பிரீமியம் ஸ்டோரி

``ஹெல்த்தியாக டெஸர்ட்ஸ் செய்வது ஈஸிதான். வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், தேன், நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழம், உலர்திராட்சை, பேரீச்சை சிரப் (Date syrup) ஆகியவற்றைச் சேர்க்கலாம். பழங்கள் சேர்த்து செய்யும்போது பழங்களில் இயற்கையாக உள்ள இனிப்பே போதும். ஃப்ரெஷ் க்ரீமுக்குப் பதிலாகத் தயிர் சேர்க்கலாம்.

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

இதேபோல, கேக் செய்யும்போது மைதாவுக்குப் பதில் கோதுமை மாவு, வெண்ணெய்க்குப் பதில் எண்ணெய், வெள்ளை சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் ஹெல்த்தியான டெஸர்ட்டுகளை உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள்கூட கவலையில்லாமல் சாப்பிடலாம்’’ என்று கூறும் சமையல் கலைஞர்  ஜானகி அஸாரியா, அத்தகைய டெஸர்ட் வகைகளை அழகியப் படங்களுடன் இங்கே வழங்குகிறார்.

வாட்டர் மெலன் - பனானா சோர்பே

தேவையானவை:  

 தர்பூசணித் துண்டுகள் – ஒரு  கப்
 பெரிய வாழைப்பழம் - ஒன்று
 எலுமிச்சைச் சாறு  - அரை  டீஸ்பூன்  
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

வாழைப்பழத்தின் தோலை உரித்து, பெரிய துண்டுகளாக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஃப்ரீசரில்  மூன்று மணி நேரம் வைத்து  எடுக்கவும். இதனுடன் தர்பூசணித்  துண்டுகள், தேன் சேர்த்து மிக்ஸியில் போட்டு விட்டு விட்டு ஸ்மூத்தான விழுதாக  அரைத்து எடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரீசரில் 4 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

அரைத்த விழுதை ஐஸ்க்ரீம் மேக்கரில் போட்டு எடுத்து ஐஸ்க்ரீம் போல செய்யலாம். ஸ்கூப்பர் மூலம் எடுத்துப் பரிமாறலாம்.

பீட்ரூட் பைனாப்பிள் அல்வா

தேவையானவை:

 தோல் சீவி, துருவி, வேகவைத்த பீட்ரூட் - ஒரு  கப்
 துருவி, ஆவியில் வேகவைத்த பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) – ஒரு கப்
 துருவிய வெல்லம் - ஒரு  கப்
 நெய் -  2 டீஸ்பூன்  
 பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்  
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்  

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு சூடாக்கி பீட்ரூட் துருவல், அன்னாசிப்பழத் துருவல்  சேர்த்து வதக்கவும். அதனுடன் வெல்லத் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாகி, சுருண்டு வரும்போது பால் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே பாதாம்,  முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

ஃப்ரூட் ஸ்ரீகண்ட்  

தேவையானவை: 
 
 கெட்டியான தயிர் - ஒரு கப்
 பழுத்த சீத்தாப்பழம் - 3
 உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 சூடான பால் - ஒரு டேபிள்ஸ்பூன்    
 குங்குமப்பூ - ஒரு  சிட்டிகை  
 பொடியாக நறுக்கிய பாதாம்,
முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

குங்குமப்பூவைப் பாலில் ஊறவைக்கவும். சுத்தமான வெள்ளைத் துணியில் தயிரைச் சேர்த்து மூட்டையாகக் கட்டி 4 மணி நேரம் தொங்கவிட்டு, தண்ணீரை வடியவிடவும். சீத்தாப்பழத்தின்  விதைகளை நீக்கி, விழுதைத் தனியாக எடுக்கவும். வடிகட்டிய தயிருடன் சீத்தாப்பழ விழுது,  ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் குங்குமப்பூ, உலர்திராட்சை, பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்று  பரிமாறவும்.

ஆப்பிள் பிர்னி

தேவையானவை:  

 காய்ச்சாத பால் - அரை லிட்டர்  
 ஆப்பிள் - ஒன்று (தோல் சீவி, துருவவும்)
 அரிசி - ஒரு  டேபிள்ஸ்பூன்
 நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 பேரீச்சை சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
 உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

அரிசியைக் கழுவி, சிறிதளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் ரவை போல கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்றாகக் கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்த அரிசி விழுது சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கலவை சிறிதளவு  கெட்டியானவுடன் இறக்கி, பேரீச்சை சிரப், உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். ஆப்பிள் துருவலுடன், நாட்டுச் சர்க்கரை, கால் கப் தண்ணீர்  சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். ஆப்பிள் நன்கு வெந்ததும் இறக்கி ஆறவைத்து, பால் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பரிமாறவும்.   

கேரட் வால்நட் கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒன்றரை கப்
 தயிர் - அரை கப்
 பால் - அரை கப்
  (காய்ச்சி ஆறவைத்தது)
 பேரீச்சை சிரப் - அரை கப்
 கேரட் துருவல் - அரை கப்
 பொடியாக நறுக்கிய பேரீச்சைத் துண்டுகள் - அரை  கப்
 பொடியாக நறுக்கிய வால்நட் - கால்  கப்
 எண்ணெய் – அரை கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்  
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 உப்பு - ஒரு  சிட்டிகை     

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, பட்டைத்தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து 2 முறை சலித்து எடுக்கவும். தயிருடன் பால், எண்ணெய், பேரீச்சை சிரப் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் அல்லது விப்பரால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். அதனுடன் பேரீச்சைத் துண்டுகள், வால்நட்,  கேரட் துருவல், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, மாவைச் சேர்த்து கரண்டியால் கேக் கலவையை நன்றாகக் கலக்கவும். பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி, கேக் கலவையைச் சமமாகப் பரப்பி 180 டிகிரி சென்டிகிரேடில் ப்ரீ ஹீட் செய்த அவனில் (oven) 45  நிமிடங்கள் முதல் 50  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும் (டூத்  பிக் அல்லது கத்தியை கேக்கின் உள்ளே குத்தி மாவு ஒட்டாமல் நன்றாக பேக் ஆகியிருக்கிறதா என்று உறுதி செய்த பின் வெளியே எடுக்கவும்). ஆறிய பிறகு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

ஃப்ரூட் பாஃபே

தேவையானவை:

 தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிய பழக்கலவை (ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி) – ஒரு கப்
 கெட்டியான தயிர் - அரை கப்
 உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சிறிய துண்டுகளாக நறுக்கிய நட்ஸ் (வால்நட், பாதாம் போன்றவை) – ஒரு டேபிள்ஸ்பூன்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

வெறும் வாணலியில் ஓட்ஸைச் சேர்த்து வாசனை வரும் வரை லேசாக வறுத்து எடுக்கவும். தயிருடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து, கட்டியில்லாமல் கரைக்கவும். தயிர்க்கலவையையும், பழக்கலவையையும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதல் லேயராகப் பாதியளவு பழங்களைப் போடவும். அதன் மேல் பாதியளவு தயிரை விடவும். தயிரின் மேல் பாதியளவு ஓட்ஸ், பாதியளவு நட்ஸ், பாதியளவு திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும். அதன் மேல் மீண்டும் மீதமுள்ள பழக்கலவை, தயிர், ஓட்ஸ், நட்ஸ், திராட்சையைப் போடவும். இறுதியாக தேன்விட்டு `ஜில்’லென்று பரிமாறவும். 

சியா சீட்ஸ் பாயசம்

தேவையானவை:

 காய்ச்சாத பால் – ஒன்றரை கப்
 தேங்காய்ப்பால் - ஒரு கப்
 நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்
 சியா சீட்ஸ் (சியா விதைகள்) - 2 டேபிள்ஸ்பூன்  
 ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.   இதனுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். இறுதியாக சியா சீட்ஸ்,  ஏலக்காய்த்தூள் சேர்த்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். சியா சீட்ஸ் நன்றாக ஊறி ஜவ்வரிசி போல் ஆனவுடன் பரிமாறவும். இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

ஆப்பிள் க்ரம்பிள்

தேவையானவை:

 ஆப்பிள் - 3 (தோல் சீவி, சிறிய துண்டுகளாக்கவும்)
 நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
 கோதுமை மாவு - முக்கால் கப்
 வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

வெண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்விக்கவும். ஆப்பிள் துண்டுகளுடன்
2 டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் பட்டைத்தூள் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய் சேர்த்து விரல்களால் நன்கு ரவை பதம் வரும் வரை கலக்கவும் (அழுத்திப் பிசையக் கூடாது). பிறகு, மீதமுள்ள நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங்  பேனில் (Baking Pan) வேகவைத்த ஆப்பிள் துண்டுகளைப் பரப்பவும். அதன் மேல் கோதுமை மாவு கலவையைச் சேர்த்து விரல்களால் லேசாக அழுத்திவிடவும். இதை 200 டிகிரி சென்டிகிரேடில் ப்ரீ ஹீட் செய்த அவனில் (oven) 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். இதைச் சூடாகப் பரிமாற வேண்டும். விரும்பினால் இதனுடன் வெனிலா ஐஸ்க்ரீம் வைத்தும் பறிமாறலாம்.

மேங்கோ ஃப்ரோசன் யோகர்ட்

தேவையானவை:  

 தோல் சீவி, நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - 2 கப்
 கெட்டியான குளிர்ந்த தயிர் - கால்  கப்
 பால் - கால் கப் (காய்ச்சி ஆறவைத்தது)
 தேன் - 2 டேபிள்ஸ்பூன்

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

மாம்பழத் துண்டுகளைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைத்து எடுக்கவும். அதனுடன் தயிர், பால், தேன் சேர்த்து, மிக்ஸியில் விட்டு விட்டு அடித்து எடுக்கவும். இதை மீண்டும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி, 8 மணி நேரம் ஃப்ரீசரில்  வைத்து செட் செய்யவும். பிறகு, வெளியே எடுத்து ஐஸ்க்ரீம் ஸ்கூப்பர் மூலம் ஸ்கூப் செய்து எடுத்துப் பரிமாறவும்.

தேங்காய் சாக்லேட் புடிங்

தேவையானவை:

 தேங்காய்ப்பால் - ஒரு  கப்
 பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)
 கோகோ பவுடர் - கால் கப்
 வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
 நாட்டுச் சர்க்கரை – அரை கப்
 நறுக்கிய வால்நட் அல்லது முந்திரி – சிறிதளவு

ஹெல்த்தி டெஸர்ட்ஸ்

செய்முறை:

தேங்காய்ப்பாலுடன் கோகோ பவுடர், கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்து அடுப்பை `சிம்’மில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கலவை கெட்டியானதும் இறக்கி, தனித்தனிக் கிண்ணங்களில் ஊற்றவும். ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் 8 மணி நேரம் வைத்து, செட் ஆன பிறகு எடுத்து வால்நட் அல்லது முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு