Published:Updated:

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!
காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

கோவை அலங்கார் விலாஸ்

பிரீமியம் ஸ்டோரி
காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

`ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கலையா?’ என்ற பழமொழிக்கேற்ப நல்ல உணவுக்காகக் காத்திருக்கலாம், தவறில்லை. கையேந்தி பவனில் தொடங்கி நட்சத்திர ஹோட்டல் வரை இன்று எல்லா உணவகங்களிலும் சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகே உணவு கிடைக்கும்.

அப்படிக் கிடைக்கும் உணவு, காத்திருப்பை நியாயப்படுத்துமா என்றால் சந்தேகம்தான். சென்னை அண்ணாநகர் மற்றும் பெரியமேட்டில் திறக்கப்பட்டுள்ள `கோவை அலங்கார் விலாஸ்’ ஹோட்டல்களின் உணவுகள், `இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன..?’ என்று நம்மை பாடவைக்கும் அளவுக்கு அறுசுவையைத் தாண்டி அசத்துகின்றன.

பெயருக்கேற்றபடி கொங்கு நாட்டு உணவுகள் இங்கே ஸ்பெஷல். இந்த உணவுகள், பல ஹோட்டல்களிலும் கிடைக்கின்றன. `உணவுத் திருவிழா’ என்ற பெயரில் அடிக்கடி கொங்கு ஸ்பெஷல் உணவுகள் இடம்பெறுவதுமுண்டு. ஆனால், அவை அசல் கொங்கு நாட்டுச் சுவையில்தான் உள்ளனவா என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

கோவை அலங்கார் விலாஸில் அந்த ஏமாற்றமும் தவிர்க்கப்படுகிறது. ஆடம்பரமற்ற இன்டீரியர், அளவான இருக்கைகள், எளிமையான சூழ்நிலை, ஏராளமான உணவுகள், கனிவான சேவை, பணிவான உரையாடல் என ஒவ்வொருவரையும் ரசனையுடன் ருசிக்க அழைக்கிறது கோவை அலங்கார் விலாஸ் உணவகம். கோழி ரசம் மற்றும் ஆட்டுக்கால் சூப் இரண்டில் ஏதேனும் ஒன்றுடன் உணவைத் தொடங்கலாம்.

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

காபி ப்ரியர்கள், காபி குடித்த பிறகு சில நிமிடத்துக்கு வேறு எதையும் சாப்பிட மாட்டார்கள். காரணம், நாவில் ஒட்டியிருக்கும் காபியின் சுவை அவ்வளவு சீக்கிரம் மாறிவிடக் கூடாது என்பதுதான். கோழி ரசத்தையோ, ஆட்டுக்கால் சூப்பையோ ருசிப்பவர்களுக்கும் அதே உணர்வு நிச்சயம் ஏற்படும். அதையும் தாண்டி,  `எங்களையும் ட்ரை பண்ணிப்பாருங்களேன்...’ என்பதாக கொத்தமல்லி இறால், பிச்சுப்போட்ட கோழி, முட்டைப்பணியாரம் என மெனு கார்டு அயிட்டங்கள் அனைத்தும் பெயரிலேயே நம் பசியைத் தூண்டுகின்றன.

பிச்சுப்போட்ட கோழி - பெயரில் வன்முறை இருந்தாலும், செய்முறையில் அநியாய ருசி. கோவை மற்றும் சேலம் வட்டாரங்களில் மிகப் பிரபலமான உணவு இது. சிக்கனைப் பிய்த்துப்போட்டு மசாலாவில் ஊறவைத்து, அதிக எண்ணெய் இல்லாமல் தோசைக்கல்லில் குறைந்த தணலில் பக்குவமாக வாட்டி எடுக்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது.

அசைவ விரும்பிகளில், சிலருக்கு சிக்கன் பிடிக்கும்; சிலருக்கு மட்டன் பிடிக்கும். இன்னும் சிலர், `இந்த இரண்டும் வேண்டாம், மீன் மட்டுமே போதும்’ என்பர். இங்கே எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவு செய்ய ஏராளமான உணவுகள் உண்டு. சங்ககிரி கோழிக்குழம்பு, காங்கேயம் சுக்கா என சிக்கனிலும் நல்லி ஃப்ரை, கோலா உருண்டை என மட்டனிலும் மண்சட்டி மீன்குழம்பு, இறால் தொக்கு என மீனிலுமாக மணக்கிறது மெனு.

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

உணவகத்தின் தோற்றத்தில் உள்ள அதே எளிமையை உணவக உரிமையாளர் சபரியிடமும் பார்க்க முடிகிறது.

``வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ஏனோதானோன்னு கவனிப்போமா? இந்த ரெஸ்டாரன்ட் எனக்கு வீடு மாதிரி. ஒவ்வொரு வாடிக்கையாளரையும் வீட்டுக்கு வரும் விருந்தாளியாவே பார்க்கிறேன். ஒவ்வொரு அயிட்டமும் எல்லாருக்கும் பிடிக்கிற சுவையில இருக்கும். நிறமிகளோ, செயற்கைச் சுவையூட்டிகளோ சேர்க்காத மசாலாதான் எங்கள் ஸ்பெஷல். எல்லா உணவுகள்லயும் கறிவேப்பிலையும் சின்னவெங்காயமும் நிறைய சேர்ப்போம். இந்த ரெண்டுமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இது எல்லாத்தையும்விட சிறப்பான விஷயம்னா, எல்லா உணவுகளையும் மிதமான தீயிலதான் சமைப்போம். அது, உணவுல இன்னும் சுவையைக் கூட்டும்’’ அளவாகப் பேசுகிறார் சபரி.

சாப்பிட்டதிலேயே எந்த உணவு பெஸ்ட் எனப் போட்டி வைத்தால், வாடிக்கையாளர்களால் தேர்வுசெய்ய முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் பெரும்பான்மை பெற்று முதல் இடத்துக்கு வருவது என்னவோ, அவர்கள் நிறைவாக பரிமாறும் `இளநீர் பாயசம்தான்.’ `சொர்க்கம் மதுவிலே...’ எனப் பாடியவர்கள், இதை ருசித்திருந்தால் `சொர்க்கம் இளநீர் பாயசத்திலே...’ என மாற்றி பாடியிருப்பார்கள்.

ஒரு சோற்றுப் பதம்!

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

சாஹா
 படங்கள்: தி.குமரகுருபரன்


கோவை அலங்கார் விலாஸ் ஸ்பெஷல் ரெசிப்பிகள்

கறிவேப்பிலை - மிளகு இறால்

தேவையானவை:
 பெரிய இறால் - 100 கிராம்
 தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலைப் பொடி -
தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை  - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

செய்முறை:
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு இறாலைச் சேர்த்து நன்கு வதக்கவும்.  அதனுடன் கறிவேப்பிலைப் பொடி, உப்பு  சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.  பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலையைத் தூவி இறக்கி, சூடாகப்  பரிமாறவும்.

குறிப்பு:
காய்ந்த கறிவேப்பிலையுடன் மிளகு,  காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துப்  பொடித்தெடுத்தால் கறிவேப்பிலைப் பொடி தயார்.

கோழி வடை

தேவையானவை:
 கோழி நெஞ்சுக் கறி
(எலும்பு இல்லாமல்) - 2 கிலோ
 தோலுரித்த சின்ன
வெங்காயம் - 200 கிராம்
 நறுக்கிய பெரிய
வெங்காயம் - 200 கிராம்
 தோல் சீவி நறுக்கிய இஞ்சி - 50 கிராம்
 பூண்டு - 500 கிராம்
 பச்சை மிளகாய் - 150 கிராம்
(பொடியாக நறுக்கவும்)
 புதினா - 30 கிராம்
 தனியாத்தூள் (மல்லித்தூள்) - 30 கிராம்
 காய்ந்த மிளகாய் - 20 கிராம்
 கறிவேப்பிலை - 15 கிராம்
 பட்டை - சிறிய துண்டு
 சோம்பு - 5 கிராம்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 முட்டை - 2 (உடைத்து ஊற்றவும்)
 கடலை மாவு - 20 கிராம்
 கொத்தமல்லித்தழை - 20 கிராம்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

செய்முறை:
இஞ்சியுடன் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, சோம்பு தாளிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் கோழிக்கறி, மஞ்சள்தூள், தனியாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து
10 நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது). ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் கடலை மாவு, உடைத்த முட்டை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சிக்கன் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கோழி ரசம்

தேவையானவை:
 கோழி நெஞ்சுக் கறி - அரை கிலோ
 தண்ணீர் - 7 லிட்டர்
 மிளகாய்த்தூள் - 8 கிராம்
 மிளகுத்தூள் -  50 கிராம்
 தனியாத்தூள் (மல்லித்தூள்) - 16 கிராம்
 சீரகத்தூள் - 8 கிராம்
 இஞ்சி - பூண்டு விழுது -
தேவையான அளவு           
 கொத்தமல்லித்தழை - 30 கிராம்
 பட்டை - சிறிய துண்டு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - 50 கிராம்
 உப்பு - தேவையான அளவு

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் கோழிக் கறி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

மட்டன் சுக்கா

தேவையானவை:

 மட்டன் - ஒரு கிலோ (சிறிய துண்டுகளாக்கவும்)
 பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 5 கிராம்
 இஞ்சி - பூண்டு விழுது - 75 கிராம்
 மட்டன் சுக்காத்தூள் - 50 கிராம்
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு - 3     
 கடலை எண்ணெய் - 150 கிராம்
 உப்பு - தேவையான அளவு

காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மட்டன் சுக்காத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறவும். பிறகு மட்டன் துண்டுகள், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். வதக்கிய கலவையை குக்கரில் சேர்த்து 400 மில்லி லிட்டர் தண்ணீர்விட்டு மூடி, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து உரிய பதம் வரும்வரை கொதிக்கவைத்து இறக்கவும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு