Published:Updated:

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

விகடன் விமர்சனக்குழு

படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

கூடைப்பந்து விளையாடும்போது, பந்து அங்குமிங்குமாகத்  தாவிக்கொண்டிருக்கும். ஒருவழியாக வீரர்கள் தாவிக் குதித்து கூடைக்குள் போடும் பந்துதான் வெற்றிக்கான மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும.் பந்தானது கூடைக்குள் நுழையும் காட்சியைப் பார்ப்பதே அலாதியான சுகம்தான். 

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

நாம் அழகாக ரசிக்கும் இந்த விளையாட்டிலிருந்து `பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி’ என்கிற புதுவித கான்செப்ட்டை உருவாக்கி, சுவையான ரெசிப்பிகளை அளித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார். வண்ணமயமான இந்த பால்ஸை மட்டுமல்ல, பேஸ்கட்டையும் சுவைக்க முடியும் என்பது சிறப்பு!

கோகனட் பால்ஸ் வித் மார்பிள் சாக்லேட் பேஸ்கட்

தேவையானவை:

 தேங்காய்த் துருவல் - 2 கப்
 பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)
 சர்க்கரை - ஒரு கப்
 கசகசா - அரை டீஸ்பூன்
 கிராம்பு - 2
 நெய் - சிறிதளவு
 பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

மார்பிள் சாக்லேட் பேஸ்கட் செய்ய:

 வொயிட் சாக்லேட்  பார் - ஒன்று (துருவவும்)
 லைட் (அ) டார்க் சாக்லேட் பார் – ஒன்று (துருவவும்)
 சிலிக்கான் மோல்டு – தேவையான அளவு

அலங்கரிக்க:

 முற்றிய தேங்காயின் துருவல் - கால் கப்
 விரும்பிய ஃபுட் கலர் - சிறிதளவு
 சர்க்கரை - சிறிதளவு

செய்முறை:

வெறும் வாணலியில் கிராம்பு, கசகசாவைத் தனித்தனியாக வறுத்து எடுத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தேங்காய்த் துருவல், சிறிதளவு நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு சர்க்கரை, கசகசா - கிராம்புத்தூள், பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கலவை சுருண்டு வரும்போது இறக்கவும். ஆறவிட்டு, கைபொறுக்கும் சூட்டில் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

சாக்லேட் துருவல்களைத் தனித்தனியாக டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். இதை சிலிக்கான் மோல்டில் முக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் 15 -20 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சாக்லேட் பேஸ்கட் ரெடி. மோல்டின் ஒரு பக்கத்தை உருக்கிய வொயிட் சாக்லேட்டிலும், மறுபக்கத்தை உருக்கிய லைட் (அ) டார்க் சாக்லேட்டிலும் முக்கி எடுத்தால் மார்பிள் மாதிரி தெரியும். அல்லது பிரஷ்ஷால் உருக்கிய வொயிட், டார்க் சாக்லேட்டை மாறி மாறி சிலிக்கான் மோல்டில் தடவி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள முற்றிய தேங்காயின் துருவலைத் துணியில் உலர்த்தி ஈரப்பசை போனதும் ஃபுட் கலர், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.

மார்பிள் சாக்லேட் பேஸ்கட்டினுள் கலர் தேங்காய்த் துருவலைப் போட்டு அதன்மீது தேங்காய் உருண்டைகளை வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

சாக்லேட் பார்களை நேரடியாக நெருப்பில் உருக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதன்மீது மற்றொரு பாத்திரத்தில் சாக்லேட் துருவல் சேர்த்து உருக்குவதே டபுள் பாயிலிங். அவனில் (oven) சில நிமிடங்கள் வைத்து எடுத்தும் உருக்கலாம்.

சாக்கோ சிப்ஸ் பால்ஸ் வித் ஃப்ளவர் பேஸ்கட்

தேவையானவை:

 ரெடிமேட் குலோப் ஜாமூன் மிக்ஸ் பவுடர் - ஒரு கப்
 சாக்கோ சிப்ஸ் - கால் கப்
 பால் – தேவையான அளவு (காய்ச்சி ஆறவைத்தது)
 நெய் - சிறிதளவு
 சர்க்கரை - அரை கப்
 கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு துளி
 எண்ணெய் - தேவையான அளவு ஃப்ளவர் பேஸ்கட் செய்ய
 மைதா மாவு - ஒரு கப்
 உப்பு - ஒரு சிட்டிகை
 பேக்கிங் பவுடர் - சிறிதளவு
 குளிர்ந்த நீர் – தேவையான அளவு
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் - சிறிதளவு
 ஃப்ளவர் வடிவ பிஸ்கட் கட்டர், மோல்டு – தேவைக்கேற்ப

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

அலங்கரிக்க ரோஜாப்பூ செய்ய:

 ஃபாண்டன்ட்  மாவு -  தேவையான அளவு (ரெடிமேடாக எசென்ஸ் மார்ட்டில் கிடைக்கும்)
 விருப்பமான ஃபுட் லிக்விட் கலர் - சில துளிகள்

செய்முறை:

குலோப் ஜாமூன் மிக்ஸுடன் சாக்கோ சிப்ஸ், பால்விட்டு கெட்டியாகப் பிசையவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி இறக்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பொரித்த சாக்கோ சிப்ஸ் உருண்டைகளைப் பாகில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு எடுத்து 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ளவர் கூடை செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகப் சேர்த்துப் பிசைந்து மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சப்பாத்திகளாகத் திரட்டி பூ வடிவ பிஸ்கட் கட்டரால் வெட்டி எடுக்கவும்.

மோல்டில் சிறிதளவு வெண்ணெய் தடவி இந்த பூ வடிவத்தை வைக்கவும். ஓடிஜி அவனில் 150 டிகிரி செல்ஷியஸில் 15-20 நிமிடங்கள் வரை வைத்து, பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்க பூ வடிவ கூடை ரெடி.
ஃபாண்டன்ட் மாவுடன் லிக்விட் ஃபுட் கலர் சேர்த்துப் பிசைந்து, சிறிய திலக வடிவங்கள் செய்து அழுத்தினால் பூவின் இதழ்கள் ரெடி. நடுப்பகுதி செய்ய சிறிதளவு மாவை எடுத்து பாய் மாதிரி சுருட்டவும். அதை சுற்றி திலக வடிவங்களை ஒட்டி 3 மணி நேரம் காயவைத்து எடுத்தால் பூ ரெடி.  ஃப்ளவர் பேஸ்கட்டில் பாகை ஊற்றி, அதனுள் சாக்கோ சிப்ஸ் உருண்டைகளை வைக்கவும். மேலே கலர் ரோஜாப்பூ வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

பூ செய்யத் தெரியாதவர்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் பூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

பிரெட் சீஸ் பால்ஸ் வித் மேட்

தேவையானவை:

 பிரெட் ஸ்லைஸ்கள் - 8
 உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீஸ் ஸ்லைஸ்கள் - 8
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பழுத்த வாழைப்பழம் - 2 (மசிக்கவும்)
 உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

மேட் செய்ய:

 மைதா மாவு, கோதுமை மாவு - தலா கால் கப்
 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 பொடித்த சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

 கலர் இனிப்பு சேமியா - 2 டேபிள்ஸ்பூன்
 பீநட் பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பிரெட்டின்மீது சிறிதளவு தண்ணீர் தெளித்துக் குழவியால் தேய்க்கவும். அதன் மீது சீஸ் ஸ்லைஸ் வைக்கவும். அதன்மீது பெரிய வட்ட வடிவ மூடியை வைத்து அழுத்தி, மிகுதியாக உள்ள பகுதியை எடுத்துவிடவும். வட்ட வடிவம் கிடைக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய்த்தூள், உலர்திராட்சை, முந்திரி சேர்த்துப் பிசிறவும். இந்தப் பூரணத்தை வட்ட வடிவ பிரெட் - சீஸ்மீது வைத்து மூடவும். மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகக் கரைக்கவும்.  வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிரெட் - சீஸ் உருண்டைகளை மைதா கலவையில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  பொரித்த உருண்டைகளின்மீது பீநட் பட்டர் தடவி, கலர் இனிப்பு சேமியாவில் புரட்டி எடுத்து 5 - 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

மேட்  செய்ய கொடுத்துள்ள பொருள்களுடன் குளிர்ந்த நீர்்விட்டுப் பிசைந்து மூடி அரை மணி நேரம் வைக்கவும். பிறகு, சப்பாத்தியாகத் திரட்டி நீளவாக்கில் 8 துண்டுகளாக்கவும். இந்தத் துண்டுகளை பாய் பின்னுவது போல பின்னவும் (படம் பார்க்கவும்). அதாவது, முதல் நான்கு துண்டுகளை அடுத்தடுத்து அடுக்கிவைக்கவும்.  மீதி நான்கு துண்டுகளை  படுக்கை வாட்டில் ஒன்றுவிட்டு ஒன்று கோத்து அழுத்தம் தரவும். சோள மாவுடன் தண்ணீர்விட்டு, பேஸ்ட் போல கரைத்து பிரிந்து வராமல் ஓரங்களை ஒட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மேட்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அல்லது ஓடிஜி அவனில் 150 டிகிரி செல்ஷியஸில் 15 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்தும் எடுக்கலாம்.

மேட் பின்னல்கள் மேலே பிரெட் - சீஸ் உருண்டைகளை வைத்துப் பரிமாறவும்.

மிக்ஸட் சீட்ஸ் பால்ஸ் வித் ஸ்டார் பேஸ்கட்

தேவையானவை:

 சியா சீட்ஸ் - அரை கப்
 வெள்ளை அல்லது கறுப்பு எள் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
 வெல்லத் துருவல் - அரை கப்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வறுத்துப் பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

ஸ்டார் பேஸ்கட் செய்ய:

 பொட்டுக்கடலை - அரை கப்
 வெல்லத் துருவல் - கால் கப்
 சிலிக்கான் மோல்டு – தேவையான  அளவு

அலங்கரிக்க:

 சில்வர் ஃபாயில் தாள் - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சியா சீட்ஸ், ஆளி விதை, எள் ஆகியவற்றைத்  தனித்தனியாக வறுத்து எடுக்கவும். வெல்லத் துருவலுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு எடுக்கவும். வாணலியில் அரைத்த வெல்லத்துடன் நெய், வறுத்த சீட்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து சில்வர் ஃபாயில் தாளில் புரட்டி எடுக்கவும். ஸ்டார் பேஸ்கட் செய்ய கொடுத்துள்ள வெல்லத் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, பொட்டுக்கடலை போட்டுக் கிளறி இறக்கவும். இதனை ஸ்டார் வடிவ சிலிக்கான் மோல்டில் ஊற்றிச் சிறிது நேரம் வைக்கவும். நன்கு செட் ஆனவுடன் நடுவில் ஓர் அழுத்தம் தரவும்.

15-20 நிமிடங்களில் ஆறிவிடும். பிறகு சிலிக்கான் மோல்டிலிருந்து எடுக்கவும். இதில் மிக்ஸ்டு விதை உருண்டைகளை வைத்துப் பரிமாறவும்.

சாபுதானா மசாலா ஓட்ஸ் பால்ஸ் வித் நெஸ்ட் பேஸ்கட்

தேவையானவை:

 ஜவ்வரிசி - ஒரு கப்
 கெட்டித் தயிர் - ஒரு கப்
 பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)
 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - பாதி (சாறு பிழியவும்)
 கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 வறுத்த வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 மசாலா ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

நெஸ்ட் பேஸ்கட் செய்ய

 தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 எலுமிச்சைப்பழம்  - பாதி (சாறு பிழியவும்)
 பெரிய ஸ்டீல் வடிகட்டி, அதைவிட சிறிய ஸ்டீல் வடிகட்டி (வலைபோட்டவை) - தலா ஒன்று

அலங்கரிக்க:

 தயிர், சாட் மசாலாத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை 4 - 5 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியுடன் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, உப்பு, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பொடி, தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர்  தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக்கவும். மைதாவுடன் நீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை மைதா கரைசலில் முக்கி எடுத்து மசாலா ஓட்ஸில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். நெஸ்ட் பேஸ்கட் செய்ய கொடுத்துள்ள உருளைத் துருவலைத் துணியில் பரப்பி உலரவிடவும். பிறகு, பாத்திரத்துக்கு மாற்றி அதனுடன் உப்பு, சோள மாவு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பெரிய வடிகட்டியில் உருளைக் கலவையைப் பரப்பி அதன் மீது சிறிய வடிகட்டியை வைத்து  அழுத்தி, சூடான எண்ணெயில் வைக்கவும். சிறிது நேரம் வெந்ததும் மேல் வடிகட்டியை எடுத்துவிட்டுத் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அழகான உருளைக் கூடை ரெடி. இதில் பொரித்த சாபுதானா உருண்டைகளை வைத்து தயிர் ஊற்றி, சாட் மசாலாத்தூள் தூவி அப்படியே சாப்பிடவும்.

சோயா சங்க்ஸ் - கார்ன் பால்ஸ் கிரேவி வித் பேஸ்கட்

தேவையானவை:

 சோயா சங்க்ஸ் - அரை கப்
 அமெரிக்கன் சோள முத்துகள் - அரை கப்
 கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 ஆய்ந்த அகத்திக்கீரை - கால் கப்
 பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் -  தேவையான அளவு
 உப்பு - சிறிதளவு

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

கிரேவி செய்ய:

 பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ், சோயா சாஸ், செஷ்வான் சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு -  சிறிதளவு

பேஸ்கட் செய்ய:

 மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
 ஓமம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - சிறிதளவு

செய்முறை:

சோயா சங்க்ஸ், சோள முத்துகளைச் சுடுநீரில் 10  நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்துப் பிழிந்து எடுக்கவும். அதனுடன் அகத்திக்கீரை, உப்பு, தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கீரை கலவையைச் சேர்த்து வதக்கி கிளறி இறக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.  வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு இந்த உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சாஸ் வகைகள், உப்பு, மிளகுத்தூள், சோள மாவு கரைசல் சேர்த்துக் கிளறி, கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும். 

பேஸ்கட் செய்ய கொடுத்துள்ள பொருள்களுடன் குளிர்ந்த நீர் விட்டுப் பிசைந்து மூடி அரை மணி நேரம் வைக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டி, கிண்ணம் போல செய்யவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுக் கிண்ணங்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இந்தக் கிண்ணங்களில் கிரேவியை ஊற்றி, மேலே சோயா சங்க்ஸ் - கார்ன் உருண்டைகளைப் போட்டுப் பரிமாறவும். விரும்பினால் ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கொத்தமல்லித்தழை, பொரித்து எடுத்துப் பொடித்த அப்பளம் தூவிப் பரிமாறலாம்.

நட்ஸ் பால்ஸ் வித் பிரெட் பேஸ்கட்

தேவையானவை:

 பிஸ்தா பொடி - ஒரு கப் (வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சலித்தது)
 பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 பச்சை ஃபுட் கலர் -  சிறிதளவு
 பொடித்த சர்க்கரை - கால் கப்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 முந்திரிப்பொடி - ஒரு கப் (வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சலித்தது)
 சர்க்கரை - ஒரு கப்
 சீவிய நட்ஸ் கலவை - கால் கப்
 உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

பிரெட் பேஸ்கட் செய்ய:

 பிரெட் ஸ்லைஸ் – தேவையான அளவு
 ஃப்ரூட் ஜாம், வெண்ணெய் - சிறிதளவு
 குழிவான ட்ரே (`அவன்’ ட்ரே) -  ஒன்று

செய்முறை:

நான் - ஸ்டிக் கடாயில் சர்க்கரையைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதனுடன் முந்திரிப்பொடி, பால் பவுடர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிதளவு நெய்விட்டுக் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கவும். ஆறிய பிறகு கைகளால் நன்கு பிசையவும். இதைச் சப்பாத்திகளாகத் திரட்டி நடுவில் உலர் திராட்சை,  நட்ஸ் வைத்து மூடவும். பிஸ்தா பொடியுடன், பொடித்த சர்க்கரை, பச்சை ஃபுட் கலர், சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். கையில் நெய் தடவிக்கொண்டு இந்தக் கலவையைச் சப்பாத்தியாகத் திரட்டி,  நட்ஸ் - முந்திரி உருண்டையை வைத்து மூடவும். உருண்டை விரிசல் விடாமல் ஸ்மூத் ஆக்கவும். பிரெட் ஸ்லைஸுடன் சிறிதளவு தண்ணீர்  தெளித்து அப்பளக் குழவியால் தேய்க்கவும். வட்ட வடிவ மூடியால் அல்லது பிஸ்கட் கட்டரால் வெட்டி எடுக்கவும். குழியான ட்ரேயில் சிறிதளவு வெண்ணெய் தடவி, பிரெட் துண்டை வைத்து அழுத்தவும். இது கிண்ணம் வடிவில் வரும். இதை ஓடிஜி அவனில் 150 டிகிரி செல்ஷியஸில் 15 - 20 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். இதன் விளிம்பில் ஜாம் பூசி அலங்கரிக்கவும். இந்த பேஸ்கட்டில் நட்ஸ் பால்ஸ் வைத்துப் பரிமாறவும்.

ஸ்டப்டு ஃப்ரை பால்ஸ் வித் பட்டர்ஃப்ளை பேஸ்கட்

தேவையானவை:

 பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்
 கசகசா -  சிறிதளவு
 ஜவ்வரிசி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
 வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 காராமணி - அரை கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
 ஓமம் - அரை டீஸ்பூன்
 வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - சிறிதளவு
 நறுக்கிய உருளைக்கிழங்கு - 2 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
 பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

பட்டர் ஃப்ளை பேஸ்கட் செய்ய:

 பட்டாம்பூச்சி வடிவ சிலிக்கான் மோல்டு – தேவைக்கேற்ப
 லைட் சாக்லேட் பார் - பாதி அல்லது தேவையான அளவு

செய்முறை:

காராமணியை வேகவைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு உப்பு, நல்லெண்ணெய், அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். அதனுடன் ஓமம், எள் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, காராமணி,  உருளைக்கிழங்கு, பனீர் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஜவ்வரிசி பொடி சேர்த்துப் புரட்டி இறக்கவும். இதுவே பூரணம். மாவை  சிறிய உருண்டைகளாக்கி வட்ட வடிவமாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். பிறகு கசகசாவில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு  உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சாக்லேட் பாரை டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும்.  உருக்கிய சாக்லேட்டை, பட்டாம்பூச்சி வடிவ சிலிக்கான் மோடில் பிரஷ்ஷால் தடவவும். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து மோல்டிலிருந்து எடுத்தால் சாக்லேட் கூடை ரெடி.  அதில் ஸ்டஃப்டு பால்ஸ் வைத்துப் பரிமாறவும். கூடையுடன் சாப்பிடலாம். இனிப்பும், காரமும் கலந்து சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு:

பதப்படுத்திய அரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி அரைத்தது. ரெடிமேடாகவும் கிடைக்கிறது.

சாக்லேட் பார்களை நேரடியாக நெருப்பில் உருக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  கொதிக்கவைத்து, அதன்மீது மற்றொரு பாத்திரத்தில் சாக்லேட் துருவல் சேர்த்து உருக்குவதே டபுள் பாயிலிங்.

நூடுல்ஸ் பால்ஸ் வித் பானிபூரி பேஸ்கட்

தேவையானவை:

 ஃப்ளெய்ன் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
 பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய பீட்ரூட் - கால் கப்
 ரஸ்க் தூள் - கால் கப்
 ரெட் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்
 வேகவைக்காமல் உடைத்த நூடுல்ஸ் -  கால் கப்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

பானி பூரி பேஸ்கட் செய்ய:

 மைதா மாவு - அரை கப்
 ரவை - கால் கப்
 கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், பீட்ரூட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, ரெட் சில்லி சாஸ் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும், நூடுல்ஸ் சேர்த்து வேகவைக்கவும். பிறகு, ரஸ்க்தூள் சேர்த்துப் புரட்டி இறக்கவும். ஆறிய பிறகு உருண்டைகளாகப் பிடிக்கவும். மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்துக் குழைக்கவும்.  உருண்டைகளை மைதா கரைசலில் முக்கி எடுத்து நூடுல்ஸ் தூளில் புரட்டவும்.  வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ரவையுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு சிறிய உருண்டைகளாக்கி சிறு வட்டமாகத் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, திரட்டிய பூரிகளைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். மினி பூரி ரெடி. அதை சரி சமமாக வெட்டி ஒன்றன் கீழ் மற்றொன்றை வைக்கவும். மினி பேஸ்கட் ரெடி. இதன்மீது நூடுல்ஸ் உருண்டைகளை வைத்துப் பரிமாறவும்.

கிரன்ச் குயிக் பால்ஸ் வித் கோன்

தேவையானவை:

 விருப்பமான ஃக்ரீம் பிஸ்கட் - 20
 கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
 சுகர் கலர் பால்ஸ் - சிறிதளவு
 இனிப்பு சில்வர் பால்ஸ் - தேவையான அளவு
 கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
 பால் பவுடர், வறுத்து பொடித்த பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 ரெடிமேட் ஐஸ்க்ரீம் கோன் - தேவையான அளவு
 விப்பிங் ஃக்ரீம் - அரை கப்

பேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி

செய்முறை: 

பிஸ்கட்டுடன் கோகோ பவுடர் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். அதனுடன் பால் பவுடர், பொடித்த பாதாம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.  சில உருண்டைகளை கலர் சுகர் பால்ஸ்மீது புரட்டி எடுக்கவும். மீதமுள்ள உருண்டைகளை சில்வர் இனிப்பு பால்ஸ்மீது புரட்டி எடுக்கவும். விப்பிங் ஃக்ரீமை நன்கு அடித்து ரெடிமேட் கோனில் நிரப்பவும். அதன்மீது உருண்டைகளை வைத்துப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு