதும் மறுபுறமும் வேகவைத்து சூடாகப் பரிமாறவும்.
பாதாம் அல்வா
தேவையானவை:
பாதாம் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்
உருக்கிய நெய் - 2 கப்

செய்முறை:
சுடுநீரில் பாதாம் பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பதம் மிகவும் முக்கியம். பச்சை வாசனை நீங்கி, வெந்த வாசனை வரும் சமயம், சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும். கலவை பூத்தாற்போல் பொட், பொட் என வெடித்து வரும்போது, மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறவும். கலவை வெந்திருக்க வேண்டும், அடுப்பில் இருந்து இறக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பட்டர் பேப்பரில் மடித்தும் வைக்கலாம்.
கடலை உருண்டை
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - 250 கிராம்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
வெல்லம் - 300 கிராம்
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்

செய்முறை:
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி இரண்டாக உதிர்க்கவும். வெல்லத்தைத் துருவி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து, கசடு நீங்க வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்க்கவும். பாகை கரண்டியால் எடுத்து தண்ணீரில் விட்டு உருட்டினால், பாகு உருண்டு வரவேண்டும். உருட்டு பதம் வந்ததும் வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். கலவை கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறியதும், உருண்டைகள் பிடிக்கவும். அல்லது நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி, சதுரமாக வெட்டவும் செய்யலாம்.
பூசணி விதை மில்க்ஷேக்
தேவையானவை:
பூசணி விதை - ஒரு கப்
பால் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
சாரைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த பூசணி விதைகள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்

செய்முறை:
சாரைப் பருப்பு மற்றும் முந்திரிப் பருப்பை தனித்தனியே 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பூசணி விதையை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அதில் ஒரு கப் பால் மட்டும் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மீதமுள்ள பாலில் ஊறிய சாரைப்பருப்பு (ஒரு டேபிள்ஸ்பூன் மட்டும்), முந்திரிப்பருப்பு, பூசணி விதைகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அரைத்த விழுதோடு சர்க்கரை சேர்த்து, கரையவிடவும். ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்ப்பொடி சேர்க்கவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும்.. இத்துடன் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த ஜில் பாலை கலக்கவும். மேலே மீதமுள்ள சாரைப்பருப்பு, நெய்யில் வறுத்த பூசணி விதைகளைத் தூவிப் பரிமாறவும்.
பிஸ்தா பர்ஃபி
தேவையானவை:
தோல் நீக்கிய பிஸ்தா - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பிஸ்தா எசன்ஸ் - ஒரு துளி
நெய் - தேவையான அளவு

செய்முறை:
பிஸ்தாவை வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு காய்ச்சவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, பாகுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி அடுப்பை அணைக்கவும். பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் கலவையைச் சேர்த்து, ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
நட்ஸ் ஸ்பைஸி ஃப்ரை
தேவையானவை:
முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வறுத்த, தோல் நீக்கிய வேர்க்கடலை, அக்ரூட் - ஒரு கப்
(எல்லாம் சேர்த்து)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து, அனைத்து வகை நட்ஸ்களையும் சேர்த்து வறுக்கவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். நொடியில் தயார் ஸ்பைஸி ஃப்ரை டேஸ்டி நட்ஸ்.
நட்ஸ் குல்ஃபி
தேவையானவை:
நட்ஸ் பவுடர் - கால் கப் (முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, அக்ரூட், பிஸ்தா, சாரைப்பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தது)
சர்க்கரை சேர்க்காத கோவா - 100 கிராம்
சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
குல்ஃபி எசனஸ் - 2 துளிகள்
கொழுப்பு நீக்காத பால் - அரை லிட்டர் (ஆவின் ஆரஞ்சு கலர் பால்பாக்கெட் பயன்படுத்தலாம்)
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் (சிறிது எடுத்து தனியாக வைக்கவும்), கோவா, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை குறைந்த தீயில்வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பால் சுண்டி வரும் சமயம், சிறிது பாலில் சோள மாவைக் கரைத்து, இதில் சேர்க்கவும். இப்போது அடர்த்தி அதிகரித்திருக்கும். அதில் நட்ஸ் பவுடர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையில் குல்ஃபி எசன்ஸ் சேர்த்து ஆறவிடவும். குல்ஃபி மோல்டில் இந்தக் கலவையைச் சேர்த்து, ஃப்ரீஸரில் 10 மணி நேரம் வைத்து எடுத்துச் சுவைக்கவும்.
ஆளி விதை காரப்பொடி
தேவையானவை:
ஆளி விதை (Flax seeds) -
அரை கப்
முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முழு உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
நல்லெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வெறும் வாணலியை வைத்துச் சூடானதும் ஆளி விதையை சிறிது சிறிதாகச் சேர்த்து, படபடவெனப் பொரிந்ததும் தனியாக எடுத்துவைக்கவும். இதே போல மீதமிருக்கும் அத்தனை ஆளிவிதைகளையும் சேர்த்து பொரிந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து மேற்கூறிய பருப்பு, தானியங்கள், காய்ந்த மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிடவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். மணமணக்கும் ஆரோக்கியமான பொடி ரெடி. இதை சூடான சாதத்தில் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, அடைக்கு எண்ணெய் சேர்த்து தொட்டுக்கொள்ளலாம்.
நட்ஸ் கேக்
தேவையானவை:
நட்ஸ் - அரை கப் (முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பூசணி விதை, வால்நட், நறுக்கிய பேரீச்்சை, டூட்டி-ஃப்ரூட்டி, பிஸ்தா, வறுத்த வேர்க்கடலை, கிஸ்மிஸ் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்)
மைதா - ஒன்றரை கப்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பால் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 25 கிராம்
சர்க்கரை - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
டாப்பிங் செய்யத் தேவையானவை:
பழுப்புச் சர்க்கரை - கால் கப்
பொடியாக நறுக்கிய நட்ஸ் - அரை கப் (மேலே சொன்ன வகைகள்)
பால் - இரண்டு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு கலந்து, மாவு கலவையை இரு முறை சலிக்கவும். மற்றொரு பவுலில் தயிர், பால், உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சலித்து வைத்துள்ள மாவில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தயிர், பால் வெண்ணெய்க் கலவையைச் சேர்த்து அடித்து, நட்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை வெண்ணெய் தடவிய டிரேயில் சேர்த்து, பேக்கிங் அவனில் 180 டிகிரி சூட்டில் 15-20 நிமிடம் பேக் செய்து பிறகு வெளியே எடுக்கவும்.
டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, வெந்த கேக் மீது பரப்பி, அவனில் டாப் மோட்-ல் 5 நிமிடங்கள் கிரில் செய்யவும். டாப் ரோஸ்ட் ஆகிவிடும். பிறகு ஆறவைத்து கட் செய்து பரிமாறவும்.
காஜ் கதலி
தேவையானவை:
முழு முந்திரிப் பருப்பு - ஒரு கப்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்

செய்முறை:
முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கை விடாமல் கிளறவும். சிறிது நேரத்தில் வெந்து சுருண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவையை சப்பாத்தி மாவு போல தேய்த்து, டைமண்ட் வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்