Published:Updated:

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்
மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

பிரீமியம் ஸ்டோரி

“வெஜ், நான்-வெஜ் ரெண்டையுமே நான் நல்லா சமைப்பேன். ஆனா, நேரம்தான் இருக்காது. என் குடும்பத்துக்குச் சமைச்சுப் போட்டுச் சந்தோஷப்படுத்த, அப்பப்போ அந்த நேரத்தை உருவாக்கிக்குவேன்’’ - கலகலப்புடன் பேசுகிறார் கலா மாஸ்டர்.

“நாங்க அக்கா தங்கச்சிங்க ஏழு பேரு. எல்லாருக்குமே சின்ன வயசுலேயே எங்கம்மா சரோஜினி நல்லா சமைக்கக் கத்துக்கொடுத்துட்டாங்க. அவங்க செய்ற சாம்பார், உருளைக்கிழங்கு ஸ்ட்யூ, புளிச்சக்கீரை சாதத்துக்கு நாங்க எல்லோரும் அடிமைகள். அம்மா, இந்த உணவுகளை ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்புற நாள்கள்ல எல்லாம் லஞ்ச் பாக்ஸ் சுத்தமா காலியாகிடும். வீட்ல இருக்கிறப்ப அவங்க உருட்டிக்கொடுக்குற சாதத்துல, அன்பு அற்புதமான சுவையா சேர்ந்திருக்கும்.

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

எங்கப்பா கோபால் ஐயர், அவரோட சொந்த ஊரான ஈரோட்டுல பிரபல சமையல் கான்ட்ராக்டர். நடனம், சினிமான்னு எங்க ஆசைகளுக்கு உயிர்கொடுக்க, அம்மா எங்களையெல்லாம் சின்ன வயசுலேயே சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. அதனால அப்பா, ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து எங்களோடு சில நாள்கள் தங்கிட்டுப் போவார். அப்படி வரும்போது நாங்க கேட்கிற சமையல், ஸ்வீட்ஸை எல்லாம் செய்துகொடுப்பார். அதை நாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட அந்தச் சந்தோஷத் தருணங்கள், நாங்க எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் திரும்பக் கிடைக்காது.

என்னோட 12 வயசுலேயே சினிமாவுல பரபரப்பா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்போவெல்லாம் சரியா சாப்பிடவே மாட்டேன். வேலைல இருந்தா, பசி, தூக்கம்னு எதுவும் என்னை அண்டாது. என்னால ஷூட்டிங் தாமதமாகக் கூடாதுனு ஓடிட்டே இருப்பேன். இதனால காலையில சாப்பாட்டை மதியமும், மதிய சாப்பாட்டை சாயங்காலமும், கடைசியா நைட்டு 12 மணிக்கும் சாப்பிடுறதுனு போகும் வாழ்க்கை. நேரத்துக்குச் சாப்பிட மாட்டேங்கிறேன்னு வீட்டுல எல்லோரும் வருத்தப்படுவாங்க.

இருபது வயசுல நான் பார்க்க ரொம்ப ஒல்லியா இருப்பேன். எல்லா ஸ்டார்ஸும் என்னை ‘ஒல்லிக்குச்சி கலா’ன்னுதான் சொல்லுவாங்க. ஒருகட்டத்துல, வேலை பரபரப்புல நேரத்துக்குச் சாப்பிடாததே ஒபிஸிட்டி பிரச்னை ஏற்படக் காரணம் ஆகிடுச்சு. ஒழுங்கா சாப்பிடலைன்னாலும், சூப்பரா சமைப்பேன். அதுலயும் நான் செய்ற பிரியாணி, முட்டைக்கறிக்கு எங்க குடும்பம் என்னைக் கொண்டாடித் தீர்த்துடும். ஷூட்டிங் இல்லாத நாள்களில் அக்கா தங்கச்சிங்க கூடினா, ‘இன்னிக்கு கலா சமைப்பா’னு எல்லோரும் குஷி ஆகிடுவாங்க. அசைவம் பிடிக்காத பிருந்தாவைத் தவிர, மற்ற எல்லோரும், ‘வெரைட்டி வெரைட்டியா பிரியாணி செய்வியே... இன்னிக்கும் அப்படி மணக்க மணக்க சமைச்சுப் போடு, வயிறார சாப்பிடுறோம்’னு கேட்பாங்க. எனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், அப்படி நாங்க சந்திக்கிற தருணங்கள் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. இப்போ கணவர் மகேஷ், பையன் வித்யூத் ரெண்டு பேரும் என் சமையல் ஃபேன்ஸ். 

எங்க வீட்டுல குக் இருக்காங்க. சினிமா, டெலிவிஷன், டான்ஸ் நிகழ்ச்சிகள்னு நான் பிஸியா ஓடிக்கிட்டு இருக்கிறதால, காலை மற்றும் மதியம் அவங்க சமைப்பாங்க. என் கணவருக்கும் பையனுக்கும் தினமும் ஏதாச்சும் ஒருவேளைக்காவது நான்-வெஜ் வேண்டும். அதனால என்ன சமைக்கணும்னு முதல் நாளே யோசிச்சு, குக்கிட்ட சொல்லிடுவேன். என்ன வேலை இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஃபேமிலி டைம் எனக்கு. கணவருக்கும் பையனுக்கும் நான்தான் டின்னர் செஞ்சு கொடுப் பேன். மேக்ஸிமம் அரைமணி நேரம்தான்... அந்தளவுக்கு சூப்பர் ஃபாஸ்டா சமைப்பேன். மலையாள ஸ்டைல் உருளைக்கிழங்கு ஸ்ட்யூதான் அடிக்கடி செய்வேன். அன்னிக்கு மட்டும் எங்க மூணு பேருக்குமே எக்ஸ்ட்ரா இட்லிகள் வயிற்றுக்குள்ள போகும்.

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

எண்ணெய் அதிகம் சேர்க்காத தமிழ்நாடு, கொங்கு ஸ்பெஷல், மலையாள வெஜ், நான்-வெஜ் உணவுகள்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பழங்கள், தண்ணீர் எடுத்துக்குவேன். கல்யாணமான புதுசுல அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிடுவோம். ஆனா, இப்போ பையனோட ஆரோக்கியத்துக்காக ஹோட்டலுக்குப் போறதையே நிறுத்திட்டோம். அவனுக்கு என்ன பிடிச்சாலும் அதை வீட்டிலேயே செய்து கொடுத்துடுவேன். சாப்பிட்டு முடிச்சதும் உடல் உழைப்பைக் கொடுக்கும் ஏதாச்சும் ஒரு வேலையை செய்துடுவேன்’’ என மாஸ்டர், தன் ஸ்பெஷல் சமையலான மட்டன் தொக்கு செய்ய மசாலா தயார் செய்தபடி பேசிக்கொண்டிருக்க, அவர் கணவர் மகேஷ் கிச்சனுக்குள் என்ட்ரி ஆனார்.

``வெல்கம் சார்! ரொம்ப நாளைக்கப்புறமா கிச்சனுக்குள்ள வந்திருக்கீங்க...” என்று கணவரிடம் பேசியவாறே, சில நிமிடங்களில் மட்டன் தொக்கு செய்து முடித்துவிட்டார் கலா மாஸ்டர். கணவருக்கும் மகனுக்கும் டைனிங் டேபிளில் பரிமாறியபடி தொடர்ந்தவர், “வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், நாங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.

முன்பெல்லாம் என் வீட்டுல பிரியாணி, ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்னு எது செஞ்சாலும், என் சிஸ்டர்ஸ் எல்லாருக்கும் கொடுத்தனுப்புவேன். இப்போ அக்கா தங்கைகள் எல்லோரும் ஆளுக்கொரு பகுதியில பிஸியா இருக்கிறதால, எப்பயாச்சும்தான் சந்திக்கிறோம். அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரமே எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி சமைச்சுப் போடணும்’’ என்று கலா மாஸ்டர் சொல்லும்போது, ``மம்மி... மட்டன் தொக்கு சூப்பர். சும்மா கிழி கிழி கிழி” என்று அவர் மகன் பாராட்ட, ``எனக்கே என் டயலாக்காடா செல்லம்!’’ என்ற மாஸ்டர், அந்தத் தட்டில் இன்னும் ஒரு கரண்டித் தொக்கு வைக்கிறார்!

அம்மாவின் கை, பிள்ளைக்கு அன் லிமிட்டடாகத்தான் பரிமாறும்!

மட்டன் தொக்கு ரெசிப்பி!

தேவையானவை:
மட்டன் - 250 கிராம்
பெரிய வெங்காயம்  - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சைப் பழம் - ஒன்று
(சாறு பிழியவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத்
தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.  ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன்

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும். கலவையில் தண்ணீர் வற்றி கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு