பிரீமியம் ஸ்டோரி

`வாழ்க்கை நிலையற்றது. அதனால் என்ன? இப்போது டெசர்ட் சாப்பிடுங்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. எந்த ஒரு விருந்தையும் முழுமையடையச் செய்யும் தன்மை டெசர்ட் வகைகளுக்கே உரியது. குல்ஃபி, ஜிகர்தண்டா, புடிங், கிரனிடா, ஃபலூடா, சோர்பே என விதவிதமான டெசர்ட் வகைகளை நினைவில் நிற்கும் சுவையோடு அளித்திருக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பார்த்தவுடனே செய்ய தூண்டுகிற படங்களை எடுத்தவரும் அவரே.

டெசர்ட் ரெசிப்பி

காலா கட்டா கிரனிடா

தேவையானவை:
காலா கட்டா சிரப் - அரை கப்
கறுப்பு உப்பு (Black Salt) -  கால் டீஸ்பூன்
தண்ணீர் - முக்கால் கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர், கறுப்பு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் காலா கட்டா சிரப் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில்  வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக முக்கால் மணிநேரம் ஃப்ரீசரரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து மேலே சிறிது கறுப்பு உப்புத் தூவி குளிர்ச்சியாக காலா கட்டா கிரனிடாவைப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.

ரோஸ் கோலா

தேவையானவை:

ரோஸ் சிரப் - அரை  கப்
தண்ணீர் - ஒரு  கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். அதை வெளியே எடுத்து ஒரு ஃபோர்க்கால் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். கடைசியாக 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதை ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு,  மேலே ரோஸ் சிரப்பை ஊற்றி சில்லென ரோஸ் கோலாவைப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகுவிரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.

நன்னாரி கிரனிடா

தேவையானவை:
நன்னாரி சிரப் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - முக்கால் கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முக்கால்  கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி சிரப் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டி போல ஆகிவிடும். கடைசியாக 6-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாகப் பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் இதை போட்டு, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.

லெமன் மின்ட் கிரனிடா

தேவையானவை:

புதினா - 8-10 இலைகள்
எலுமிச்சை - 2
சர்க்கரை - 50 கிராம்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - இரண்டு கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக 3-4 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்கிரீம் ஸ்கூப் வைத்து, குவியலாக பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு மேலே புதினா இலைகளால் அலங்கரித்து லெமன் மின்ட் கிரனிடாவைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும்.

ரோஸ் ஃபலூடா

தேவையானவை:
ரோஸ் கஸ்டர்ட் மில்க் - அரை  டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி -
இரண்டு டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையாவை:
வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
ரோஸ் சிரப் - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்

டெசர்ட் ரெசிப்பி

ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்முறை

ரோஸ் கஸ்டர்ட் மில்க்:
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் எடுத்து அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரைக் கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையாவை:

கடல் பாசி (சைனா க்ராஸ்) -
இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஸ் சிரப் - கால் கப்

ஜெல்லி செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கடற்பாசியைச் சிறுதுண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடற்பாசி முழுவதும் கரைந்ததும் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி, சிறுதீயில் வைத்து ரோஸ் சிரப் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய வுடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

ஃபலூடா செய்முறை

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து கொள்ளவும். சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை

ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன் பின் சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். மீண்டும் ஜெல்லியைச் சேர்க்கவும். இதில் ரோஸ் மில்க்கை ஊற்றி, பின் வெனிலா ஐஸ்கிரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

பிஸ்தா ஃபலூடா

தேவையானவை:
பிஸ்தா கஸ்டர்ட் மில்க் -
அரை டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி -
இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
பிஸ்தா பருப்பு -
இரண்டு டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
பிஸ்தா கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையானவை:
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
சர்க்கரை - கால் கப்
பிஸ்தா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
பிஸ்தா கஸ்டர்ட் மில்க்
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையாவை:
கடல் பாசி (சைனா க்ராஸ்) - இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர் - 5 - 8 துளிகள்

ஜெல்லி செய்முறை...

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 

ஃபலூடா செய்முறை...


சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை

ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். பொடித்த பிஸ்தா அரை ஸ்பூன் சேர்க்கவும். இதில் பிஸ்தா கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் பிஸ்தா ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா பருப்பு தூவிப் பரிமாறவும்.

ராயல் ஃபலூடா

தேவையானவை:
குங்குமப்பூ கஸ்டர்ட்
மில்க் - அரை டம்ளர்
ஜெல்லி - தேவைக்கு
ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன்
சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - இரண்டு டேபிள்ஸ்பூன்
குல்ஃபி ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும்     முந்திரி - இரண்டு டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க் செய்ய:

குங்குமப்பூ - 5 சிட்டிகை
வெனிலா கஸ்டர்ட் பவுடர் -
ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் - ஒரு கப்
மற்றும் கால் கப்
சர்க்கரை - கால் கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்:
முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.

ஜெல்லி செய்யத் தேவையானவை:

கடல் பாசி (சைனா க்ராஸ்) -
இரண்டு கிராம்
சர்க்கரை -  ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர் - 5 - 8 துளிகள்

ஜெல்லி  செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல்பாசியைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 

ஃபலூடா செய்முறை:

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை:
ஓர்  உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும் முந்திரி அரை டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். இதில் குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா மற்றும் முந்திரிப் பருப்பு தூவிப் பரிமாறவும்.

மேங்கோ கோக்கனட் பான்னகோட்டா

தேவையானவை:
கடல் பாசி (சைனா க்ராஸ்) - 10 கிராம்
தேங்காய்ப்பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன்
மாம்பழக் கூழ் - அரை கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
சர்க்கரை - அரை கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
தேங்காய்ப்பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைக்கவும். கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் ஊறவைத்த கடல் பாசியில் பாதியை எடுத்துச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்துக்கொண்டு மாம்பழக் கூழைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக சிறுசிறு கண்ணாடி கோப்பைகளில் பாதி அளவு ஊற்றி,
ஒரு மணி நேரம் செட் ஆக விடவும்.

மீதம் இருக்கும் பாதி ஊறவைத்த கடல்பாசியை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக, கண்ணாடி கோப்பைகளில் ஏற்கெனவே செட்டாகி இருக்கும் மாம்பழக் கூழின் மேல் ஊற்றவும். ஒரு மணி நேரம் செட் ஆகவிடவும். பின்னர் 4-5 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

ராஜ்போக் குல்ஃபி

தேவையானவை:
ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர்
பாதாம் மில்க் பவுடர் / மசாலா மில்க்     பவுடர் - இரண்டு டீஸ்பூன்
க்ரீம் - 1-2 கப்
கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை
பொடித்த பிஸ்தா - கால் கப்
குல்ஃபி மோல்டு - தேவைக்கேற்ப
சர்க்கரை - இரண்டு கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு, பால் பாதியாக சுண்டும் வரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்கவிடவும். அதில் சர்க்கரை, பாதாம் மில்க் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்த பாலில் க்ரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்கவும். 10-15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு, அதில் பொடித்த பிஸ்தாவைச் சேர்த்து இறக்கவும். ஆறியதும் இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, மூடி போட்டு, குச்சிகளை அதனுள் வைத்து, 8 மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஃப்ரீசரில் இருந்து எடுத்ததும் அதன்மீது சிறிது தண்ணீர் விட்டு மோல்டில் இருந்து எடுத்து, பொடித்த பிஸ்தாவைத் தூவி ராஜ்போக் குல்ஃபியைப் பரிமாறவும்.

ஈஸி மாம்பழ சோர்பே

தேவையானவை:
இனிப்பு ரக மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் -  இரண்டு  டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். இக்கலவையை ஒரு டப்பாவுக்கு மாற்றி, இறுக மூடி 4 - 5  மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மாம்பழ சோர்பேயைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

மேங்கோ க்ரீம்

தேவையானவை:
குளிரவைக்கப்பட்ட க்ரீம்
(விப்பிங் க்ரீம்) - 500 மில்லி
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
மாம்பழக் கூழ் - ஒரு  கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
(இனிப்பு ரக மாம்பழம்)
ஐஸிங் சுகர்  - 4 டேபிள்ஸ்பூன்
மேங்கோ எசன்ஸ் - அரை  டீஸ்பூன் (விரும்பினால்)

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
விப்பிங் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் விப் செய்யவும். இடையில் ஐஸிங் சுகர் சேர்த்து மேலும் விப் செய்து கொள்ளவும். க்ரீம் பஞ்சு போல வர வேண்டும். அதாவது, எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது. அந்தப் பதத்துக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், மாம்பழக் கூழ் மற்றும் மேங்கோ எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு  மணிநேரம் வைத்து எடுக்கவும். மேங்கோ க்ரீமில்  நறுக்கிய மாம்பழத்தை கட் & ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும். விருப்பத்துக்கு ஏற்ப நறுக்கிய மாம்பழத்தை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங்

தேவையானவை:
கேரமல் செய்ய:
சர்க்கரை - கால் கப்
தண்ணீர் - 4 டீஸ்பூன்
இன்ஸ்டன்ட் காபி பொடி - ஒரு டீஸ்பூன்

டெசர்ட் ரெசிப்பி

கேரமல் செய்முறை:
இன்ஸ்டன்ட் காபி பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். கால் கப் சர்க்கரையில் 4 டீஸ்பூன்  தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பாகு பிரவுன் நிறத்துக்கு வரும்வரை கிளறி கேரமல் தயாரித்துக் கொள்ளவும். தீய்ந்து விடாமல் கவனமாகச் செய்யவும். இதில் இன்ஸ்டேன்ட் காபி பொடி கலவையைச் சேர்க்கவும். இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி கரண்டியால் பரப்பிவிடவும்.

கஸ்டர்ட் செய்ய:
காய்ச்சிய பால் - ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன்

கஸ்டர்ட் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், தயிர், கன்டண்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கேரமல் ஊற்றி வைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றவும். கிண்ணத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் கேரமல் கஸ்டர்ட் கலந்த கிண்ணத்தை வைத்து மூடி மிதமான தீயில் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்தவுடன் புடிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பரிமாறும்போது ஒரு தட்டில் மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங் கிண்ணத்தை தலைகீழாகக் கவிழ்த்து, அனைத்துப் பக்கங்களையும் மெதுவாகத் தட்டிவிட்டு கேரமல் கஸ்டர்டை வெளியே எடுத்துவிட்டுப் பரிமாறவும். புடிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாகப் பரவியிருக்கும்.

ஜிகர்தண்டா

தேவையானவை:
காய்ச்சிய பால் - அரை  லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
நன்னாரி சிரப் - 4 டேபிள்ஸ்பூன்
பாதாம் பிசின் - இரண்டு டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப்
சர்க்கரை இல்லாத
பால்கோவா - இரண்டு டேபிள்ஸ்பூன்
குல்ஃபி ஐஸ்க்ரீம் - 4 ஸ்கூப்
சர்க்கரை - இரண்டு  டேபிள்ஸ்பூன்

டெசர்ட் ரெசிப்பி

செய்முறை:
பாதாம் பிசினை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மூடிவைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை எடுத்து அடுப்பில் வைத்துக் குறைவான தீயில் சுண்டும் வரை காய்ச்சவும்.

அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் சுண்டக் காய்ச்சவும். நிறம் மாறி பாதியானதும் பால் கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு கலக்கிக் கொதிக்கவிட்டு, இறக்கி ஆற வைக்கவும். அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஓர்  உயரமான கண்ணாடி டம்ளரில் இரண்டு டீஸ்பூன் நன்னாரி சிரப், இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின், பால் கலவை ஊற்றி, பின் அதன் மேல் ஒரு ஸ்கூப் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து ஜிகர்தண்டாவைப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு