Published:Updated:

ஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps

ஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் ஃபுட் டெலிவரி ஆப்களில் சமீபத்திய ட்ரெண்ட் ஊபர் ஈட்ஸ் (Uber Eats). கால் டாக்ஸி நிறுவனமான ஊபர் 2014-ம் ஆண்டு முதன்முதலாக இந்த பிசினஸில் அடியெடுத்து வைத்தது. இப்போது உலகெங்கும் 250 நகரங்களுக்கு மேல் சேவையை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்தியாவில் இந்தச் சேவை கடந்த ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் பின்பு ஒன்பது நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கால் டாக்ஸி தொழிலில் ஊபர் ஜாம்பவான்தான் என்றாலும், இந்த ஃபுட் டெலிவரி சேவை அதற்கு அவ்வளவு எளிதாக இல்லை. எப்படி இந்தியாவின் கால் டாக்ஸி பிசினஸில் ஓலா சவாலாக விளங்குகிறதோ, அதேபோல இந்தத் தொழிலில் ஸ்விக்கி, ஸொமேட்டோ, ஃபுட் பாண்டா என நிறைய உள்ளூர் போட்டியாளர்கள் ஊபருக்கு முன்பாகவே இங்கு வலுவாகக் காலூன்றி விட்டனர்.

ஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps

இந்தப் போட்டிகளை எல்லாம் தாண்டிதான் இந்தியாவில் ஊபர் வெற்றிபெற வேண்டும். அப்படி, மக்களைக் கவரும் வகையில் இருக்கிறதா ஊபரின் உணவு சேவை?

ஊபர் ஈட்ஸ் ஆப் மற்றும் இணையதளம் இரண்டிலும் உணவை ஆர்டர் செய்யலாம். ஊபரின் டாக்ஸி அக்கவுன்ட்டையே இதற்கும் பயன்படுத்த முடியும். வடிவமைப்பில் நேர்த்தியாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது ஆப். குறைவான வேகம்கொண்ட இந்தியாவின் மொபைல் இன்டர்நெட்டை மனதில்வைத்தே ஆப்பை வடிவமைத்திருக்கிறது ஊபர். ஹோட்டல்கள், உணவு வகைகளின் பெயர்கள், விலை ஆகியவற்றின் அடிப்படையில் தேடி உணவுகளை ஆர்டர் செய்ய முடியும். உணவுகளைத் தேடுவதில் இருந்து ஆர்டர் செய்வது வரை எல்லாமே வழக்கமான ஆன்லைன் ஷாப்பிங் நடைமுறைதான்.

ஸ்விக்கி போலவே இதிலும் மினிமம் ஆர்டர் மதிப்பு என்பது கிடையாது. அதனால், குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. வழக்கமான ASAP ஆப்ஷனில் உணவை ஆர்டர் செய்தால் பெரும்பாலும் முப்பது நிமிடங்களுக்குள்ளாகவே டெலிவரி செய்து விடுகிறார்கள். எனவே, ஆர்டர் செய்துவிட்டு நீண்ட நேரமாகும் என்ற கவலை இதில் இல்லை. ஆர்டரை லைவ்வாக டிராக் செய்யவும் முடியும்.

ஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps

இதுதவிர ஏதேனும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவை டெலிவரி செய்ய வேண்டுமென்றால், Schedule order என்கிற வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் நாளைக்கான உணவை   இன்றே நம்மால் ஆர்டர் செய்ய முடியும். அறிமுகச் சலுகையாக முதலில் ஒரு ரூபாய் மட்டுமே டெலிவரி கட்டணமாக வாங்கிய ஊபர், இப்போது அதைப் பத்து ரூபாயாக மாற்றிவிட்டது. இது மற்ற ஆப்களை விடவும் குறைவுதான் என்பது ப்ளஸ். இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் ஊபர் ஈட்ஸில் ஈர்த்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது சில குறைகளும் தெரிகின்றன.

மற்ற ஆப்களோடு ஒப்பிடுகையில் உணவகங்களின் எண்ணிக்கை ஊபரில் குறைவு. ஆஃபர்களும் அதிகளவில் இல்லை. ஆப்பில் டெக்னிக்கலாகவும் சில குறைபாடுகள் இருக்கின்றன. உணவை ஆர்டர் செய்துவிட்டு, ‘ செக் அவுட்’ செய்யப்போகும் போதே ஆர்டர் பிளேஸ் ஆகிவிடுவது, பணம் செலுத்துவதற்கு மிகவும் குறைவான ஆப்ஷன்கள், முகவரியைத் தேர்வு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவை அவற்றுள் சில. இவற்றை ஊபர் விரைவில் சரிசெய்துவிடும் என எதிர்பார்க்கலாம். ஊபரின் இந்த வசதி இந்தியாவில் ஒன்பது நகரங்களில் மட்டும்தான் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இப்போதைக்கு சென்னை மட்டும்தான். பிற நகரங்களுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2HcxEO7

 ஞா.சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு