செம்பருத்தி சர்பத்

தேவை:

செம்பருத்திப்பூ இதழ்கள் - 15

ஊறவைத்த பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை - ஒன்று (சாறு பிழியவும்)

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களைச் சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்துக் கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கி நாட்டுச் சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டி, பாதாம் பிசின் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துப் பருகவும்.

பயன்: இதயத்தைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் செம்பருத்திப்பூ உதவுகிறது. ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதீதக் கோபம் ஆகியவற்றில் இருந்த நிவாரணம் தருகிறது.

அமுக்கிராக்கிழங்குப் பொடி பால்

தேவை:

வெள்ளரி விதை, சாரைப்பருப்பு - தலா 10 கிராம்

அமுக்கிராக்கிழங்குப் பொடி - 10 கிராம்

நாட்டுச் சர்க்கரை - 20 கிராம்

காய்ச்சாத பால் - 100 மில்லி.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் வெள்ளரி விதை, சாரைப்பருப்பு, அமுக்கிராக்கிழங்குப் பொடி சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து இளஞ்சூடாக அருந்தவும்.

பயன்: ரத்தச் சோகையை நீக்கும்; கால்சியம் அதிகரிக்கும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். அமுக்கிராக்கிழங்குப் பொடி பாலில் சேர்க்கப்பட்ட அனைத்து பொருள்களும் சோர்வை நீக்கி, சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியும் தரும். மூளை செல்கள் சுறுசுறுப்புடன் செயல்பட துணைபுரியும்.

ஆளி விதை புதினா பானம்

தேவை:

ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்

புதினா இலை - 5 முதல் 10 வரை

மோர் - ஒரு டம்ளர்

சீரகம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் ஆளி விதை, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்தெடுத்து ஒன்றாகக் கலந்துப் பொடிக்கவும். புதினா இலையை இடித்து வைக்கவும். மோருடன் ஒரு டீஸ்பூன் பொடித்த ஆளி விதை - சீரகத்தூள், இடித்த புதினா சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் சிட்டிகை உப்பு சேர்க்கலாம்.

பயன்: ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும். தொப்பை குறைய உதவும். இதில் பொட்டாசியம் அதிகமுள்ளது. மோரில் உள்ள கால்சியமும், ஆளி விதையில் உள்ள அனைத்து நற்குணமும் சேரும்போது மனம், உடல் இரண்டும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருக்க உதவும்.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் மூலிகைப்பொடி

தேவை:

சுத்தமான சந்தனம், அதிமதுரப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, கோரைக்கிழங்குப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, சுத்தமான மஞ்சள்தூள் - தலா 5 கிராம்

உலர் திராட்சை - 5.

செய்முறை: 200 மில்லி தண்ணீரைச் சூடாக்கவும். அதனுடன் சந்தனம், அதிமதுரப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, கோரைக்கிழங்குப் பொடி, மஞ்சள்தூள், அமுக்கிராக்கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். அதனுடன் உலர் திராட்சை சேர்த்து 30 - 50 மில்லி அளவு உணவுக்குப் பிறகு அருந்தலாம்.

பயன்: இந்த மூலிகைப்பொடியில் பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. மன அழுத்தம், பதற்றம் ஏற்படாமல் தடுக்க உதவும்.

கறுப்பு திராட்சை புத்துணர்வு நீர்

தேவை:

ஃப்ரெஷ் கறுப்பு திராட்சை - ஒரு கப்

நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: திராட்சையுடன் நாட்டுச் சர்க்கரை, இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகலாம். (வடிகட்டக் கூடாது). அவ்வாறு குடிக்கும்போது பொறுமையுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். வாயில் உமிழ்நீர் சுரக்க இதைப் பருக வேண்டும்.

பயன்: திராட்சையில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, மினரல், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலைத் தடுக்கும். சிறுநீரகக் கோளாறுகளைத் தவிர்க்க உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதயத்துக்கு மிகவும் பயனளிக்கும். மனம் மகிழ்வுடன் இருக்கவும் உதவும்.

வாழைப்பழம் வால்நட் ஸ்மூத்தி

தேவை:

நன்கு பழுத்த வாழைப்பழம் - 2

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

புளிக்காத கெட்டித் தயிர் - அரை கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

வால்நட் - 5 முதல் 8 வரை

ஆளி விதைப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

ஐஸ் க்யூப்ஸ் - 5.

செய்முறை: வாழைப்பழத்துடன் தேன், தயிர், வால்நட், ஏலக்காய்த்தூள், ஆளி விதைப்பொடி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்கவும். பிறகு இதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பருகவும்.

பயன்: வால்நட்டில் உள்ள ஒமேகா இதயத்துக்கு வலிமை தரும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். மார்பகப் புற்றுநோயைத் தடுக்க உதவும். தயிரில் உள்ள டயோசின் என்ற பொருள் மூளையில் உள்ள செரடோனின் அதிகரிக்க உதவும். மேலும், இதில் உள்ள புரோட்டீன் மூளையில் உள்ள நியூரோ ஹார்மோன்களை அதிகரித்து மன அழுத்தம் தரும் நரம்பை அமைதிப்படுத்த உதவுகிறது.

ஆம்லா ஸ்பெஷல் வடிநீர்

தேவை:

நெல்லிக்காய் - 3

தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

எலுமிச்சை - பாதியளவு (விரும்பினால்)

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

ஐஸ் க்யூப்ஸ் - 5

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: எலுமிச்சையைச் சாறு பிழியவும். நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன் இஞ்சி, புதினா, ஐஸ் க்யூப்ஸ், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து பருகவும். விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

பயன்: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது எலும்புக்கு மிகவும் நல்லது. பித்தத்தை நீக்கும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். சருமம், முடிக்குப் பொலிவு தரும். உடலில் பிராண வாயுவை அதிகரித்து, செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிக்கும்

மூலிகைப் பால்

தேவை:

காய்ச்சாத பசும் பால் - 250 மில்லி

நாட்டுச் சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கசகசா - அரை டீஸ்பூன் ஜாதிக்காய் - சிறிய துண்டு ஏலக்காய் – ஒன்று.

செய்முறை: வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் சுக்குத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் பருகலாம்.

பயன்: மன அழுத்தத்துக்கு தூக்கமின்மையும் ஒரு காரணம் ஆகும். ஆழ்நிலை உறக்கத்துக்கு இந்த மூலிகைப் பால் உதவும்.

ஆப்பிள் வித் கேரமல் சாலட்

தேவை:

சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் கலவை - ஒரு கப்

ஆளி விதைப் பொடி (வறுத்துப் பொடித்தது) - ஒரு டீஸ்பூன்

யோகர்ட் (புளிக்காத கெட்டித் தயிர்) - அரை கப்

ஊறவைத்த பாதாம் - 5 முதல் 10 வரை

கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை

உலர் திராட்சை - 10

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் சர்க்கரை சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி இறக்கவும். இதுவே கேரமல். ஆப்பிள் கலவையுடன் கறுப்பு உப்பு தூவவும். அதனுடன் பாதாம், உலர் திராட்சை, ஆளி விதைப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு யோகர்ட் சேர்த்துக் கலக்கவும். கேரமல் செய்த சர்க்கரையை மேலே பரப்பி பரிமாறவும்.

பயன்: கெட்ட கொழுப்பைக் கரைக்கும். மூளை செல்கள் அழியாமல் பாதுகாக்கும்.

ஆயுர்வேதத் தேநீர்

தேவை:

வெட்டிவேர், ஏலக்காய் - தலா 5 கிராம்

நெல்லி முள்ளி, சீரகம் - தலா 10 கிராம்

தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீருடன் சீரகம், ஏலக்காய், நெல்லி முள்ளி, வெட்டிவேர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும் (உப்பு (அ) சர்க்கரை சேர்க்கக் கூடாது). இதை உணவுக்குப் பின் 30 மில்லி முதல் 50 மில்லி வரை வாரம் ஒருமுறை பருகலாம்.

பயன்: மனச்சோர்வில் இருந்து விடுபடவும். உடலும் மனதும் சீராகச் செயல்படவும் இந்த ஆயுர்வேதத் தேநீர் உதவும்.

குறிப்பு: நெல்லி முள்ளி என்பது காய்ந்த நெல்லிக்காய் ஆகும்.

ஸ்பிரவுட்ஸ் ஸ்பெஷல் சாலட்

தேவை:

முளைகட்டிய நவதானியக் கலவை (பச்சைப்பயறு, கொள்ளு போன்றவை) - ஒரு கப்

தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்)

வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு

வெள்ளை வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் - கால் கப்

மாங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஊறவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய், முளைகட்டிய தானியக் கலவை, இஞ்சித் துருவல், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், மாங்காய்த் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு, மாதுளை முத்துகள், புதினா, கொத்தமல்லித் தழை, வெள்ளை மிளகுத்தூள், கறுப்பு உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த வேர்க்கடலை சேர்த்துப் பரிமாறவும்.

பயன்: இது நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். மூளை செல்களைப் பாதுகாக்கும். தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். நார்ச்சத்து மிகுந்தது. மனதைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.

புரோக்கோலி ரைஸ்

தேவை:

சுத்தம் செய்த புரோக்கோலி துண்டுகள் - ஒரு கப்

பாசுமதி (அ) சீரகச் சம்பா அரிசி - ஒரு கப்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 2 கப்

வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 3 (கீறவும்)

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை - ஒரு மூடி

நெய் - ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

பட்டை, கிராம்பு - தலா 2

சோம்பு - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் - ஒன்று.

செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் புரோக்கோலி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலாத்தூள், உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பால், அரிசி சேர்த்து மூடி போட்டு 2 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மேலே நெய்விட்டுப் பரிமாறவும்.

பயன்: இதில் அதிக அளவு இரும்புச்சத்து, புரதச்சத்து உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இதயம், மூளை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

ஏலக்காய் துளசி பானம்

தேவை:

ஏலக்காய் - 5 (தட்டவும்)

துளசி - ஒரு கைப்பிடி அளவு

ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

தண்ணீர் – 200 மில்லி

பனங்கற்கண்டு - 20 கிராம்.

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனுடன் ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள், துளசி, பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வாசனை வரும்போது இறக்கி வடிகட்டி இளஞ்சூடாகப் பருகவும்.

பயன்: துளசி மனதை அமைதியாக்கும்; மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

ஆப்பிள் ஃபன் டாப்

தேவை:

பல நிறங்களில் உள்ள ஆப்பிள் கலவை (சிவப்பு, பச்சை, மஞ்சள், வெளிர் சிவப்பு) - ஒரு கப்

ஐஸ் க்யூப்ஸ் - 8

ஆரஞ்சுச் சாறு - அரை கப்

தேன் - 2 டேபிள்ஸ்பூன்

ஆளி விதைப்பொடி - கால் டீஸ்பூன்.

செய்முறை: ஆப்பிள் கலவையுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் தேன், ஆளி விதைப்பொடி சேர்த்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். பிறகு ஆரஞ்சுச் சாறு சேர்த்துக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

பயன்: இது டென்ஷனைக் குறைக்கும்.

டென்ஷன் ஃப்ரீ டீ

தேவை:

காய்ந்த புதினா, துளசி இலைகள் (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு

பட்டை - 4 சிறிய துண்டுகள்

ஏலக்காய் - 10 கிராம்

மிளகு - ஒரு டீஸ்பூன்

அதிமதுரப் பொடி, சுக்குத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

திப்பிலி - 10 கிராம்

ஜாதிக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

டீத்தூள் - ஒரு டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை (அ) தேன் - ஒரு டீஸ்பூன்

தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை: வெறும் வாணலியில் புதினா, துளசி, பட்டை, ஏலக்காய், மிளகு, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து வாசனை வரும்வரை சிறு தீயில் வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராகப் பொடித்தெடுக்கவும். அதனுடன் அதிமதுரப் பொடி, சுக்குத்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். அதனுடன் அரைத்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன், டீத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) தேன் கலந்து சூடாகப் பருகவும். (விரும்பினால் 50 மில்லி பால் சேர்க்கலாம்).

பயன்: மனம் அமைதியாக, படபடப்பின்றி இருக்க இந்த டீ உதவுகிறது.

நெல்லி கறிவேப்பிலைத் துவையல்

தேவை:

பெரிய நெல்லிக்காய் - 3 (கொட்டை நீக்கி நறுக்கவும்)

கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு

சின்ன வெங்காயம் - 10

முழு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

புளி - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு. கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நெல்லித் துண்டுகள், பச்சை மிளகாய், புளி, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். நாவில் நீர் ஊறவைக்கும் நெல்லி கறிவேப்பிலைத் துவையல் ரெடி.

பயன்: இது, மனம் திறமையுடன் செயல்பட உதவும்.

அவகாடோ வெள்ளரி சூப்

தேவை:

அவகாடோ பழம் (சிறியது) - ஒன்று (தோல், கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் - ஒரு கப்

பூண்டு - 10 பல்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

தோல் சீவி, துருவிய இஞ்சி - சிறிதளவு

சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன் (அ)

மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

வெஜிடபிள் ஸ்டாக் (அ) அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப்

ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து வதக்கி இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அவகாடோ பழத் துண்டுகள் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக் (அ) அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே சில்லி ஃப்ளேக்ஸ் (அ) மிளகு - சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். பரிமாறும்போது கெட்டித் தயிரை அடித்துச் சேர்க்கவும்.

பயன்: வைட்டமின் ஏ, பி, இ அதிகளவில் உள்ளது. HDL நல்ல கொழுப்பு உள்ளது. இந்தச் சூப்பில் சேர்க்கப்பட்ட பொருள்கள் சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருள்களாகும்

கறிவேப்பிலை கதம்ப சாதம்

தேவை:

கறிவேப்பிலை - 2 கப்

மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்

புளி - சிறிதளவு கொத்தமல்லித்தழை - புதினா கலவை - ஒரு கைப்பிடியளவு

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 3 (கீறவும்)

தோல் சீவிய இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பல்

பச்சரிசி, தேங்காய்ப்பால் - தலா ஒரு கப்

நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். சிறிதளவு கறிவேப்பிலையைத் தனியாகத் தாளிக்க எடுத்துவைக்கவும். மீதமுள்ள கறிவேப்பிலையுடன் மிளகு, சீரகம், புளி, கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி, பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நல்லெண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, அரைத்த விழுது சேர்த்துக் கிளறி 8-10 நிமிடங்கள் சிறு தீயில் வதக்கவும். அதனுடன் அரிசி, உப்பு, ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து மேலே நெய்விட்டுக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

பயன்: கறிவேப்பிலையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. தலை முதல் பாதம் வரை பலப்படும். மனச் சோர்வு நீங்கி ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

டார்க் சாக்லேட் கோகோ டிரிங்க்

தேவை:

டார்க் சாக்லேட் துண்டுகள் - 5

கோகோ பவுடர், டேட் சிரப் - தலா ஒரு டீஸ்பூன்

காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி

பொடியாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, உலர் அத்திப்பழம், உலர் திராட்சை கலவை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாலுடன் சாக்லேட் துண்டுகள், கோகோ பவுடர், டேட்ஸ் சிரப் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே உலர் பழங்களைத் தூவி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் குளிரவைத்துப் பரிமாறவும்.

பயன்: டார்க் சாக்லேட் என்பது பால் சேர்க்காத கறுப்பு அடர்நிற சாக்லேட் ஆகும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். படபடப்பு, மூளைச் சோர்வை நீக்கும்.

பனிவரகு பால் பொங்கல்

தேவை:

பனிவரகு - ஒரு கப்

பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் - அரை லிட்டர்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பனிவரகுடன் பாசிப்பருப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் ஊறவைத்த பனிவரகு கலவை, உப்பு, பால் சேர்த்து மூடி நான்கு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு மிளகுத்தூள், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தாளித்த பொருள்களைச் சேர்த்துக் கலந்து மசிக்கவும் (தேவைப்பட்டால் கிளறும்போது காய்ச்சிய பால் ஒரு கரண்டி சேர்க்கலாம்). மேலே சிறிதளவு நெய்விட்டுச் சூடாகப் பரிமாறவும்.

பயன்: மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். உடல் மற்றும் மனதை திடமாக்கும்.

சிட்ரஸ் பழ சாலட்

தேவை:

சாத்துக்குடி, ஆரஞ்சு, கமலாப்பழத் துண்டுகள் கலவை - ஒரு கப்

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

சாத்துக்குடிச் சாறு, ஆரஞ்சுச் சாறு கலவை - அரை கப்

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழச் சாறு, ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து சிறு தீயில் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும் (ஒரு நிமிடம் மேலே வைத்தால் பழச்சாறு கசந்துவிடும்). அதனுடன் பழக் கலவை, உப்பு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

பயன்: இதயம் சீராக இயங்க உதவும். மன அழுத்தம் சம்பந்தமான தாக்குதலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பட்டைப்பொடி பால் பாதாமி

தேவை:

பட்டை - 3 சிறிய துண்டு

கிராம்பு - 3

சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

பாதாம் பால் மிக்ஸ் - ஒரு டீஸ்பூன்

காய்ச்சாத பால் - 200 மில்லி

தேன் (அ) நாட்டுச் சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் பட்டை, கிராம்பை வறுத்துப் பொடிக்கவும். அதனுடன் சுக்குத்தூள், பாதாம் பால் மிக்ஸ் சேர்த்துக் கலக்கவும். பாலைக் காய்ச்சவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியைச் சேர்த்துக் கொதிவந்ததும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் தேன் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து இளஞ்சூடாகப் பருகவும்.

பயன்: பட்டை கொழுப்பைக் கரைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். மூளைத் திறனை அதிகரிக்கும். சோர்வு, படபடப்பு நீங்க உதவும்.

சீட்ஸ் கீர்

தேவை:

கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்

சாரைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை, முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

பால் - அரை லிட்டர்

கண்டன்ஸ்டு மில்க் - 100 மில்லி.

செய்முறை: வெறும் வாணலியில் கசகசா, சாரைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் கொதிக்கும்போது அரைத்தப் பொடி, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து உடனே இறக்கவும். சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பருகலாம் (விரும்பினால் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கலாம்).

பயன்: இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு பருகுவது நல்லது. மன அமைதியையும் ஆழ்ந்த உறக்கத்தையும் தரும்.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஸ்நாக்

தேவை:

ஆளி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்

ராகி அவல் - ஒரு கைப்பிடி அளவு

வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், நாட்டுச் சர்க்கரை - தலா ஒரு கைப்பிடி அளவு

ஏதாவது ஒரு சிறுதானிய அவல் (வரகு, சாமை, குதிரைவாலி, தினை) - ஒரு கைப்பிடி அளவு

உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெறும் வாணலியில் ஆளி விதையைச் சேர்த்து வறுத்தெடுத்துக் கொரகொரவென பொடிக்கவும். அதே வாணலியில் ராகி அவல், வேர்க்கடலை, பாதாம், சிறுதானிய அவல் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அவற்றுடன் உப்பு, ஆளி விதைப்பொடி, பொட்டுக்கடலை, உலர் திராட்சை, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஹெல்த்தியான ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஸ்நாக் அயிட்டம் ரெடி.

பயன்: இதில் அதிகளவில் நார்ச்சத்து, ஊட்டச்சத்து, கனிமச்சத்து உள்ளது.

கொடிப் பசலை பனாமா

தேவை:

கொடிப் பசலைக்கீரை - ஒரு கப்

பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்ப்பால் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நீரை வடித்துவிட்டுக் கீரையைக் கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் வடித்த நீர், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கீரையுடன் கலக்கவும். இதை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, சிறு தீயில் 2 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

பயன்: இதில் வைட்டமின் ஏ, இ, கே. சி. பி6, பி12 ஆகியவை அதிக அளவில் உள்ளன. மூளைச் சோர்வை நீக்கி மனம் புத்துணர்வாக இருக்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. தேர்வு நேரத்தில் ஏற்படும் பதற்றத்தை நீக்கும். கீரையில் உள்ள நார்ச்சத்து செரபோனின் எனும் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டும். இந்த ஹார்மோன் மனம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

கேரட் தக்காளி புர்ஜி

தேவை:

கேரட் துண்டுகள் - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - கால் டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன் தோலுரித்த சின்ன வெங்காயம் - 5.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் அதனுடன் அரைத்த விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

பயன்: கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் தக்காளியில் உள்ள வைட்டமின் சி-யுடன் சேரும்போது மனதுக்கும் மூளை செல்களுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

பீட்ரூட் உப்பேரி

தேவை:

தோல் சீவி பொடியாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் - ஒரு கப்

தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை கலவை - ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பீட்ரூட் துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். பீட்ரூட் முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துச் சுருள வதக்கவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். வீடே மணமணக்கும் பீட்ரூட் உப்பேரி தயார்.

பயன்: பீட்ரூட்டில் உள்ள போரான் என்ற ரசாயனப் பொருள் இதயநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மனச்சோர்வை நீக்கும்.

பீர்க்கங்காய் கிரேவி

தேவை:

பிஞ்சு பீர்க்கங்காய் - ஒன்று (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் -10

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (கீறவும்)

மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்

பூண்டு - 8 பல்

தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

புளி - சிறிதளவு

வெல்லம் - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு (அ) சீரகம் - தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். அதனுடன் பீர்க்கங்காய்த் துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். பிறகு உப்பு, வெல்லம் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்துக்குக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பயன்: நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். மனத் திறனை மேம்படுத்தும்.

செவ்வாழைக்காய் பொலிச்சது

தேவை:

செவ்வாழைக்காய் - ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்)

செவ்வாழை இலை (சிறியது) - ஒன்று

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

புளிக் கரைசல் - ஒரு குழிக்கரண்டி அளவு

கடுகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காய்த் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாதூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் புளிக்கரைசல் சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக்காய்த் துண்டுகளை சிறு தீயில் வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான உப்பு, மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதமுள்ள புளிக்கரைசல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். பிறகு வாழை இலையில் ஒரு லேயர் இந்த மசாலா, அதன் மீது வறுத்த வாழைக்காய் பிறகு மற்றொரு லேயர் என்று இப்படி லேயர் லேயராக வைத்து வாழை இலை நாரால் கட்டவும். இதை ஆவியில் வேகவைத்தும் எடுக்கலாம்.

பயன்: நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். நல்ல உறக்கம் வரும். மலச்சிக்கல் தீரும்.

வாழைப்பூ அரைத்துவிட்ட கூட்டுக் கறி

தேவை:

ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் (மோரில் போட்டுவைக்கவும்)

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்ப்பால் - அரை கப்.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் வாழைப்பூ, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேகவைத்த வாழைப்பூ கலவை, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, 5 நிமிடங்கள் அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கூட்டுடன் கலக்கவும்.

பயன்: ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ரத்தம் உறையாமல் கட்டுப்படுத்தும். மன அமைதிக்கு உதவும். நரம்பு சம்பந்தமான பிரச்னைக்கு ஓர் அருமருந்தாகும்.

நோ டென்ஷன்... ஃபீல் ஃப்ரீ

`ஒரே டென்ஷனா இருக்கு...’ - பள்ளிக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் அன்றாடம் அலுத்துக்கொண்டே உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. உடலும் மூளையும் சமமாகச் செயல்படாமல் உடல் உழைப்பு குன்றி, மூளைச் செயல்பாடு அதிகரிக்கும்படியான வேலைப்பளு அமைவதால் மன அழுத்தம் என்ற மிகவும் கடுமையான நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இதனால் பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிப்படைகிறோம்.

டென்ஷனிலிருந்து விடுபட யோகா, தியானம், உடற்பயிற்சிப் போன்றவை பெருமளவில் உதவிபுரிந்தாலும், இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட மன அழுத்தம் நீக்கும் உணவு வகைகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அத்தகைய உணவான டென்ஷன் ஃப்ரீ ஃபுட் வகைகளை வழங்கி, அவற்றின் பயன்களையும் விளக்குகிறார் ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி.

படங்கள்: கே.மணிவண்ணன்