
• கேரள பலாப்பழ அல்வா
• வடநாட்டு பலாப்பழ அல்வா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• பலாக்காய் கபாப்
• பலாப்பழ கேக்
• பலாப்பழ புடிங்
• பலாக்காய் சிப்ஸ்
• பலாப்பழ பருப்பு பாயசம்
• பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்
• பலாப்பழ அடை
• பலா பஞ்ச் ரோல்
• பலாக்காய் பிரியாணி
• பலாக்காய் சப்ஜி

முக்கனிகளில் ஒன்றான பலாவின் மணமும் சுவையும் எப்போதும் மனதில் நிற்கும். இது பலாப்பழ சீசன் என்பதால், விதவிதமான பலாப்பழ உணவுகளைச் செய்து, நம் விருந்தினர்களை அசத்தலாமே... ருசியான பலாப்பழ உணவு வகைகளை நமக்காக வழங்குகிறார் ‘ரெசிப்பி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

கேரள பலாப்பழ அல்வா
தேவையானவை:
• பலாச்சுளை - ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது)
• வெல்லத்தூள் - 2 கப்
• ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
• உடைத்த முந்திரி - அரை கப்
• நெய் - 10 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, உடைத்த முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பலாச்சுளைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூள் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, மீண்டும் வெல்லக்கரைசலை அடுப்பிலேற்றி ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இதனுடன் அரைத்த பலாச்சுளை விழுது, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். மேலே வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

வடநாட்டு பலாப்பழ அல்வா
தேவையானவை:
• நன்கு பழுத்த பலாச்சுளை - 250 கிராம்
• வெல்லத்தூள் - 200 கிராம்
• கோதுமை மாவு - 200 கிராம்
• முந்திரி - அரை கப் (உடைத்தது)
• ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
• நெய் - 50 கிராம்
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பலாச்சுளைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதன் மேல் படிந்து இருக்கும் தண்ணீரை வடித்துவிடவும். கீழே படிந்துள்ள மாவில் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து வடிகட்டி பால் எடுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தூள் சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை ஊற்றி ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இதனுடன் கோதுமைப்பால் ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, மீதமுள்ள நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு மாவு வெந்து வரும்போது பலாச்சுளை விழுது, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

பலாக்காய் கபாப்
தேவையானவை:
• பலாக்காய் - 200 கிராம் (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)
• பனீர் - 50 கிராம்
• பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
• சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன்
• மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
• பிரெட்தூள் - அரை கப்
• பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
• தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
• மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தேவையான அளவு
• கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
• கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
• தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
• உடைத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
• எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாத்துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் தண்ணீரை வடிக்கவும். அந்தப் பாத்திரத்தில் வெந்த பலாத்துண்டுகளுடன் பனீர், மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, இஞ்சி, உடைத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை விருப்பமான வடிவத்தில் செய்து வைக்கவும். இதுதான் கபாப்.
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். செய்து வைத்துள்ள கபாப்களை மைதா மாவில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கபாப்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கொத்தமல்லிச் சட்னி, புளிச்சட்னி, சாஸ் உடன் பரிமாறவும்.

பலாப்பழ கேக் (மைக்ரோவேவ் அவன் ரெசிப்பி)
தேவையானவை:
• பலாச்சுளைகள் - ஒரு பெரிய கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
• மைதா மாவு - 200 கிராம்
• முட்டை - 3
• வெண்ணெய், சர்க்கரை - தலா 150 கிராம்
• பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
• சமையல் சோடா - அரை டீஸ்பூன்
• பழ எசன்ஸ் - கால் டீஸ்பூன்
• முந்திரி, அக்ரூட் - தேவையான அளவு
• உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முட்டையை உடைத்து மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். பாதியளவு பலாச்சுளை துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும். அது கரைந்து தேன் போல் பழுப்பு நிறத்தில் வரும்போது பலாச்சுளை துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு குழிவான பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். பொங்கி வரும்போது முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து அடிக்கவும். இதனுடன் மைதா கலவை மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்துப் பொங்கப் பொங்க அடித்துக் கலக்கவும். பிறகு பழ எசன்ஸ், பலா விழுதையும் சேர்த்து முள் கரண்டியால் அடிக்கவும்.
கேக் பேக் செய்யும் டிரேயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் தடவி பரவலாக சிறிதளவு மைதா மாவு தூவவும். இந்த டிரேயில் பலாச்சுளைத் துண்டுகளை அடுக்கவும். இதன் மீது அடித்த கலவையை ஊற்றி, சூடு செய்த `அவனில்’ 30 - 35 நிமிடம் `பேக்’ செய்து எடுக்கவும். மேலே முந்திரி, அக்ரூட் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பலாப்பழ புடிங்
தேவையானவை:
• நன்குப் பழுத்த பலாச்சுளைகள் - 10 (கொட்டை நீக்கி விழுதாக அரைக்கவும்)
• பால் - 2 கப்
• வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
• முட்டை - 2
• சர்க்கரை - அரை கப்
• கேரமல் செய்ய:
• சர்க்கரை - கால் கப்
• தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். சர்க்கரை உருகி பழுப்பு நிறத்தில் தேன் மாதிரி வரும்போது இறக்கி புடிங் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும். கேரமல் தயார்.
பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, பாதி அளவு ஆன பின்பு இறக்கி ஆறவிடவும். ஆறிய பாலுடன் உடைத்த முட்டை, வெனிலா எசன்ஸ், பலாப்பழ விழுது சேர்த்துக் கலந்து கேரமல் மீது ஊற்றவும். இட்லிப்பானையில் தண்ணீர்விட்டு, குக்கருக்கு உபயோகிக்கும் தட்டு வைத்து, கேரமல் கலவை பாத்திரத்தை வைத்து மூடி, தண்ணீர் கொதிக்கும்போது திறந்துவிடாதபடி, அதன் மேல் கனமான பொருள் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

பலாக்காய் சிப்ஸ்
தேவையானவை:
• முற்றிய பலாக்காய் - ஒன்று
• தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பலாக்காயின் தோலைச் சீவி, நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு பால் போக கழுவி விரல்நீள துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, பலாக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக இருக்கும்போது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து, வாரக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.

பலாப்பழ பருப்பு பாயசம்
தேவையானவை:
• பலாச்சுளைகள் - ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
• பாசிப்பருப்பு - அரை கப்
• வெல்லத்தூள் - அரை கப்
• பால் - 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
• உடைத்த முந்திரி, உலர்திராட்சை - தலா 10
• ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
• கெட்டித் தேங்காய்ப்பால் - ஒரு கப்
• தேங்காய்ப் பல் - அரை கப் (வறுக்கவும்)
• நெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து, வேகவைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பலாச்சுளைகளைச் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இதனுடன் பலாச்சுளைகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி, தேங்காய்ப்பால் சேர்க்கவும். மேலே முந்திரி, திராட்சை, தேங்காய்ப் பல் சேர்த்துப் பரிமாறவும்.

பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்
தேவையானவை:
• முற்றிய பலாக்கொட்டை (ஃப்ரெஷ்) - 25
• தேங்காய்ப் பல் - கால் கப்
• மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
• சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
• கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
• மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
• கறிவேப்பிலை - சிறிதளவு
• உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
• மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
• மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன்
• வறுத்த கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
• எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பலாக்கொட்டைகளை முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் தோலை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி லேசாகத் தட்டவும். இதனுடன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, முந்திரி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்), தேங்காய்ப் பல், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஊறவைத்த கலவையைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இதனுடன் வறுத்த கடலை மாவைத் தூவிக் கருகாமல் கிளறி இறக்கவும்.

பலாப்பழ அடை
தேவையானவை:
• பலாச்சுளைகள் - 8 (பொடியாக நறுக்கவும்)
• வெல்லத்தூள் - ஒரு கப்
• தேங்காய்த் துருவல் - ஒரு கப்
• பச்சரிசி - ஒன்றரை கப்
• தண்ணீர் - இரண்டே கால் கப்
• ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
• நெய் - 2 டீஸ்பூன்
• உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியை வறுத்து பவுடராகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்த பின்பு இறக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலுடன் தேங்காய்த் துருவல், பலாச்சுளைகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது சிறிதளவு நெய் சேர்த்துக் கலந்து கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டே கால் கப் தண்ணீர், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரைத்த அரிசியை சிறிது சிறிதாகச் சேர்த்து மிதமான தீயில் கட்டி தட்டாமல் கிளறி இறக்கவும். ஆறிய பின் நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டவும். நடுவில் சிறிதளவு பூரணம் வைத்து மடித்து, ஆவியில் வேகவைத்து (இட்லிப்பானையில் புட்டு வேக வைப்பது போல) எடுக்கவும்.

பலா பஞ்ச் ரோல்
தேவையானவை:
• பழுத்த பலாச்சுளைகள் - 10 (பொடியாக நறுக்கவும்)
• முந்திரி - 8
• உடைத்த முந்திரி - சிறிதளவு
• சிறிய ஆப்பிள், வாழைப்பழம் - தலா ஒன்று (தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
• ரவை - அரை கப்
• இனிப்பான கோவா - அரை கப் (துருவிக்கொள்ளவும்)
• சர்க்கரைத்தூள் - அரை கப்
• கொப்பரைத் துருவல் - சிறிதளவு
• உப்பு - ஒரு சிட்டிகை
• நெய் - தேவையான அளவு
செய்முறை:
ஓர் அகலமான தட்டில், உடைத்த முந்திரியுடன் கொப்பரைத்துருவல் சேர்த்துக் கலந்து வைக்கவும். வெறும் வாணலியில் ரவையைச் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரியை உடைத்துப் போட்டு வறுக்கவும். இதனுடன் கோவாத்துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறி எடுத்துத் தனியாக வைக்கவும். மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு... நறுக்கிய பலாப்பழம், ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து வதக்கவும்.
அடிகனமான வாணலியில் ரவை, கோவாத்துருவல், முந்திரி, பழங்கள், உப்பு, நெய், சர்க்கரைத்தூள் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். இளம் சூடாக இருக்கும்போது ரோல்களாக உருட்டி, உடைத்த முந்திரி - கொப்பரை கலவையில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

பலாக்காய் பிரியாணி
தேவையானவை:
• சிறிய பலாக்காய் - ஒன்று (தோல் நீக்கி, சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
• பாசுமதி அரிசி - ஒன்றரை கப்
• பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கவும்)
• மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
• தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன்
• பிரியாணி மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
• கொத்தமல்லித்தழை - சிறிதளவு
• புதினா இலைகள் - கைப்பிடியளவு
• இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
• தயிர் - ஒன்றரை கப்
• பிரிஞ்சி இலை - 2
• கறுப்பு ஏலக்காய் - 4
• பட்டை - ஒரு துண்டு
• லவங்கம் - 6
• பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
• நெய் - 4 டேபிள்ஸ்பூன்
• ரோஸ் வாட்டர், குங்குமப்பூ - சிறிதளவு
• முந்திரி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு, பலாக்காய் துண்டுகள் சேர்த்துப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, கறுப்பு ஏலக்காய், உப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு அரிசியைப் போட்டு வேகவிடவும். முக்கால் வேக்காடு பதத்துக்கு வெந்ததும் வடித்து ஆறவிடவும். உதிர் உதிராக வைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரி சேர்த்து வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பலாக்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), பிரியாணி மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் சேர்க்கவும், அதன் மேல் வதக்கிய பலாக்காய் மசாலா, பொரித்த வெங்காயம் என்று வரிசையாக அடுக்கி சிறிதளவு தண்ணீர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து `தம்’ போட்டு இறக்கவும்.

பலாக்காய் சப்ஜி
தேவையானவை:
• இளம் பலாக்காய் - 250 கிராம்
• பட்டை - ஒரு சிறிய துண்டு
• லவங்கம், ஏலக்காய் - 4
• பிரிஞ்சி இலை - 2
• பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
• பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
• மஞ்சள்தூள், மிளகுதூள், மிளகாய்தூள் - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
• காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
• கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
• இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
• முந்திரி - 10 (தண்ணீரில் ஊறவைக்கவும்)
• கொத்தமல்லித்தழை - சிறிதளவு
• எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
• நெய் - ஒரு டீஸ்பூன்
• உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பலாக்காயின் தோல் சீவி, நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு பால் போக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பலாக்காய் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும் (இதை பொன்னிறமாக வறுத்தும் செய்யலாம்).
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி... பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகுத்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த பலாக்காய், முந்திரி சேர்த்து வதக்கி, இரண்டு கப் தண்ணீர்விட்டு மூடிபோட்டு வேகவிட்டு இறக்கவும். நெய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
படங்கள்: பா.காளிமுத்து