Published:Updated:

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்
கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

பந்தி

பிரீமியம் ஸ்டோரி

“வரவேற்பு, மேளதாளங்கள், மலர் அலங்காரங்கள் என காசைக் கொட்டி கொட்டி ஊர் மெச்சும் அளவுக்கு நடக்கும் திருமணத்தின், சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தினர்கள் முகம் சுளித்தால் போச்சு. ‘என்னய்யா கல்யாணம்... இவ்ளோ செலவு பண்றாங்க, வாய்க்கு ருசியா சாப்பாடு போட முடியாதா?’ன்னு ஒரே ஒரு பேச்சில் செய்த செலவு அத்தனையும் வீணாகிடும். கண்களுக்கு நிறைவா நடத்தும் கல்யாணத்துல, வந்திருக்கும் விருந்தினரின் வயிற்றையும் நிறையச் செய்தால்தான் அனைவரின் மனதும் நிறைவடைந்து மணமக்களை மனதார வாழ்த்துவார்கள்” - நாற்பது வருடங்களாக சமையல் கலையில் வேறூன்றி நிற்கும் ஏ.எஸ் ராஜசேகர் கேட்டரர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜசேகரை சந்தித்தோம். 

 “காலம் மாறிவிட்டது, உணவு முறைகளும் மாறிவிட்டன, உண்ணும் வேகமும் மாறிவிட்டது, எனவே, எல்லா உணவுகளும் உடனுக்குடன் சுடச்சுட வேண்டும் என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள். பணம் செலவாவதைவிட தரத்தில் கண்ணாக இருக்கிறார்கள். `எவ்வளவு வேண்டுமானாலும் செலவாகட்டும், அதிக அயிட்டங்கள் இருக்க வேண்டும், வரும் விருந்தினர்கள் வாயைப் பிளக்க வேண்டும்’ என்று சொல்லும் வாடிக்கையாளர்களும் உண்டு. `சார், பாத்து செய்யுங்க, பட்ஜெட் கல்யாணம் என்று அளவாக செலவழிக்கும் கட் அண்ட் ரைட் கஸ்டமர்களும் உண்டு. இரு தரப்பினருக்கும் கடந்த 40 வருடங்களாக சமைத்து வருகிறோம்” எனும் ராஜசேகர் முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கி திரைப் பிரபலங்கள் மட்டும் இல்லாமல் சாதாரண மக்கள் வரை பலதரப்பட்ட மக்களின் இல்ல திருமணங்களை நடத்திக் கொடுத்திருக்கிறார்.

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

முகூர்த்த்த தின மெனு

“பொதுவாக கல்யாண முகூர்த்த பந்திக்கு, மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்களின் பாரம்பர்ய உணவு முறைகளைப் பொறுத்தே திருமணத்துக்கான உணவு வகைகளை தேர்வு செய்யறாங்க. அதுமட்டும் இல்லாமல் முகூர்த்தத்துக்கு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் இலைகளைத் தவிர்த்து, வாழை இலையிலேயே பரிமாறச் சொல்கிறார்கள். அதேசமயம், தலை வாழை இலையில் பரிமாறும்போது அனைத்து உணவுகளையும் பரிமாற வேண்டும் என்பது சாஸ்திரங்களில் ஒன்று. எனவே, வாழை இலையில் அனைத்து உணவுகளையும் கொஞ்சமாக பரிமாறினால் வீணாவதை தவிர்க்கலாம்” என அனுபவத்தில் கற்ற சூட்சுமங்களை கூறினார்.

ரிசப்ஷன் மெனு

“இப்போது இருக்கும் தலைமுறையினர் வரவேற்பின்போது பாரம்பர்ய உணவைத் தவிர்த்து சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், நார்த் இண்டியன், கேரளா உணவுகள் என்று வெரைட்டி காட்ட விரும்புகிறார்கள். அதிலும் ரிசப்ஷன் என்றாலே பெரும்பாலும் பஃபேதான் நடைமுறையில் இருக்கிறது. பஃபே முறையில் இருக்கும் சிறப்பே, இதில் உணவு வீணாவது குறைவாக இருக்கும். இந்த வரவேற்பு பஃபேகளில் கொஞ்சம் புதிய முயற்சிகளும், கற்பனைக்கு எட்டாத காம்பினேஷன்களும் வரும். உதாரணமாக... ஷாஹி பனீர் - சைனீஸ் இட்லி, பீட்சா - ஹனீ கேரட் சாலட், இலை அடை - நாச்சோஸ்.... என்று இன்றைய இளைய தலைமுறையின் டேஸ்ட் மெனுக்களிலும் எதிரொலிக்கிறது.”

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

மண மக்கள் சீர்

“இன்றைய தேதிக்கு பெண் வீட்டார், மாப்பிளை வீட்டுக்கு பலகாரம் சீர் கொடுப் பதும், மாப்பிளை வீட்டாரும் அவர்கள் தரப்பில் இருந்து பெண் வீட்டுக்கு சீர் கொடுப்பதும் என கௌரவ அடையாளமாக சில விஷயங்களை கடைப்பிடிக்கின்றனர். இந்த சீர் வரிசைக்கென 9 சுற்று முறுக்கு, அதிரசம், லட்டு, ஜாங்கிரி, ஜிலேபி, திரட்டுப் பால், தேங்காய் திரட்டுப் பால், மனோஹர குட்டி போன்ற பாரம்பர்ய வகைகளைத்தான் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது காஜு கத்லி, பாதாம் கத்லி, லிட்சி கா தேறி, மால்புவா, சம்சம், சந்தேஷ் போன்ற  வட இந்திய இனிப்புகளைக்கூட விரும்பிக் கேட்கிறார்கள். இதையும் செய்து கொடுக்கிறோம். குறிப்பாக, இதை பெட் ஜார்களில் கொடுக்க வேண்டுமா அல்லது பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்க வேண்டுமா என்பதைக்கூட கேட்டு செய்துவிடுகிறோம். எல்லாமே பட்ஜெட்டைப் பொறுத்தது.”

லைவ் கவுன்ட்டர்கள்

“நம் கண் முன்னே நமக்குத் தேவையான உணவுகளை ஆர்டர் செய்து, அதை நமக்கே நமக்காக சமையல் கலைஞர்கள் சமைத்துக் கொடுத்தால் அதற்குப் பெயர்தான் லைவ் கவுன்ட்டர். இந்த கலாசாரம் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைக்கு, ஜூஸ், ஸ்நாக்ஸ், சாட், ஐஸ்க்ரீம்கள், பீடா போன்றவற்றுக்குதான் லைவ் கவுன்ட்டர்கள் பெரிய அளவில் கேட்கப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் எல்லா உணவுகளையும் லைவ் கவுன்ட்டர்களாகவே கேட் கிறார்கள். இப்படி லைவ் கவுன்ட்டர்கள் அமைப்பது கொஞ்சம் செலவு வைக்கும் விஷயம். ஆனால், அதை  பெரிதாக பொருட்படுத்தாமல் விருந்தினர்களை வித்தியாசமாக அசத்த விரும்புபவர்கள் இந்த முயற்சியைத்
தேர்வு செய்து விருந்தினர்களை மகிழ் விக்கிறார்கள்.”

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

இலையில் மெனு கார்டு

“சாப்பிடும் முன்னர் ஹோட்டல்களில் வழங்கப்படும் மெனு கார்டு போல, திருமண விருந்திலும் ஒரு மினி மெனு கார்டை, ஒவ்வொரு இலைக்கும் வைக்கும் தண்ணீர் பாட்டில்களோடு சேர்த்து வைத்து விடுகிறோம். விருந்தின் மெனுவை விருந்தினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதால், அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் விரும்பிக் கேட்டு சாப்பிடுகிறார்கள். பிடிக்காத அயிட்டங்களை பரிமாறும் சமயத்திலேயே மறுத்துவிடுகிறார்கள். இதனால் உணவு வீணாவதை தவிர்க்க முடிகிறது. மேலும் விரும்பிய உணவை விருந்தினர்கள் மனதளவிலும் ரசித்து திருப்தியாக சாப்பிடமுடிகிறது. வித்தி யாசமான மற்றும் உபயோகமான முயற்சி இது.”

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

தாம்பூலப் பை

``இப்போது எல்லோருமே தாம்பூலப் பைகளில் சில பலகாரங்களை வைத்துக் கொடுக்கிறார்கள். சொல்லப்போனால் நாங்களே தாம்பூல பைகளில் போட வேண்டிய சாமான்கள், பலகாரங்களை எல்லாம் தயார் செய்து, பைகளில் போட்டுக்கொடுக்கும் தாம்பூல செட் பைகளைத் தாயார் செய்து வைத் துள்ளோம். சில திருமண வீட்டினர், தாம் பூலப் பைகளில் போட்டுக் கொடுக்கும் பலகாரங்களை அவர்களாகவே தேர்வு செய்கிறார்கள். அதையும் மறுக்காமல் செய்து தருகிறோம். இதில் தாம்பூல பைகளில் சாதாரணமாக ஒரு பழம், ஒரு தேங்காய், வெற்றிலை - பாக்கு வைத்து தருவது முதல் தங்கக் காசு வைத்துத் தருவது வரை பட்ஜெட்டுக்கு தகுந்த விஷயங்கள் நடைமுறையில் இருக்கின்றன.”

ஆல் இன் ஆல்

“ஒரு திருமணம் நடத்தணும்னா சாதரண விஷயம் கிடையாது. அதுவும் இப்ப இருக்கும் அவசர காலத்துக்கு, திருமண ஏற்பாடுகளுக்கு பல இடங்கள் சுற்றி அலையாமல் ஏதாவது ஒன் பாயின்ட் சொல்யூஷன் கெடைக்குமான்னு எதிர்பார்க்கிறாங்க. அதனால காலத்துக்கு ஏற்ற மாதிரி நாங்களும் சமையல் மட்டும் இல்லாமல் ஒரு ஈவன்ட் மேனேஜருக்கு இணையாக செயல்பட்டு வருகிறோம். மண்டபத்தின் வாசலில் பந்தக் கால் நட்டு வாழை மரம் கட்டுவது தொடங்கி, நாதஸ்வரம், பூ அலங்காரம், காசி யாத்திரைக்கான சாமான்கள், கார் அலங்காரம், புரோகிதர்கள் ஏற்பாடு செய்வது, கல்யாண சான்றிதழ் பெற்று தருவது என அனைத்து வேலைகளையும் எடுத்து நடத்துகிறோம்.” 

கல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்

மற்ற கலாசாரம்

``வட இந்தியர்கள் வீட்டுத் திருமணம் போல தென் இந்தியர்களும் சங்கீத், மெஹந்தி என்று பல புது விஷயங்களை கடைப்பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுமாதிரி நிகழ்வுகளுக்கு ஏற்ற மெனு லிஸ்ட்டுகளும் வைத்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு மேல் நடக்கும் திருமணம்னா விருந்தினர்களை மெனுவில் அசத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியான சவால்.”

செலவு


ஆர்டர் செய்யும் உணவு வகைகள், அயிட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து செலவுகள் கூடும். சுமார் 300 பேருக்கு கிராண்டான மெனுவுக்கு ரூ. 5 லட்சத்தில் செய்து அசத்திடலாம். திருமணம் நடக்க இருக்கும் மண்ட பத்தில் கிடைக்கும் நீர், அடுப்பு வசதிகள், எவ்வளவு அயிட்டங்கள் என்பதைப் பொறுத்துதான் விலையை சரியாக சொல்ல முடியும்” ராஜசேகரின் பேச்சில் அனுபவம் எதிரொலித்தது.

- மு.சா.கெளதமன்
படங்கள்: தே.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு