தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!
பிரீமியம் ஸ்டோரி
News
டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!
டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ரோஸ் பனீர் லட்டு

தேவை:    *  உதிர்த்த பனீர் - ஒரு கப் * கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் * நெய் - ஒரு டீஸ்பூன்  * ரோஸ் எசென்ஸ் - 3 துளி * உலர்ந்த தேங்காய்த் துருவல் (desiccated coconut) - 2 டேபிள்ஸ்பூன் * பிங்க் ஃபுட் கலர் - சில துளிகள்.

செய்முறை:    பனீரைக் கைகளால் மென்மையாகும்வரை பிசையவும். நான்- ஸ்டிக் கடாயில் பனீரைச் சேர்க்கவும். அதோடு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும் (`விஸ்க்’ கொண்டும் செய்யலாம்). பிறகு அடுப்பில் வைத்துச் சூடாக்கி நெய், 2 துளி ரோஸ் எசென்ஸ், பிங்க் ஃபுட் கலர் கலந்து கைவிடாமல் கிளறவும். 8 -10 நிமிடங்களில் ஈரப்பதம் நீங்கி கெட்டியாகும். கலவை கடாயின் ஓரங்களில் இருந்து விலக ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை ஒரு தட்டில் சேர்த்து 5 - 7 நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு நன்கு பிசைந்து, சிறிய லட்டுகளாக உருட்டவும். ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவல் சேர்த்து, அதனுடன் ஒரு துளி ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். லட்டுகளை இதில் புரட்டி எடுக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பாசிப்பருப்பு லட்டு

தேவை:    *  பாசிப்பருப்பு - ஒரு கப் (கழுவி, நீரை வடிக்கவும்) * சர்க்கரை  - முக்கால் கப் * நெய் - தேவையான அளவு * நொறுக்கிய பாதாம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் * ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:   அடிகனமான கடாயில் பாசிப்பருப்பைச் சேர்த்து, லேசான பழுப்பு நிறமும் வாசனையும் வரும்வரை மிதமான தீயில் வறுக்கவும் (சுமார் 8 நிமிடங்கள்). இதைத் தட்டில் சேர்த்து ஆறவிடவும். பிறகு நைஸான பவுடராக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பாதாம் சேர்த்துக் கலக்கவும். நெய்யை வெதுவெதுப்பாக உருக்கி பாசிப்பருப்பு மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். 2 டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து உருட்டிப் பார்க்கவும். சரியாக லட்டு பிடிக்க வராவிட்டால், கலவையில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் உருக்கிய நெய்விட்டுக் கலந்து லட்டுகள் செய்து, மேலே ஒரு பாதாம் வைத்து அலங்கரித்துக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

இது இரண்டு வாரங்கள்வரை நன்றாக இருக்கும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

தேவை:    *  உலர்திராட்சை - கால் கப் * நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * கொட்டை நீக்கிய பேரீச்சை - ஒரு கப் * பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா கால் கப்.

செய்முறை:    பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கவும். கொட்டை இல்லாத பேரீச்சையை மிக்ஸியில் சேர்த்து, 4 - 5 சுற்றுவிட்டுக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் நெய்யைச் சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து உலர்திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரியைச் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். இதனுடன் பேரீச்சையைச் சேர்க்கவும். பேரீச்சையைத் தட்டையான கரண்டியால் நசுக்கி, தொடர்ந்து கிளறவும். நெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து கைபொறுக்கும் சூட்டுக்கு ஆறவிடவும் (முழுவதுமாக ஆறிவிடக் கூடாது; ஆறினால் லட்டு பிடிக்க வராது). உடனடியாக இந்தக் கலவையை லட்டுகளாக உருட்டவும். லட்டுகளை உடனடியாக பரிமாறவும் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ஜவ்வரிசி லட்டு

தேவை:    * ஜவ்வரிசி - ஒரு கப் * சர்க்கரை - ஒரு கப் * நெய் - தேவையான அளவு * ஏலக்காய்த்தூள் - 1/3 டீஸ்பூன் * முந்திரி - 4 (உடைக்கவும்) * தேங்காய்த் துருவல் - 1/3 கப்.

செய்முறை:     ஜவ்வரிசியை வெறும் வாணலியில் 15 - 20 நிமிடங்கள் வறுக்கவும் (ஜவ்வரிசியின் தரத்தைப் பொறுத்து வறுக்கும் நேரம் மாறுபடும்). ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். சர்க்கரை, ஒரு டீஸ்பூன் நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஒரு நிமிடம் கழித்து ஜவ்வரிசிப் பொடி சேர்த்துக் கலக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கலந்து அடுப்பை நிறுத்தவும். இப்போது கலவை மென்மையாகி இருக்கும். கலவையைக் கைபொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும் (விருப்பப்பட்டால் லட்டு உடையாமல் வர, மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம்). 

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

கொப்பரி கோவா லட்டு (ஆந்திரா)

தேவை:   *  தேங்காய்த் துருவல் - ஒரு கப் * சுத்தமான வெல்லம் - முக்கால் கப் (பொடிக்கவும்) * ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் * நெய் - 2 டேபிள்ஸ்பூன் * இனிப்பில்லாத கோவா - அரை கப் * சர்க்கரை - கால் கப்.

செய்முறை: கடாயில் நெய்விட்டு தேங்காய்த் துருவலை லேசான பழுப்பு நிறம் வரும்வரை வறுத்துப் பாத்திரத்தில் சேர்க்கவும். அதே கடாயில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சூடாக்கி, முழுவதுமாக கரையவிடவும். இதில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகும்வரை நன்கு கிளறவும் (இதற்குச் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்). சிறிது நேரம் ஆறவிடவும் (முழுவதுமாக ஆறிவிடக் கூடாது). கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும்.

நான்-ஸ்டிக் பானில் (non-stick pan) கோவாவைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகும்வரை கிளறவும். இந்தக் கலவையை ஒரு தட்டில் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டுக்கு வரும்வரை ஆறவிடவும். கைகளில் நெய் தடவிக்கொண்டு சிறிதளவு கோவாவை எடுத்துச் சிறிய வட்டமாகத் தட்டவும். தேங்காய் லட்டை கோவாவில் வைத்து மூடி, உள்ளங்கைகள் நடுவில் வைத்து உருட்டி வழவழப்பான வடிவம் கொடுக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

கேரட் தேங்காய் லட்டு

தேவை:    *  துருவிய கேரட் - ஒன்றரை கப்  * உப்பில்லாத வெண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப் * பாதாம் - 7 (சீவவும்) *  உலர்ந்த தேங்காய்த் துருவல் (desiccated coconut) - ஒரு கப் * ரோஸ் வாட்டர் (பன்னீர்)  - சில துளிகள்.

செய்முறை:    கடாயில் வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து உருக்கி, சீவிய பாதாமைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் கேரட் துருவலைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் முக்கால் கப் உலர்ந்த தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு கண்டன்ஸ்டு மில்க், ரோஸ் வாட்டர்  சேர்த்துக் கலந்து, அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 - 8 நிமிடங்கள் வேகவிடவும். கலவைக் கெட்டியாகி சுருண்டுவரும். அப்போது வறுத்த பாதாம் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டுக்கு ஆறவிடவும் (முழுவதுமாக ஆறிவிடக் கூடாது). கையில் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும். லட்டுகளை உலர்ந்த தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும். காற்றுபுகாத டப்பாவில் சேகரித்து 4 நாள்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பனீர் குல்கந்து டிரை ஃப்ரூட் லட்டு

தேவை:  * ஃப்ரெஷ் பனீர் - ஒரு கப் * கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் * திக் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன் (ஃப்ரெஷ் மலாயும் பயன்படுத்தலாம்) * கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன் * சர்க்கரை (விருப்பப்பட்டால்) - 1 அல்லது 2 டீஸ்பூன்.

ஸ்டஃபிங் செய்ய: *  பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட் கலவை (பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்) - 1/3 கப் * கசகசா - அரை டேபிள்ஸ்பூன் * பூசணி விதை - ஒரு டீஸ்பூன் (நறுக்கவும்) * குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன்.

அலங்கரிக்க:   * வெள்ளித் தாள்  பாலில் ஊறிய குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை:  கடாயில் டிரை ஃப்ரூட் கலவை, பூசணி விதை, கசகசா சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறவிட்டு குல்கந்துடன் சேர்த்துத் தனியே வைக்கவும். பனீருடன் கண்டன்ஸ்டு மில்க், க்ரீம், கார்ன்ஃப்ளார், சர்க்கரை (விருப்பப்பட்டால்) சேர்த்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். இதை அடிகனமான கடாயில் சேர்த்துச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறவும் (அதிகமான நேரம் கிளற வேண்டாம். உலர்ந்து போனால், லட்டு பிடிப்பது சிரமம். மேலும் கலவை ஆறும்போதும் கெட்டியாகும்). கலவையை ஆறவிட்டு, கைபொறுக்கும் சூட்டில் இருக்கும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் கலவையை எடுத்து உருட்டவும். கட்டைவிரலைப் பயன்படுத்தி நடுவில் பள்ளம் செய்து ஒரு டீஸ்பூன் குல்கந்து கலவையை வைத்து மூடி உள்ளங்கைகளில் வைத்து மெதுவாக உருட்டவும். வெள்ளித் தாள், பாலில் ஊறிய குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

தொக்குடு லட்டு (ஆந்திரா)

தேவை:   * கொண்டைக்கடலை மாவு - 250 கிராம் * பொடித்த சர்க்கரை - 200 கிராம் * உப்பு - 2 சிட்டிகை * நெய் - 3 டேபிள்ஸ்பூன் * எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:     ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை மாவு, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை சேவ் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, லேசான பழுப்பு நிறத்தில் பொரித்தெடுக்கவும். இதை பேப்பர் டவலில் போட்டு, துண்டுகளாக உடைத்து, சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். பெரிய பாத்திரத்தில் சேவ் பொடி, பொடித்த சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய்யைச் சிறிது சிறிதாகவிட்டுக் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

சிம்லி

தேவை:   * எள் - ஒரு கப் * பனை வெல்லம் (துருவியது) - ஒரு கப்.

செய்முறை:    எள்ளை மிக்ஸியில் சற்றே கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.இதனுடன் துருவிய பனை வெல்லம் சேர்த்து, எள்ளில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மீண்டும் அரைக்கவும். இந்தப் பொடியைத் தட்டில் சேர்த்து, கைகளால் லட்டுகளாகப் பிடிக்கவும்.

இதைக் குளுமையான இடத்தில் வைத்திருந்து 15 - 20 நாள்கள் பயன்படுத்தலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ஓட்ஸ் வேர்க்கடலை லட்டு

தேவை:   *  குயிக் குக்கிங் ரோல்டு ஓட்ஸ் - ஒரு கப் * உடைத்த வேர்க்கடலை (உப்பு இல்லாதது) - 20 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்  கண்டன்ஸ்டு மில்க் - 6 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    ஓட்ஸையும், வேர்க்கடலையையும் வெறும் கடாயில் லேசான பழுப்பு நிறம் வரும்வரை வறுக்கவும். இதை ஆறவிட்டுக் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, இந்தக் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கைகள் நடுவில் வைத்து லட்டாகப் பிடிக்கவும். மீதமுள்ள கலவையையும் இதேபோல் செய்துகொள்ளவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ஆளிவிதை லட்டு

தேவை:   *  ஆளிவிதை - கால் கப் * பொட்டுக்கடலை - ஒரு கப் * சுத்தமான வெல்லம் - கால் கப் (பொடித்தது)  * ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் * கொரகொரப்பாகப் பொடித்த பாதாம் - கால் கப் * நெய் - கால் கப் * நெய் - அரை கப்.

செய்முறை:   வெறும் கடாயில் ஆளிவிதையையும் பொட்டுக்கடலையையும் வாசனை வந்து லேசாக நிறம் மாறும்வரை வறுக்கவும். ஆறவிட்டு, ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இந்தப் பொடியுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், பாதாம் பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கைகளால் நன்கு பிசையவும். கைசூட்டிலேயே பொருள்கள் ஒன்று சேர்ந்துவிடும். தேவைப்பட்டால் மட்டும் மேலும் நெய் சேர்க்கலாம். இதை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

அரிசிப்பொரி லட்டு

தேவை:  *  அரிசிப்பொரி - 250 கிராம் * சுத்தமான வெல்லம் - 750 கிராம் (பொடித்தது) * தண்ணீர் - மூன்றரை கப்.

செய்முறை:    கடாயில் தண்ணீர், வெல்லம் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு தீயை அதிகரித்து 2 கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். பொரியை உடனடியாகப் பாகில் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். கலவையைக் கைகளால் உருண்டைகளாகப் பிடிக்கவும் (கலவை மிகவும் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இருந்தால், கையில் தண்ணீர் தடவிக்கொள்ளலாம்).

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

சூர்மா லட்டு (ராஜஸ்தான்)

தேவை: * கோதுமை மாவு - ஒரு கப் * இனிப்பில்லாத கோவா - 100 கிராம் * பொடித்த சர்க்கரை - ஒரு கப் * பாதாம் - 10 (துண்டுகளாக நறுக்கவும்) * பட்டை - ஒரு இன்ச் துண்டு * ஏலக்காய் - 4 * உப்பு - ஒரு சிட்டிகை * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:    கோதுமை மாவுடன், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி ரொட்டிகளாகத் தேய்த்துப் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும். அவற்றைச் சிறிய துண்டுகளாக நொறுக்கவும். ரொட்டித் துண்டுகள், பட்டை, ஏலக்காயை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டுப் பொடித்த சர்க்கரை, கோவா, பாதாம் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

மாலாடு

தேவை:  *  பொட்டுக்கடலை - ஒரு கப் * சர்க்கரை - முக்கால் கப் * நெய் - கால் கப் * ஏலக்காய் - ஒன்று   முந்திரி - 8 (துண்டுகளாக நறுக்கவும்).

செய்முறை:    பொட்டுக்கடலையை நைஸான பொடியாக அரைத்துச் சலிக்கவும். பிறகு சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைஸான பொடியாக அரைக்கவும். நெய்யைச் சூடாக்கி, முந்திரியைப் பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரை - ஏலக்காய் பொடியைப் பாத்திரத்தில் சேர்த்து, நெய்யை முந்திரியுடன் இதில் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை உருண்டைகளாகப் பிடித்து தட்டில் வைக்கவும். சரியாக உருண்டை பிடிக்க வராவிட்டால் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பனானா பாதாம் லட்டு

தேவை:  *  வாழைப்பழம் - 2 (மசிக்கவும்) * பொடித்த பாதாம் பருப்பு, உடைத்த பாதாம் பருப்பு துண்டுகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * பால் பவுடர் - அரை கப் * பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன் * சாக்லேட் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் * டார்க் சாக்லேட் - அரை கப் * டைஜஸ்டிவ் பிஸ்கட் - ஒரு பாக்கெட்.

செய்முறை:    டார்க் சாக்லேட், டைஜஸ்டிவ் பிஸ்கட் தவிர அனைத்துப் பொருள்களையும் பெரிய பாத்திரத்தில் சேர்க்கவும். இந்தக் கலவையை மாவு பிசைவது போல ஒரு நிமிடம் நன்றாகப் பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து உள்ளங்கைகளின் நடுவில் வைத்து உருட்டவும். 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதேபோல் கலவை முழுவதையும் செய்துகொள்ளவும்

டார்க் சாக்லேட்டை உருக்கவும். டைஜஸ்டிவ் பிஸ்கட்டை கொகொரப்பாகப் பொடித்துத் தட்டில் போடவும். உருட்டிய லட்டுகளை உருக்கிய சாக்லேட்டில் தோய்த்து, டைஜஸ்டிவ் பிஸ்கட் பொடியில் புரட்டி எடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணிநேரம் வைத்தெடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

அவல் லட்டு

தேவை:   * அவல் - ஒரு கப் * சுத்தமான வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது) * நெய் - 4 டேபிள்ஸ்பூன்  * பாதாம் - கால் கப் (துண்டுகளாக நறுக்கவும்) * ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் * க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    அவலை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் நெய்யைச் சூடாக்கி பாதாமை ஒரு நிமிடம் வறுக்கவும். மற்றொரு கடாயில் அவல், வெல்லம், ஏலக்காய்த்தூள், க்ரீம் சேர்த்து நெய்யை பாதாமுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.  கலவையை உருண்டைகளாக உருட்டவும். அவல் லட்டு தயார்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

கேரமல் ஃபட்ஜ் லட்டு

தேவை:  * வெண்ணெய் - அரை கப் * கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப் * கேரமல் சிரப் - 2 டேபிள்ஸ்பூன் * பால் பவுடர் -  ஒரு டேபிள்ஸ்பூன் * நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  அடிகனமான கடாயில் வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, கலவை கடாயில் ஒட்டாதவாறு அடிக்கடி கிளறவும். கேரமல் சிரப் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். இதற்கிடையே ஒரு தட்டில் நெய் தடவி ரெடியாக வைக்கவும். கலவை கடாயின் பக்கவாட்டிலிருந்து விலகும்வரை கிளறி, பால் பவுடரைச் சேர்த்துக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். இதைத் தட்டில் கொட்டி 10 நிமிடங்கள் ஆறவிடவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன், கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: கேரமல் சிரப்பை வீட்டிலேயே தயாரிக்கலாம். அடிகனமான கடாயில் அரை கப் சர்க்கரை சேர்த்துச் சூடாக்கி உருகவிடவும் (கிளற வேண்டாம்). சர்க்கரை கருகத் தொடங்கி, சாஸ் பதத்துக்கு வந்தவுடன் இறக்கி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். சில நேரங்களில் கேரமல் கெட்டியாகிவிடும். கவலை வேண்டாம். சிறிதளவு நீர் சேர்த்துக் கலந்தால் சிறிது நேரத்தில் இளகிவிடும். இதைச் சேகரித்து, இரண்டு வாரம் வரை குக்கீஸ் கேக் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

மனோகரம்

தேவை:   * அரிசி மாவு - 2 கப் * உளுந்து மாவு - 2 டேபிள்ஸ்பூன் * நெய் - 2 டேபிள்ஸ்பூன் * உப்பு - ஒரு சிட்டிகை * சுத்தமான வெல்லம் - இரண்டரை கப் (பொடித்தது) * ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் * எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:   பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, நெய், உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மாவு பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பிறகு துண்டுகளாக உடைக்கவும். வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக்கரைசலைச் சூடாக்கி, உருட்டு பதத்துக்கு பாகு காய்ச்சவும் (ஒரு கப்பில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் சில சொட்டுகள் பாகை விட்டுப் பார்த்தால் உருட்ட வரும். அதுதான் உருட்டுபதம்). முறுக்குத் துண்டுகளுடன் ஏலக்காய்த்தூள், வெல்லப்பாகு சேர்த்துக் கலக்கவும். கலவை வெதுவெதுப்பாக இருக்கும்போதே எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பான் லட்டு

தேவை:    * கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் * தேங்காய்த் துருவல் - கால் கப் * ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை * உலர்ந்த தேங்காய்த் துருவல் (desiccated coconut) - கால் கப் *  வெற்றிலை - 4 அல்லது 5 * க்ரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை * குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன் * நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் கலவை (முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா) - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  கடாயில் குல்கந்து, டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்துச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கிளறவும். அவை ஒன்றாகச் சேர்ந்ததும் இறக்கி ஆறவிடவும். வெற்றிலைகளை ஒன்றாகச் சுருட்டி பொடியாக நறுக்கவும். அடிகனமான கடாயில் கண்டன்ஸ்டு மில்க், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கடாயை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். நறுக்கிய வெற்றிலை, க்ரீன் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். 2 - 3 நிமிடங்களில் கலவை கடாயின் ஓரங்களில் இருந்து விலக ஆரம்பித்து, மாவு போல ஆகும். அடுப்பை நிறுத்திவிட்டுக் கலவையை 4 நிமிடங்கள் ஆறவிடவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையைச் சிறிதளவு எடுத்து, நடுவில் கட்டை விரலால் அழுத்தி பள்ளம் செய்து, குல்கந்து - டிரை ஃப்ரூட்ஸ் கலவையைச் சிறிதளவு வைத்து மூடி, கைகளின் நடுவில் வைத்து உருட்டவும். உருட்டிய லட்டுகளை உலர்ந்த தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து வைக்கவும்.

குல்கந்து தயாரிக்கும் முறை: கடாயில் ஒரு கப் ரோஜா இதழ்கள், அரை கப் சர்க்கரை, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துச் சூடாக்கி சர்க்கரை கரைந்து, ரோஜா இதழ்கள் வேகும்வரை கைவிடாமல் கிளறி இறக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஆறவிட்டு எடுத்து வைக்கவும். குல்கந்து தயார்.

குறிப்பு: கடையில் கிடைக்கும் குல்கந்தையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

மோத்திசூர் லட்டு

தேவை:  *  கடலை மாவு - அரை கிலோ * சர்க்கரை - ஒரு கிலோ * சிவப்பு ஃபுட் கலர் - 2 டீஸ்பூன் *  பாதாம் - அரை கப்புக்குக் கொஞ்சம் அதிகமான அளவு * பிஸ்தா, முந்திரி - தலா அரை கப் * உலர் திராட்சை - கால் கப்  * பூசணி விதை - ஒரு டேபிள்ஸ்பூன் * நெய் - தேவையான அளவு * ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் * எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு * தண்ணீர் - அரை கப்புக்குக் கொஞ்சம் அதிகமான அளவு * முந்திரித் துருவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:  பாத்திரத்தில் கடலை மாவு, ஃபுட் கலர் சேர்த்துத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கட்டியில்லாமல் கரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டுச் சூடாக இருக்கிறதா என்று சோதிக்கவும் (ஒரு சொட்டு மாவைவிட்டு, அது பொரிந்து மேலெழுந்து வந்தால் எண்ணெய் பொரிக்கத் தயாராக உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்). பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேல் பிடித்துக்கொண்டு அதில் மாவை விடவும். மாவை ஸ்பூனால் கிளறி எண்ணெயில் பரவலாக விழச் செய்யவும். பூந்தியை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு டிஷ்யூ பேப்பரில் போடவும்.

அடிகனமான கடாயில் ஒன்றை கப் சர்க்கரையுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் பூந்தி, நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் பூசணி விதை, உலர் திராட்சை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பூந்தி பாகை உறிஞ்சிக்கொண்டு உப்பி வரும். லேசாகப் பிழிந்து அதிகப்படியான பாகை எடுத்துவிடவும். பிறகு கிரைண்டரில் போட்டு மூன்று சுற்றுச் சுற்றவும். கைகளில் தாராளமாக நெய் தடவிக்கொண்டு இந்தக் கலவையைக் கைபொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும். முந்திரித்துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

சாக்கோ கோகோனட் லட்டு

தேவை:  *  தேங்காய்த் துருவல் - ஒரு கப் * சர்க்கரை - அரை கப் * காய்ச்சி ஆறவைத்த பால் - 2 டேபிள்ஸ்பூன் * வெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன் * நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா கலவை - கால் கப் * டார்க் சாக்லேட் - அரை கப்.

செய்முறை:    தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு நைஸாக மசித்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் அல்லது நெய்யைச் சூடாக்கி முந்திரி, பாதாம், பிஸ்தாவைப் பொன்னிறமாக  வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரை, பால் சேர்த்துச் சற்றுக் கெட்டியானதும் இறக்கவும். இதனுடன் துண்டுகளாக்கிய சாக்லேட்டைச் சேர்த்து, சாக்லேட் உருகும்வரை நன்றாகக் கலக்கவும். இதைப் பாத்திரத்துக்கு மாற்றி லேசாக மசித்துக் கலக்கவும். கைகளில் வெண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

சாக்லேட் லட்டு

தேவை:  *  கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் * பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் * கொட்டை நீக்கிய பேரீச்சை - ஒரு கப் * முந்திரி, பாதாம், வால்நட் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * உப்பு - ஒரு சிட்டிகை  * வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன் * தண்ணீர் - 4 டீஸ்பூன்.

செய்முறை:    முந்திரி, பாதாம், வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு, பேரீச்சை, கோகோ பவுடர், வெனிலா எசென்ஸ் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்கவும். அதனுடன் 4 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வரும்வரை அரைக்கவும் (1 - 2 நிமிடங்கள்). இந்தக் கலவையைத் தட்டில் கொட்டி பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து லட்டுகள் பிடிக்கவும். இதை உடனடியாகப் பரிமாறலாம்; ஃப்ரிட்ஜில் வைத்துப் பல நாள்களுக்கும் பயன்படுத்தலாம்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பேரீச்சை எள் லட்டு

தேவை: *   வெள்ளை எள் - ஒரு கப் * கொட்டை நீக்கி நறுக்கிய பேரீச்சை - முக்கால் கப் * உலர் தேங்காய்த் துருவல் (desiccated coconut) - அரை கப்.

செய்முறை:     வெறும் கடாயில் வெள்ளை எள்ளைச் சேர்த்து, மிதமான தீயில் 1 - 2 நிமிடங்கள் வறுத்து எடுத்து ஆறவிடவும். அதே கடாயில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அந்தச் சூட்டிலேயே கிளறவும்.
எள்ளை கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதனுடன்  பேரீச்சை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கைகளால் பிசையவும். கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டுகளாகப் பிடிக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

தம்பிட்டு (கர்நாடகா)

தேவை:  *  வறுத்த கடலை மாவு -  2 கப் * நெய் - ஒரு கப் * பொடித்த வெல்லம் - ஒரு கப் * தேங்காய்த் துருவல் - அரை கப் * எள் - 3 டீஸ்பூன் * கசகசா - 2 டேபிள்ஸ்பூன் * ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:    தேங்காய்த் துருவல், எள், கசகசாவை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். கடாயில் நெய்யைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெல்லத்தைச் சேர்த்து, முழுவதுமாகக் கரையும்வரை கிளறி அடுப்பை அணைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், எள், கசகசா, வறுத்த கடலை மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவை கைபொறுக்கும் சூட்டில் இருக்கும்போது சிறிய உருண்டைகளாக உருட்டி ஆறவிடவும். பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

பாதாம் லட்டு

தேவை: *  பாதாம் - அரை கப் * பொடித்த சர்க்கரை - 1/3 கப் * உருகிய நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் *  ஏலக்காய்த்தூள் - அரைக்கால் டீஸ்பூன்.

செய்முறை:     பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோல் நீக்கவும். இதைக் கடாயில் போட்டுக் கிளறி ஈரம் நீக்கி, அரைத்துக்கொள்ளவும். ஒரு தட்டில் பாதாம் மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையைக் கைபொறுக்கும் சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டுகளாகப் பிடிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ராகி லட்டு

தேவை:   கேழ்வரகு மாவு - ஒரு கப்  நெய் - 3 டீஸ்பூன்  முந்திரி - 8 (நொறுக்கவும்)  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  துருவிய வெல்லம் - முக்கால் கப்.

செய்முறை:   ஒரு டீஸ்பூன் நெய்யை லேசாகச் சுடவைத்து, கேழ்வரகு மாவு சேர்த்து வறுத்து எடுத்து ஒரு தட்டில் சேர்க்கவும். கேழ்வரகு மாவுடன் ஏலக்காய்த்தூள், நொறுக்கிய முந்திரி, பொடித்த வெல்லம் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். இந்தக் கலவையைத் தட்டில் போட்டு, உருக்கிய நெய் சேர்த்துக் கைபொறுக்கும் சூட்டில்  லட்டுகளாகப் பிடிக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

வால்நட் லட்டு

தேவை:  * வால்நட் - அரை கப் * கொட்டை நீக்கி நறுக்கிய பேரீச்சை - அரை கப் * அவல் - அரை கப் * ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் * நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  அவலை வெறும் கடாயில் வறுக்கவும். அதே கடாயில் வால்நட்டை நன்கு சூடாகும் வரை வறுத்து ஆறவிடவும். மிக்ஸியில் அவலுடன் வால்நட், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரீச்சை சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும்.

கடாயில் நெய்விட்டு வால்நட் கலவையைச் சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து, பேரீச்சை மிருதுவாகும் வரை வதக்கவும் (2 - 3 நிமிடங்கள்) இந்தக் கலவையை ஆறவிட்டு, வெதுவெதுப்பாக இருக்கும்போது லட்டுகளாகப் பிடிக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

மினப்ப சுன்னுன்டலு (ஆந்திரா)

தேவை: * கறுப்பு உளுந்து - ஒரு கப் * பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன் * சுத்தமான வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது) * பொடித்த சர்க்கரை - கால் கப் * நெய் - அரை கப்.

செய்முறை:    பச்சரிசியை வெறும் கடாயில் பழுப்பு நிறம் ஆகும்வரை வறுத்து எடுக்கவும். கறுப்பு உளுந்தை வெறும் கடாயில் சிறு தீயில் வாசனை வரும்வரை வறுக்கவும் (சுமார் 20 நிமிடங்கள் ஆகும். அடிக்கடி கிளறிவிடவும்). ஆறியபின் கறுப்பு உளுந்தையும் அரிசியையும் சேர்த்து நைஸான பொடியாக அரைத்துக்கொள்ளவும். நெய்யை லேசான சூட்டில் உருக்கவும். கறுப்பு உளுந்து பொடி, வெல்லம், பொடித்த சர்க்கரையை அகலமான தட்டில் சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிய நெய்விட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும் (பொடிகளைச் சேர்த்துக் கலக்க தேவையான அளவு மட்டுமே நெய்யை விட வேண்டும்; உருண்டை பிடிக்கும்போது சொட்டும் அளவுக்குச் சேர்க்கக் கூடாது).

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

கேக் டிரை ஃப்ரூட் லட்டு

தேவை:  * உதிர்த்த கேக் (விருப்பமான ஃப்ளேவர்) - ஒரு கப் * தேன் - 2 டேபிள்ஸ்பூன் * உலரவைத்த பழங்கள் (பைனாப்பிள், ஆரஞ்சு, அத்தி, பப்பாளி) - அரை கப் * சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:     ஒரு கிண்ணத்தில் கேக் தூளுடன் தேன் சேர்த்துக் கலந்து வைக்கவும். உலரவைத்த பழங்களைப் பொடியாக நறுக்கவும். கேக் கலவையைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளின் நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு உலரவைத்து பழக்கலவையை வைத்துக் கவனமாக மூடவும். சாக்லேட் சாஸால் அலங்கரித்துப் பரிமாறவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

ரவா லட்டு

தேவை:  * ரவை - ஒரு கப் * சர்க்கரை - ஒரு கப் * காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு டேபிள்ஸ்பூன் * முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    கடாயில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். அதே கடாயில் மிச்சமிருக்கும் நெய்யில் ரவையை பச்சை வாசனை போகும்வரை வறுக்கவும். சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக் கலவையைப் பாத்திரத்துக்கு மாற்றவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். இதனுடன் பால் சேர்த்துக் கலந்து மூடி போட்டுச் சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு இந்தக் கலவையை லட்டுகளாகப் பிடித்துப் பரிமாறவும்.

டேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி!

லட்டான லட்டல்லவோ..!

ன்றைய ஆண்ட்ராய்டு உலகின் அவசர ஓட்டத்தில் பாரம்பர்ய விஷயங்கள் பல மறக்கப்பட்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டும் விட்டன. ஆனால், அன்றும் இன்றும் என்றும் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் `இன்னும் 10 நாள்கள்... 5 நாள்கள்’ என்று கவுன்ட் டவுன் கொடுத்து ஆர்வத்துடன் வரவேற்று கோலாகலத்துடன் கொண்டாடப்படக்கூடிய பெருமை பெற்றது தீபாவளி பண்டிகை. இதன் சிறப்பு அம்சங்களில் முக்கியமானவை இனிப்பு - பலகாரங்கள்.

தீபாவளி இனிப்புகளில் முதலிடம் கொடுத்து விருப்பத்துடன் சுவைக்கப்படுவது லட்டு. `எப்போது கிடைக்கும்?’ என்று நாக்கின் சுவை நரம்புகளை ஏங்கவைக்கும் லட்டில் வழக்கமான வகைகளுடன் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநில லட்டுகள்... பனீர், ஓட்ஸ், வால்நட், சாக்லேட் லட்டுகள் என லட்டுகளின் அணி வகுப்பையே இந்த இதழில் அழகிய படங்களுடன் நிகழ்த்திகாட்டும் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர், ``வரவிருக்கும் தீபாவளித் திருநாளில் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோட வாழ்த்துகள்!’’ என மனப்
பூர்வமாகக் கூறுகிறார்.