Published:Updated:

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!

பிரீமியம் ஸ்டோரி

சிறிய நட்புவட்டம், உறவினர் வீட்டில் நடக்கும் சிறு நிகழ்ச்சி என நான்கு பேர் கூடினாலே கலகலப்புக்குக் குறைவிருக்காது. இந் நிலையில் சுற்றம், நட்பு என நூற்றுக்கணக்கானோர் கூடும் திருமண நிகழ்வில் கொண்டாட்டத்துக்குக் கேட்கவே வேண்டாம். அதை இன்னும் ரகளையாக்க வந்துவிட்டது ‘வெடிங் கேக் செரிமனி’. மதம், மொழி, கலாசாரம் கடந்து அனைத்துத் தரப்பினரின் திருமணத்திலும் ‘வெடிங் கேக் செரிமனி’ தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. அதைப் பற்றி `வெடிங் கேக்’ செய்வதில் எக்ஸ்பர்ட்டான சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நித்யா ஜான் பேசுகிறார்... 

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!

``இப்பலாம் வெடிங் கேக் என்பது ஒரு காதல் சின்னமாக கல்யாணங்களில் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ‘இஸ்கான்’ கோயில்ல நடந்த ஓர் அறுபதாம் கல்யாணத்துக்குகூட நான் கேக் சப்ளை செய்தேன். அது கோயில் என்பதால் முட்டை கலக்காத கேக் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கேற்ப தயாரித்திருந்தோம்” என்று சொல்லும் நித்யாவுக்குத் திருமணத்தன்று என்ன வகையான கேக் வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும்... அதை அப்படியே வார்த்தெடுத்து சம்பந்தப்பட்டவர்களின் கையில் கொடுத்து அசத்திவிடுவார்.

``திருமணத்துக்கு கட் பண்ற கேக், வீட்ல செய்றமாதிரி சுத்தமா, தரமா இருக்கணும்னு  எதிர்பார்க்குறாங்க. எல்லாருமே உடல்நலத்தை முக்கியமா நினைக்கிறதனால என்னை மாதிரி  ‘ஹோம் பேக்கர்ஸ்’ இப்போ அதிகம் ஆயிட்டாங்க’’ என்று கூறும் நித்யா ஜான், கேக்கின் வகைகள் பற்றியும் அவை தயாரிக்கப்படும் விதம் பற்றியும் கூற ஆரம்பித்தார்... 

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!

‘‘வெடிங் கேக்ஸ்ல மூணு வகைகள் இருக்கு. பட்டர் க்ரீம், விப்டு க்ரீம் மற்றும் ஃபாண்டன்ட் ஐஸிங். இதில் ஃபாண்டன்ட் ஐஸிங் என்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஃபாண்டன்ட் கேக் செய்ய மாஷ் மெல்லோஸ் மற்றும் ஐஸிங் சுகர் இருந்தா போதும். அற்புதமான சுவையில், நாம் விரும்பும் வடிவத்தில் ஃபாண்டன்ட் கேக் கிடைக்கும். இந்த ஃபாண்டன்ட் ஐஸிங் கேக்லேயும் ஹேண்ட் பெயின்ட்டட் கேக்ஸ், ஷுகர் ஃப்ளேவர்ஸ், வேஃபர் பேப்பர் கேக்ஸ் என்று மூணு வெரைட்டி இருக்குது.


இதில் என்ன ஸ்பெஷாலிட்டினா, கேக்கோட பேஸ் என்னவோ நார்மலானது தான். ஆனா அந்த பேஸ், கேக் மேல செய்யற ஐஸிங்தான் அந்த கேக்குக்கு வேண்டிய சிறப்பைக் கொண்டுவருது. நாம நினைக்கிற உருவத்தை ஐஸிங் மூலமா கேக்குல கொண்டுவர முடியும். நம்மோட கிரியேட்டிவிட்டில தோன்றக்கூடிய அத்தனை உருவங்களையும் கலர்ஃபுல்லா ஃபாண்டன்ட் கேக்ல கொண்டு வர முடியும். இந்த ஐஸிங் 100 சதவிகிதம் சாப்பிடக்கூடியது. கேக் மாதிரியே அதன்மேல இருக்கிற ஐஸிங்க்ல செய்யப்பட்ட டிசைனையும் கட் பண்ணி சாப்பிடலாம். கொஞ்சம் கூடுதல் இனிப்புச் சுவையோட இருக்கும் ஐஸிங்” என்றவர் ஒரு ஃபாண்டன்ட் கேக் உருவாக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பற்றிச் சொன்னார்...

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!``பார்பி டால் மாதிரியான வடிவத்தைத் திருமணத்தன்னிக்கு பிரசன்ட் பண்ண விரும்பினா அது கடைகள்ல கிடைப்பது கஷ்டம். ஏன்னா, ஃபாண்டன்ட் கேக் செய்றதுக்கு பொறுமை ரொம்ப அவசியம். சிற்பம் போல செதுக்கி, கலர் பண்ணி முடிக்க குறைந்தது மூன்று நாள்களாவது ஆகும். அதிக உழைப்பையும் நேரத்தை யும் எடுத்துக்கிற இப்படிப்பட்ட கேக்குகளை பேக்கரிகள்ல செய்துதர மாட்டாங்க. அப்படியே செஞ்சாலும் காஸ்ட்லியா இருக்கும். ஃபாண்டன்ட் கேக் மாதிரி ‘வேஃபர் பேப்பர் கேக்’ கடந்த மூணு வருஷங்களா பிரபலமாகிட்டு இருக்குது. அந்த வேஃபருமே சாப்பிடக்கூடியதுதான். பேப்பர் க்வில்லிங் மாதிரி, அந்த வேஃபர் பேப்பர்ல ரோஜா இதழ்கள், மரச்சுருள்கள், ஃப்ராக் டிசைன்கள், பூக்கள், இலைகள்னு எல்லா நுணுக்கமான டெக்ஸ்ச்சர்களும் டிசைன்களும் பண்ணலாம். சின்னச் சின்ன ஸ்டோன்ஸ் வைத்து அலங்கரிக்கலாம். எல்லாமே பட்ஜெட்டையும், கேக் செய்யறவங்களோட கற்பனைவளத்தையும்  பொறுத்ததுதான்” என்றவர் தொடர்ந்து கேக்கில் சேர்க்கப்படும் நிறக்கலவை பற்றியும் சொன்னார்.

``பொதுவா கேக்ல உபயோகப்படுத்தப் படுற கலர்கள் எல்லாம் தரமானதா பார்த்து வாங்கணும். ஏன்னா, ஒரு சொட்டு போட்டாலும் அடர்த்தியா தெரியுற இந்த கலர்கள் உடலுக்கு கெடுதல் செய்யாததா இருக்கணும். அதேமாதிரி, ஃப்ளேவர்ஸிலும் நான் கொஞ்சம் வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறேன். வழக்கமான சாக்லேட், வெனிலாவுடன் இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா காபி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் சேர்த்து ஒரு ஃப்ளேவர் கொடுக்கிறேன். ஐஸிங் செய்ற கேக்குகளின் மேலே, அக்ரிலிக் கேக் டாப்பர்ஸ் வைக்கலாம். அதை வெளியே கொடுத்து, கஸ்டமைஸ் பண்ணி வாங்கிக்கிறேன். அதை செய்து கொடுக்கிறதுக்கு தனியாக ஆட்கள் இருக்காங்க. நாம் என்ன மாதிரி டாப்பர் வேணும்னு சொன்னா, அதை இரண்டு, மூன்று நாள்களில் செய்து கொடுத்துடுவாங்க. ஆனா, அந்த அக்ரிலிக் கேக் டாப்பரை சாப்பிட முடியாது. சும்மா அழகுக்கும் கவர்ச்சிக்கும்தான்.

க்ரீம் கேக்... ட்ரீம் கேக்!

ஐஸிங் அல்லது க்ரீம் இல்லாம செய்யற ப்ளம் கேக் வகைகளுக்கு எப்போதுமே கல்யாணங்களில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் சாக்லேட் மட் கேக்ஸ் என்னும் வகையும் ஃப்ரூட் கேக்ஸும் எவர்கிரீன்னு சொல்லலாம். டார்க் சாக்லேட் மட் கேக்ஸ், வொயிட் சாக்லேட் மட் கேக்ஸ்னு ரெண்டு வகை இருக்கு. ரெண்டுமே சாப்பிட சூப்பரா இருக்கும். இந்த மட் கேக்ஸின் சிறப்பு என்னன்னா, இதை ஸ்டோர் பண்ணி வெச்சா,  அதன் மணமும் சுவையும் அதிகமாகும். வெளியே அறை வெப்பநிலையிலேயேகூட வைக்கலாம். அதில் இருக்கும் சாக்லேட் ஃப்ளேவரும் காபி ஃப்ளேவரும் ஒன்றாகி ஓர் அற்புதமான மணத்தையும், அபாரமான சுவையையும் தரும். 10 நாள்கள் வரை வெச்சிருக்கலாம், கெட்டுப் போகாது. கல்யாணங்களுக்கு இந்த வகை கேக்குகளை விரும்பி ஆர்டர் பண்றாங்க. ப்ளம் கேக்ஸ் செய்யறதுக்காக, ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், ஏப்ரிகாட், கிரான் பெர்ரீஸ்... எல்லாத்தையும் ஜூஸ் அல்லது ரம்மில் ஊறவைப்போம். சிலர் ஆரஞ்சு ஜூஸில் ஊறவெச்சு செய்யச் சொல்வாங்க. ஆனா, அதை அதிக நாள்கள் வெச்சுக்க முடியாது.

பிளம் கேக்கில் நான் கலர் சேர்ப்பதற்குப் பதிலா கேரமலைஸ்டு சுகர் சேர்க்கிறேன். அதுதான் அந்த பிரவுன் நிறத்துக்குக் காரணம். சர்க்கரையைப் பொறுமையாகக் கறுக்க வைக்கணும். ஆனா, சில பேக்கரிகளில், அந்தப் பொறுமை இல்லாததனால  கறுப்பு நிற ஃபுட் கலரைச் சேர்த்துடறாங்க. அதனால் ப்ளம் கேக் கறுப்பான்னு இருக்கும். அதேசமயம் சுவையில் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். பேக்கரிகளில் வாங்கும் கேக் ரொம்ப மிருதுவா, புஸுபுஸுன்னு, நடுவில் சின்னச் சின்ன துவாரங்களோடு இருக்கும், பார்த்திருக்கீங்களா? அது கேக் ஜெல் சேர்க்கிறதால வர்ற எஃபெக்ட். கால் கிலோ மைதா மாவோட ஜெல் சேர்த்தா கேக் பொங்கி நிறைய கிடைக்கும். அந்த ஜெல் உடலுக்கு நல்லதல்ல. அதனாலதான் இப்போ எல்லாரும் ‘ஹோம் பேக்கர்ஸ்’கிட்ட வர்றாங்க. தரமா கிடைக்குதுன்னா, கொஞ்சம் எக்ஸ்ட்ராவா செலவழிக்கிறதுக்குக்கூட தயாரா இருக்காங்க.

ஹோம் பேக்கிங், அதிலும் வெடிங் கேக்ஸ் என்பது இப்போ நல்லா வளர்ந்துகிட்டு வர்ற ஒரு பிசினஸ். அதில் நாம எப்படி  தனிச்சுத் தெரியுறோம்கிறதுதான் முக்கியம். கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப ஒரு கிலோ கேக்குக்கு  1200-லிருந்து 1500 ரூபாய் வரை சார்ஜ் பண்றேன்’’ என்று விரிவாக விளக்கினார் நித்யா.

ஒரு ரெட் வெல்வெட் கேக் பார்சல்!

- பிரேமா நாராயணன், படங்கள்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு