Published:Updated:

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)
கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

ராஜேஸ்வரி விஜய் ஆனந்த்

பிரீமியம் ஸ்டோரி

காலையில் எழுந்ததும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதல்லவா? தினம் ஒரு புதுமையான மெனுவை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி தயாரித்துக் கொடுப்பதுதான் உண்மையில் சவாலானது.  டென்ஷனே இல்லாமல் குழந்தைகளுக்கான மெனுவை ஆரோக்கியமானதாகவும் புதுமையானதாகவும் தயாரித்துக் கொடுக்கிறார் சமையல் கலைஞர் ராஜேஸ்வரி விஜய் ஆனந்த்.

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

ட்ரையாங்கிள் பராத்தா (6 பராத்தாக்கள் செய்ய)

தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம் அல்லது சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சுட்டெடுக்க:
எண்ணெய் - தேவையான அளவு

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

செய்முறை:
நெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். வெதுவெதுப்பான நீர் சேர்த்து, மிருதுவான மாவாகப் பிசைந்து வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து, மீண்டும் பிசைந்து, 6 சமமான உருண்டைகளாக உருட்டவும். மாவு தொட்டு, வட்டமான சப்பாத்திகளாகத் திரட்டவும். மேல்புறம் ஓரிரு சொட்டுகள் நெய்விட்டுத் தடவவும். சிறிதளவு மாவு தூவி பாதியாக மடிக்கவும். அந்தப் பாதியின் மேல்புறம் மேலும் ஓரிரு சொட்டுகள் நெய்விட்டுத் தடவவும். சிறிதளவு மாவு தூவிப் பாதியாக மடிக்கவும். இப்போது, முக்கோணமாக இருக்கும். வடிவம் மாறாமல், மெதுவாக முக்கோண பராத்தாவாக திரட்டவும். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். ஆறிய பின், அலுமினியம் ஃபாயிலில் வைத்து மடித்து, டப்பாவில் வைத்து, குழந்தைகளுக்குப் பிடித்த சைட் டிஷ்ஷுடன் கொடுத்தனுப்பவும்.

குறிப்பு:
நெய் தடவி, மாவு தூவுவதன் மூலம் லேயேர்கள் கிடைக்கும்.

பனீர் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்
பனீர் துண்டுகள் -  ஒன்றரை கப்
கேரட் (சிறியது) - ஒன்று
குடமிளகாய் (சிறியது) - ஒன்று
வெங்காயத்தாள் - 5 கொத்து
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - முக்கால் டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

செய்முறை:
அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெந்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி, கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்த்து ஆறவிட்டு, உதிர்த்து வைக்கவும் (இதனை முதல் நாளே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்). கேரட், குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். பனீரைக் கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். மிருதுவானவுடன், கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். வாயகன்ற ஒரு பானில் (pan), மீதமுள்ள ஆலிவ் ஆயில் சேர்த்து கேரட், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கும்போது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். காய் வெந்தவுடன், பனீர், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துக் கலக்கவும். வேகவைத்த சாதத்தைச் சேர்த்து, சாதம் உடையாமல் கலந்து இறக்கவும்.

குறிப்புகள்:
* பீன்ஸ், ஸ்வீட் கார்ன் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
* தக்காளி சாஸ், சோயா சாஸ் தலா ஒரு  டீஸ்பூன் சேர்த்தும் இந்த ஃப்ரைடு ரைஸ் செய்யலாம்.

பாலக் - சீஸ் சாண்ட்விட்ச்

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 4
பாலக்கீரை (பொடியாக நறுக்கியது) - முக்கால் கப்
பூண்டுப் பல் - 2 (பொடியாக நறுக்கவும்)
சௌர் க்ரீம் (sour cream) - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - அரை கப்
மிளகுத்தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் - முக்கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
வெண்ணெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

செய்முறை:
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து, நறுக்கிய கீரையையும் சேர்த்து வதக்கவும். உப்பு, சர்க்கரை சேர்த்து, நிறம் மாறாமல், நன்கு குன்றும்வரை வதைக்கவும். (கீரை வெந்துவிட வேண்டும்; தண்ணீர் இருக்கக் கூடாது). இதில் மிளகுத்தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். ஆறிய பின் `சௌர் க்ரீம்’ சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பிரெட் துண்டுகளின் மேல் பரப்பி, மேலே சீஸ் தூவவும். இன்னொரு பிரெட் துண்டு கொண்டு மூடவும். இரு பக்கமும் வெண்ணெய் தடவி, சாண்ட்விட்ச் மேக்கரிலோ, தோசைக்கல்லிலோ பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.

குறிப்புகள்:
* சௌர்  க்ரீம், கிடைக்காவிட்டால், தயிரை ஒரு சுத்தமான மெல்லிய காட்டன்  துணியில் கட்டி ஓரிரு மணி நேரம் தொங்கவிட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் நாளே இதைத் தயாரித்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

* தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் மிதமான தீயில் டோஸ்ட் செய்யவும்.

* முக்கோணங்களாக வெட்டி, ஆறிய பின் அலுமினியம் வ்ராப் (wrap) கொண்டு `பேக்’ செய்யவும்.

மசாலா பாஸ்தா

தேவையானவை:
பாஸ்தா - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
தக்காளி - 2
பூண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்
கேரட், பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
கஸூரி மேத்தி - அரை டீஸ்பூன்
இத்தாலியன் சீஸனிங் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

செய்முறை:
போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, பாஸ்தாவைச் சேர்த்து மிருதுவாகும் வரை வேகவிட்டு, நீரை வடித்து, ஆறவைக்கவும். வடிக்கும் நீரில் கால் கப் எடுத்து, அந்தச் சூடான நீரில் தக்காளியை ஒரு நிமிடம் போட்டு வைக்கவும். பாஸ்தா ஆறிய பிறகு, அந்தத் தண்ணீரை ஊற்றிக் கலந்தால், பாஸ்தா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.

தக்காளியின் தோலை உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கி, தக்காளி விழுதைச் சேர்க்கவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ் சேர்த்து  2 நிமிடங்கள் வதக்கி,  குடமிளகாயையும் சேர்த்து வதக்கவும். வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து, மசாலா நன்கு கலக்கும்வரை கிளறவும். மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். ஆறியபின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக்கொடுக்கவும்.

குறிப்பு:
தக்காளிக்குப் பதில், பாஸ்தா சாஸ் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் ஒரு டீஸ்பூன்  தக்காளி சாஸ் அல்லது அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்வீட் கார்ன் புலாவ் (2 லஞ்ச் பாக்ஸ் அளவு தயாரிக்க)

தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப் 
ஸ்வீட் கார்ன் - அரை கப் 
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பால் - கால் கப் 
தண்ணீர் - ஒன்றேகால் கப் 
புதினா இலை - 10
கொத்தமல்லித்தழை -  ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க: 
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - ஒரு இன்ச் துண்டு 
ஏலக்காய் - ஒன்று 
கிராம்பு - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று

கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)

செய்முறை:
பாசுமதி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு சிறிய குக்கரில் நெய் ஊற்றி, தாளிக்கவேண்டிய பொருள்களைச் சேர்த்து, ஒரு நிமிடம் மிதமான தீயில் கிளறவும்.  இத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நிறம் மாறாமல் மிதமான தீயில் வதக்கவும். ஸ்வீட் கார்ன், உப்பு, புதினா இலை சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர், பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஊறவைத்த அரிசியை வடித்து, அதில் சேர்த்து, மிதமான தீயில் 2 விசில் வரும்வரை வேகவைக்கவும். சாதம் உடையாமல் எடுத்து, வேறு பாத்திரத்தில் வைக்கவும். தட்டில் பரப்பி ஆறவைத்து, டிபன் பாக்ஸில் வைத்துக் கொடுக்கவும். ராய்த்தா அல்லது ஏதேனும் குருமா தொட்டுச் சாப்பிட்டால்... மிகவும் சுவையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு