Published:Updated:

“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”
பிரீமியம் ஸ்டோரி
“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

- சீக்ரெட் சொல்லும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்சிதா

“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

- சீக்ரெட் சொல்லும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்சிதா

Published:Updated:
“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”
பிரீமியம் ஸ்டோரி
“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

டி.வி-களில் காட்டப்படும் ஊறுகாய் விளம்பரமாகட்டும், அலங்காரத்தில் ஈர்க்கும் பிரியாணி விளம்பரமாகட்டும், கண்களுக்கு விருந்தளிக்கும் குலோப் ஜாமூனாகட்டும்... அவை நம்மை ஈர்ப்பதன் பின்னணியில் இருப்பது ‘புட் ஸ்டைலிஸ்ட்’டின் கைவண்ணங்களே. உணவானது, நம்மை ஈர்க்கும் வகையில் அலங்கரிப்பதுதான் ‘புட் ஸ்டைலிஸ்ட்’ சஞ்சிதாவின் வேலை. சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு மாலை வேளையில் நுரை ததும்பும் டபரா செட் காபியோடும், பூண்டு மணக்கும் காக்ராவுமாக ஆரம்பித்தது சந்திப்பு.

“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ராஜஸ்தான்ல. சென்னையில எம்.பி.ஏ படிக்க வந்தப்ப என்கூட படிச்சவரோட மலர்ந்தது காதல். திருமணத்துக்குப் பிறகு பக்கா சென்னை பொண்ணானேன். குடும்பத்துக்காக டெல்லியில பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டேன். வீடு, கணவர், குழந்தைகள்னு ரொம்ப பிஸியா போயிட்டு இருந்தது. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் எல்லா அம்மாக்களையும்போல வீடுல இருக்க போர் அடிக்க ஆரம்பிச்சது. ‘பொழுது போக்குற நேரத்துல ஏதாவது வித்தியாசமா செய்யலாமே’னு தோணிச்சு. ராஜஸ்தான், சென்னைனு இரண்டு இடத்தோட அத்தனை உணவுகளும் எனக்கு அத்துப்படி. ‘நாம ஏன் ஒரு ஃபுட் பிளாக் ஆரம்பிக்கக் கூடாது’னு தோணவும் ஃபுட் பிளாக் ஆரம்பிச்சேன்” என்கிறவர் 2008-ம் ஆண்டில் தன் பிளாக்குக்கு ‘லைட் பைட்ஸ்’ என்கிற பெயர் வைத்து தன் சமையல்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

‘‘நான் சமைக்கிற உணவுகளை நானே ரசிச்சு ஃபோட்டோ எடுத்து பிளாக்ல போட ஆரம்பிச்சேன். கிரியேட்டிவ்வா இருக்கிற என்னோட போட்டோஸ்க்கு நல்ல ரீச் கிடைச்சது. அதைப்பார்த்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் என்னை அவங்களோட தயாரிப்புகளுக்கு ‘ஃபுட் ஸ்டைலிங்’ செய்து தரச்சொல்லி கேட்டாங்க. அதுதான் நான் ‘ஃபுட் ஸ்டைலிங்’ துறைக்குள் காலடி எடுத்து வைத்த தருணம்” என்று தன்னுடைய வளர்ச்சியை விவரித்த சஞ்சிதா இதற்காக எந்தவொரு ஸ்பெஷல் கோர்ஸும் படித்திருக்கவில்லை என்பது மற்றொரு வியப்பு.

‘‘முதன்முதலில் ஒரு பிரபல சமையல் பொருட்கள் விற்கும் கடைகளுக்காகத்தான் ஸ்டைலிங் பண்ண ஆரம்பிச்சேன். அந்த கடையோட பொருட்களில் உணவுகளை அலங்கரிச்சு எடுக்கிறதுதான் எனக்கு கொடுத்த டாஸ்க். பாக்ஸ், சின்ன சின்ன டப்பாக்களில் கூட மளிகைப் பொருட்களை எப்படி அழகா நிரப்பி நம்ம வீட்டு கிச்சன்ல வெச்சுக்க முடியும், உணவுப் பொருட்களை எப்படி பிளேட்ல வெச்சா அழகா தெரியும்ங்கிறதை நான் அவங்களுக்கு அலங்காரம் செய்து காண்பிச்சேன். இன்னைக்கும் அவங்களோட விளம்பர பலகையில நான் பண்ணின உணவு அலங்காரம்தான் இருக்குது” என்கிறவருக்கு அதன் பிறகு ஆச்சி மசாலா, க்ரில் பாக்ஸ், அரோமா என்று பெரிய நிறுவனப் பொருட்களை அலங்கரிக்கின்ற ஆஃபர்கள் கதவைத் தட்டியிருக்கின்றன.

‘‘மசாலா கம்பெனிகள் ஆஃபர் வர்றப்ப அவங்க மசாலாவை வெச்சு அவங்க சொல்ற சாம்பார், ரசம் மாதிரியான உணவுகளை நானே வீட்டுல ரெடி பண்ணி, அதை அழகான பிளேட், பவுல்ல அலங்காரப்படுத்தி வெச்சிருவேன். போட்டோகிராபர்கள் வந்து படம் எடுத்துட்டு போயிடுவாங்க.. மாடல் ஷூட் மாதிரியான விஷயங்களுக்கு செட்லதான் போய் ஃபுட் ரெடி பண்றமாதிரி இருக்கும். காலைல 6 மணிக்கு போனா நைட் 2 மணிவரை நீண்ட ஷூட்லாம் இருக்கு” என்றவர் சமீபத்தில் கிராண்ட் ஸ்வீட்டின் விழாக்கால இனிப்பு மற்றும் மசாலா மிக்ஸ்களுக்கு ஸ்டைலிங் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எந்த வேலைக்கும் ரசனை அவசியம்!”

‘‘டி.வி-ல வர்ற விளம்பரங்களுக்கு அதிகமா உழைக்க வேண்டியது இருக்கும். சில நேரங்கள்ல அவங்க கேக்குற மாதிரியான வடிவம் நம்மோட உணவுகள்ல வராது. அப்படிப்பட்ட தருணத்துல பொறுமையோட அந்த வடிவத்தை கொண்டுவர வைக்கிறதுலதான் நம்மோட ஒட்டுமொத்த திறமையும் அடங்கியிருக்குது. ஒருமுறை வடை உப்பிட்டு வர்ற மாதிரியான ஷாட் எடுக்கணும். ஆனா, வடை அந்த நேரம் பார்த்து உப்பி வரலை. கிட்டத்தட்ட 11 தடவைக்கு மேல, வடை மாவை தட்டிப் போட்டு பொரிச்செடுத்து பலன் இல்லாம, பன்னெண்டாவது தடவையா உப்பி வந்தது. ஃபுட் ஸ்டைலிங்குக்கு என்று முறையாக கோர்ஸ்கள் இல்லாததால இந்த துறைக்கு அத்தனை பேர் வர்றதில்லை. இதுல ஈடுபடுறதுக்கு ருசியா சமைக்கத் தெரிஞ்சு, ரசனையா அதை அலங்கரிக்கத் தெரிஞ்சாலே போதும். இந்த வேலையில் ஜெயிக்க நிறைய பொறுமையும் வேணும்.

இந்தத் துறையில் நான் கத்துக்கிட்டது எல்லாமே என்னோட சொந்த அனுபவங்களால்தான். குடும்பமும் அதுக்கு சப்போர்ட்டிவா இருக்கு. சில நேரங்களில் ஷூட் முடிச்சு நான் வர லேட் ஆனாலும் தோசை, சட்னி எல்லாம் செய்து சாப்பிட குழந்தைகளும், கணவரும் பழகிகிட்டாங்க. இந்த ஃபீல்டுல ஒரு பெண்ணோ, ஆணோ ஜெயிக்கணும்னா அதுக்கு குடும்பத்தோட அனுசரணை என்னைக்கும் இருக்கணும். அந்த வரம் எனக்கு கிடைச்சதாலதான் இன்னைக்கு ‘ஃபுட் ஸ்டைலிஸ்ட்’ பணியில சாதிச்சு உங்க முன்னாடி உட்கார்ந்துருக்கேன்” சஞ்சிதாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது. அதுதானே உண்மையும்கூட!

- பா.விஜயலட்சுமி
படங்கள்: உ.கிரண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism