பிரீமியம் ஸ்டோரி
டோக்ளா ரெசிப்பி

ண்ணெயை அதிக அளவில் பயன்படுத்திச் செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று டோக்ளா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.  சத்துகள் நிறைந்தவை. குஜராத் மாநிலத்தின் உணவான டோக்ளாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பும் டோக்ளாவில் பல வகையான ரெசிப்பிகளை நமக்குச் செய்து காட்டுகிறார் லட்சுமி சீனிவாசன்.     

டோக்ளா ரெசிப்பி

காமன் டோக்ளா

தேவையானவை:

கடலை மாவு - 200 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
ரவை - 2 டீஸ்பூன்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
தயிர் - அரை கப்
தோல் சீவித் துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிது
எலுமிச்சை - ஒரு பழம் (சாறு எடுக்கவும்)
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்      

டோக்ளா ரெசிப்பி


செய்முறை:


தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மீதமுள்ள சர்க்கரை, உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள், ரவை, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றுடன் தயிர் சேர்க்கவும். கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். இதில் ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு பொங்கி வரும். குக்கர் தட்டில் எண்ணெய் தடவி, அதில் பொங்கிய மாவைச் சேர்த்து, வெயிட் போடாமல் 15-20 நிமிடங்கள் வேகவைக்கவும். ஆறியதும் எடுத்துக் கவிழ்த்து வில்லைகள் ஆக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். சர்க்கரைத் தண்ணீர், எலுமிச்சைச் சாற்றைத் தாளிப்புக் கலவையில் சேர்த்து டோக்ளா மீது பரவலாக ஊற்றவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: டோக்ளாவில் தாளிப்புப் பொருள்கள் தவிர்த்து சாம்பார் விட்டும் பரிமாறலாம்.

டோக்ளா ரெசிப்பி

கிரீன் கிராம் முளைகட்டிய டோக்ளா

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப்ப்பயறு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
தோல் சீவிய இளம் இஞ்சி - சிறிய துண்டு
கடைந்த தயிர் - அரை கப்
வெள்ளை ரவை - 2 டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
எலுமிச்சைச் சாறு - அரை மூடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்

அலங்கரிக்க:


கேரட், தேங்காய்த் துருவல் - சிறிது
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

செய்முறை:

தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். முளைகட்டிய பச்சைப்பயறு, மீதமுள்ள சர்க்கரை, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு இவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தயிர்விட்டு இட்லி மாவு போல் கெட்டியாக அரைத்து ரவை சேர்த்துக் கட்டியின்றிக் கலக்கவும். அதனுடன் ஒரு பாக்கெட் ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு குப்பென்று பொங்கும். ஒரு குக்கரில் உள்பக்கமாக எண்ணெய் தடவி, மாவை அதில் சேர்த்து, வெயிட் போடாமல் 10 - 15 நிமிடங்கள் வேகவிட்டு ஆறவிடவும். நன்கு ஆறியதும் குக்கரைக் கவிழ்த்து டோக்ளாவை எடுக்கவும். அதை விரும்பிய வடிவில் வில்லைகளாக்கவும்.    

டோக்ளா ரெசிப்பி

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதில் சர்க்கரை கரைத்த தண்ணீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, அதை டோக்ளாவின் மீது பரவலாக ஊற்றவும். துருவிய கேரட், தேங்காய்த் துருவல் மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாற, புரதச்சத்து நிறைந்த கிரீன் கிராம் முளைகட்டிய டோக்ளா தயார்.

குறிப்பு:
இதை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இனிப்புச் சட்னி, புதினா காரச் சட்னி தொட்டும் சாப்பிடலாம்.

டோக்ளா ரெசிப்பி

தயிர் டோக்ளா

தேவையானவை:

கடைந்த தயிர் - அரை கப்
கடலை மாவு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
ரவை - 2 டீஸ்பூன்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
சர்க்கரை, உப்பு - தலா ஒரு சிட்டிகை

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
கடைந்த கெட்டித்தயிர் (புளிப்பில்லாமல்) - கால் கப்
மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன்

செய்முறை:


தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் ரவை, கடலை மாவு, மீதமுள்ள சர்க்கரை, கடைந்த தயிர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். அதனுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலக்க மாவு பொங்கும். ஒரு குக்கரில் உள்பக்கமாக எண்ணெய் தடவி இந்த மாவைச் சேர்த்து, வெயிட் போடாமல் 10-15 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் ஆறவிட்டு குக்கரைக் கவிழ்த்து டோக்ளாவை எடுக்கவும். கனமான வில்லைகளாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து, அதில் சர்க்கரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து டோக்ளா மீது பரவலாக ஊற்றவும். கடைந்த தயிரை மேலே விடவும் (வழியக் கூடாது). நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் ஆங்காங்கே சிறிது விட்டுப் பரிமாறவும். கலர்ஃபுல் டோக்ளா இது. தயிர் அதிகம் இருப்பதால் கடலை மாவினால் ஏற்படும் பாதிப்பும் இராது.

டோக்ளா ரெசிப்பி

ஸ்வீட் கார்ன் டோக்ளா

தேவையானவை:


கடலை மாவு - 150 கிராம்
ஸ்வீட் கார்ன் கெட்டி விழுது - கால் கப்
(50 கிராம் அரைத்தால் போதுமானது)
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
தோல் சீவித் துருவிய இஞ்சி  - அரை டீஸ்பூன்
கடைந்த தயிர் - அரை கப்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
ரவை - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - ஒரு பழம் (சாறு எடுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கைப்பிடி (மேலே தூவ)
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். ஸ்வீட் கார்ன் விழுது, கடலை மாவு, மஞ்சள்தூள், மீதமுள்ள சர்க்கரை, உப்பு, எண்ணெய், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, ரவை இவற்றுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். அதில் ஃப்ரூட் சால்ட் சேர்க்கவும். மாவு பொங்கியதும், எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவைக் கொட்டிப் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆவியில் 10 - 15 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவிடவும். பின்னர் ஆறியதும் ஒரு தட்டில் கவிழ்த்து வில்லைகள் போடவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கிக் கடுகு, பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். சர்க்கரைத் தண்ணீர் மற்றும் எலுமிச்சைச் சாற்றை அதில் சேர்த்துக் கலந்து டோக்ளாவின் மீது பரவலாக ஊற்றவும். நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வேகவைத்த ஸ்வீட் கார்ன் தூவிப் பரிமாறவும்.

டோக்ளா ரெசிப்பி

கிரவுண்ட் நட் டோக்ளா

தேவையானவை:

தோல் உடைத்து வேகவைத்த
வேர்க்கடலை - 50 கிராம்
இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்
கடலை மாவு - 200 கிராம்
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்  - சிட்டிகை
ரவை - அரை டீஸ்பூன்
கடைந்த தயிர் - அரை கப்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்  - 2
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - ஒரு பழம் (சாறு எடுக்கவும்)
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.  கடலை மாவு, மீதமுள்ள சர்க்கரை, உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் பொடித்த எள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, வேக வைத்த வேர்க்கடலை, ரவை ஆகியவற்றைத் தயிர், சிறிது தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்கு கரைக்கவும். இதில் ஃப்ரூட் சால்ட் சேர்த்து பொங்கியதும் மாவை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி  10 - 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஒரு குழிவான தட்டில் எண்ணெய் தடவி, மாவைச் சேர்த்து, குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 - 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தட்டில் கவிழ்த்து வில்லைகளாக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கிக் கடுகு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய் தாளிக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து டோக்ளாவின் மீது பரவலாக ஊற்றவும். நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொடித்த வேர்க்கடலை தூவிப் பரிமாறவும்.

டோக்ளா ரெசிப்பி

தக்காளி டோக்ளா

தேவையானவை:

கடலை மாவு - 200 கிராம்
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - சிறிது
இஞ்சி - பச்சை மிளகாய் விழுது  -
ஒரு டீஸ்பூன்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தயிர், சர்க்கரை, மஞ்சள்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, உப்பு எல்லாம் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் நன்கு கரைக்கவும். அதில் ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு பொங்கும். எண்ணெய் தடவிய குக்கர் தட்டில் மாவுக் கலவையைக் கொட்டி 15-20 நிமிடங்கள் குக்கரில் வெயிட் போடாமல் வேக வைக்கவும். ஆறியதும் கவிழ்த்து வில்லைகளாக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். அதை டோக்ளாவின் மீது பரவலாகக் கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லித் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சேர்த்திருப்பதால் சர்க்கரைத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு தவிர்க்கப் பட்டிருக்கிறது.

டோக்ளா ரெசிப்பி

மிக்ஸ்டு வெஜ் டோக்ளா

தேவையானவை:

கடலை மாவு - 200 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
கடைந்த தயிர் - அரை கப்
ரவை - 2 டீஸ்பூன்
துருவிய கேரட், கோஸ், உருளைக்கிழங்கு, வெள்ளரி மற்றும் சுரைக்காய் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தோல் சீவித் துருவிய இளம் இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையானவை

தாளிக்க:


கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீரில் கரைத்த கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன் (ஊறவைத்துக் கழுவி இறுக்கவும்)
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மீதமுள்ள சர்க்கரை, எண்ணெய், மஞ்சள்தூள், ரவை, துருவிய காய்கறிகள், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் கடைந்த தயிர் சேர்த்துக் கட்டியின்றி நன்கு கரைத்து இட்லி மாவுப் பதத்துக்குத் தயார் செய்யவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்த்து ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு புஸ் என்று கொப்பளிக்கும். ஒரு குழிவான தட்டில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, அதைக் குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 15-20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் ஒரு தட்டில் கவிழ்த்து வில்லைகள் போடவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய், எள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அதில் சர்க்கரைத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதை டோக்ளாவில் பரவலாக ஊற்ற, அந்தத் தாளிப்பு நீரை அப்படியே டோக்ளா இழுத்துக்கொள்ளும். சத்து நிறைந்த வண்ணமயமான வெஜ் டோக்ளா தயார்.

டோக்ளா ரெசிப்பி

பீட்ரூட் - சீஸ் டோக்ளா

தேவையானவை:

பீட்ரூட் துருவல் - 2 டீஸ்பூன் (அதிகம் வேண்டாம்)
கடலை மாவு - 200 கிராம்
பச்சை மிளகாய் - இஞ்சி விழுது -
ஒரு டீஸ்பூன்
தயிர் - அரை கப்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
ரவை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
சர்க்கரை - 50 கிராம்
கீறிய பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - ஒரு பழம் (சாறு எடுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
சீஸ் துருவல் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். ஃப்ரூட் சால்ட், தயிர் தவிர டோக்ளாவுக்கான பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, பின்னர் தயிர்விட்டுக் கலக்கவும். கலவையை இட்லி மாவு பதத்தில் கரைத்து ஃப்ரூட் சால்ட் சேர்க்கவும். மாவு பொங்கும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவைச் சேர்த்து குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 15-20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் வில்லைகளாக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்புப் பொருள்களில் துருவிய சீஸ், நறுக்கிய கொத்தமல்லியைத் தவிர மற்ற பொருள்கள் சேர்த்துத் தாளித்து, அதனுடன் சர்க்கரைத் தண்ணீர் சேர்த்துக் கலந்து, டோக்ளாவின் மீது பரவலாக ஊற்றவும். சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

டோக்ளா ரெசிப்பி

பேபி ஆனியன் டோக்ளா

தேவையானவை:

நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 200 கிராம்
ரவை - 2 டீஸ்பூன்
கடைந்த தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
ஃப்ரூட் சால்ட்  - ஒரு பாக்கெட்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை, உப்பு - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய சின்ன வெங்காயம்  - 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - ஒரு பழம் (சாறு எடுக்கவும்)
ஓமப்பொடி - சிறிது
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:


தாளிக்கக் கொடுத்துள்ள சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை அதில் வதக்கி ஆறவிடவும். ஃப்ரூட் சால்ட் தவிர டோக்ளாவுக்குக் கொடுத்துள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் கலந்து இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். அதில் வதக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். பின்னர் ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு பொங்கும். குக்கரில் குழிவான தட்டில் எண்ணெய் தடவி மாவுக் கலவையை அதில் சேர்த்து வெயிட் போடாமால் ஆவியில் 15-20 நிமிடங்கள்  வேகவிடவும். ஆறியதும் கவிழ்த்து வில்லைகளாக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் சர்க்கரைத் தண்ணீர்,  எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, டோக்ளாவின் மீது பரவலாக ஊற்றவும். அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.

டோக்ளா ரெசிப்பி

மேங்கோ டோக்ளா

தேவையானவை:

துருவிய கிளி மூக்கு மாங்காய் - கால் கப்
(மாங்காய் புளிப்பு என்பதால் தயிர் வேண்டாம்)
கடலை மாவு - 200 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
ஃப்ரூட் சாலட் - ஒரு பாக்கெட்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தோல் சீவித் துருவிய இஞ்சி - சிறிது
ரவை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை, உப்பு - தலா அரை டீஸ்பூன்

தாளிக்க:


கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
துருவிய மாங்காய் - 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையில் சிறிதளவு எடுத்து 50 மிலி தண்ணீரில் கரைத்துவைக்கவும். கடலை மாவு, மீதமுள்ள சர்க்கரை, உப்பு, மஞ்சள்தூள், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய மாங்காய், துருவிய இஞ்சி, எண்ணெய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாகக் கரைத்து ஃப்ருட் சால்ட் சேர்க்க, மாவு பொங்கும். இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் சேர்த்து குக்கரில் வைத்து 15-20 நிமிடங்கள் வெயிட் போடாமல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் கவிழ்த்து வில்லைகளாக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெயைச் சூடாக்கிக் கடுகு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய் தாளித்து, சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து டோக்ளாவில் மீது பரவலாக ஊற்றவும். தேங்காய், மாங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: மாங்காய் புளிப்பு என்பதால் எலுமிச்சைச் சாறு வேண்டாம்.

டோக்ளா ரெசிப்பி

ஹனி மினி டோக்ளா

தேவையானவை:

கடலை மாவு - 200 கிராம்
ஃப்ரூட் சால்ட் - ஒரு பாக்கெட்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
ரவை - 2 டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிது
எலுமிச்சைச் சாறு - அரை மூடி
சுத்தமான தேன் - 2 டீஸ்பூன்
தேன் மஸ்டர்டு சாஸ் - 2 டீஸ்பூன் (இது தேன் + வெள்ளைக்கடுகு கலந்த கலவை)
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, எண்ணெய், ரவை இவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். பின்னர் ஃப்ரூட் சால்ட் சேர்க்க, மாவு நுரைக்கும். இதை மினி இட்லி தட்டில் ஒவ்வொரு ஸ்பூனாக விட்டு 7-10 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவிட்டு எடுத்து ஆறவிடவும்.

அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, அதில் மினி டோக்ளாக்களைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். இதைப் பரிமாறும் தட்டுக்கு மாற்றி, மேலே நறுக்கிய கொத்தமல்லி, தேன், தேன் மஸ்டர்டு சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
இது இனிப்பு என்பதால் தயிர் மற்றும் சர்க்கரைத் தண்ணீர்் தவிர்க்கப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு