Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி
சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

பிரீமியம் ஸ்டோரி
சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி
சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

ரிசியையோ, உடைக்கப்பட்ட வேறு தானியத்தையோ நீரில் வேகவைத்து பால் சேர்த்தோ, சேர்க்காமலோ, இனிப்பு சேர்த்துப் பருகுவது அல்லது இனிப்புக்குப் பதிலாகக் காரமோ, வேறு மசாலா பொருள்களோ சேர்த்துச் சமைப்பதே `கஞ்சி’.

கஞ்சி என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் பருகிவரும் ஓர் அடிப்படை உணவு. நாம் வசிப்பது வெப்ப மண்டலப் பகுதி. அதனால் நம் உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை. உடல் சூட்டைத் தணிக்கும்விதமான உணவும் தேவை. அந்த உணவு எளிமையாகச் சமைக்கக் கூடியதாகவும் அதே நேரம் உடலுக்குத் தேவையான சத்துகளையும் வலுவையும் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த விதத்தில் நம் முன்னோர்களால் இருப்பதைக்கொண்டு பருவச்சூழலுக்கு ஏற்ப சமைக்கப்பட்ட உணவுதான், `கஞ்சி’.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி
சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

`உலகின் மிக எளிமையான உணவு கஞ்சி’ என்றே சொல்லலாம். கிராமப் பகுதிகளில் சோற்றைக்கூட `கஞ்சி’ எனக் குறிப்பிடும் வழக்கம் இன்னமும்கூட இருக்கிறது. கஞ்சியில் பல வகை உண்டு. அதில் முக்கியமானது பழங்கஞ்சி. இந்தப் பழைய கஞ்சி என்பது, முந்தைய நாள் மீதம் இருக்கும் சோற்றில், சோறு வடித்த கஞ்சித்தண்ணீரையும் கூடுதலாகத் தண்ணீரையும் கலந்து வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில், அது சுவையான பழங்கஞ்சி. இத்துடன் மோர் அல்லது தயிர் கலந்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்துக் கலக்கிக் குடிப்பார்கள். தொட்டுக்கொள்ள துவையல், ஊறுகாய், வத்தல், மிளகாய், வெங்காயம், பழைய குழம்பு, கருவாடு என அருமையான பல பதார்த்தங்கள் உண்டு.

தமிழர்கள் தயாரிக்கும் கஞ்சி வகைகளில், உளுந்தம்கஞ்சி முக்கியமானது. அதிக வலிமை தரக்கூடியது; உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. இதைச் செய்வது மிகவும் எளிது.

இன்னொரு வகை கஞ்சி, பால் கஞ்சி. உடைத்த அரிசியுடன் சிறிது சீரகம், வெந்தயம், சிறிது சுக்கு, நான்கைந்து பூண்டுப்பல் எல்லாம் சேர்த்துத் தேவையான அளவுக்கு நீர் சேர்த்து வேகவைத்து, பிறகு அதில் பால் சேர்த்துப் பருகுவது, பால் கஞ்சி. இது, ஆரோக்கியமான உணவு மட்டுமன்றி, நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தும்கூட. எளிதில் ஜீரணமாகக்கூடியது. இவை தவிர, கோதுமைக் கஞ்சி, ரவைக் கஞ்சி, சிறுபயறுக் கஞ்சி, கொள்ளுக் கஞ்சி, வரகுக் கஞ்சி, சாமைக் கஞ்சி எனப் பல வகையான கஞ்சிகள் தமிழர் சமையலில் காலம்காலமாக இடம்பெற்றிருக்கின்றன.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

`காடி, மோழை, சுவாகு என்னும் சொற்களும் கஞ்சியைக் குறிப்பவையே!’ என பிங்கல முனிவர் இயற்றிய கி.பி 10-ம் நூற்றாண்டு நூலான `பிங்கல நிகண்டு’ சொல்கிறது. நமது வாய்மொழிக் கதைகள் பலவற்றிலும் கஞ்சி இடம்பெற்றிருக்கிறது. பழைமையான புத்த சமய நூல்கள் மூலமாகவும் கஞ்சி குடிக்கும் வழக்கம் என்பது அப்போதே மக்களின் முக்கியமான உணவுக் கலாசாரமாக இருந்திருப்பது தெரியவருகிறது.

வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்கள், பழைய சோற்றைக் `கஞ்சி’ எனக் குறிப்பிடுவர். `கஞ்சிக்கு அலைந்து அடிமை ஆனோம்’ என்பது காலனியாதிக்கக் காலத்தில் புழக்கத்திலிருந்த வாசகம். சங்க இலக்கியங்களில் கஞ்சி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பழந்தமிழர் பருகும் உணவாக வகைப்படுத்தியதில் பானகம், பாயசம், கூழ் மற்றும் கஞ்சி ஆகியவை முக்கியமானவை.

கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்...


இவை, திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் வரும் வரிகள். கரிய உடலினராக, கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவர்களாகத் திரிபவர்கள் என சமண மதத்தினரைக் குறிப்பிடுகின்றன இந்த வரிகள். இதன் மூலம், சமணர்களின் முக்கியமான உணவாகக் கஞ்சி இருந்தது என்பதை அறிய முடிகிறது.

... புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி...

இவை பட்டினப்பாலை வரிகள். உணவுச் சாலைகளில் சோற்றைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறுபோலப் பரந்து காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் ஓடியது. அங்கே காளைகள் ஒன்றொடொன்று சண்டையிட, சோற்றுக் கஞ்சியால் உண்டான சேற்றின் மீது தேர்கள் ஓடின என்பதாகக் காட்சி ஒன்றை விவரிக்கின்றன இந்த வரிகள். அகநானூற்றில், கொள்ளும் பாலும் கலந்து தயாரிக்கப்பட்ட கொள்ளுக்கஞ்சி பற்றிய குறிப்பு வருகிறது. அவரை விதையை அரிசியுடன் கலந்து தயாரித்த கஞ்சி பற்றி, மலைபடுகடாம் விவரிக்கிறது.

தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.


இது திருக்குறள். இதில் புற்கை என்றால் கஞ்சி. நொந்து சுமந்து பெற்ற பிள்ளை காக்கைக் குஞ்சுபோல கறுப்பாக இருந்தாலும், தாய்க்குத் தன் பிள்ளை நன் பிள்ளை என்பதுபோல, உழைப்பாளிக்கு தான் வருந்தி உழைத்த உழைப்பால் கிடைத்த உணவு, கேழ்வரகு மாவினால் காய்ச்சிய கஞ்சியாக இருந்தாலும் அது தேவ அமுதே என்று வள்ளுவரும் கஞ்சியின் புகழ் பாடியிருக்கிறார்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

கஞ்சி என்பது அயல் தேசங்களின் பழைமையான உணவும்கூட. சீன ரெஸ்டாரன்டுகளின் முகப்பில் `Congee’ என்ற வார்த்தையைக் காணலாம். அங்கே Congee என்பது, கஞ்சி போன்ற உணவே. அரிசியோடோ, வேறு தானியங்களோடோ, வேகவைத்த இறைச்சித் துண்டுகளை அல்லது மீன் துண்டுகளை அல்லது வேர்க்கடலை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பிஞ்சு சோளம் போன்றவற்றைச் சேர்த்துச் சமைப்பது சீனக் கலாசாரமாக இருக்கிறது. சீனாவின் பண்டைய ராஜ்ஜியங்களில் Congee என்பது அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. சீனாவில் மட்டுமன்றி ஆசியா முழுவதற்குமான மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக கஞ்சி இருந்துவருகிறது.

இந்த `Congee’ என்ற சொல்லில் இருந்து `கஞ்சி’ என்ற தமிழ்ச் சொல் வந்ததா அல்லது `கஞ்சி’ என்ற சொல்லில் இருந்து `Congee’ என்ற சீனச் சொல் வந்ததா என்பது விவாதத்துக்குரியது. இருந்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழந் தமிழ் இலக்கியங்களில் `கஞ்சி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதுவே மூலச்சொல்லாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் தவிர மலையாளம், துளுவிலும் `கஞ்சி’ என்ற சொல் இருக்கிறது. கன்னடம், தெலுங்கில் `ganji’ என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் `kayu’, கொரிய மொழியில் `juk’, மலாய் மொழியில் `bubur’, திபெத்திய மொழியில் `deythuk’, வியட்நாமிய மொழியில் `chao’ என்ற வார்த்தைகள் கஞ்சியைக் குறிப்பவையே.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

ஆங்கிலத்தில் கஞ்சி என்பது, Porridge, Porage, Porrige, Parritch போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் காலை நேர உணவாக அதிக அளவில் புழக்கத்தில் இருப்பது `Oatmeal’ எனப்படும் ஓட்ஸ் கஞ்சி. வடஐரோப்பிய பகுதிகளிலும் ரஷ்யாவின் பல பகுதிகளிலும் தானியங்கள் கொண்டு செய்யப்படும் கஞ்சி என்பது பாரம்பர்ய உணவு. அங்கே `பார்லி கஞ்சி’ என்பது அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக பிரிட்டன் சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவாகக் கஞ்சி இருக்கிறது. அதனால் தான் காலனியாதிக்கக் காலத்தில் பிரிட்டிஷார் இங்கே ஏற்படுத்திய சிறைகளில் கைதிகளுக்கு உணவாகக் கஞ்சி கொடுக்கும் வழக்கம் வந்திருக்கிறது.

கி.பி. 1390-யைச் சேர்ந்த இங்கிலாந்தின் சமையல் புத்தகம் ஒன்றில், `Pea Porridge’ என்ற பட்டாணிக் கஞ்சியின் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரசர் இரண்டாம் ரிச்சர்டின் அரண்மனையில் சமையல்காரர்களாக இருந்த செஃப்களால் இந்தச் சமையல் புத்தகம் எழுதப் பட்டுள்ளது. இந்தப் பட்டாணிக் கஞ்சியில் சில மூலிகைகளுடன் வெங்காயமும் சேர்த்துச் சமைத்திருக்கிறார்கள். அரசருக்குப் பரிமாறுவதற்கு எனக் குங்குமப்பூவை மேல் பக்கமாகத் தூவியும் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

Plumb Porridge என்பதும், இங்கிலாந்தின் பாரம்பர்ய கஞ்சி வகைகளில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில், அதாவது குயின் முதலாம் எலிசபெத் காலத்திலிருந்தே இந்தக் கஞ்சி புழக்கத்தில் உள்ளது. இது குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலப் பண்டிகை உணவாகத் தயாரிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த `Plumb Porridge’ல் பார்லி, சர்க்கரை, உலர்ந்த பழங்கள், உலர்ந்த பருப்புகள் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.
அயர்லாந்திலும் கஞ்சி, குறிப்பாக `ஓட்ஸ் கஞ்சி’ பாரம்பர்யமானது. இது, பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பது. இருமல், சளித் தொல்லைகள் நீங்க கஞ்சியுடன் கொஞ்சம் விஸ்கி கலந்து பருகுவது அயர்லாந்தின் பழைமையான மருத்துவ முறை.

ஸ்காட்லாந்தில் இறைச்சி சேர்க்கப்பட்ட கஞ்சியும் ஓட்ஸ் கஞ்சியும்தான் பல நூற்றாண்டுகளாக மக்களின் காலை நேர உணவாக இருக்கிறது. குறிப்பாக, குளிர்கால உணவாக ஸ்காட்லாந்து மக்கள் கஞ்சியைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

 ஸ்காட்லாந்தில் குளிர்காலத்துக்கு என, ஓட்ஸைப் பதப்படுத்தி சிறு சிறு செங்கல் கட்டிகளாக மாற்றி வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். பிறகு அந்தக் கட்டியில் கொஞ்சம் உடைத்தெடுத்து தேவைக்கேற்ப சூடாகக் கஞ்சி காய்ச்சிப் பருகுவார்கள். இது ஸ்காட்லாந்தின் பழைமையான நடைமுறை.

சிங்கப்பூரிலும் கஞ்சி முக்கிய உணவு. அங்கே மீன் கஞ்சி முக்கியமான உணவு. வேறு அசைவ வகைக் கஞ்சிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கஞ்சிகளுக்குத் தொட்டுக்கொள்ளும் உணவாக வாத்து, மீன், கோழி, வெண்பன்றி போன்றவற்றின் இறைச்சியும் நிலக்கடலையும் உண்ணப்படுகின்றன.

கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
நெஞ்சு பொறுக்குதில்லையே...


என பாரதியாரும் மக்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருந்த கஞ்சி குறித்துப் பாடியுள்ளார்.

கஞ்சி பற்றிய இன்னொரு விஷயம், கஞ்சித்தொட்டி. கஞ்சித்தொட்டி திறப்பது என்பது, வறுமையின் உச்சத்தைச் சொல்லும் அடையாளம். கலவரத்தால், பஞ்சத்தால், இயற்கைச் சீரழிவால் இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக மிகப்பெரிய தொட்டிகளில் கஞ்சி காய்ச்சி ஊற்றும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. கஞ்சித்தொட்டியை மையமாகக்கொண்ட அரசியல் நடவடிக்கைகளும் வழக்கத்தில் உள்ளன. அதாவது அரசாங்கத்தை எதிர்க்கும்விதமாக, பெரிய அளவில் வேலைவாய்ப்பை இழந்த மக்களுக்காக, தொழிலாளர்களுக்காகக் கஞ்சித்தொட்டி திறந்து எதிர்ப்பைக் காட்டுவது என்னும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆக, கஞ்சி என்பது எளிய உணவு மட்டுமல்ல, வலிமையான அரசியல் ஆயுதமும்கூட!
கஞ்சி ரெசிப்பிகள் அடுத்தத்து...

ரமலானும் கஞ்சியும்

மலான் மாதம் என்றாலே நோன்பு. நோன்பு திறப்பது என்பது இஃப்தார். இஃப்தாரின் முக்கிய உணவு நோன்புக் கஞ்சி.

மாலையில் சூரியன் மறைந்த பிறகு, நோன்பை முடித்துக்கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி உணவை உண்பது வழக்கம். அப்படி நோன்பை முடிக்கும்விதமாக முதலில் பேரீச்சம்பழத்தை உண்பது உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

நோன்பு திறக்கும் நேரத்தில் கஞ்சி அருந்துவது என்பது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களின் கலாசாரமாக உள்ளது. கேரளாவின் சில பகுதிகளிலும் நோன்புக் கஞ்சி புழக்கத்தில் உள்ளது. தவிர, எங்கெல்லாம் தமிழக இஸ்லாமியர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் நோன்புக் கஞ்சி புழக்கத்தில் உள்ளது. இஃப்தாரில் இந்த நோன்புக் கஞ்சி அருந்தும் வழக்கம் எந்தக் காலத்தில், எப்படி உண்டானது என்பது விடை தெரியாத கேள்வி. ஆனால், நோன்புக்குப் பிறகான முதல் உணவாகக் கஞ்சி குடிக்கப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அதிகாலையில் இருந்து உணவு உண்ணாமல் விரதம் இருந்தால், உடலின் சூடு அதிகரித்துவிடும்; உடல் சோர்வடைந்துவிடும். உடலின் சூட்டைத் தணிப்பதில் கஞ்சிக்கு நிகரான வேறோர் உணவு கிடையாது. தவிர, இந்த நோன்புக் கஞ்சியானது உடலுக்கு உடனடி சக்தி தருவது, ஆரோக்கியமானது. இந்த நோன்புக் கஞ்சி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள் அரிசி நொய். அதனுடன் காய்கறிகளோ, காய்கறிகளும் இறைச்சியும் சேர்த்தோ, பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலாக்கள் சேர்த்தோ இது தயாரிக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக இந்த நோன்புக் கஞ்சியை மற்ற மதத்தினர், இஸ்லாமியர்களுக்குப் பரிமாறுவதுண்டு. நோன்பிருக்க வசதியற்ற ஏழைகளுக்கு, இஃப்தார் காலத்தில் கஞ்சி கொடுப்பது என்பது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது.

அதனால் ரமலான் மாதத்தில் இஃப்தார் கஞ்சி ஊற்ற விரும்புபவர்கள், முதலிலேயே பள்ளிவாசல்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்துவிடுகிறார்கள். பிற மதத்தினரும் அரசியல் கட்சியினரும் இஃப்தார் விழாவுக்கான ஏற்பாடு செய்து, நோன்புக் கஞ்சியும் பிற உணவுகளும் அளிப்பது என்பது பல்வேறு காலமாக இங்கே தொடர்ந்துவரும் கலாசாரமாக இருக்கிறது.

நான் வெஜ் கஞ்சி ரெசிப்பி

ஹசீனா சையத்,  படங்கள்: எல்.ராஜேந்திரன்

கறிக் கஞ்சி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - 200 கிராம்
 பாசிப்பருப்பு - 50 கிராம்
 நறுக்கிய கேரட், முட்டைகோஸ்,
பீன்ஸ் - 50 கிராம்
 நீளமாக நறுக்கிய பெரிய
  வெங்காயம் - ஒன்று
 நறுக்கிய தக்காளி - 50 கிராம்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாயத்தூள் - கால் டீஸ்பூன்
 கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கிளாஸ் (ஒரே தேங்காயிலிருந்து பிழிந்தது)
 எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - 100 கிராம்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -   கால் டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, மீடியம் சைஸில் நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசியும் வரை வேகவிட்டு இறக்கி ஆறவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் கழுவிய கறியுடன் கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். கறி நன்கு வெந்ததும் அதன் தண்ணீரை மட்டும் வடித்துவிட்டு, கறியை ஆறவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். இதேபோல பொங்கிய அரிசி கலவையையும் மிக்ஸியில் அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

இனி அரைத்த இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்துக் கரண்டியால் கலக்கவும். இதில் தேங்காய்ப்பால், கறி அவித்தத் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் ஏற்றி, கஞ்சி பக்குவத்துக்கு வரும் வரை கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக தாளித்து, அடுப்பை அணைத்து, தயிர்விட்டுக் கஞ்சியில் சேர்த்துக் கலக்கி கட்லெட், சமோசா, வடையுடன் பரிமாறவும்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

கோழிக் கஞ்சி

கோழிக் கஞ்சி தயாரிக்கத் தேவையானவை:
 சீரக சம்பா அரிசி - ஒரு கப்
 மீடியம் சைஸில் நறுக்கிய கேரட் - 2
 பச்சைப் பட்டாணி - ஒரு கப்
 பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயம் - அரை கைப்பிடியளவு
 பூண்டு - அரை கைப்பிடி
 புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 தண்ணீர் - 4 கப்

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து நன்கு மசியும் வரை வேக விடவும்.

கோழி மசாலா தயாரிக்கத் தேவையானவை:
 பொடியாக நறுக்கிய எலும்பு நீக்கிய கோழிக்கறி - 200 கிராம்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு - 3
 ஏலக்காய் - 2
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 2
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -
ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிச் சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, பிறகு கோழிக்கறி, உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் தேவையானவற்றில் மீதம் இருக்கும் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு கோழியை வேகவிட்டு எடுக்கவும்.

இனி கோழிக் கஞ்சி செய்ய தேவையானவை:

 சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்
 துருவிய தேங்காய் - ஒன்றரை கப்
 கெட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்

செய்முறை:
மிக்ஸியில் தேங்காயையும் சோம்பையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வேகவைத்த அரிசிக் கலவை, கோழிக்கலவை, அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேங்காய்ப்பால், உப்பு என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கஞ்சிப் பக்குவத்துக்கு வந்ததும்
சூடாகப் பரிமாறவும்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

நோன்புக் கஞ்சி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கீறிய பச்சை மிளகாய், பூண்டு - 2
 சின்ன வெங்காயம் - 6
 பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 புதினா இலை - அரை டீஸ்பூன்
 கெட்டித் தேங்காய்ப்பால் - ஒரு கப்
 தண்ணீர் - 5 கப்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
 கறிவேப்பிலை - 4 இலை
 இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் கழுவிய அரிசி, நான்கு சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, வெந்தயம், சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து வேகவிடவும். வெந்ததும் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஐந்து கப் தண்ணீர், சேர்த்துக் கொதிக்க விடவும். கஞ்சியை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டுச் சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மீதம் உள்ள நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கி கஞ்சியில் ஊற்றி கத்திரிக்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி

கத்திரிக்காய் சட்னி

தேவையானவை:
 கத்திரிக்காய் - கால் கிலோ
 காய்ந்த மிளகாய் - 3 (தீயில் சுட்டது)
 புளிக்கரைசல் - கால் கப் (கெட்டியானது)
 தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (துருவியது)
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 4 இலை
 பெரிய வெங்காயம் - சிறியது
ஒன்று நறுக்கிக்கொள்ளவும்.

செய்முறை:
கத்திரிக்காயைக் காம்பு நீக்கி கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். மண்சட்டியில் தேங்காய்த்துருவல், புளிக்கரைசல், சுட்ட மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, பருப்பு மத்தால் நன்கு கடையவும். இதில் அவித்த கத்திரிக்காயைச் சேர்த்து எல்லாம் ஒன்று சேரும் அளவுக்கு நன்றாகக் கடையவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகத் தாளிக்கவும். கடைந்த கத்திரிக்காயில் தாளித்தவற்றைச் சேர்த்து நோன்புக் கஞ்சியுடன் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு