Published:Updated:

பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

வரகரிசி மிளகுச் சாதம்

பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

வரகரிசி மிளகுச் சாதம்

Published:Updated:
பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

ரு காலத்தில், உணவை உற்பத்தி செய்யும் விவசாயிதான்,  உலகின் ஆகப்பெரிய ஆக்கச் சக்தியாக கருதப்பட்டார். விவசாயிகளுக்கு அரணாக இருந்து அவர்களின் செயல்பாடுகளுக்கு சிறிதும் பங்கம் வராத வகையில் ஆட்சியாளர்கள் காத்து நின்றார்கள். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்தது விவசாயம் தான். 

பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

இன்று, விவசாயம் வேண்டாத வேலையாகி விட்டது.  வாழ வழி கேட்டு நிர்வாணப் போராட்டம் நடத்தியும்கூட விவசாயிகளை வந்து பார்த்து நம்பிக்கையூட்ட நேரமில்லை ஆட்சியாளர்களுக்கு. 

அந்தக் காலத்தில், கிராமம் தன்னிறைவாக இருந்தது. விவசாயிகள் கிராமத்துக்குத் தேவையான உணவை விளைவித்துக் குவித்தார்கள். உழவுக்கருவிகள் செய்ய, மண்பாண்டங்கள் செய்ய என அன்றாட வாழ்க்கைக்கான அத்தனை தேவைகளையும் நிறைவேற்றித்தர அத்தொழில்களை வாழ்வாதாராமாகக் கொண்டவர்கள் கிராமங்களில் இருந்தார்கள். பண்டமாற்றாகவே எல்லாப் பணிகளும் நடந்தன. உப்பு விற்பவர் அதற்குப் பதிலாக நெல்லை வாங்கிக் கொள்வார். தானியம் பெற்றுக்கொண்டு சட்டி, பானை தருவார்கள். ஏர்க்கலப்பை செய்து தரும் தொழிலாளிக்கு அறுவடை முடிந்ததும் மூட்டை மூட்டையாக நெல் இறக்குவார்கள். இப்படி கிராமத்தின் ஜீவனாக வேளாண்மை இருந்தது. அதைச் சார்ந்து மக்கள் இருந்தார்கள். நாடு இருந்தது. ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

உணவு உற்பத்தி பசிக்கானதாக இருந்தவரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.  நிலம் எந்தச் செயற்கை ஊட்டத்தையும் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவை விளைவித்துத் தந்தது. நிலத்துக்கும் மனிதர்களுக்குமான பந்தம் உயிர்ப்போடு இருந்தது.

உணவு பசிக்கானது என்ற இலக்கைத் தாண்டி பணத்துக்கானதாக மாற்றப்பட்ட பிறகு, எல்லாம் குலைந்து விட்டது. செயற்கை ஊட்டங்களை நிலத்தில் கொட்டி, நிலத்தின் மடியை மொத்தமாக உறிஞ்சி நோஞ்சானாக்கியது முதல் விளைவு. போதைக்குப் பழகிய மனிதனைப் போல, நிலம் செயற்கை உரங்களுக்குப் பழகிப்போனது. இயற்கையான நம் பாரம்பர்ய விதைகள் இந்த மாற்றத்தை உள்வாங்க முடியாமல் திணறி செயல் இழக்க, நிலத்தோடு சேர்த்து மொத்த  வளமும் பறிபோனது. படிப்படியாக விவசாயம் கைநழுவியது போலவே, நம் இயற்கையான உணவுப் பண்பாடும் கைநழுவிப் போய் விட்டது.

அக்காலத்தில் நம் உணவில் பெருமளவு நிறைந்திருந்தவை சிறு தானியங்கள். பெயர் தான் சிறு தானியங்களே தவிர, அவற்றின் செயல் பெரிது. உழைப்புக்கும், உணவுக்கும் நேர்த்தொடர்பு இருந்தது. அதனால் ஆரோக்கியத்தில் சிக்கல் இல்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறு தானியங்களில் வரகு தனித்தன்மை வாய்ந்தது. நம் பாரம்பர்யத்தில், மரபில் வரகு இரண்டறக் கலந்திருக்கிறது. வழிபாடுகள், சடங்குகள், பண்டிகைகள், இறுதி நிகழ்வுகள் என வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் வரகு இருந்திருக்கிறது. வரகின் சிறப்பே, எல்லாத் தட்பவெப்பத்தையும் தாங்கி வளரும் அதன் தன்மை தான். நிலத்தைக் கீறிவிட்டு, விதையை தூவிவிட்டு வந்தால் போதும். பிறகு, விளைந்து முகிழ்ந்து நிற்கும் தானியத்தை அறுவடை செய்யத்தான் போக வேண்டும். பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. பறவைகளோ, கால்நடைகளோ இதை தின்றழிக்க முடியாது. காரணம், வரகின் 7 அடுக்கு மேல்தோல்.

வரகை அறுவடை செய்து தாளோடு சேர்த்து வீட்டில் வைத்துக் கொள்வார்கள். எப்போது தேவையோ, அப்போது கல்லுரலில் போட்டு இடித்து, தோல் நீக்கி சமைப்பார்கள். நெல் அரிசியில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாமே, வரகரிசியில் செய்யலாம்.

வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, மிளகுச் சாதம்.

“வரகின் பயன்பாடு இன்று மிகவும் குறைந்து விட்டது. ஆனாலும் பழங்குடி மக்கள் மத்தியில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. ஜவ்வாது மலை, கல்வராயன் மலைகளில் வசிக்கும் பழங்குடிகள், தங்கள் பண்டிகைகள், வழிபாடுகளில் வரகையே சமைத்துப் படைக்கிறார்கள். குறிப்பாக வரகரிசி மிளகுச் சாதம்.  சொந்தமாக கால்நடைகள் வளர்த்து அதில் கிடைக்கும் நெய்யைக் கொண்டு செய்வார்கள். வாசனையே ஈர்க்கும். நெய்யைத் தவிர்த்து நிறைய நல்லெண்ணெய் விட்டுச் செய்து கட்டுசாதமாகவும் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். வயிறுக்கு நிறைவாக இருப்பதோடு, மனதுக்கும் நிறைவு தரும் இந்த வரகரிசி மிளகுச் சாதம்...” என்று கூறி நாவூற வைக்கிறார் தேனியைச் சேர்ந்த இயற்கை உணவு சமையல் நிபுணர் செஃப் எஸ்.பழனிசெல்வம். இந்த வரகரிசி மிளகு சாதத்தில் அப்படி என்ன சத்துகள் இருக்கின்றன..?

“நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு மிகப்பெரும் வரப்பிரசாதம். பசியாற்றும் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் அது வேலை செய்யும். அதனால் தாராளமாக இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நெய், உப்பு  பயன்பாட்டை சற்றுக் குறைத்துக் கொள்வது நல்லது...” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

பாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7

“கோதுமை, அரிசியை விட வரகு உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்பு, கால்சியம், வைட்டமின்கள், புரதச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து என எல்லாவிதமான சத்துகளும் இதில் இருக்கின்றன. பைட்டிக் அமிலம், மாவுச்சத்து இரண்டும் குறைவாக இருக்கிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடம்புக்கு சக்தியையும் உடனே கொடுக்கும். வரகோடு மிளகும், சீரகமும் சேர்வதால் இந்தச் சாதமே மருந்தைப் போல மாறிவிடுகிறது.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். அந்த அளவுக்கு மிளகு விஷமுறி மருந்தாக வேலை செய்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துகள் தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துகள்  மிளகில் இருக்கின்றன. மேலும் இந்த உணவில் பாசிப்பருப்பு சேர்க்கப்படுகிறது. துவரம் பருப்போடு ஒப்பிடும்போது, பாசிப்பருப்பில் சூடு குறைவு. அதனால், இதை எல்லா வயதினரும் எடுத்துக் கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் வாரம் ஒருமுறையேனும் இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வரகரிசி மிளகுச் சாதத்தை காலை மற்றும் மதிய உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. இரவில் தவிர்க்கலாம். காரணம், வயிறு கொஞ்சம் கனமாகத் தெரியும்” என்கிறார் கற்பகம்.

நெய்யோடு மிளகும் சீரகமும் மட்டுமின்றி நம் பாரம்பர்யமும் மணக்கும் வரகரசி மிளகு சாதத்தின் வாசனை உங்கள் வீட்டையும் நிறைக்கட்டும்!

வெ.நீலகண்டன்

படங்கள்: சக்தி அருணகிரி

வரகரிசி மிளகுச் சாதத்தின் செய்முறையையும் தருகிறார் பழனிசெல்வம்.

வரகரிசி மிளகுச் சாதம்

தேவையானவை:

• வரகரிசி- 250 கிராம்

• பாசிப்பருப்பு - 50 கிராம்

• மிளகு - 10 கிராம்

• சீரகம்    - 10 கிராம்

• முந்திரிப்பருப்பு - 50 கிராம்

• இஞ்சி - 1 துண்டு

• பச்சை மிளகாய் - 2

• கறிவேப்பிலை - 1 கொத்து

• உப்பு - தேவையான அளவு

• நெய் - 100 கிராம்

• நல்லெண்ணெய் - 50 கிராம்

செய்முறை: 


வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து  கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய்யில் பாதி விட்டு மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள். நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள். முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி+பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள். இறக்குவதற்கு முன்பு, மீதமிருக்கும் நெய்யைவிட்டு கிளறி இறக்குங்கள். குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism