Published:Updated:

`இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்

விகடன் விமர்சனக்குழு
`இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்
`இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்

கும்பகோணம் பயணிப்பவர்களும், அமைதியான கீற்றுச் சூழலில் நிம்மதியாக ஓய்வெடுக்க விரும்புபவர்களும் இந்த மூங்கில் ரெஸ்டாரெண்டில் `டேக் டைவர்சன்' எடுக்கலாம்.

ரு வேலை காரணமாக சென்னையிலிருந்து கும்பகோணம் வரை செல்ல வேண்டியிருந்தது. நீண்ட தூரப் பயணம் என்பதால் கொஞ்சம் அசதியாக இருந்தது. அதனால் ஏதாவது கடை தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். அப்போது மூங்கில் ரெஸ்டாரெண்ட் என்று பலகை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது அமைந்திருந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருக்க உணவகத்துக்குள் சென்றேன். சுற்றி வயல்கள் இருக்கத் தோட்டத்து விருந்தைச் சுவைக்கலாம் என்று மனதுக்குத் தோன்றியது. மாலை நேரம் என்பதால் டிகிரி காபி ஆர்டர் செய்தேன். காபி வரக் கொஞ்ச நேரம் ஆனது அப்போது முற்றிலுமாக அந்த உணவகத்தைச் சுற்றிலும் பார்வை இருந்தது. 

வயல்களின் நடுவே கீற்றால் பின்னப்பட்ட மேல் தளம், தென்னையால் பரப்பப்பட்ட கீழ்த்தளம் என மூங்கில் விளக்கு, மூங்கில் தூண்கள், மூங்கில் உபகரணங்கள் உட்பட மூங்கிலால் சூழப்பட்ட சுவர்களின் மூலம் மூங்கில் காட்டுக்கு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னர் வந்த காபியைப் பருகிக்கொண்டே `மூங்கில் ரெஸ்டாரண்ட்' உரிமையாளர் முத்து விவேகானந்தனிடம் பேசினோம். 

``கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் செட்டி மண்டபம் அருகில் இருக்கிறது. ஹோட்டல் ஆரம்பித்து 7 மாதங்கள் ஆகிறது. மேலே கூரை போட்டுவிட்டு தரையில் மணலாகவும் சுற்றிச் சுவர்களாக எழுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால், மூங்கிலில் செய்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். இறுதியில் ஒரு வழியாகச் சுற்றி மூங்கிலும், கீழ்த்தளமும் மரமாக இருந்தால் நல்லாயிருக்குமே என்று முடிவு செய்து, மூங்கிலையும், தென்னையும் அமைத்தோம். பிறகு விளக்கு பிற உபகரணங்கள் என மூங்கிலிலேயே அமைத்துள்ளோம். நெடுஞ்சாலையில் இது போன்ற வயலுக்கு இடையில் ரெஸ்டாரெண்ட் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெடுஞ்சாலை எனும்போது பயணிகள்தான் அதிகம் வருகின்றனர். உள்ளே நுழைந்தவுடன் முதலில் இந்த இடத்தைப் பார்த்துவிட்டு பயண களைப்பிலிருந்து சற்று இளைப்பாறுவார்கள். பலர் கடையினை ஆச்சர்யமாக ரசித்துக்கொண்டிருப்பார்கள். இளைஞர்கள் செல்பி எடுப்பது, குழந்தைகள் மரம் என்பதால் குதித்து விளையாடுவது என்று வந்தவுடன் அவரவர்கள் போக்கில் கொண்டாட விட்டுவிட்டு கொஞ்சம் நேரம் கழித்துத்தான் எப்பொழுதும் ஆர்டர் எடுப்போம். கும்பகோணத்திலேயே பல குடும்பங்கள் வார விடுமுறையின் போது இங்கு வந்து அமைதியான சூழலில் இருந்து செல்ல விரும்புவதும் உண்டு. கல்லூரி மாணவர்கள் குறும்படம், ஆல்பம் எடுக்க இங்கே வந்து செல்வார்கள். பெரும்பாலும் கோயிலுக்கு வரும் கேரளா போன்ற வெளியூர் பயணிகள் வந்து ஆச்சர்யப்பட்டுச் செல்கிறார்கள். இன்னும் சிலர் இதை அமைப்பதை விரிவாகக் கேட்டும் செல்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது" என்றவரிடம் " மற்ற ஹோட்டல்களைப் போல உணவில் என்ன வித்தியாசத்தைக் கொடுக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினோம்.

``இங்கு நாங்கள் பரிமாறும் அனைத்து உணவுகளும் உடனுக்குடன் தயார் செய்து தருகிறோம். கோவைக்காய், பாகற்காய் போன்ற கடைகளில் அரிதாகக் கிடைக்கும் பொருள்களை நாங்களே இயற்கை முறையில் பயிர் செய்து உணவாக வழங்குகிறோம். காபிக்கு நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பால் எனப் பல முறைகளை ஸ்ட்ரிக்டாகப் பின்பற்றி வருகிறோம். இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய், பிரியாணி 100 ரூபாய் என வழங்குகிறோம். நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளில் இட்லி 5 ரூபாய்க்கு யாரும் தர மாட்டார்கள். இங்கு வேலைக்கு வெளியாள்கள் யாரையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. என் சொந்தக்காரர்கள்தான் இங்கு வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பமாக வேலை செய்து பரிமாறும்போது எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருப்பதில்லை. உணவையும் தரமாகக் கொடுக்க முடிகிறது. வீட்டில் உண்பதுபோல் வீட்டு உணவுகளை மட்டுமே வழங்குகிறோம். குறிப்பாக,தோசை கூட வீட்டில் சுடும் கல் தோசையே செய்து வழங்குகிறோம். ஹோட்டலில் சுடுவது போல் மிருதுவாகச் சுடலாமே என்று கேட்பார்கள். ஆனால், வீட்டின் சாயல் மாறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். கும்பகோணம் ஃபில்டர் காபி இங்க ஃபேமஸ், மதிய உணவும் பாரம்பர்ய உணவுதான். அதனால் வாடிக்கையாளர்களின் வரவும் அதிகமாக இருக்கிறது. 

புதிதாக அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். கண்டிப்பாக, புது வெரைட்டி உணவுகள் வழங்கத் தயாராகி வருகிறோம். தீபாவளிக்குப் பிறகு `மூங்கில் பிரியாணி' வழங்க இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் யோசனைக்கேற்ப நிறைய கற்றுக் கொள்கிறோம். நீங்கள், அடுத்த முறை வரும்பொழுது நிறைய `அப்டேட்டுகளை' பார்ப்பீர்கள்" என்று விடைகொடுத்தார், முத்து விவேகானந்தன். அடுத்த முறை நிச்சயமாக வருகிறோம் என்று சொல்லி விடைபெற்றோம். 

கும்பகோணம் பயணிப்பவர்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க, அமைதியான கீற்றுச் சூழலில் ஓய்வெடுக்க விரும்புபவர்கள் இங்கே `டேக் டைவர்சன்' எடுக்கலாம்.
 

அடுத்த கட்டுரைக்கு