தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

30 வகை குளிர் கால உணவுகள்

30 வகை குளிர் கால உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
30 வகை குளிர் கால உணவுகள்

30 வகை குளிர் கால உணவுகள்

30 வகை குளிர் கால உணவுகள்
30 வகை குளிர் கால உணவுகள்

கேப்சிகம் புலாவ்

தேவை:  
   பாஸ்மதி அரிசி - ஒரு கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  குடமிளகாய்த் துண்டுகள் (மஞ்சள், சிவப்பு, பச்சை) - ஒரு கப்  தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 4 பல் (தட்டவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பிரியாணி இலை, கிராம்பு - தலா ஒன்று  பட்டை - சிறிய துண்டு  நெய் - 2 டீஸ்பூன்  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை:    பாஸ்மதி அரிசியைக் கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து வடிகட்டவும். குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, பட்டை, கிராம்பு, அரிசி சேர்த்து வறுக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இறுதியாக, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

சோளப் பணியாரம்

தேவை:       சோளம் - ஒரு கப்  உளுத்தம்பருப்பு - கால் கப்  வெந்தயம் - கால் டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கேரட் – ஒன்று (துருவவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய், ­உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளத்துடன் வெந்தயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாகக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். மாவுடன் வதக்கிய காய்கறிக் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவை ஊற்றி, மூடி வேகவிடவும்.  பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

கோபி பராத்தா

தேவை:  கோதுமை மாவு - ஒரு கப்  தண்ணீர்  உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு:      காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - ஒரு கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்  சீரகத்தூள், கரம் மசாலாத் தூள் - தலா கால் டீஸ்பூன்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுடுநீரில் போட்டு எடுத்துத் துருவவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்க வும். இதுவே மசாலா. சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக்கி சற்று கனமான சப்பாத்திகளாகக் கைகளால் தட்டவும். அதன் நடுவே சிறிதளவு காலிஃப்ளவர் மசாலாவை வைத்து மூடி உருட்டவும். பிறகு உருண்டைகளை சப்பாத்திக்கல்லில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் தடவி, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். தால், தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

கம்பு தோசை

தேவை:     கம்பு - ஒரு கப்  உளுத்தம்பருப்பு - கால் கப்  வெந்தயம் - கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    கம்புடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

ராகி ரொட்டி

தேவை:     ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:  ராகி மாவுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவு உருண்டைகளை எடுத்து கைகளால் ரொட்டிகளாகத் தட்டவும்.  சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:    மாவை பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழை இலையில் தட்டியும் போடலாம். விரும்பினால் கேரட், குடமிளகாய், தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.

30 வகை குளிர் கால உணவுகள்

மசாலாப் பொரி

தேவை:      பொரி - 100 கிராம்  வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 50 கிராம்  கறிவேப்பிலை - சிறிதளவு  பூண்டு - 6 பல் (தட்டவும்)  காய்ந்த மிளகாய் - 2  கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் பூண்டு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து வறுக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாகப் பொரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து 10 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு:     மோர் மிளகாய் அல்லது மிளகு - சீரகத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

30 வகை குளிர் கால உணவுகள்

மைசூர் போண்டா

தேவை:     உளுத்தம்பருப்பு - ஒரு கப்  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  பச்சை மிளகாய் -  3 (பொடியாக நறுக்கவும்)  மிளகு - ஒரு டீஸ்பூன்  பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகு, தேங்காய்ப் பல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, மாவைச் சிறிய போண்டாக்களாக எடுத்துப்போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

நெய்க் கடலை

தேவை:      கடலைப்பருப்பு - அரை கிலோ  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  தட்டிய பூண்டு - 4 பல் (விரும்பினால்)  உப்பு -  தேவையான அளவு  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:  கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடித்து, ஈரம்போக உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடலைப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்துப் பொரித்தெடுக்கவும். வறுத்த கடலைப்பருப்புடன் கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான நெய்க் கடலை ரெடி.

30 வகை குளிர் கால உணவுகள்

பட்டாணி சுண்டல்

தேவை:      காய்ந்த பட்டாணி - 100 கிராம்  பல்லு பல்லாக நறுக்கிய  மாங்காய், தேங்காய் - தலா 4 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி  வேகவைத்த பட்டாணி, மாங்காய்ப் பல், தேங்காய்ப் பல், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

மிளகு ரசம்

தேவை:      தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  புளி - கோலிகுண்டு அளவு  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  பூண்டு - 3 பல் (தட்டவும்)  காய்ந்த மிளகாய் - 2  மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:   மிளகுடன் சீரகத்தைச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகு - சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்

தேவை:      மஷ்ரூம் - 5 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)  வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  சீஸ் க்யூப் – ஒன்று (துருவவும்)  காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப்  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கார்ன்ஃப்ளாருடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம், மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். மஷ்ரூம் வெந்தவுடன் கார்ன்ஃப்ளார் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து பளபளப்பானவுடன் பால் ஊற்றி இறக்கவும். மேலே மிளகுத்தூள், சீஸ் துருவல் தூவிப் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

புடலங்காய் வடை

தேவை:      புடலங்காய் - ஒன்று (200 கிராம்)  கடலைப்பருப்பு - முக்கால் கப்  துவரம்பருப்பு - கால் கப்  காய்ந்த மிளகாய் - 6  சோம்பு - ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (புடலங்காயில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் மாவு அரைக்க தண்ணீர் சேர்க்க வேண்டாம்). புடலங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் பிசிறி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். நன்றாகப் பிழிந்துவிட்டு வடை மாவில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பின்னர் இந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

கற்பூரவல்லி டீ

தேவை:      கற்பூரவல்லி இலை - 4 (பொடியாக நறுக்கவும்)  டீத்தூள் - ஒரு டீஸ்பூன்  தேன், பனங்கற்கண்டு - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:  பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது டீத்தூள், கற்பூரவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி பாத்திரத்தை மூடவும். சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு சேர்த்துச் சூடாகப் பருகவும். குளிர்காலத்தில் இந்த டீயை அருந்துவதன் மூலம் இருமல், சளி தொல்லையைத் தவிர்க்கலாம்.

30 வகை குளிர் கால உணவுகள்

மிளகுக் குழம்பு

தேவை:      புளி - சிறிய எலுமிச்சை அளவு  மஞ்சள்தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      எண்ணெய் - அரை டீஸ்பூன்  மிளகு, மல்லி (தனியா) - தலா 2 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:  
   நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.  ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். அதே வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். இந்தக் குழம்பை ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.

30 வகை குளிர் கால உணவுகள்

கொள்ளு ரசம்

தேவை:      கொள்ளு வேகவைத்த தண்ணீர் - ஒரு கப்  வேகவைத்த கொள்ளு - 2 டேபிள்ஸ்பூன் (மசிக்கவும்)  புளி - நெல்லிக்காய் அளவு  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  பூண்டு - 3 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:      எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  வெந்தயம் - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்துத் தட்டவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த கொள்ளு, தட்டிய மிளகுக் கலவை, கொள்ளுத் தண்ணீர், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

மிளகு அடை

தேவை:     பச்சரிசி - ஒரு கப்  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப்  மிளகு - ஒரு டீஸ்பூன்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  பச்சரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். மாவுடன் தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெய்விட்டுச் சுட்டு எடுக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

காலிஃப்ளவர் மிளகு பொரியல்

தேவை:      காலிஃப்ளவர் – ஒன்று (சிறிய பூக்களாக நறுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் காலிஃப்ளவர் சேர்த்துக் கிளறவும். மேலே மிளகுத்தூளைத் தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

இஞ்சிப் பச்சடி

தேவை:      தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்  பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கவும்)  புளி - எலுமிச்சை அளவு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்  வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், பெருங்காயத் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

காலிஃப்ளவர் சூப்

தேவை:      நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் - 10  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒரு கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  சோம்பு, கல்பாசி, மிளகு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, கல்பாசி, மிளகு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். பிறகு, பருப்பு வேகவைத்த தண்ணீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:    துவரம்பருப்பை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சம் அதிகமாகத் தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்து, மசித்து அந்தத் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

கம்பு பக்கோடா

தேவை:      கம்பு மாவு - ஒரு கப்  அரிசி மாவு - கால் கப்  வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  சோம்பு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - முக்கால் கப்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:   கம்பு மாவுடன் அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவைச் சிறிய பக்கோடாக்களாகக் கிள்ளிப்போட்டு, நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

பைனாப்பிள் ரசம்

தேவை:     அன்னாசிப்பழ ஸ்லைஸ் - 4  வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மிளகு, சீரகம்  - தலா அரை டீஸ்பூன்  பூண்டு - 4 பல்  கடுகு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  காய்ந்த மிளகாய் - 2  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 2 அன்னாசி ஸ்லைஸ்களை விழுதாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள 2 அன்னாசி ஸ்லைஸ்களைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் மிளகு விழுதுடன் அன்னாசி விழுது, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு, பாதியளவு தக்காளி, தண்ணீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள தக்காளி, அன்னாசித் துண்டுகள் சேர்த்து வதக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

புதினா புலாவ்

தேவை:      பாஸ்மதி அரிசி - ஒரு கப்  புதினா - ஒரு கப்  வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  கேரட், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு  பூண்டு - 7 பல்  பச்சை மிளகாய் - 4  உப்பு - தேவையான அளவு  தண்ணீர் - ஒன்றரை கப் (அ) ஒன்றே முக்கால் கப்

தாளிக்க:      பிரியாணி இலை - ஒன்று  கிராம்பு - 2  பட்டை - 3 சிறிய துண்டு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  புதினாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

ராகி - ஆலு பராத்தா

தேவை:     ராகி மாவு (கேழ்வரகு மாவு), கோதுமை மாவு - தலா அரை கப்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  ஓமம், கரம் மசாலாத்தூள் - தலா 2 சிட்டிகை  உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)  கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  ராகி மாவுடன் கோதுமை மாவு, மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக்கி பராத்தாக்களாக தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, பராத்தாக்களைப் போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

வெள்ளை மிளகாய்ப் பச்சடி

தேவை:      பாசிப்பருப்பு - ஒரு கப்  வெள்ளை மிளகாய் - 15 (நீளவாக்கில் நறுக்கவும்)  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:   குக்கரில் பாசிப்பருப்புடன் வெங்காயம், தக்காளி, வெள்ளை மிளகாய், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் திறந்து, உப்பு சேர்த்துக் கலந்து சூடாக்கிக் கொதிக்கவிட்டு இறக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளித்துப் பச்சடியில் சேர்க்கவும்.  கொத்தமல்லித்தழை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.

குறிப்பு:     வெள்ளை மிளகாய் கிடைக்காவிட்டால் பச்சை மிளகாய் பயன் படுத்தலாம்.

30 வகை குளிர் கால உணவுகள்

ஸ்பைஸி வேர்க்கடலை சாட்

தேவை:      பச்சை வேர்க்கடலை, மசாலா பொரி - தலா ஒரு கப்  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - அரை கப்  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கேரட் – ஒன்று (துருவவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவிடவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே மசாலா பொரி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு:      பரிமாறும்போது மசாலா பொரி, ஓமப்பொடி சேர்க்கவும். இல்லையெனில் நமர்த்துப் போய்விடும்.

30 வகை குளிர் கால உணவுகள்

ரச வடை

தேவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப்  மிளகு - அரை டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு  புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)  மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பருப்புத் தண்ணீர் - ஒரு கப் பெருங்காயத்தூள் - சிறிதளவு  கடுகு, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை  கொத்தமல்லித்தழை - சிறிதளவு தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிளகு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மிளகு - சீரகத்தூள், மஞ்சள்தூள், பருப்புத் தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்த ரசத்தில் வடைகளைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். ஊறிய பின் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

வேப்பம்பூ ரசம்

தேவை:      வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன்  புளி - நெல்லிக்காய் அளவு  வெல்லம் - அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:      நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வேப்பம்பூவை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து எடுக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். மேலே வறுத்த வேப்பம்பூவைத் தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

தக்காளி சூப்

தேவை:      தக்காளி  பச்சை மிளகாய் - தலா 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  சோம்பு, மிளகு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் வேகவைத்த துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு மூடியைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

தக்காளி ரசம்

தேவை:     தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  புளி - நெல்லிக்காய் அளவு  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  வெந்தயம் – சிறிதளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். அதனுடன் தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்த பிறகு புளிக்கரைசல், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

ஸ்வீட் கார்ன் சூப்

தேவை:       வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - அரை கப்  நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், வெங்காயம் - தலா கால் கப்  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்  சர்க்கரை, மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஸ்வீட் கார்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கார்ன்ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். காய்கள் நன்றாக வெந்தவுடன், கார்ன் ஃப்ளாரை ஊற்றி கைவிடாமல் கிளறவும். கார்ன் ஃப்ளார் வெந்து சூப் பளபளப்பாக வரும்போது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். மிளகுத்தூள், வெங்காயத்தாளைச் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

30 வகை குளிர் கால உணவுகள்

குளிர்காலம் வந்துவிட்டாலே, நாவின் சுவை நரம்புகள் `ஓவர்டைம்' பார்க்க ஆரம்பித்துவிடும். `சூடா, மொறுமொறுனு ஏதாவது கொண்டு வா!' என்று மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதேநேரம், அந்தச் சுவையான உணவுப் பொருள்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்துக்கும் நன்மையளிப்பதாக இருக்க வேண்டும்; எளிதில் தாக்கும் ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, நாவுக்கு ருசியாகவும், தொண்டைக்கு இதமாகவும், வயிற்றுக்குப் பதமாகவும் பல்வேறு ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

சுவையில் அசத்தும் கேப்சிகம் புலாவ், கோபி பராத்தா, மைசூர் போண்டா, ரச வடை போன்றவற்றுடன், தொண்டைக்கு இதமாக மிளகு ரசம், பைனாப்பிள் ரசம், தக்காளி சூப் என பலவற்றை தயாரித்து அளிக்கிறார். அதோடு, ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் ராகி ரொட்டி, கம்பு பக்கோடா, கற்பூரவல்லி டீ, மிளகுக் குழம்பு போன்றவற்றையும் படங்களோடு தருகிறார். இவை எல்லாவற்றையும் செய்து பரிமாறுங்கள்; குளிர்காலத்தில் குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்துங்கள்!