Published:Updated:

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”
“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

வலைப்பூ-வில் அறுசுவை பரிமாறும் சுபாஷினி வெங்கடேஷ்ஸ்ரீலோபாமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி

``உணவு, பசியைப் போக்க மட்டும் அல்ல, நமக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அளிக்கவல்லது என்னும் கருத்தை நம் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டியதை என் முக்கியக் கடமையாகக் கருதுகிறேன்.’’     

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

- அக்கறையுடன் சொல்கிறார், 75,000 லைக்ஸைத் தாண்டிப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள `www.bhojanarecipes.com’ எனும் வலைப்பூவை நடத்தும் சுபாஷினி வெங்கடேஷ். இவர் தனக்குச் சமையல் கலையில் ஆர்வம் ஏற்பட்டதையும் கரண்டி பிடித்த கையால் கேமரா பிடித்து வலைதளத்தில் கலக்கிவருவது குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

``சிறு வயதில் இருந்தே சமையலில் ஆர்வம் எனக்கு. 15 வயதிலேயே சமையல் அறையில் பரீட்சையைத் தொடங்கிவிட்டேன். பூர்வீகத்தில் கன்னியாகுமரிப் பெண் நான்.

தஞ்சாவூர்க்காரரான என் தாய்வழிப் பாட்டியின் கைப்பக்குவம், நாஞ்சில் மண்ணைச் சேர்ந்த என் தந்தை வழிப்பாட்டியின் சமையல் சூத்திரம், இரண்டும் கலந்த என் அம்மாவின் நளபாகம் இவையெல்லாம்தான் எனக்கு வழிகாட்டின. திருமணத்துக்குப் பிறகு நெல்லையில் செட்டிலான நான், என் மாமியாரிடம் மலபார் சமையலையும் கற்றுக்கொண்டேன்.

மேலும், நெல்லை சமையலான மாப்பிள்ளை சொதி, கூட்டாங்சோறு, உளுத்தங்களி, திரிபாகம், அல்வா போன்றவற்றை என் தோழிகள் கற்றுத்தந்தார்கள். இதனால் தினம் ஒரு வகை என நான் சமைக்க, உறவுகளுக்கு மத்தியில் என் சமையல் பிரபலமானது.

பள்ளி ஆசிரியையான நான் 2014-ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது, பொழுதுபோகாமல் என் முகநூல் கணக்கில், ‘போஜனா’ என்ற பக்கத்தைத் தொடங்கி என் தினசரி சமையலைப் பதிவிட ஆரம்பித்தேன். அச்சமயம், கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த என் மகன், அவ்வருட அன்னையர் தினத்தன்று ‘Bhojanarecipes’ என்னும் வலைப்பூவை உருவாக்கி எனக்குப் பரிசளித்தான். அதில் எவ்வாறு பதிவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தான். அது என் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் சமையல் அறையில் கரண்டி பிடிக்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக கேமரா பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

நாங்கள் எங்கள் வலைப்பூவை ஒரு கைக்குழந்தை போல நாளொரு ரெசிப்பி, பொழுதொரு டிப்ஸ் என்று பதிவிட்டு வளர்த்தோம். ஒவ்வொரு லைக்கையும் ஒரு வெற்றியாக எண்ணி மகிழ்ந்தோம். அவசரத்துக்குப் பருப்பு இல்லாமல் செய்யும் கொட்டு ரசம், ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு, தாளகம், மாவடு போன்றவற்றைப் பதிவிட்டபோது லைக்ஸ் குவிந்தது பெரும் ஆச்சர்யம்.

பண்டிகைக் காலங்களில் செய்யப்படும் முக்கியப் பதார்த்தங்களைப் பண்டிகைக்குச் சில தினங்களுக்கு முன்பாகவே செய்து அதன் செய்முறை விளக்கங்களைப் படங்களுடன் பதிவிடத் தொடங்கினேன். அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படி ஒவ்வொரு முயற்சியாகச் செய்ய எட்டு மாதங்களுக்குள் 25,000 லைக்ஸைக் கடந்து பயணித்தது பெரிய சந்தோஷத்தைத் தந்தது.

அடுத்ததாக, பிரபல தனியார் தொலைக்காட்சியில் இருந்து சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்தது. அந்த வாய்ப்பு என் வலைப்பூவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. கடகடவென்று 50,000 லைக்ஸைத் தாண்டிப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, பிரபல பண்பலைகளில் சமையல் சம்பந்தப்பட்ட கேள்வி - பதில் நிகழ்ச்சிகள், அவர்கள் நடத்திய சமையல் போட்டிகளில் நடுவர் பொறுப்பு என முன்னேறிக்கொண்டே இருந்தேன். அதன்மூலம் ஒரு பிரபல மசாலா கம்பெனியின் வலைப்பக்கத்துக்குச் சமையல் குறிப்புகள் வழங்க என்னை அழைத்திருந்தார்கள்.

இவை எல்லாவற்றையும்விட என் லட்சியமாக நான் கருதுவது ஒன்று இருக்கிறது. நான் சேகரித்த அனைத்து பாரம்பர்ய சமையல் குறிப்புகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும்.

உலகமயமாதலின் விளைவாலும், மேற்கத்திய உணவுகளின் ஆதிக்கத்தாலும் நம் மண்ணின் உணவுக்கும், நம் உணர்வுக்கும் உள்ள பந்தத்தை மறந்து விட்டோம். நாம் வாழும் இடத்தில், நம் சீதோஷ்ண நிலையில் விளையும் தானியங்களும், காய்கனிகளும்தாம் நமக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை என்பதை உணர வேண்டும். இன்று பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் போன்றவற்றின் பங்களிப்பால், மக்களிடம் சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை உண்பதைக் கௌரவக் குறைச்சலாகக் கருதிய காலம் மாறிவருவது ஆறுதலை அளிக்கிறது. அந்த வழியில், இந்தச் சிறுதானிய ரெசிப்பிகள் அவள் கிச்சன் வாசகிகளுக்காக!’’

சமையலுக்கான பொருள்களுடன் அன்பும், அக்கறையும், ஆர்வமும் கலந்து சுபாஷினி வழங்கும் சமையல் குறிப்புகள் இங்கே இடம்பெறுகின்றன.   

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

சோள காஞ்சிபுர இட்லி

தேவையானவை:

சோளம், இட்லி அரிசி, உளுந்து - தலா ஒரு கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
மிளகு, சீரகம் (ஒன்றிரண்டாகப் பொடித்தது) - 2 டீஸ்பூன்
நெய்  - 3 டீஸ்பூன்
சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு

செய்முறை:

சோளம், இட்லி அரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்துக் கழுவி, வெந்தயம் சேர்த்துத் தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவுப் பதத்தில் அரைத்து 8 மணி நேரம் புளிக்கவைக்கவும். நெய்யில் மிளகு, சீரகம் பொடியைத் தாளித்து மாவில் சேர்க்கவும். சுக்குப்பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

டிபன் பாக்ஸ் அல்லது குக்கர் செப்பரேட்டர் போன்ற பாத்திரத்தில் எண்ணெய் தடவி, மாவை அரை பாத்திரம் உயரத்துக்கு ஊற்றி இட்லி குக்கரில் 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். கொஞ்சம் ஆறியவுடன் பாத்திரத்தில் இருந்து எடுத்து துண்டுகள் போட்டு சட்னியுடன் பரிமாறவும்.

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

குதிரைவாலி - தக்காளி சேவை

தேவையானவை:


குதிரைவாலி அரிசி - 3 கப்
இட்லி அரிசி - ஒரு கப்
பழுத்த தக்காளி - 5
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசியைச் சேர்த்துக் கழுவி, மூன்று மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். மாவை 4 மணி நேரம் புளிக்கவைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரைத்த மாவை அதில் விடவும் (மாவு சற்று நீர்க்க இருக்க வேண்டும்). கைவிடாமல் மாவு கெட்டியாகும் வரை கிளறி, சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு வந்தவுடன் இறக்கவும். தக்காளியுடன் வெல்லம், மிளகாய்த்தூள், புளி, சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெந்த மாவை இடியாப்ப அச்சு அல்லது சேவை நாழியில் போட்டுப் பிழிந்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் மீதி எண்ணெயை ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். விழுது கெட்டியானவுடன் ஆறவைத்த சேவையை அதில் போட்டுக் கிளறி இறக்கவும். இனிப்பு, காரம், புளிப்பு சேர்ந்த சுவையான சேவை தயார்.

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

வரகரிசி - லெமன் இட்லி

தேவையானவை:

வரகரிசி - 3 கப்
சம்பா அவல் - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு -
தாளிக்கத் தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு -  4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வரகரிசி, உளுந்து இரண்டையும் நன்கு களைந்து நான்கு மணிநேரம் ஊறவிடவும். அவலைச் சுத்தம் செய்து களைந்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு நன்கு நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, தேவையான அளவு மாவை மினி இட்லிகளாக வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு. உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு தாளிக்கவும். அவை சிவந்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் புரட்டவும். ஏற்கெனவே இட்லியில் உப்பு சேர்த்திருப்பதால், தேவையான உப்பை மட்டும் எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து வாணலியில்விட்டு, பிறகு வெந்த இட்லிகளைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறி இறக்கவும்.

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

சாமை - மிளகு கொழுக்கட்டை

தேவையானவை:

சாமை அரிசி - 2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு, கறிவேப்பிலை -
தாளிக்கத் தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரவென்று பொடித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து, அரைத்துவைத்த பொடியையும் சேர்த்துப் புரட்டவும். இதில்  நான்கு கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். அதனுடன்  சாமை அரிசியைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை `சிம்’மில் வைத்து வாணலியை ஒரு மூடி போட்டு மூடவும். 15 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து நன்கு கிளறி, அகலமான தட்டில் போட்டு ஆறவிடவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்!”

கேழ்வரகு - கடலை உருண்டை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 2 கப்
பொடித்த சுத்தமான வெல்லம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - 3 டீஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) -  2 டீஸ்பூன்
நெய் - அரை கப்
ஏலக்காய்த்தூள்  - அரை டீஸ்பூன்
ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை - அரை கப்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் கேழ்வரகு மாவை நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அதில் கால் கப் நெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, கேழ்வரகு மாவுடன் ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, அத்திப்பழம், கிஸ்மிஸ், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். மீதம் உள்ள நெய்யை அதில் சேர்த்துக் கைபொறுக்கும் சூட்டில் இருக்கும்போது சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆறியவுடன் டப்பாவில் போட்டு வைக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு