Published:Updated:

கதை பேசும் கஞ்சி

தீபா பாலச்சந்தர், படங்கள்: தே.அசோக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
கதை பேசும் கஞ்சி

`விக்கிரமாதித்தன் கதை’யில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம் இது.  வாயைத் திறந்து சாப்பிடக்கூட முடியாத  அளவு பலவீனமான நிலையில் இருக்கிறான் ஒருவன்.   அவனுக்கு எப்படி உணவு ஊட்டுவது? சோறு வடித்த கஞ்சியும் சிறிது சாதமும் கலந்து, நெய் ஊற்றி ஒரு துணியில் இட்டு முடிவார்கள். அதைக்கொண்டு அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்கள். அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்துவிடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இது வெறும் கதை மட்டுமே அல்ல... கஞ்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் எழுதிய உண்மை.

கதை பேசும் கஞ்சி

கஞ்சி என்பது உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல; ஆரோக்கியத்தின் ஆதாரம். இதோ, மருத்துவக் குணம் வாய்ந்த கஞ்சி ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர். இனி எல்லா வீடுகளிலும் `கஞ்சி வரதப்பா’ என சத்துகள் பரிமாறப்படும்!

கருப்பட்டி உளுந்துக்கஞ்சி

தேவையானவை:

 உளுத்தம்பருப்பு – ஒரு கப்
 தேங்காய்த் துருவல் – கால் கப்
 ஏலக்காய் – 2
 கருப்பட்டித்தூள் – 2 கப்
 நெய் – ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க:
 பல்லு பல்லாக நறுக்கிய
தேங்காய்த் துண்டுகள் - சிறிதளவு
 வறுத்து, உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
 உருக்கிய நெய் – 2 டீஸ்பூன்

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
கருப்பட்டித்தூள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டுக் கரைத்து வடிகட்டவும். உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடியவிடவும். தேங்காய்த் துருவல், ஊறிய உளுத்தம்பருப்பு, ஏலக்காயை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, உளுந்துக் கலவையை ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, கைவிடாமல் கிளறி வேகவிடவும். அதனுடன் கருப்பட்டிக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை மேலே சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு:
 எலும்புகளை வலுவாக்கும்.  பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும்.
 பூப்பெய்திய பெண்கள் இதைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. 

குறிப்பு:

 கறுப்பு உளுந்திலும் செய்யலாம்.

மூலிகைக்கஞ்சி

தேவையானவை:
 பச்சரிசி நொய் - அரை கப்
 ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்
 கெட்டித் தயிர் - 2 கப் (கடையவும்)
 தண்ணீர் – 4 கப்
 மிளகு - சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
 சுக்கு, திப்பிலி, அதிமதுரம்,
சித்தரத்தை - தலா 5 கிராம்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 நெய் – அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
சுக்கு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு இந்த மருந்து மூட்டையைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசி நொய், ராகி மாவு, உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். ஆறியதும்  மருந்து மூட்டையை எடுத்துவிடவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கஞ்சியுடன் சேர்க்கவும். பிறகு தயிர், மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

சிறப்பு:
 நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது.
 ஆடி மாதத்தில் காற்றின் வழியாகப் பரவும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த மூலிகைக்கஞ்சியைச் செய்வது வழக்கம்.

வீட் ரவா ஃப்ரூட் பாரிட்ஜ்

தேவையானவை:
 கோதுமை ரவை – ஒரு கப்
 காய்ச்சிய பால் – 2 கப்
 தண்ணீர் – 3 கப்
 விரும்பிய பழக்கலவை – ஒரு கப்
 சர்க்கரை – கால் கப்
 ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
 நெய் – ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க
 செர்ரிப் பழம் – 4
 டூட்டி ஃப்ரூட்டி – சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, கோதுமை ரவையைச் சேர்த்து வறுத்தெடுத்துத் தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் கொஞ்சம் கொஞ்சமாக ரவையைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிடவும். பிறகு பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பழக்கலவைச் சேர்த்துக் கிளறி, மேலும் வேகவிட்டு இறக்கவும். கண்ணாடிக் கிண்ணங்களில் ஊற்றி, நடுவே செர்ரி வைத்து, டூட்டி ஃப்ரூட்டி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.  

சிறப்பு:
விரத நாள்களில் சாப்பிட ஏற்றது.

கேசர் ஓட்ஸ் & நட்ஸ் கஞ்சி

தேவையானவை:
 ஓட்ஸ் – ஒரு கப்
 சர்க்கரை – ஒரு கப்
 குங்குமப்பூ – சிறிதளவு
 காய்ச்சிய ஆறவைத்த பால் – 2 கப்
 விதை நீக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சை – 5 டீஸ்பூன்

அலங்கரிக்க:

 தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்
 பாதாம், முந்திரி,
பிஸ்தா துருவல் – 2 டீஸ்பூன்

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் ஓட்ஸ் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். பிறகு பால், சர்க்கரை, பேரீச்சை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே தேன்விட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

சிறப்பு:

இது ஒரு சிறந்த காலை நேர உணவு. அனைத்து வயதினரும் பருகலாம்.

சிறுதானிய வெஜ் கஞ்சி

தேவையானவை:
 வரகரிசி, குதிரைவாலி,
சாமை, தினை அரிசி – தலா கால் கப்
 வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 சிறிய கேரட் – ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
 பீன்ஸ் – 2 (பொடியாக நறுக்கவும்)
 பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் – 2 டீஸ்பூன்
 கடுகு, சீரகம் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 பச்சை மிளகாய் – 3
 (நீளவாக்கில் நறுக்கவும்)
அலங்கரிக்க:
 மிளகு - சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
குக்கரில் அரிசி வகைகளுடன் நான்கு கப் தண்ணீர், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, தக்காளி, உப்பு சேர்த்து மூடி நான்கு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து மீண்டும் அடுப்பிலேற்றவும். தாளித்த பொருள்களை குக்கரில் உள்ள சாதக் கலவையுடன் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகு - சீரகத்தூள், கொத்தமல்லித்தழை
தூவிப் பரிமாறவும். 

ஓட்ஸ் மசாலாக்கஞ்சி

தேவையானவை:

 ஓட்ஸ் – ஒரு கப்
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்
 தனியாத்தூள் (மல்லித்தூள்) – கால் டீஸ்பூன்
 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 தேங்காய்ப்பால் – அரை கப்
 உப்பு – தேவையான அளவு
அரைக்க:
 பட்டை – சிறிய துண்டு
 ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று
 தோலுரித்த சின்ன வெங்காயம் – 4
 தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

அலங்கரிக்க:
 பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்த விழுது, சீரகம், ஓட்ஸ் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். .

அவல் மாம்பழக்கஞ்சி

தேவையானவை:
 கெட்டி அவல் – ஒரு கப்
 மாம்பழம் – ஒன்று
 சர்க்கரை – தேவையான அளவு
 ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க:
 நெய் – 2 டீஸ்பூன்
 உலர்திராட்சை – 5
அலங்கரிக்க:
 பொடியாக நறுக்கிய
மாம்பழத் துண்டுகள் – சிறிதளவு
 மாதுளை முத்துகள் - சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கிச் சிறிய துண்டுகளாக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அவலை நிமிடங்கள் ஊறவைத்து நன்கு களைந்து எடுக்கவும். அதனுடன் மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அவல் கலவையுடன் சேர்க்கவும். மேலே மாம்பழத் துண்டுகள், மாதுளை முத்துகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம்.

குறிப்பு:

குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். மாம்பழ விழுதுக்குப் பதிலாகப் பப்பாளி விழுது, அன்னாசி விழுதிலும் செய்யலாம்.

கொள்ளு மோர்க்கஞ்சி

தேவையானவை:
 பச்சரிசி, கொள்ளு – தலா 50 கிராம்
 கெட்டி மோர் – தேவையான அளவு
 தண்ணீர் – 3 கப்
 உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 பச்சை மிளகாய் – 2
(நீளவாக்கில் நறுக்கவும்)
 தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
வெறும் வாணலியில் கொள்ளு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்தெடுக்கவும். குக்கரில் அரிசியுடன் கொள்ளு, தண்ணீர் சேர்த்து மூடி நான்கு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். ஆறிய கஞ்சியுடன் மோர், தாளித்த பொருள்கள், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சிறப்பு:
எடையைக் குறைக்க உதவும் கஞ்சி இது.

பச்சை மாங்காய்க்கஞ்சி

தேவையானவை:
 பச்சை மாங்காய் – ஒன்று
(தோல், கொட்டை நீக்கித் துண்டுகளாக்கவும்)
 பச்சரிசி – 50 கிராம்
 சர்க்கரை – 5 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 உப்பு – ஒரு சிட்டிகை
தாளிக்க:
 கடுகு – கால் டீஸ்பூன்
 மிளகு - சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் – 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – ஒன்று
 கறிவேப்பிலை - சிறிதளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை:
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன் மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து மூடி வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வேகவைத்த அரிசிக் கலவையுடன் அரைத்த மாங்காய் விழுது சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கஞ்சியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தேங்காய்ப்பால்  வெந்தயக்கஞ்சி

தேவையானவை:
 பச்சரிசி – ஒரு கப்
 தேங்காய்ப்பால் – 2 கப்
 சீரகம், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
 பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கவும்)
 உப்பு – தேவையான அளவு

கதை பேசும் கஞ்சி

செய்முறை;
குக்கரில் அரிசியுடன் சீரகம், வெந்தயம், பூண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து உப்பு சேர்த்துக் கலந்து, தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

சிறப்பு:
 உடல் சூட்டைக் குறைக்கும்.
 ஒவ்வாமையைச் சரியாக்கும்.
 வயிற்றுப் புண்கள்,
வாய்ப் புண்களை ஆற்றவல்லது.
 உடல்நிலை சரியில்லாதபோது பருக ஏற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு