Published:Updated:

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

சாமைக் கலவைச் சோறு எடை குறைக்க விரும்புவோருக்கு நல்ல உணவு

‘இந்தியாவின் தற்கால உணவுமுறையில் புரதச்சத்தின் அளவு மிகக்குறைவாக இருக்கிறது’ என்று கவலை தெரிவித்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO). இப்போது இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் 80 சதவிகித உணவுகள் புரதக் குறைபாடு உள்ளவை என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

குழந்தைப் பருவத்தைக் கடந்த ஒருவரின் புரதத்தேவை என்பது, அவரது எடையின் அடிப்படையில், குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம்.

50 கிலோ எடைகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் 50 கிராம் புரதச்சத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போதைய இந்தியர்களுக்கோ இது வாய்க்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் தென்மண்டலத்தில் வசிப்பவர்கள் புரதம் பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் இருப்பதாக  அறியப்பட்டிருக்கிறது.  உடல் இயக்கத்துக்குப் புரதம் இன்றியமையாதது. தசை, முடி, சருமம், ரத்தத்தின் செல்கள், நகங்கள்  வளரவும் வலுப்படவும் உதவுவது புரதம்தான். அதுமட்டுமல்ல... உடலெங்கும் உயிர்க்காற்றான ஆக்சிஜனைக் கொண்டு செல்வதும் அதுவே.

செயல்பாட்டுக்குத் தேவையான பலவற்றை நம் உடலே தயாரித்துக் கொள்ளும். ஆனால், புரதத்தை

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

மட்டும் வெளியில் இருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் குறைந்தால் எவ்வளவு பிரச்னையோ, அதே அளவுக்கு அதிகரித்தாலும் பிரச்னை. ஆகவே, கட்டுப்பாடான, மிகச்சரியான உணவுதான் உடலுக்குத் தேவையான புரதத்தை சமவிகிதத்தில் தரும். உணவு என்பது பசியாறுதலுக்கு மட்டுமோ, ருசித்தலுக்கு மட்டுமோ ஆனதில்லை. அது உடலை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கான ஒரு தொடர் செயல்பாடு. அதை உணர்ந்துதான் நம் முன்னோர் தங்கள் உணவுப் பழக்கத்தை வடிவமைத்தார்கள். தங்களுக்குத் தேவையான, எளிமையான, அதே நேரம் தூய்மையான, சரிவிகித உணவை தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள். உண்ணும் உணவும் உழைக்கும் அளவும் சம விகிதத்தில் இருந்தது. புரதம் மிகுதியாகவும் இல்லை... குறையவும் இல்லை. அதுதான் அவர்களின் ஆயுள் ரகசியம்... ஆரோக்கிய ரகசியம்!

பெரும்பாலும் சிறுதானியங்களையே நம் மக்கள் உணவாகப் பயன்படுத்தினார்கள். வீட்டைச் சுற்றி சிறுவெளியில் தங்களுக்கான தானியங்களை விளைவித்துக்கொண்டார்கள். அதைக்கொண்டு மிகவும் ருசியான, சத்தான உணவை உருவாக்கிக்கொண்டார்கள்.

இன்று, உணவு ருசிக்கானதாக மட்டுமே ஆகிவிட்டது. கிடைத்ததை எல்லாம் கொட்டி வயிற்றைக் குப்பைத்தொட்டி ஆக்கிவிட்டோம். நிறத்துக்கு, ருசிக்கு, வடிவத்துக்கு என ஏகப்பட்ட ரசாயனங்கள் வேறு. உணவுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே இல்லை. உணவுக்கும் வாழும் சூழலுக்கும் தொடர்பே இல்லை. 

மரபு வாழ்க்கைமீது ஈர்ப்புள்ள சிலர் இப்போது நம் தொன்ம உணவுகளை மீட்டு, இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதை சேவையாக செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒருவர் தேனியைச் சேர்ந்த ஐயப்பன். மரபு உணவுக்கென தேனியில் ஓர் உணவகத்தையே நடத்தி வரும் இவர்,  இன்றைய இளம் தலைமுறைக்கு மரபு உணவுகளைத் தயாரித்து வழங்குகிறார். அவற்றில் ஒன்றுதான் சாமைக் கலவைச் சோறு.

“பிரியாணி, எங்கிருந்து வந்ததுங்கிறதுல நிறைய சர்ச்சைகள் இருக்கு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, நம் முன்னோர் காய்கறிகளையும் இறைச்சிகளையும் தானியங்களோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். அசைவத்தை ஊன்சோறு என்றும், சைவத்தை கலவைச் சோறு என்றும் குறிப்பிடுகிறார்கள். சாமை, தினை போன்ற தானியங்களில் அந்தப் பகுதியில், அந்தத் தட்பவெப்பத்தில் கிடைக்கும் காய்கறிகளைச் சேர்த்து வேகவைத்து செய்யப்படும் உணவு தான் கலவைச் சோறு.

இதில் சாமைக் கலவைச் சோறு சுவையானது; சத்தானது. மிகச்சிறந்த புரத உணவும் கூட. இன்று நாம் எதற்கெல்லாம் அரிசியைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறதோ, அதற்கெல்லாம் நம் முன்னோர் பயன்படுத்தியது சாமையைத்தான். தென் மாவட்டங்கள், கேரள எல்லையோரங்களில் வசிக்கும் பழங்குடிகள் பண்டிகைக்காலங்களில் இந்தச் சாமைக் கலவைச் சோறு செய்வார்கள்...” என்கிற ஐயப்பன், நம் பாரம்பர்யமும் தொன்மமும் மணக்கும் சாமைக் கலவைச் சோறுக்கான ரெசிப்பியையும் தருகிறார்.

- வெ.நீலகண்டன், படங்கள்: சக்தி அருணகிரி  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாமைக் கலவைச் சோறு

தேவையானவை:

 சாமை அரிசி - 100 கிராம்
 வாழைக்காய் - ஒன்று
 புடலங்காய் - ஒரு கைப்பிடி (சிறிதாக நறுக்கவும்)
 முருங்கைக்காய் - ஒன்று
 சின்ன வெங்காயம் - 25 கிராம்
 பச்சை மிளகாய் -  4
 புதினா - சிறிதளவு
 நாட்டுத் தக்காளி - 2
 இஞ்சி - கட்டை விரல் அளவு
 பூண்டு - 4 பல்
 கடலெண்ணெய் - 50 மில்லி
 பிரியாணி இலை - 2
 கரம் மசாலா தூள் - தேவையான அளவு
 ஏலக்காய் - 4
 கிராம்பு - 4
 பட்டைத்துண்டு - ஒன்று
 உப்பு - தேவையான அளவு

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

செய்முறை:

மசாலாவுக்கான ஏலக்காய், கிராம்பு, பட்டையைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள். தக்காளி, மிளகாயைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். சாமை அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.  காய்கறிகளைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன்  எண்ணெய்விட்டு, பிரியாணி இலை,  வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய்,  தக்காளியைப் போட்டு கிளறுங்கள். நன்கு கலந்து வாசம் எழுந்ததும், இஞ்சி-பூண்டு பேஸ்ட், அரைத்த மசாலா போட்டுக் காய்கறிகளையும் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வதங்கியதும், இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். பிறகு, கரம் மசாலாத்தூளைப் போட்டு ஊற வைத்த சாமை அரிசியைக் கொட்டி மிதமான தீயில் வேக வையுங்கள். குக்கராக இருந்தால் ஒரு விசில் வந்தால் போதும். பாத்திரத்தில் வேக வைப்பதென்றால் 80 சதவிகிதம் வேகவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும். இடையிடையே கிளறிவிட வேண்டும். பிறகு, பாத்திரத்தை நன்றாக மூடி, அதன் மேலே சூடான பாத்திரம் ஒன்றை வைத்து (தம்), பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து, புதினாவைத் தூவிப் பறிமாறலாம்.  இதற்கு சைடிஷ் எதுவும் தேவையில்லை. 

சாமைக் கலவைச் சோற்றில் என்னென்ன சத்துகள் உள்ளன?

“கோடை இப்போதே வாட்டத் தொடங்கி விட்டது. ஒவ்வோர் ஆண்டும் வெப்பத்தின் அளவு

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தத் தட்பவெப்பத்துக்கு மிகச்சரியான உணவு இந்த சாமைக் கலவை சாதம். மிகவும் குளிர்ச்சியான உணவு இது...” என்கிறார் டயட்டீஷியன் ரஞ்சனி திலீப்குமார்.

“சாமையில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்திருக்கிறது. எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம். எடை குறைக்க முயற்சிப்பவர்கள் வாரம் இரண்டு நாள்கள் எடுத்துக்கொண்டால் போதும். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்னை இருப்பவர்களுக்கு இது மருந்து. குடல், உணவுக்குழாய் போன்ற பகுதிகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சாமை ஊக்கப்படுத்தும்.

வாழைக்காயைப் பொறுத்தவரை `ரெசிஸ்டென்ஸ் ஸ்டார்ச்’ என்பார்கள். வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது. மெதுவாக செரிமானம் ஆகும். அதனால், அடிக்கடி பசியெடுக்காது. பருமன் கட்டுக்குள் வரும். புடலங்காய், கோடையைச் சமாளிக்க இயற்கை நமக்கு அளித்த கொடை. அதில் தண்ணீர்தான் 95 சதவிகிதம் இருக்கிறது. பருமனைக் குறைக்க உகந்த காய்கறியான இதில், பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது.

இப்படி சாமை உணவில் கலந்திருக்கும் எல்லாப் பொருள்களுமே மிகவும் நன்மை அளிக்கக்கூடியவையாக இருப்பதால் சாமைக் கலவை சாதத்தை சரிவிகிதச் சத்துணவு என்று சொல்லலாம்” என்கிறார் ரஞ்சனி.