Published:Updated:

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

பிரீமியம் ஸ்டோரி
பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

த்தாலிய வகை உணவுகளான பாஸ்தா, பீட்சா ஆகியவற்றின் பெயர்களைச் சொன்னாலே அனைவருக்கும் நா ஊறும். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்படி, பாஸ்தாவில் ஏராளமான வகைகள் மற்றும் வடிவங்கள் உள்ளன. ஹாட் அண்டு ஸ்பைஸி சுவைகளில், சிறப்பான புகைப்படங்களுடன் பாஸ்தா-பீட்சா வகைகளை வழங்கியிருக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். சிலவற்றை இந்திய ருசிக்கு ஏற்றபடி மாற்றி வழங்கியிருப்பது தனிச்சிறப்பு. சுவைத்து மகிழுங்கள்!

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

பேஸிக் பீட்சா - பாஸ்தா சாஸ்

தேவையானவை:

 தக்காளி விழுது -   2 கப் (தக்காளியை வேகவைத்து, தோல் நீக்கி அரைத்தது)
 தக்காளி சாஸ் - ஒரு கப்
 இத்தாலியன் மசாலா (ஆரிகானோ, தைம், ரோஸ்மெரி, துளசி சேர்த்துப் பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 வினிகர் - ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை - கால் டீஸ்பூன்
 ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டு தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.  அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், சர்க்கரை, இத்தாலியன் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை சாஸ் பதத்துக்கு வரும்போது வினிகர் சேர்த்து இறக்கவும்.  ஆறியதும் பாட்டிலில்  சேகரிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/mbwmEa என்ற link-ல் காணலாம்.

வெஜ் பீட்சா

தேவையானவை:

 மைதா மாவு - 2 கப்
 ஆக்டிவ் டிரை இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை -  ஒரு டீஸ்பூன்
 வெதுவெதுப்பான நீர் - ஒரு கப்
 ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - அரை டீஸ்பூன்

டாப்பிங் செய்ய:

 ஸ்வீட் கார்ன் - கால் கப்
 கறுப்பு ஆலிவ் - கால் கப்
 நீளமாக நறுக்கிய சிவப்பு, பச்சை குடமிளகாய் - கால் கப்
 துருவிய மொசரெல்லா சீஸ் - அரை கப்
 துருவிய செடார் சீஸ் - கால் கப்
 ஆரிகானோ - ஒரு டீஸ்பூன்
 ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
 பீட்சா சாஸ் - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். சில நிமிடங்களில் நுரைத்துவரும். மைதா மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து மூடி, வெப்பமான இடத்தில் வைக்கவும். ஒரு மணி நேரத்தில் மாவு பொங்கி இரு மடங்காகும். பொங்கிய மாவைப் பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டவும். எண்ணெய் தடவிய தட்டில் வைத்து மூடவும். பத்து நிமிடங்கள் கழித்து ஓர் உருண்டையை எடுத்து எண்ணெய் தடவிய பீட்சா பேஸ் தட்டில் வைத்து வட்டமாகக் கையால் தட்டவும். பிறகு ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்தவும். 180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் (oven) ஐந்து நிமிடங்கள் வைத்து ‘பேக்’ செய்து எடுக்கவும். அதன் மேல் பீட்சா சாஸ் தடவி, ஸ்வீட் கார்ன், கறுப்பு ஆலிவ், குடமிளகாய்களைப் பரப்பவும். இறுதியாக மொசரெல்லா சீஸ், செடார் சீஸ், ஆரிகனோ, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி  180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 20 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.

பிஷமெல் சாஸ்

தேவையானவை:

 வெண்ணெய் - 100 கிராம்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ச்சிய பால் - 2 கப்
 மொசரெல்லா அல்லது
பார்மேசன் சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - சிறிதளவு
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, மைதா மாவைச் சிறிது சிறிதாகத் தூவி மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அதனுடன் பாலைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறவும். கலவை தோசை மாவு பதத்துக்கு வந்தவுடன் சீஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/2ki96J என்ற link-ல் காணலாம்.

இந்தோ மசாலா பாஸ்தா

தேவையானவை:

 பென்னே பாஸ்தா - 500 கிராம்
 துவரம்பருப்பு - கால் கப்
 பெரிய வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி விழுது - அரை கப் (தக்காளியை வேகவைத்து, தோல் நீக்கி அரைத்த விழுது)
 காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்) - ஒரு கப்
 தக்காளி சாஸ் - கால் கப்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - அரை டீஸ்பூன் 
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு  - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

கொதிக்கும் நீரில் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து, சிறிது நேரம் வேகவிடவும். மிருதுவாக வெந்த உடன் இறக்கி வடிகட்டி பாஸ்தாவையும் வடிகட்டிய தண்ணீரையும் தனித்தனியாக எடுத்து வைக்கவும்.  துவரம்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு அரை வேக்காடு பதமாக வெந்த பிறகு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மஞ்சள்தூள், சீரகம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி விழுது, தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சர்க்கரை, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் துவரம்பருப்பு, பாஸ்தா, ஒரு கப் வடிகட்டிய பாஸ்தா தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு வெந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/ne7rFf என்ற link-ல் காணலாம்.

பனீர் - ஸ்பினச் கெனலோனி

தேவையானவை:

 பெரிய குழாய் வடிவ பாஸ்தா - 100 கிராம்
 தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 பிஷமெல் சாஸ் - ஒரு கப்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - சிறிதளவு

ஸ்டஃபிங் செய்ய:

 பாலக்கீரை - ஒரு கட்டு
 வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 துருவிய பனீர் - 50 கிராம்
 துருவிய சீஸ் - கால் கப்
 ஆரிகானோ - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

கொதிக்கும் நீரில் உப்பு, எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து  மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கி வடிகட்டவும். பிறகு, பாஸ்தாவைக் குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசவும்.  சுத்தம் செய்த பாலக்கீரையைக் கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பிறகு, கீரையைக் குளிர்ந்த நீரால் கழுவிப் பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சேர்த்து உருக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு கீரையைச் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பனீர், ஆரிகானோ, மிளகுத்தூள்,  உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

கீரைக் கலவையை ஒரு பைப்பிங் பையில் போட்டு, குழாய் வடிவ பாஸ்தாவுக்குள் ஸ்டஃபிங் செய்யவும். பேக்கிங் பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் தடவி பிஷமெல் சாஸைச் சேர்த்துப் பரப்பவும். இதன் மேல் ஸ்டஃபிங் செய்த பாஸ்தாவை அடுத்தடுத்து வைத்து, பிறகு மேலே தக்காளி சாஸ், சீஸ் துருவலைப் பரப்பி,   ஆரிகானோவைத் தூவவும்.

180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் (oven) 30 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். பிறகு, மூன்று நிமிடங்கள்  `பிராயில்’ (broil) செய்து பனீர் - ஸ்பினாச் கெனலோனியைப் பரிமாறவும்.

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/MEycmE என்ற link-ல் காணலாம்.

பாஸ்தா கெட்டிக் குழம்பு

தேவையானவை:

 பாஸ்தா (மேக்ரோனி) - அரை கப்
 தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
 சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன்
 தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 புளி - நெல்லிக்காய் அளவு
 மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தோலுரித்த சின்ன வெங்காயம் - 5
 பூண்டு - 5 பல் (இரண்டாக நறுக்கவும்)
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவலுடன் சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கிக் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். அத்துடன்  சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, புளிக்கரைசல், உப்பு, பாஸ்தா சேர்த்து வேகும் வரைக்கும் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.  ஆறிய பிறகு குழம்பு சற்றுக் கெட்டியாகும். தேவையானால் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.

பாஸ்தா சாலட் வித் இத்தாலியன் டிரஸ்ஸிங்

தேவையானவை:

 சுருள் பாஸ்தா - 250 கிராம்
 வேகவைத்த புரொக்கோலி - கால் கப்
 கறுப்பு ஆலிவ் - 2 டேபிள்ஸ்பூன்
 செர்ரி தக்காளி –  8 (பாதியாக நறுக்கவும்)
 வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - சிறிதளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

இத்தாலியன் டிரஸ்ஸிங் செய்ய :

 ஆலிவ் எண்ணெய் - முக்கால் கப்
 பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)
 வினிகர் - கால் கப்
 சர்க்கரை - அரை டீஸ்பூன்
 ஆரிகானோ - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஸ்டர்ட் பேஸ்ட் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இத்தாலியன் டிரஸ்ஸிங் செய்ய கொடுத்துள்ள பொருள்களைக் கண்ணாடி பாட்டிலில் ஒன்றாகச் சேர்த்துக் குலுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம். கொதிக்கும் நீரில் உப்பு, எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து, மூன்று நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

பிறகு, பாஸ்தாவை வடிகட்டி குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசவும். பெரிய பவுலில் பாஸ்தா, புரொக்கோலி, கறுப்பு ஆலிவ், செர்ரி தக்காளி, ஸ்வீட்கார்ன், அரை கப் இத்தாலியன் டிரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஃபிரிட்ஜில் நான்கு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

பேக்டு பாஸ்தா ஃப்ளாரன்டைன் வித் டேங்கி சல்ஸா

தேவையானவை:

 பென்னே பாஸ்தா - 500 கிராம்
 வேகவைத்த காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்)  -  ஒரு கப்
 தக்காளி சாஸ் - கால் கப்
 பிஷமெல் சாஸ் - ஒரு கப்
 ஆரிகானோ -  ஒரு டேபிள்ஸ்பூன்
 மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - சிறிதளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

சல்ஸா செய்ய:

 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 சிவப்பு நிற குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி சாஸ் - கால் கப்
 ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - கால் டீஸ்பூன்
 வினிகர் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் குடமிளகாய் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் தக்காளி சாஸ்,  ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வினிகர் சேர்த்து இறக்கவும். சல்ஸா தயார். கொதிக்கும் நீரில் உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து மிருதுவாக வேகவைத்து (3 நிமிடங்கள்) இறக்கி வடிகட்டவும். பிறகு குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசவும். 

வாணலியில் பிஷமெல் சாஸ், காய்கறிக் கலவை சேர்த்துக் கிளறி இறக்கவும். பேக்கிங் அவனுக்கான பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, முதல் லேயராகக் காய்கறிக் கலவையைப் பரப்பவும். அதன்மீது இரண்டாவது லேயராக வேகவைத்த பாஸ்தாவைப் பரப்பவும். அதன்மீது மூன்றாவது லேயராக சல்ஸாவைப் பரப்பவும். மேலே தக்காளி சாஸ், மொசரெல்லா சீஸ், ஆரிகானோ சேர்க்கவும். 180 டிகிரி செல்ஷியஸுக்கு  ப்ரீஹீட் செய்த அவனில் (oven) 30 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். பிறகு, மூன்று நிமிடங்கள் `பிராயில்’ (broil) செய்து பாஸ்தா ஃப்ளாரன்டைனைப் பரிமாறவும்.

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/sgtmTM என்ற link-ல் காணலாம்.

வெஜ் லஸானியா

தேவையானவை:

 லஸானியா ஷீட்டுகள் - 9
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்) - 2 கப் (வேகவைக்கவும்)
 பூண்டு - 5 பல் (நசுக்கவும்)
 தக்காளி விழுது - அரை கப் (தக்காளியை வேகவைத்து, தோல் நீக்கி அரைத்தது)
 ஆரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - கால் கப்
 பாஸ்தா சாஸ் - அரை கப்
 பிஷமெல் சாஸ் - கால் கப்
 மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு
 மிளகாய்த்தூள் -  ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 வெண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

கொதிக்கும் நீரில் உப்பு, எண்ணெய், லஸானியா ஷீட்டுகளைச் சேர்த்து  மிருதுவாக வேகவைத்து இறக்கவும் (5 நிமிடங்கள்). பிறகு வடிகட்டி ஷீட்டுகளைத் தனித் தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும்.  அதனுடன் தக்காளி விழுது, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிக் கலவையைச் சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி, மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மூன்று லஸானியா ஷீட்டுகளை அடுத்தடுத்து வைக்கவும். ஷீட்டுகள் மீது பாஸ்தா சாஸ், காய்கறிக் கலவையைப் பரப்பவும். அதன் மேல் மூன்று லஸானியா ஷீட் வைத்து பாஸ்தா சாஸ், காய்கறிக் கலவையைப் பரப்பவும். இறுதியாக மூன்று லஸானியா ஷீட்டை மேலே வைத்து பிஷமெல் சாஸ் தடவி, சீஸ், ஆரிகானோ தூவவும். அவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்து 30 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும்.  பிறகு, மூன்று நிமிடங்கள் `பிராயில்’ (broil) செய்து வெஜ் லஸானியாவைப் பரிமாறவும்.

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/mA3WBo என்ற link-ல் காணலாம்.

ஸ்டஃப்டு பாஸ்தா ஷெல்ஸ்

தேவையானவை:

 பெரிய சங்கு வடிவ பாஸ்தா - 250 கிராம்
 வேகவைத்த காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், ஸ்வீட்கார்ன்) - ஒரு கப்
 தக்காளி சாஸ் - கால் கப்
 பிஷமெல் சாஸ் - ஒரு கப்
 சோர் (புளிப்பு) க்ரீம் - கால் கப்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

பாஸ்தா - பீட்சா ரெசிப்பி

செய்முறை:

கொதிக்கும் நீரில் உப்பு, எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து மிருதுவாகும் வரை சில நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். பிறகு, பாஸ்தாவை வடிகட்டி  குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசவும்.  வாணலியில்  பிஷமெல் சாஸ், தக்காளி சாஸ், க்ரீம், காய்கறிக் கலவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.  வேகவைத்த சங்கு பாஸ்தாவுக்குள் காய்கறிக் கலவையை நிரப்பிப் பரிமாறவும்.

குறிப்பு : கால் கப் ஃப்ரெஷ் க்ரீமுடன் கால் டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்தால், `சோர் க்ரீம்’ தயார்.

ரெசிப்பி வீடியோவை https://goo.gl/VTXpNS என்ற link-ல் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு