Published:Updated:

கொய்யாப்பழ ரெசிப்பி

விகடன் விமர்சனக்குழு

படங்கள்: க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

விலை குறைவாகவே இருந்தாலும் கொய்யாப்பழம் அளிக்கும் நன்மைகள் விலை மதிப்பற்றவை. கொய்யாவில் வைட்டமின் சி, ஏ சத்துகளுடன் நார்ச்சத்தும் இருப்பதால், குடலைச் சுத்தம்செய்து தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்களும் உண்ணக்கூடிய பழமாக விளங்குகிறது.

கொய்யாப்பழ ரெசிப்பி

இப்படி அதிக அளவில் பயன் தரக்கூடிய கொய்யாவைப் பழமாக மட்டுமே அல்லாமல், விதவிதமாகச் சமைத்தும் சாப்பிட முடியும் என சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

கொய்யா சாக்லேட் வித் நட்ஸ்

தேவையானவை:

 பழுத்த கொய்யாப்பழம் -  4 (சிறிய துண்டுகளாக்கவும்)
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 அகர் அகர் -  ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி கலவை -  டேபிள்ஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 குக்கிங் சாக்லேட் பார் - 100  கிராம்
 சில்வர் பால்ஸ் - சிறிதளவு (அலங்கரிக்க)

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாத்துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். கொய்யாப்பழம் பாதி வெந்த பிறகு இறக்கவும். ஆறிய பிறகு அரைத்து வடிகட்டவும்.

நான் - ஸ்டிக் பானில் நெய்விட்டு உருக்கவும். அதனுடன் சர்க்கரை, கொய்யா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து பெரிய தீயில் அடுப்பை வைத்து, சில நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். அதனுடன் பாதாம், முந்திரி கலவை சேர்த்துக் கலக்கவும். அகர் அகருடன் சுடுநீர்விட்டுக் கரைத்து கொய்யா கலவையுடன் சேர்க்கவும்.

கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி, ஆறிய பிறகு சில மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, சதுர துண்டுகளாக்கவும்.

சாக்லேட் பார்களை மைக்ரோவேவ் அவனில் வைத்து உருக்கி எடுக்கவும். அதில் கொய்யாப்பழச் சதுர துண்டுகளை முக்கி எடுக்கவும். மேலே சில்வர் பால்ஸ்களைத் தூவி அலங்கரித்து ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

கொய்யா - ஆப்பிள் சாலட்

தேவையானவை:

 கொய்யாப்பழம் - ஒன்று
 கேரட் - ஒன்று
 ஆப்பிள் - ஒன்று
 ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்
 ஆரஞ்சுப் பழச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாப்பழம், கேரட், ஆப்பிள் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கவும்.

சிறிய பவுலில் ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சுப் பழச்சாறு, உப்பு, மிளகுத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும்.

கொய்யா, கேரட், ஆப்பிள் துண்டுகளைப் பெரிய பவுலில் போட்டு, எண்ணெய்க் கலவை சேர்த்துக் கலக்கவும். உடனே பரிமாறவும்.

கொய்யா - பனானா சாட்

தேவையானவை:

 பழுத்த கொய்யாப்பழம் - 2
 பழுத்த வாழைப்பழம் -  2
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யா, வாழைப்பழத்தைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் பெரிய பவுலில் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.

உடனே பரிமாறவும்.

கொய்யா டிலைட்

தேவையானவை:

 பழுத்த கொய்யாப்பழம் -   2
 சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - கால் கப்
 சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 தண்ணீர் - 2 கப்
 புதினா இலைகள் – தேவையான அளவு

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாப்பழத்தைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுச் சர்க்கரை சேர்க்கவும்.

அதனுடன் புதினா இலைகள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிகட்டி, அதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

கொய்யா ஐஸ்க்ரீம்

தேவையானவை:

 பழுத்த கொய்யாப்பழம் – 5 அல்லது 6 (சிறிய துண்டுகளாக்கவும்)
 கண்டன்ஸ்டு மில்க் - 150 மில்லி
 விப்பிங் ஃக்ரீம் – ஒரு கப்

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாப்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து அரைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் க்ரீமை அடித்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் குளிர வைக்கவும்.

குளிர்ந்த க்ரீமுடன் கொய்யா விழுது சேர்த்து மென்மையாகக் கலக்கவும். மூடி போட்டு இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, ஸ்கூப்பரால் ஐஸ் க்ரீமை எடுத்துப் பரிமாறவும்.

கொய்யா ஜெல்லி

தேவையானவை:

 பழுத்த கொய்யாப்பழம்  – அரை கிலோ (சிறிய துண்டுகளாக்கவும்)
 சர்க்கரை - அரை கிலோ
 எலுமிச்சைச் சாறு – அரை கப்
 தண்ணீர் – அரை லிட்டர்

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

குக்கரில் கொய்யாப்பழத் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

ஆறிய பிறகு மெல்லிய மஸ்லின் துணியில் வடிகட்டவும்.

அடிகனமான வாணலியில், வடிகட்டிய கொய்யா சாறு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து, கிளறிக்கொண்டே கலவை கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும். சுத்தமான பாட்டிலில் சேகரிக்கவும்.

கொய்யா கராச்சி அல்வா

தேவையானவை:

 கொய்யாப்பழச் சாறு – முக்கால் கப்
 கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 1/3 கப்
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 முலாம்பழ விதைகள் – ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் – அரை கப்
 நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

நான்-ஸ்டிக் கடாயில் சோள மாவுடன் கொய்யாப்பழச் சாறு, தண்ணீர், சர்க்கரை சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.

சோள மாவு - கொய்யாப்பழக் கரைசலைச் சிறு தீயில் வைத்து கலவைக் கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்.

அதனுடன் நெய் சேர்த்துக் கலவை கண்ணாடி போல வரும் வரை கிளறவும்.

முலாம்பழ விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய் தடவிய தட்டில் கலவையை ஊற்றவும். ஆறிய பிறகு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

கொய்யா கட்டோரி

தேவையானவை:

 கொய்யாப்பழம் – ஒன்று
 வேகவைத்த கொண்டைக்கடலை – ஒரு கப்
 மாதுளை முத்துகள் – ஒரு கப்
 பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
 நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
 சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாப்பழத்தை இரண்டாக நறுக்கி, நடுவே உள்ள சதைப்பகுதியை தனியாக எடுக்கவும்.

கொய்யாப்பழச் சதைப்பகுதியுடன் மற்ற பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். அவற்றை நன்கு கலக்கவும்.

கொய்யாப்பழக் கிண்ணத்தில் கலவையை நிரப்பிப் பரிமாறவும்.

கொய்யா - புதினா சட்னி

தேவையானவை:

 கொய்யாப்பழம் - 2
 தோல் சீவிய இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு
 பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
 புதினா இலைகள் – கைப்பிடியளவு
 உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
 சீரகம் -  ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பை சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து எடுக்கவும். அதனுடன் புதினா இலைகள், கொய்யாத் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். பராத்தாவுடன்  பரிமாறவும்.

கொய்யா ஸ்மூத்தி

தேவையானவை:

 கொய்யாப்பழச் சாறு – ஒரு கப்
 வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப்

கொய்யாப்பழ ரெசிப்பி

செய்முறை:

கொய்யாப்பழச் சாற்றுடன் ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுக்கவும்.

மெல்லிய, உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு