பிரீமியம் ஸ்டோரி
வீட்டுல ஸ்வீட்டு!

நாக்குக்கு ருசியாகச் சமைப்பது நங்கநல்லூர் பத்மாவுக்கு கை வந்த கலை. கண் பார்த்தா, கை வேலை செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணம் பத்மா. எழுபது வயதை நெருங்கினாலும், இவரது சுறுசுறுப்பு வியக்கவைக்கும். சுறுசுறுப்பின் ரகசியத்தைக் கேட்டால், 'வீட்டைத் தவிர வேறு எங்கும் சாப்பிட மாட்டேன். ஸ்வீட், பலகாரம், பட்சணம் எதையும் கடைகளில் வாங்க மாட்டேன். நானே செய்வேன். சின்ன வயசுல இருந்தே, என் அம்மாவோட கைமணம் எனக்கு வந்திடுச்சு. டேஸ்டா மட்டுமில்லை, வெரைட்டியாவும் சத்தாகவும் சமைப்பாள். என் அம்மாவுக்கு இப்ப 90 வயசாச்சு. நல்ல ஆரோக்கியத்தோடு இருக்காங்க'' என்கிற பத்மாவிடம் ஒரு கிலோ பழங்களைக் கொடுத்தால் போதும். '30 வகை ஸ்வீட்’களை முழுமூச்சில் சமைத்து அசத்திவிடுவார். தீபாவளி பண்டிகைக்கு என்ன ஸ்வீட் செய்யலாம் என்று ஆவலோடு காத்திருக்கும் அம்மணிகளுக்கு, பத்மாவின் ஹெல்தியான (ஸ்)வீட்டு பலகாரங்கள் நிச்சயம் கை கொடுக்கும்.  

பருப்பு போளி

தேவையானவை: கடலைப்பருப்பு, மைதா மாவு, வெல்லம் - தலா 100 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய் - 2 ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மி.லி.

செய்முறை: கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து வெல்லம், தேங்காய் சேர்த்து அரைக்கவும். இதில் ஏலக்காய்த் தூள் சேர்த்து கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அரைத்ததைப் போட்டு கெட்டியாக கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மைதா மாவுடன் எண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். ஒரு வாழை இலையில் நெய் தடவி மைதா மாவை சிறிது உருட்டிவைத்து பரவலாக கைகளால் தட்டவும். இதனுள் உருட்டிய பூரணத்தை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் ஒவ்வொரு போளியாக இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: போளியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு சாப்பிடலாம். கடலைப் பருப்பில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அனைவருக்கும் பிடித்த பலகாரம்.

வீட்டுல ஸ்வீட்டு!

பயத்த உருண்டை

தேவையானவை: பாசி பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: பாசிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சல்லடையில் சலித்துக்கொள்ளவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து சலித்து, இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து நெய் விட்டு லேசாக சூடுபடுத்தவும். இதில், ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: இதனுடன் சிறிது பொட்டுக் கடலை சேர்த்து அரைத்து உருண்டை பிடிக்கலாம். பாசிப் பருப்பு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குழந்தைகள், வளரும் பிள்ளைகள், பெரியவர்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பீட்டா கரோட்டின், கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.

வீட்டுல ஸ்வீட்டு!

பால்கோவா

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு.

செய்முறை: கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து (மிதமான தீயில்) பாலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். கெட்டியான பதத்தில் சர்க்கரையை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கோவா பதத்தில் வந்ததும் ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்பு: மிகவும் ருசியாக இருக்கும். பச்சிளம் குழந்தை முதல், பல் போன தாத்தா வரை அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து கோவா செய்து தரலாம். பாலில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பாதாம் கேக்

தேவையானவை: பாதாம் பருப்பு - 20, ஊறவைத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 100 மி.லி.

செய்முறை: பாதாம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து முந்திரி சேர்த்து விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில் அரைத்த விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: கெட்ட கொழுப்பைக் குறைக்கூடிய தன்மை பாதாமுக்கு உண்டு. அதிக புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், ஆக்சாலிக் ஆசிட், நார்ச்சத்து இருப்பதால் வளரும் குழந்தைகள் முதல் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

வீட்டுல ஸ்வீட்டு!

நெல்லிக்காய் அல்வா

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மிலி.

செய்முறை: நெல்லிக்காயை சீவி கொட்டையை எடுத்துவிட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு நெல்லிக்காய் விழுதைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த் தூள், கேசரி பவுடர், முந்திரிப் பருப்பு போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: புளிப்பும் தித்திப்புமாய் அருமையாக இருக்கும் இந்த அல்வா. நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால், சளி, இருமல் தொல்லை இருக்காது. தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் உதவும். வாய்க்கசப்பைப் போக்கும். அனைவரும் சாப்பிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு